நானே சிக்கலாக்கிய கோலம்!
வினையை விலை கொடுத்து வாங்குவது என்பார்களே, அப்படியாகிவிட்டது என் வாழ்க்கை!
இரண்டு குழந்தைகளுக்குத் தாய் நான். பிறந்த வீட்டைவிட, என்னை அன்பாகப் பார்த்துக்கொள்ளும் கணவர். மாமியார், மாமனார் தொல்லையில்லாத தனிக்குடும்பம். இப்படி சந்தோஷமாகச் சென்றுகொண்டிருந்த என் வாழ்க்கையில்தான், தோழி என்ற பெயரில் உள் வந்தது விதி.
எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்குப் புதிதாகக் குடிவந்த அவளுக்கு 35 வயதாகியும் திருமணமாகவில்லை. 'இனியும் ஆகப்போவதில்லை’ என்று ஒருவித விரக்திச் சிரிப்புடன் அவள் சொன்ன கணத்தில்தான், அவளிடம் நட்பு ஏற்பட்டது எனக்கு. 'திருமணம் தள்ளிப்போயிட்டே இருக்கு’ என்று வருந்திய அவள் பெற்றோருக்கு ஆறுதல் கூறி, நானே அவளுக்கு வரன் பார்க்க ஆரம்பித்தேன்.

நாளாக ஆக எனக்கு மட்டுமின்றி, என் குழந்தைகளுக்கு, கணவருக்கு என்று எல்லோருக்கும் பிடித்தவளாகிப் போனாள் தோழி. அவளின் துறுதுறு குணம், யாரிடமும் பேசாத என் கணவரையும் அவளிடம் பேச வைத்தது. அதை நான் அவளிடமே கூறி வியந்தேன். நட்பு மட்டுமின்றி, என் வீட்டு விஷயங்கள் அனைத்தையும் நம்பிப் பகிரும் ஸ்தானத்துக்கு உயர்ந்தாள். அதை என் கணவரிடம் மகிழ்ந்து பகிர்ந்தேன். அவர் அலுவலகம் கிளம்பும்போது, 'வழியில இவளை அங்க இறக்கிவிட்டுருங்களேன்...’ என்று நானே அனுப்பிவைத்தேன்.
இப்படி எனக்கு மிகவும் நெருக்கமானவள் என்கிற காரணத்தால் அவளிடம் பேச ஆரம்பித்த என் கணவர், ஒரு கட்டத்தில் நானே பொறாமைப்படும் அளவுக்கு, என்னைவிட அவளிடம்தான் அதிகம் பேச ஆரம்பித்தார். இன்னொரு பக்கம், நான் இருக்கும்போதே என்னையும் மீறி அவருக்குச் சாப்பாடு பரிமாறுவது, அவர் இருக்கும் நேரமாகப் பார்த்து வீட்டுக்கு வருவது என தோழியின் நடவடிக்கைகளும் அதிர்ச்சி தந்தன.
இதை முளையிலேயே கிள்ளி எறிய, என் கணவரிடம் மனம் விட்டுப் பேச நினைக்கிறேன். ஆனால், இதுவரை என்னிடம் அன்பாகவும், பிடிப்பாகவும் இருப்பவர் மீது திடீரென சந்தேக குண்டைத் தூக்கிப்போட்டால், என் மீதான பிரியம் சேதமாகிவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. சொந்த வீடு என்பதால், வீடு மாறிச் செல்லவும் வழியில்லை. நம்பிப் பழகிய நான் மனம் நோகுமளவுக்கு நடக்கும் தோழியிடம் இது பற்றிப் பேச ஈகோ இடம் கொடுக்கவில்லை. கண்டிக்க நினைத்தால்... ஒருவேளை அவள் விகல்பமில்லாமல்தான் பழகுகிறாளோ என்கிற குழப்பம் வேறு!
விஷயம் கைமீறவில்லை. என்றாலும், அதற்கான சாத்தியங்களை கொடுத்து நான் காத்திருப்பதாக, என் மூளை என்னைத் திட்டுகிறது. நானே சிக்கலாக்கிக்கொண்ட கோலம் இது. சரிசெய்வது எப்படி தோழிகளே?
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...
என் டைரி 335-ன் சுருக்கம்
''தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கும் 27 வயது பெண்ணான நான், தங்கையின் திருமணத்துக்குப் பிறகே திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக இருந்தேன். ஒருவரைக் காதலிப்பதாக தங்கை கூறவே, பெற்றோரை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்தேன். ஆனால், ஒரு சிக்கலால் திருமணம் நின்றுபோனது. இன்னொரு மாப்பிள்ளைக்கு தங்கையை மணமுடித்த நிலையில், எனக்கும் வரன் முடிவானது. இந்தச் சூழலில், 'யாரையாவது காதலித்தாயா?’ என்று தங்கையின் கணவர் இயல்பாகக் கேட்க, இவளும் நடந்ததைச் சொல்ல... மோதல் வெடித்து, வீட்டை விட்டே துரத்திவிட்டார். தங்கையும், பெற்றோரும் தற்போது கண்ணீரில். இத்தகைய சூழலில் திருமணம் செய்துகொள்வதை நான் தவிர்க்க நினைக்கிறேன். ஆனால், மாப்பிள்ளையோ கட்டாயப்படுத்துகிறார். இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கும் எனக்கு வழி சொல்லுங்களேன்!'
வாசகிகள் ரியாக்ஷன்
ஒவ்வான்றுக்கும் பரிசு:

100
ஆனந்தக் கண்ணீர் வழிய..!
சகோதரி! நீ கல்யாண மாலை சூடுவதுதான் உனக்கும் உன் பெற்றோருக்கும் நல்லது. ஏற்கெனவே உன் தங்கை காரணமாக உன் பெற்றோர் கண்ணீர்வடித்துக் கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் உன் திருமணத்தின் மூலமாவது ஆனந்தக் கண்ணீர் வழியச் செய்!
- சுகந்தா ராம், கிழக்கு தாம்பரம்
வாயும் வயிறும் வேறு!
'தாயும் பிள்ளையுமாக இருந்தாலும், வாயும் வயிறும் வேறு...’ என்பார்கள். உன் தங்கைக்காக உன் திருமணத்தை தள்ளிப் போடுவது முட்டாள்தனம்! உன் திருமணத்தையும் தள்ளிப் போட்டு, வீட்டில் எல்லோரும் அழுதுகொண்டிருப்பதைவிட, ஒரு சுபகாரியம் நடந்தால், மற்ற பிரச்னைகளும் சரியாகும். உனக்கு கிடைத்திருக்கும் நல்வாழ்வை தவறவிடாதே! அந்த நல்லவரைக் கைபிடித்து, அவர் துணையோடு, உன் தங்கையின் பிரச்னைக்கு தீர்வு காணலாமே..!
- தஸ்மிலா அஸ்கர், கீழக்கரை
அறிவுடைய செயல்!
தங்கைக்காக உன் வாழ்க்கையைத் தள்ளிப்போட்டதில் தவறில்லை. ஆனால், அதற்கும் ஒரு காலக்கெடு வேண்டும். வாழ்க்கையில் தியாகம் செய்வதில் நிம்மதியும், முழுதிருப்தியும் இருக்க வேண்டும். அது இல்லாவிட்டால், உன் வாழ்க்கைக்கும் பங்கம் நேரிடும். ஆகவே, உனக்கு இப்போது கிடைத்துள்ள நல்ல வாய்ப்பை நீ உடனடியாக பயன்படுத்திக்கொள். அதன்பிறகு நன்றாக விசாரித்து, ஆலோசித்து உன் தங்கைக்கு திருமணம் நடத்தி வைப்பதுதான் அறிவுடைய செயலாகும்.
- கே.ராஜேஸ்வரி, மணப்பாறை