மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி 258

கண்ணீரில் கரையும் கடைசி காலம் !

வாசகிகள் பக்கம்
ஒவியம்: சிவபாலன்

நான்... 85 வயதாகும் முதியவள். பிள்ளைகளுக்குப் பாரமான பெற்றோராகிப் போனதால், வாழ்க்கையை நரகமாக நகர்த்திக் கொண்டு இருக்கிறோம் நானும் என் கணவரும்.

எங்களுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த ஒரு பெண்ணைப் பார்த்து, மூத்தவனுக்கு மணம் முடித்தோம். இளையவன், வட நாட்டுப் பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டான். கணவரின் ரிட்டையர்மென்ட் பணத்தில் மகள்களின் கல்யாணத்தை முடித்தோம். அதற்குப் பின்தான் இருக்க இடமில்லாத நாடோடிப் பிழைப்பு ஆரம்பமானது எங்களுக்கு.

என் டைரி  258

மூத்த மகன் வீட்டில் நாங்கள் இருப்பதை அவன் மனைவி விரும்பவில்லை. ''ஏன்... உங்கம்மா, அப்பாவை உங்க தம்பி தன்னோட வெச்சுக்க மாட்டாரோ?'' என்று எங்கள் காதில் விழும்படியே கத்தினாள். 'அவள் சொல்வதும் நியாயம்தானே!’ என்று டெல்லியில் இருக்கும் இரண்டாவது மகன் வீட்டுக்குச் சென்றோம். தன் பிரைவசி பறிபோனதாக அடிக்கடி தன் கணவனிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்த இரண்டாவது மருமகள், திடீரென்று ஒரு நாள் வீட்டைவிட்டே வெளியேறிவிட்டாள்.

''அவ தனியாவே வளர்ந்து பழகிட்டாம்மா. உங்ககூட சேர்ந்து இருக்க முடியல. அம்மா வீட்டுக்குக் கிளம்பிட்டா'' என்று மகன் சொன்னதும், 'அவனுடைய சந்தோஷமான வாழ்க்கைக்கு இடையூறு ஆகிவிட்டோமோ' என்ற வேதனை அழுத்த, உடனே ஊருக்குத் திரும்பிவிட்டோம்.

''ஒரு மாசம்கூட உங்க தம்பி வெச்சுக்க மாட்டாமத்தானே இப்படித் திரும்பி வந்து இருக்காங்க. இனி என்னாலயும் வடிச்சிக் கொட்ட முடியாது...'' என்று மூத்த மருமகள் ஆரம்பிக்க, ''பெத்தவங்களோட அருமை தெரியாம வளர்ந்ததாலதான் நீ இப்படிப் பேசற...'' என்று என் மகன் பதிலுக்குக் கத்த, எங்களுக்கோ முள்ளில் இருப்பது போல இருந்தது.

இதற்கிடையில் என் இரண்டாவது மகள், ''என்கூட வந்திடுங்க... நான் பார்த்துக்கறேன்'' என்றாள். அவளுடைய வீட்டுடன் வந்து ஒரு வருடம் ஓடிவிட்டது. தன் தேவைகளைக் குறைத்தாவது, மருத்துவம், மாத்திரை என்று எங்கள் தேவைகளை அவள் நிறைவேற்றுகிறாள். இந்த ஒரு வருடத்தில் என் இரண்டு மகன்களோ, மருமகள்களோ, மூத்த மகளோ ஒருமுறைகூட வந்து பார்க்கவில்லை. சல்லிக்காசு கொடுக்கவும் இல்லை. 'விட்டது தொல்லை' என்று கைகழுவியது போல் இருக்கிறார்கள். இதை இளையமகளின் மாப்பிள்ளை சொல்லிக் காட்டும்போது, 'சுருக்’ என்கிறது எங்களுக்கு.

மனைவிமார்களின் கட்டுப்பாட்டால் மகன்கள் விலகி இருந்தாலும், 'கடைசி காலத்தில் மகன்களின் நிழலில்தான் உயிர் போக வேண்டும்' என்று நினைக்கிறோம் நானும் கணவரும். பணம் மட்டுமே பிரதானமாக இருக்கும் இந்த உலகத்தில், எங்கள் சோர்ந்துபோன உடல் மற்றும் மனதின் ஏக்கம் சாத்தியமாக வழி ஏதாவது இருக்கிறதா?!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

 சிநேகிதிக்கு.... சிநேகிதிக்கு...

என் டைரி 257-ன் சுருக்கம்

''என்னுடைய 20 வயதில் காதலில் விழுந்தவள் நான். கொஞ்சம் நெருக்கமாகவே பழகிய நிலையில், கல்யாணப் பேச்சை எடுத்தபோது... சட்டென்று கை கழுவிவிட்டான் காதலன். இன்னொருவருடன் திருமணமாகி பத்து ஆண்டுகள் உருண்டுவிட்ட நிலையில், திடீரென்று என்னைப் பின் தொடர ஆரம்பித்திருக்கும் அவன், என் மாமியாரை எப்படியோ தெரிந்து கொண்டு, அவரிடம் சகஜமாகப் பேசியபடி வாசல் வரை வந்துவிட்டான். 'நட்பு' என்கிற பெயரில் குடும்பத்துக்குள் நுழைந்து குழப்புவானோ என பயமாக இருக்கிறது. 'என் வழியில் வராதே’ என்று அவனிடமே பேசுவதா... இல்லை, பழைய கதையை கணவரிடம் சொல்லிவிடுவதா என்று புரியாமல் தவிக்கிறேன். தெளிவுபடுத்துங்கள் தோழிகளே!''

வாசகிகளின் ரியாக்ஷன்...

பிறந்தகமே துணை!

உனது நிலைமை மிகவும் இக்கட்டானதுதான். இந்தக் காதல் விஷயம் உன் கணவருக்கோ, மாமியாருக்கோ கண்டிப்பாகத் தெரியக்கூடாது. எவ்வளவுதான் நல்லவர்களாக இருந்தாலும், இந்த விஷயத்தில் எப்படி இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. மொத்தக் கதையும் சொதப்பலாக முடிவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இதற்கு ஒரே வழி, உன் பிறந்த வீட்டாரின் உதவியை நாடுவதுதான். அவர்களுக்கு பழைய விஷயத்தை பக்குவமாக நீ எடுத்துச் சொன்னால், நிச்சயம் உதவிக்கு வருவார்கள். உன் நலம் விரும்பிகளான அவர்களை வைத்தே, அவனிடம் பேசி, உன் வழிக்கு வராமல் செய்துவிடு. அவனும் அதற்குக் கட்டுப்பட்டு விலகிச் சென்றுவிடுவான். நம்பிக்கையோடு வாழ்க்கையை நடத்து!

- வி.பொன்னம்மா, உறையூர்

உடனே சொல்... உண்மையை!

தோழியே... மனம் கலங்காதே! அவனிடம் நண்பனாக பழகியதை, கணவனிடம் தைரியமாக எடுத்துச் சொல். வளரவிட்டால்தான் ஆபத்து. எந்தக் கணவனும் மனைவி கூறுவதை நம்பாமல் இருக்க மாட்டான். உன் கணவன் மூலமாகவே மாமியாருக்கும் விஷயம் தெரியட்டும். 'திருமணத்துக்கு முன்பே இதைப் பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறாள்' என்று தன் அம்மாவிடம் சொல்லும் அளவுக்கு உன் கணவர் பெருந்தன்மையோடு இருந்தால், மிகவும் நல்லது. அந்த அளவுக்கு அவரிடம் நீ வெளிப்படையாக இருக்கவேண்டும் என்பதுதான் முக்கியம். இதுமட்டும் நடந்துவிட்டால்... பிரச்னையே இருக்காது. மன உளச்சலுக்கு ஆளாகாமல் சீக்கிரமாகவே விஷயத்தைச் சொல்லி, உன் வாழ்வில் மகிழ்ச்சியைத் தக்க வைத்துக்கொள்.

- எஸ்.புவனா சாமா, சீர்காழி

தடுமாறாதே... தடம் மாறாதே!

மலரும் நினைவுகளால் உந்தப்பட்டு, அன்று உங்களைக் கை கழுவிய பாவத்துக்காக மன்னிப்புக் கேட்பதற்காகக் கூட அவன் உங்களை வட்டமிடலாம். அவசரப்பட்டு உங்கள் கணவரிடம் தன்னிலை விளக்கம் அளிக்கும்பட்சத்தில் பூமராங் போல அது உங்களையேத் திருப்பித் தாக்கினாலும் தாக்கலாம். இதுபோன்ற தருணங்களில் முள் மீது விழுந்த சேலையை எடுப்பது மாதிரியான கவனமே தேவை. எனவே, முன்னாள் காதலரிடம் பேசி, உண்மை நிலவரம் அறிய முயற்சிப்பதே சாலச் சிறந்தது. சந்திப்பில் பாதக நிலை என்றால்... மட்டுமே விஷயத்தை கணவரிடம் கொண்டு செல்லுங்கள். இந்த பத்து வருட தாம்பத்யத்தில் நிச்சயம் கணவர், உங்களைப் புரிந்து கொண்டிருப்பார். இல்லறத்தில் உள்ள நீங்கள், இப்போதுதான் கூடுதல் கவனத்துடன் செயல்படவேண்டும். குறிப்பாக, முன்னாள் காதலனைப் பார்த்து தடம் மாறாமல் இருப்பது அதிஅவசியம்.

- ஜி.கே.எஸ். பரிமளாமூர்த்தி, கோபிசெட்டிபாளையம்

காலில் உள்ளதைக் கழற்றி அடி!

தோழி... நான் சொல்லும் முடிவு கொஞ்சம் கடினமாக தெரிந்தாலும், உன்னைச் சுற்றும் அவனுக்கு அதுதான் சரியான முடிவாக இருக்கும். அடுத்த முறை அவனைப் பார்க்கும்போது நடுரோட்டில் நிற்க வைத்து, காலில் உள்ளதைக் கழற்றி அடி. என்ன, ஏது என்று ஆட்கள் சூழ்ந்து கொள்ளும்போது 'இந்தப் பொம்பளப் பொறுக்கி... என் பின்னாடியே சுத்தறான்’ என்று சொல். ஒரு பெண் சொன்னால்... கூட்டத்தில் இருக்கும் அத்தனை பேரும் உன் பேச்சைத்தான் முதலில் கேட்பார்கள். அவனுக்கு அங்கேயே தர்ம அடி கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. உன் மாமியாரோ, கணவரோ விஷயத்தைக் கேள்விப்பட்டு என்னவென்று கேட்டால்... உண்மையை அப்போது சொல். உன்னைத் தொடர்ந்தவனுக்கு தண்டனைக் கிடைப்பதுடன், உண்மையை உள்ளபடியே வீட்டாரிடம் சொல்வதற்கும் சரியான வாய்ப்பாக அது அமையும்.

ஒரு காலத்தில் காதலித்திருந்தாலும், இப்போது கணவனுக்கு மட்டுமே நேர்மையாக இருக்கும் விஷயமே... மாமியாரையும் கணவனையும் நெகிழ வைத்துவிடும்!

- ஜானகி சுப்பிரமணியம், சென்னை-20