மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 328

இறகு முளைத்த இளையவள்... முடங்கிக் கிடக்கும் மூத்தவள்! வாசகிகள் பக்கம்

ரண்டு பெண் பிள்ளைகள் எங்களுக்கு. அதனாலேயே நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்!

சிறுவயதில் இருந்தே இருவரையும் தேவையான கண்டிப்புடன்தான் வளர்த்தோம். மூத்தவள்

என் டைரி - 328

பள்ளிப் படிப்பை முடித்து பொறியியல் கல்லூரியில் சேர்ந்தபோது, புதிய பழக்கமாக நிறைய தோழிகள், தோழர்களைச் சேர்த்தாள். விடுமுறை தினங்களில் எல்லாம் அவர்களை வீட்டுக்கும் அழைத்துவர ஆரம்பித்தாள். ஆரம்பத்தில் இதில் எனக்கு அத்தனை உடன்பாடு இல்லை. என்றாலும், தலைமுறை இடைவெளியை பேசிப் புரியவைத்தாள் மூத்தவள்.

நண்பர்களுடன் வித்தியாசமில்லாமல் அவள் பழகும்விதம் கண்டு குழப்பமடைந்திருந்த என் கணவரிடம், குழந்தைகள் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் என்று எடுத்துக் கூறினேன். என் பிள்ளைகள், கணவர், நான் என எங்கள் வீட்டில் அந்த நட்புச் சூழல் இயல்பானது. ஆனால், அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் எங்களைப் பற்றி வேறுவிதமாக பேச ஆரம்பித்தார்கள். அதற்கு நாங்கள் முக்கியத்துவம் தராமல், பிள்ளைகளின் சந்தோஷமே பெரிதென்று இருந்தோம்.

இந்நிலையில், எங்கள் தலையில் விழுந்தது இடி. மூத்தவளுடைய நண்பர்களின் நண்பன் ஒருவனை, எங்கள் இளையமகள் காதலித்திருக்கிறாள். அவளுடைய பதினெட்டாவது பிறந்த நாளன்று, இருவரும் திருமணமும் செய்துகொண்டு, நண்பன் ஒருவன் வீட்டில் அடைக்கலம் ஆகிவிட்டனர். விஷயம் தெரிந்தபோது, உயிரே போய்விட்டது எங்களுக்கு.

மூத்தவளை விசாரித்தபோது, அவளுக்கும் இந்த விஷயம் தெரியாதென்றும், அவளுடைய நண்பர்களுக்கும் இதில் தொடர்பில்லை என்றும் கதறியழுதாள். கணவரோ, பெண் பிள்ளைகளை வளர்க்கத் தெரியாமல் வளர்த்து, வேற்று ஆண்களை வீட்டுக்குள் விட்டு, இப்போது இந்த நிலைமை ஏற்பட நானே காரணம் என்று ஆக்ரோஷமானார். வெறும் வாய்க்கு வெற்றிலை கிடைத்ததுபோல் எங்கள் கதையை ஊரே பேசிச் சிரிக்கிறது.

எங்கள் வீட்டில் இப்போது நிம்மதி துளியும் இல்லை. கல்லூரிப் படிப்பைக்கூட முடிக்காமல், தகுதி இல்லாத ஒருவனை நம்பிச் சென்றுவிட்டாள் இளையவள். நடந்த தவறுக்கு தான் காரணமில்லை என்றாலும், குற்ற உணர்ச்சியால் தன்னைத் தானே தனிமைப்படுத்தி முடங்கிக் கிடக்கிறாள் மூத்தவள். என்னோடு இன்னும் கோபம் தீராமல், பேசாமல் இருக்கிறார் கணவர்.

இந்த துயரத்தில், துரோகத்தில் இருந்து எங்கள் வீடு மீள்வது எப்படி தோழிகளே?

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி - 328

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 327-ன் சுருக்கம்

''எட்டு வயதிலேயே விடுதியில் சேர்ந்துவிட்டதால், குடும்ப உறவுகளின் அரவணைப்பிலிருந்து வெகுதூரத்தில் வளர ஆரம்பித்தேன். இந்தச் சூழலில், எனக்கு ஆறுதல் தந்த ஒருவர், அன்பால் என்னை மீட்டார். இரு வீட்டிலும் அதிக எதிர்ப்பில்லாததால், காதலித்து திருமணத்தில் இணைந்தோம். எந்த கெட்ட பழக்கமும் இல்லாத அவர், என் வாழ்வில் வசந்தத்தைக் கொண்டுவந்தார். ஆனால், இருவரின் வேலை... எங்களின் வாழ்க்கையையே திசை மாற்றியது. அவருக்கு டே ஷிப்ட், எனக்கு நைட் ஷிப்ட். ஞாயிற்றுக்கிழமை மட்டுமே ஒன்றாக இருப்போம். இதனால், மீண்டும் தனிமையானேன். ஆத்திரத்தோடு இதைப் பற்றி பேசியபோது, 'வேலையை விட்டுவிடு... சந்தோஷமாக இருக்கலாம்' என்றார். இது என் சுதந்திரத்தைப் பறிப்பதாக உணர்ந்து, உச்சபட்ச கோபத்தில் கத்தித் தீர்த்தேன். அன்று பேச்சை நிறுத்தியவர்தான்... இந்த 10 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்தாலும் ஒட்டுறவில்லாமல் இருக்கிறோம். இப்போது வேலையையும் விட்டுவிட்டேன். ஆனாலும், பிரச்னை தீர்ந்தபாடில்லை. வரும்காலத்திலாவது, வசந்தம் திரும்ப வாய்க்குமா தோழிகளே!''

வாசகிகள் ரியாக்ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: 100

மனம்விட்டுப் பேசு..!

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறாய். எனவே, முதலில் உன் கோப குணத்தை தூக்கி எறி. அவரிடம் மனம்விட்டுப் பேசுவதற்கு முயற்சி செய். முடியாவிட்டால், உன் மனதில் இருக்கும் வலியை... உன் மனமாற்றத்தை... விவரமாக எழுதி உன் தவறுக்கும் மன்னிப்புக் கேட்டுக் கடிதமாக எழுதி கணவர் பார்வை படும் இடத்தில் வை. இ-மெயில், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் சொல். இப்படி பலவழிகளில் அவரிடம் உன் மனதில் இருப்பதைக் கூறு. நிச்சயம் மன்னித்து ஏற்பார். மேலும், அவருக்குப் பிடித்தவற்றை செய்... உன் வாழ்வில் ஆனந்தம் பொங்கும்.

- ஆர்த்தி, சென்னை-4

நிச்சயம் மனமிரங்குவார்!

நீ நிம்மதியாக இருக்க வேண்டும் என்று, வேலையை விடச்சொன்ன கணவரை தவறாக நினைத்து, 'நம்மை அடிமைப்படுத்திவிடுவானோ' என்று தேவையற்ற பயத்தால் வேலையையும் விடாமல், அவன் மனதை காயமும் பட செய்துவிட்டாய். உன்னை சிந்திக்கச் சொல்லி, அதற்காக நேரத்தையும் கொடுத்த கணவரை, நீயல்லவா சமாதானப்படுத்தியிருக்க வேண்டும். வாழ்க்கையில் பத்து ஆண்டுகள் என்பது எத்தனை பெரிய விஷயம்... அதை வீணடித்துவிட்டாயே! கணவரிடம் மன்னிப்பு கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. அதில் எந்தத் தவறும் இல்லை. நிச்சயம் மனமிரங்குவார் என்று நம்பு!

- ஜா.ஐஸ்வர்யா, ஸ்ரீரங்கம்