மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 329

சந்தோஷத்தை சாகடிக்கும் சந்தேகம்!வாசகிகள் பக்கம்

ணவரின் சந்தேகபுத்தியால் வாழ்க்கையை ரணமாகக் கழித்துக்கொண்டிருக்கும் அபாக்யவதிகளில் நானும் ஒருத்தி!

என் டைரி - 329

நிறமாக, லட்சணமாக இருப்பேன் நான். கணவரோ... இதற்கு நேரெதிர். எங்கள் உறவினரான அவர், நல்ல அரசு வேலையில் இருந்ததால், என்னை வற்புறுத்தி அவருக்கு மணமுடித்து வைத்தனர் பெற்றோர். திருமணமான புதிதில், கணவரின் சந்தேகபுத்தி கண்டு திடுக்கிட்டுப் போனேன். ஆனாலும், அவரின் தாழ்வு மனப்பான்மையால் அப்படி நடந்துகொள்கிறார் என்று, அதை சரிசெய்ய எவ்வளவோ முயற்சிகள் எடுத்தேன். ஆனால், நாளாக ஆக இன்னும் மூர்க்கமாகவே மாறினார். அவருக்குள் இருக்கும் ஈகோ, ஒவ்வொரு நாளும் என்னை அணுவணுவாக சாகடித்துக்கொண்டிருக்கிறது.

அவர் எனக்கு போன் பண்ணும்போது 'பிஸி’ என்று வந்தால், உடனே ''போன்ல யார்... என்ன பேசினே?'' என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்துவிடுவார். அத்தனை விவரங்களையும் ஒப்பித்தாலும், மறுநாளும் அதே கேள்விகளைக் கேட்பார். காலையில் நெற்றியில் வைத்த குங்குமம் சாயங்காலம் வரை அழியாமல் இருக்க வேண்டுமென்பார். சில நேரங்களில் வியர்வை பட்டோ, துணி துவைக்கும்போதோ அழிந்துபோனால், அந்த நாள் நரகமாகிவிடும்.

ஒரு வருடம், இரண்டு வருடமல்ல, எனக்கு 40 வயதைத் தாண்டியபோதும், என் குழந்தைகள் கல்லூரி சென்று கொண்டிருக்கும் இந்த நாட்களிலும், அவரின் சந்தேகமும், என் கண்ணீரும் குறைந்தபாடில்லை. இத்தனைக்கும், அவரின் பெற்றோர் எங்கள் வீட்டில்தான் இருக்கிறார்கள்.

நாளை என் குழந்தைகளுக்குத் திருமணம் முடித்து, பேரன், பேத்தி எடுத்தாலும், அவரின் சந்தேகபுத்தி மாறப் போவதில்லை. இப்போது எங்கள் உறவினர்களுக்கு கேலிப் பேச்சாகிஇருக்கும் நான், நாளை என் சம்பந்திகளுக்கும் வேடிக்கை ஆகவேண்டுமா?

இத்தனை வருடங்களாக இருந்த சகிப்புத்தன்மை, இப்போது என்னிடம் இல்லை. 'தவறே செய்யாதபோதும், ஒரு குற்றவாளி போல் பதைபதைத்துக்கொண்டே இருப்பதற்குப் பதிலாக, வாழ்க்கையையே முடித்துக்கொள்ளலாம்’ என்று நினைக்க வைக்கிறது.

கணவரின் கொடுமையில் இருந்து விடுபட, தீர்வு சொல்லுங்கள் தோழிகளே..!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி - 329

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 328-ன் சுருக்கம்

''கல்லூரியில் சேர்ந்த மூத்த மகள், தன் கல்லூரித் தோழிகள் மற்றும் தோழர்களையும் வீட்டுக்கு அழைத்து வர ஆரம்பித்தாள். அக்கம்பக்கத்தினர் வேறுவிதமாக பேசினாலும், பிள்ளைகளின் சந்தோஷமே முக்கியம் என்பதால், நாங்கள் பெரிதுபடுத்தவில்லை. இந்நிலையில், மூத்தவளுடைய நண்பர்களின் நண்பன் ஒருவனும், எங்கள் இளைய மகளும் சத்தமில்லாமல் காதல் திருமணம் முடிக்க... வந்தது தலைவலி. மூத்தவளுக்கோ, அவளுடைய நண்பர்களுக்கோ  இதில் சுத்தமாக தொடர்பில்லை என்று தெரிந்தாலும்... 'வேற்று ஆண்களை வீட்டுக்குள் விட்டதால்தான் இந்த நிலை' என்று என்மீது ஆக்ரோஷமானார் கணவர். ஊரே சிரிக்க ஆரம்பிக்க... வீட்டில் துளியும் நிம்மதி இல்லாமல் போய்விட்டது. படிப்பை முடிக்காததோடு... தகுதி இல்லாத ஒருவனை நம்பிச் சென்றுவிட்டாள் இளையவள். மூத்தவளோ... நடந்த தவறுக்கு தான் காரணமில்லை என்றாலும் தனிமையில் முடங்கிக் கிடக் கிறாள்.

இந்த துயரம், துரோகத்தில் இருந்தெல்லாம் விடுபட என்ன வழி?''

வாசகிகள் ரியாக்ஷன்

ஒவ்வொன்றுக்கும்   பரிசு:  

என் டைரி - 329

  100

மன்னித்து அரவணையுங்கள்!

வயதுப் பெண்களின் மீது பெற்றோருக்கு நம்பிக்கை வேண்டும் என்பதோடு, கண்காணிப்பும், கண்டிப்பும் தேவை என்பதை கருத்தில் கொள்ளாததே, உங்கள் இளைய மகளின் முதிர்ச்சியற்ற திருமணத்துக்குக் காரணம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நடந்தது... நடந்துவிட்டது. இனி நடப்பதை நல்லவிதமாக நடத்துங்கள். அவசரத் திருமணம் செய்துகொண்ட உங்கள் மகளையும், மாப்பிள்ளையையும் வெறுத்து ஒதுக்கிவிடாதீர்கள். அவர்களை மன்னித்து அரவணைத்து, அவர்களுடைய படிப்பை முடிக்க அறிவுரை கூறி அதற்கான ஏற்பாட்டை செய்து நல்வாழ்க்கை அமைத்துக் கொடுங்கள்.

- என்.ரங்கநாயகி, கோவை-25

கலந்து ஆலோசியுங்கள்!

மூத்த பெண், தன்னுடைய ஆண் நண்பர்களை வீட்டுக்கு கூட்டி வந்ததை, முதலிலேயே தடுத்திருக்க வேண்டும். அதேபோல் பெண் குழந்தையாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் சிறுவயதில் இருந்தே அம்மா, பெண், பையன் என்று இராமல் எல்லா விஷயங்களையும் பகிர்ந்திருக்க வேண்டும். அதையெல்லாம் செய்யாததன் விளைவுதான் இது. இப்போதும் கெட்டுவிடவில்லை. மூத்த மகளிடம் உட்கார்ந்து பேசி, அவளுடைய மனமாற்றத்துக்கு வழி ஏற்படுத்துங்கள். அதுதான் அவளுடைய எதிர்காலத்துக்கும்... உங்களுடைய எதிர்காலத்துக்கும் நல்லது.  

- சுப்பலக்ஷ்மி சந்திரமௌலி, சென்னை-91

கவலைகள் கரைந்து போகும்!

யார் யாரையோ நடுவீட்டுக்குள் அனுமதித்து விட்டீர்கள். பஞ்சும், நெருப்பும் பற்றிக்கொண்டுவிட்டது. இதில் வருத்தப்படுவதற்கு ஏதுமில்லை. வருத்தப்படுவதால் வரப்போவது எதுவுமில்லை. அடுத்தகட்டமாக, மூத்தவளை நல்லதொரு வரன் கையில் கொடுப்பதுதான் முக்கியம். அதற்கான வேலைகளை உடனடியாக ஆரம்பியுங்கள்... அத்தனை கவலைகளும் தன்னாலேயே கரைந்து போகும்!

- உமாராணி இந்திரஜித், மதுரை