மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 337

அப்பாவுக்குப் பிள்ளை தப்பாமல்..!

றியாப்பருவமான 19 வயதில் திருமணம் நடந்தது எனக்கு. கணவருக்கு ஆணாதிக்கம், குடிப்பழக்கம், சந்தேகம் என்று அனைத்து தீய பழக்கங்களும் உண்டு. குறிப்பாக, என் உணர்வுகளைத் துளியும் மதிக்காத அவரின் ஆண் திமிர், என் வாழ்க்கையையே நரகமாக்கியது. 'ஒரு பொம்பள... என் அடிமையா இருக்கிறதை தவிர உனக்கு என்ன வேலை’ என்பதுதான் அவரின் அழுத்தமான எண்ணம்.

மனைவியாக அல்ல, ஒரு மனுஷியாகக்கூட என்னை அவர் துளியும் மதிக்காததால், அவருடைய உறவினர்களும் மதிப்பதே இல்லை. எனக்கென்று ஒரு வருமானம் இருந்தால், எனக்குண்டான மரியாதையை, உரிமையைப் பெறலாம் என்றால், என் கணவரின் சந்தேக குணத்தால் வேலைக்கும் செல்ல முடியவில்லை. இப்படியே ஓடிவிட்டன 20 வருடங்கள்.

என் டைரி - 337

எனக்கு ஒரு பையன், ஒரு பெண். பையனை, கணவர் போல் அல்லாமல், பெண்மையை மதிப்பவனாக வளர்க்க வேண்டும் என்பதுதான், அவன் பிறந்தபோதே நான் எடுத்த முடிவு. ஆனால், அதை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டதுதான், இதுவரை நான் பட்ட கஷ்டத்தையெல்லாம்விட எனக்கு அதிக துயர் தருகிறது. வீட்டில் கணவரின் கையே எப்போதும் ஓங்கி இருக்கும் என்பதால், என் அன்பின் அரவணைப்பைவிட, அவரின் அதிகார கதகதப்பிலேயே வளர்ந்தான் அவன்.

''நீ ஆம்பள சிங்கம்டா...’' என்று சொல்லி வளர்ப்பதும், ஆடையில் இருந்து பள்ளி வரை என் பெண்ணைவிட அவனுக்கு ஓரிரண்டு படிகள் உயர்வானதாகவே செய்வதும் என, அவனை தன் பக்கம் இழுத்து, தன்னைப் போலவே வளர்த்துவிட்டார். 14 வயதுதான் ஆகிறது அவனுக்கு. இப்போதே, "பொண்ணுங்க எதுக்கும் லாயக்கில்லாதவங்க, ஆம்பளைங்கதான் பெஸ்ட்’' என்று பேசுகிறான். "இதெல்லாம் தப்புடா... அக்காவுக்கு மரியாதை கொடுக்கணும்டா...'' என்று நான் எடுத்துச் சொன்னால், "பொம்பளப் பிள்ளைகிட்ட என்னை ஸாரி கேட்க சொல்றியா..?’' என்று அதே ஆண் திமிருடன் கேட்கும்போது, மனது வெடிக்கிறது எனக்கு. என் மகனும் நாளை தன் மனைவியை இப்படி ஓர் அடிமையாகவே வைத்திருக்கப் போகிறானா என்று நினைக்கும்போது, என் கணவரால் நான் பட்ட அவமானங்களைவிட, இது எனக்கு ரணமாக இருக்கிறது.

என்னால் முடிந்த அளவு என் பையனுக்கு புரியவைக்க முயன்றுவிட்டேன். ஆனால், அவன் எனக்கு செவி சாய்ப்பதே இல்லை. பெண்மைக்கு எதிரான என் பையனின் எண்ணத்தை மாற்ற, நான் என்ன செய்யட்டும் தோழிகளே?!

பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி - 337

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 336-ன் சுருக்கம்

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான எனக்கு, அன்பான கணவர். சந்தோஷமாக சென்றுகொண்டிருந்த எங்களின் தனிக்குடித்தனம், பக்கத்து வீட்டில் புதிதாக குடிவந்த திருமணமாகாத 35 வயது பெண்ணால் தடுமாற ஆரம்பித்துள்ளது. திருமணமாகாத விரக்தியில் இருந்த அவளுக்கு ஆறுதல் கூறிய நான், அவளுக்கு வரனும் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். அவளது துறுதுறு குணம், யாரிடமும் பேசாத என் கணவரை அவளிடம் பேச வைத்தது. இப்படியாக எங்களிடம் நெருக்கமாகிப் போனவள்... என் கணவருக்கு சாப்பாடு பரிமாறுவது, அவர் இருக்கும் நேரமாகப் பார்த்து வீட்டுக்கு வருவது என சமீபகாலமாக அதிர்ச்சி தர ஆரம்பித்துள்ளாள். இதை முளையிலேயே கிள்ளிவிட என் கணவரிடம் பேச நினைக்கிறேன். ஆனால், அவர் என்ன நினைப்பாரோ என்று அச்சமாக இருக்கிறது. விஷயம் கைமீறவில்லை என்றாலும், நானே சிக்கலாக்கிக்கொண்ட இந்தக் கோலத்தை எப்படி சரிசெய்வது?''

வாசகிகள் ரியாக்ஷன்

ஒவ்வான்றுக்கும் பரிசு:

என் டைரி - 337

 100

அத்தை சென்டிமென்ட்!

சகோதரியே... இப்போது ஒன்றும் குடிமூழ்கிப் போய்விடவில்லை. எல்லோரையும் அன்பால் அடிக்கும் அவளை, உன் குழந்தை களை விட்டு சென்டிமென்ட்டாக அடி. ஆம்! 'அத்தை’ என்று உன் குழந்தைகளை வைத்து... கணவன் எதிரே அடிக்கடி கூப்பிடச்சொல். இப்படி 'அத்தை’ என உன் குழந்தைகள் கூப்பிடும்போது, உன் கணவன், உன் தோழி இருவருக்கும் ஏற்படும் முகமாற்றத்தைக் கவனித்தால், உன் சந்தேகத்துக்கு விடை கிடைத்துவிடும். நீ நினைப்பது போல் அவர்களிருவரின் எண்ணம் வேறுவிதமாக இருந்தால், இந்த 'அத்தை’ என்ற வார்த்தையே அதை மாற்றிவிடும். நம்மவர்கள், பெரும்பாலும் சென்டிமென்ட்டுக்கு கட்டுப்பட்டவர்கள் ஆயிற்றே!

-  விஜயலட்சுமி சிவசங்கரன், சென்னை-87

வாழ்க்கையை வசந்தமாக்கும்!

சகோதரி! நீ ஒரு குடும்பம் நடத்தும் பாக்கியம் பெற்றவள். இந்த சிக்கலுக்கு நீயே பதில் காண வேண்டும். இதுபற்றி அன்பு, பாசம் பிடிப்புள்ள உன் கணவரிடம் நேரடியாக மனம் திறந்து பேசிவிட்டால், சிக்கலாக்கிக்கொண்ட கோலம் நிச்சயமாக மாறும். ஈகோ, பயம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உன் கணவரிடம் தைரியமாக பேசு. அவர் கூறும் வெளிப்படையான பதிலே, உன் வாழ்க்கையை வசந்தமாக்கும்.

இல.வள்ளிமயில், மதுரை

வாழ்க்கை அமைத்துக்கொடுங்கள்!

பக்கத்து வீட்டுத் தோழிக்கு உடனடியாக ஒரு வாழ்க்கை அமைத்துக்கொடுப்பதே இப்பிரச்னைக்கு சரியான தீர்வாக அமையும். மாறாக, உன் கணவரையோ அல்லது தோழியையோ கண்டிப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடலாம். 'இது என் வேலை இல்லை’ என நீ நினைத்தால், உன் வாழ்க்கை பாதிக்கப்படலாம். அதுவரையிலும், அக்கம்பக்கத்தாரை காரணம் காட்டி, 'நீ விகல்பம் இல்லாமல் பழகினாலும், அது பழிச்சொல் ஏற்படக் காரணமாக அமைந்துவிடும்' என்று பக்குவமாகத் தோழியிடம் எடுத்துக்கூறி, அவளைக் கட்டுப்படுத்தி வை! இந்த விஷயத்தில், தோழியிடம் கெடுபிடி காட்டிவிடாதே. இது உன் கணவருக்குத் தெரிந்தால், அவள் மீது பரிதாபம் ஏற்பட்டு, அது பிரச்னையை மேலும் சிக்கலாக்கிவிடும்... ஜாக்கிரதை!

கோகிலா செல்வசேகர், பள்ளிப்பாளையம்