காதலித்தேன்... கைதியானேன்!வாசகிகள் பக்கம்
காதல் என்ற அன்பு செலுத்தியதற்காக, நான் அனுபவிக்கும் கொடுமைகள், என் வீட்டிலேயே என்னை நரகத்தைப் பார்க்க வைத்துவிட்டது.
நான் ஒருவரைக் காதலித்தேன். அந்த விஷயம் தெரிந்தும் அதை ஏற்காமல், வீட்டில் எனக்கு திருமண ஏற்பாடு செய்தார்கள். அதை தடுத்து நிறுத்தினேன். அதில் என் வீட்டில் உள்ளவர்களுக்கு என் மேல் ஏற்பட்டது தீராத வெறுப்பு.
வீட்டில் யாரும் என்னுடன் பேசுவதில்லை. அதேசமயம், அனைவரும் என்னைத் தீயாகத் திட்டுகிறார்கள். காதலித்தவருடன் மட்டுமின்றி, வீட்டுக்கு வரும், போகும் ஆண்கள்... ஏன், பள்ளிச் சிறுவர்களைகூட என்னுடன் இணைத்து வைத்துப் பேசி, நாராசமாகத் திட்டுகிறார்கள். 'எத்தனை முறை அபார்ஷன் செய்தாய்?’ என்ற கேள்வியால் கொஞ்சம் கொஞ்சமாகச் சாகடிக்கிறார்கள்.

இந்தக் கொடுமைகள் தாங்க முடியாமல், காதலித்தவரும் வேண்டாம்... வேறொருவருடன் கல்யாணமும் வேண்டாம் என்று முடிவெடுத்த என்னை, கடந்த 10 மாதங்களாக வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்கள். பால் வாங்க, போஸ்ட் வாங்கக்கூட படி தாண்டிச் செல்லக்கூடாது. சுவர்களுக்குள்ளேயே வாழ்க்கை கரைகிறது. 46 நாட்கள், காபி, டீ கூட குடிக்காமல் பட்டினி கிடந்தேன். 47-வது நாள் அக்கா கட்டாயப்படுத்தியதால் மீண்டும் சாப்பிட ஆரம்பித்தேன்.
எப்போதும் காதில் கெட்ட வார்த்தைகள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. மேலும், 'நீ கல்யாணத்துக்கு (அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளை என்றாலும்) அப்புறம் பிறந்த வீட்டுக்கு வரவே கூடாது. உனக்கு நல்ல சாவே வராது, உன் உடம்பை நாய், நரியெல்லாம் சாப்பிடணும்’ என்று சாபங்கள் வேறு. இந்த 27 வயதுக்குள், வாழ்க்கையே வெறுத்துவிட்டது.
கொடுமைகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல், தற்கொலை எண்ணமே மேலோங்குகிறது.
நான் காதலித்தவர் இன்றுவரை எனக்காகக் காத்திருக்கும் போதிலும், வீட்டை விட்டு ஓட எனக்கு விருப்பமில்லை. ஆனால், இந்த வீட்டிலும் நடைபிணமாக இருக்க முடியவில்லை. ஏதாவது டிரஸ்ட், ஆசிரமத்தில் சேரவும் வழி தெரியவில்லை.
என் வாழ்வு விடிய ஏதாவது வெளிச்சம் காட்டுவீர்கள் என்று காத்திருக்கிறேன்.
- ஊர் மற்றும் பெயரைக் குறிப்பிடாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...
என் டைரி 330-ன் சுருக்கம்
''வீட்டில் பார்த்த வரன்தான். என்றாலும், எங்களுக்குள் பொருத்தமில்லை. இருவரும் மென்பொறியாளர்கள் என்பதால் அமெரிக்கா சென்றோம். அங்கே சென்றதும் திருமணத்துக்கு முன்பே 6 லட்சம் கடன் என்று அவன் சொல்ல, எல்லாவற்றையும் நானே அடைத்தேன். இதைச் சாதகமாக்கி என்னை அடிமையாக்கினான். பிறகு, அமெரிக்க குடியுரிமை, புதிதாக ஒரு வேலை

என எல்லாமும் என் மூலம் வாங்கிக்கொண்டவன், ஆண் குழந்தை பிறந்த கையோடு அடித்து உதைத்து வீட்டை விட்டே வெளியேற்றிவிட்டான்.
கடன் சுமை, வேலை, குழந்தை என வாழ்க்கையே போராட்டமானது. இந்தச் சூழலில் குழந்தையை ஒப்படைக்கக்கோரி வழக்கு தொடர்ந்தான். கோர்ட் எனக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. அவன் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்துகிறான். இந்நிலையிலும், பரஸ்பர விவாகரத்துக்கு உடன்படாமல் நோகடிக்கிறான். தப்பிக்க வழி சொல்லுங்கள் தோழிகளே!''
வாசகிகள் ரியாக்ஷன்
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

100
குட்டக் குட்ட குனியாதே!
உன் பாசம், புரிதல், பரிவு என அனைத்தையும் தனக்கு சாதகமாக்கி, உன்னைத் துன்புறுத்தும் கணவனை 'போகட்டும்’ என்று இத்தனை நாள் அனுசரித்துப்போனது தவறு. உன் துன்பம், உன் கணவனுக்கு ஆனந்தம். இதுவும் ஒருவகை 'சைக்கோ’ செயல்தான். நீ இன்னும் அமெரிக்காவில்தான் வாழ்கிறாய் என்றால், உன் கணவனால் உனக்கும், உன் குழந்தைக்கும் ஆபத்து என்று போலீஸிலும், கணவன் அலுவலகத்திலும் புகார் செய். அவர்கள் உன் கணவரின் ஆர்ப்பாட்டத்தை நிறுத்த வழி செய்வார்கள். குட்டக் குட்ட குனியாமல் நிமிர்ந்து நில். முதலில் உனக்குள் நம்பிக்கையை வளர்த்துக்கொள். சட்டம் நல்ல நீதியை வழங்கும்.
- ரஜினி பாலா, மடிப்பாக்கம்
கவலைகள் பறந்து போகும்!
நீ ஆரம்பத்திலிருந்தே தவறுக்கு மேல் தவறாகச் செய்துகொண்டிருக்கிறாய். படித்த பெண்ணாக இருந்தும் கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? மாதர் சங்க அமைப்பு மூலமாக தொடர்புகொண்டு அந்த மிருகத்திடமிருந்து ஒரேயடியாக விலக முயற்சி செய். உனக்கு படிப்பும் வேலையும் இருக்கிறது. மனதை ஒருபோதும் தளரவிடாதே. குழந்தையை நல்லமுறையில் வளர்க்க முயற்சி செய். அவன் வளர்ந்து வருவதைப் பார்க்கும்போது உன் கவலைகள் பறந்து போகும்!
- ஆர்.அம்பிகா, மதுரை
விவாகரத்து, தண்டனை!
உங்கள் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்க்கை நடத்திக்கொண்டு வருவது தெரியவந்தது என்று கூறியுள்ளீர். இதனை நீதிமன்றத்தில் நிரூபிக்க முயன்றீர்களேயானால் விவாகரத்தும் கிடைக்கும்... உங்கள் கணவருக்கு கடும் தண்டனையும் கிடைக்கும். மனம் தளர வேண்டாம்.
- சுலோசனா சம்பத், கோயம்புத்தூர்