வாசகிகள் பக்கம்
என் மகன் கல்லூரியில் படித்தபோது, அவனுக்கு நெருங்கிய தோழி அவள். கல்லூரிப் படிப்பை முடித்ததும், பிசினஸ் தொடங்கினான் மகன். அந்தப் பெண்ணுக்கு அப்பா கிடையாது. அம்மா, வெளிநாட்டில் இருக்கும் மூத்த மகளிடம் ஆறு மாதம், இவளுடன் ஆறு மாதம் என்றிருந்தார். எனவே, அம்மா அமெரிக்கா செல்லும் ஆறு மாதங்களும் சாப்பாடு, விசேஷ தினங்கள் என பெரும்பாலும் எங்கள் வீட்டிலேயேதான் இருப்பாள். கிட்டத்தட்ட 10 வருடங்களாக அன்புடன் அத்தனையும் செய்தேன்.
ஒரு வருடம், அவளுடைய பிறந்தநாளின்போது, 'அம்மா, அவ அடுத்த வருஷம் கல்யாணமாகி சிங்கப்பூர் போகப் போறாளாம். அதனால இந்த பிறந்தநாளுக்கு ஏதாவது விலை உயர்ந்த பரிசு கொடுப்போம்!’ என்றான் மகன். இதையடுத்து, வைர மோதிரம் பரிசளித்துக் கொண்டாடினோம். இந்நிலையில் ஒருநாள், 'நான் அவளைக் காதலிக்கிறேன். ஆனால், அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கிறார்கள்' என்று இத்தனை நாட்களாக மனத்தில் பூட்டி வைத்திருந்ததைச் சொல்லி அழுதான் மகன். 'உன் காதலை அவளிடமே சொல்!’ என்று அனுப்பிவைத்து, சுபச்செய்திக்காகக் காத்திருந்தோம். அவளோ, 'வெளிநாட்டு மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்துகொள்வேன்' என்று சொல்லிவிட்டாள். அதிலிருந்து மகனின் சந்தோஷம் மொத்தமும் பறிபோனது.
'ஒரு பொண்ணுக்கு கல்யாணத்தைப் பற்றி தனி விருப்பம் இருக்கும். அதுக்கு மதிப்புக் கொடுக்கணும்டா...’ என்று சமாதானப்படுத்தினோம். ஆனால், இந்தப் பெருந்தன்மை அவளிடம் இல்லை. மிகவும் உடைந்துபோயிருந்தவனுக்கு, ஆறுதல் வார்த்தைகள்கூட பேசாமல் உதாசீனப்படுத்தினாள். 'நீ செய்ற பிசினஸ்ல நான் நினைக்கிற சொகுசு வாழ்க்கையை வாழ முடியாது’ என்று அவனுக்குத் தாழ்வு மனப் பான்மையை வேறு கொடுத்தாள். என் மகனுடன் தேடிச் சென்று அவளிடம் பேசிய எங்களிடம், 'உங்க பிள்ளையெல்லாம் வாழவே லாயக்கில்ல... தூக்குல தொங்கச் சொல்லுங்க’ என்று வெறுப்பைக் கொட்டினாள். இதில் சுக்குநூறாகிப் போனவன், தூக்கில் தொங்கியேவிட்டான்.

'ஒரு பெண்ணுடன் ஒரு பையன் அதிக அன்புடன் பழகும்போதே... அது நட்பா, காதலா என்று விசாரித்து, ஒரு முடிவெடுத்திருந்தால், இப்படியாகியிருக்காது' என்பதை, 26 வயது மகனை விலையாகக் கொடுத்த பிறகே தெரிந்துகொண்டோம். அவனுடைய மரணம், எதனாலும் சமாதானப்படுத்த முடியாத வடுவாகிவிட்டது. இந்த 52 வயதில், என் மகன் எடுத்த முடிவை நோக்கியே செல்கிறது என் மனமும். எப்படித் தெளிவது தோழிகளே..?
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி
சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...
என் டைரி 331-ன் சுருக்கம்
''நான் ஒருவரைக் காதலிப்பது தெரிந்தும், அதை ஏற்காமல் வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் செய்தார்கள். நான் தடுத்து நிறுத்தியதால் என் மேல் வெறுப்பாகி, பள்ளிச் சிறுவர் தொடங்கி வீட்டுக்கு வரும் ஆண்களுடன் இணைத்து நாராசமாகத் திட்டுகிறார்கள். இதனால் திருமணமே வேண்டாம் என்று முடிவெடுத்த என்னை, 10 மாதங்களாக வீட்டுக்காவலில் வைத்திருக்கிறார்கள். 46 நாட்கள் டீ, காபி கூட குடிக்காமல் பட்டினி கிடந்த என்னை 47-வது நாள் என் அக்கா கட்டாயப்படுத்தியதால் சாப்பிட்டேன். 'யாரைக் கல்யாணம் செய்தாலும், அதன் பிறகு, பிறந்த வீட்டுக்கு வரக்கூடாது’ என்றதோடு 'உனக்கு நல்ல சாவு வராது’ என்று சாபமிட்டதால் 27 வயதில் வாழ்க்கையே வெறுத்துவிட்டது. இதனால் எனக்கு தற்கொலை எண்ணம் மேலோங்குகிறது. என் காதலர் இன்றுவரை எனக்காகக் காத்திருந்தாலும் வீட்டை விட்டு ஓட விருப்பமில்லை. இங்கே நடைபிணமாகவும் இருக்க முடியவில்லை. ஏதாவது ஆசிரமத்தில் சேரவும் வழி தெரியாத எனக்கு, நீங்கள் வெளிச்சம் காட்டுவீர்கள் என்று காத்திருக்கிறேன்.''
வாசகிகள் ரியாக்ஷன்
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

100
துணிந்து வா!
நீ 46 நாள் பட்டினி கிடந்தும் உன்னைப் பெற்றவர்கள் மனம் இரங்கவில்லை என்றால், அவர்கள் மனம் பட்டுப்போன மரம்தான். உன்னைக் காதலித்தவர் இன்றுவரை உனக்காக காத்திருக்கிறார் என்றால் அவரை நினைத்துப் பெருமையாக உள்ளது. அவரை, தைரியமாக வந்து உன்னைப் பெண் கேட்கச் சொல். உன் வீட்டார் திட்டி, மறுத்தால் அவருடன் தைரியமாக வெளியே செல். நீ மேஜர் என்பதால், வாழ்க்கையை அனுபவிக்க நீ வெளியில் வந்துதான் ஆகவேண்டும். புதிய காற்று உன் சுவாசத்தை வாசமாக்கும். வாழ்க்கையை வசமாக்கும்.
- சங்கீதா என்.ஸ்ரீதர், பெங்களூரு
சட்டப்பூர்வ திருமணம்!
உன் வீட்டார் உன்னைத் தரக்குறைவாக பேசி, நடத்தி வருவது பெரும்குற்றமே! உனக்கு அவர்களே திருமணம் செய்து வைத்தாலும் பின்னர் பிறந்த வீட்டுக்குக்கூட வரக் கூடாது என்று சொன்னபிறகும், உன் வாழ்க்கையை நீயே அமைத்துக்கொள்ள ஏன் தயங்குகிறாய்? உன்னோடு சேர்ந்து வாழ இன்னும் காத்திருக்கும் உன் காதலனை எப்படியேனும் தொடர்புகொண்டு, சட்டப்பூர்வமாக திருமணம் செய்து உங்கள் வாழ்க்கையை மகிழ்வுடன் தொடங்குங்கள். இறைவன் உங்களுக்கு துணையாக இருக்கட்டும்.
- இவான் பெர்னாண்டோ, சென்னை-92
மன நிம்மதியுடன் வாழலாமே!
காதலித்தவர் இன்று வரை காத்திருப்பதாகவும், ஆனாலும் வீட்டைவிட்டு ஓட விருப்பமில்லை என்று சொல்வது உங்கள் குடும்பத்தார் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, மரியாதையைக் காட்டுகிறது. உங்கள் வீட்டார் உங்களைக் கொடுமைப்படுத்தும்போது நீங்கள் ஏன் அவர்களை மதித்து, நடைபிணமாக வாழ வேண்டும்? வீட்டை விட்டு வெளியேறி உங்கள் நலம் விரும்பும் நண்பர்கள் உதவியுடன் உங்கள் படிப்பு, தகுதிக்கேற்ற வேலையைத் தேடிக்கொள்ளுங்கள். உங்களை விரும்பும் நபரை பதிவுத் திருமணம் செய்துகொண்டு நிம்மதியுடன் வாழுங்கள்!
- அ.ஜெயந்தி, ஸ்ரீரங்கம்