மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 338

கொடுத்தது போலவே பறித்தது விதி!

பதின்ம வயது முதலே, 'அழகான மாப்பிள்ளையைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்’ என்பது என் ஒரே கனவாக இருந்தது. படிப்பு முடிந்து வரன் பார்க்கத் தொடங்கிய நாட்களில், 'முகம் அழகா இருந்து, மனசு கோணலா இருந்தா என்ன பண்ணுவே?’ என்றெல்லாம் என் வீட்டில் பயமுறுத்தி, அறிவுறுத்தினாலும், 'அழகான கணவர் கிடைக்கணும்’ என்று வேண்டி, கோயில் கோயிலாகச் சென்றேன். விளக்கு பூஜை, அடிப்பிரதட்சணம், அங்கப் பிரதட்சணம் எல்லாம் செய்தேன். என் மனம்போலவே பெண் பார்க்க வந்தார் அவர். அழகென்றால் அப்படி ஓர் அழகு! என் கனவு நாயகனையே நான் மணமுடிக்க, ஊர் கண்பட இருந்தது எங்கள் ஜோடிப் பொருத்தம்.

அடுத்த மாதமே கருவுற்றேன். ஊருக்கெல்லாம் விருந்து வைத்துக் கொண்டாடினோம். அவர் அழகானவராக மட்டுமல்ல, அன்பானவராகவும் இருந்தது என் பூர்வஜென்ம பலன் என ஒவ்வொரு நாளும் எண்ணி மகிழ்ந்தேன். எங்களுக்குள் சின்ன சண்டைகூட வந்ததில்லை. எனக்கு சீமந்தத்துக்கான நாள் வந்தபோதுதான், என் சந்தோஷம் மொத்தமாக அழிந்துபோனது. நிகழ்ச்சிக்குத் தேவையான பொருட்களை வாங்கப் போன என்னவர், விபத்தில் பலியாகி மீளாத் துயரில் விட்டுச் சென்றுவிட்டார்.

என் டைரி - 338

மாதங்கள் உருண்டாலும்... கண்ணீர் வற்றவில்லை எனக்கு. இந்நிலையில் அச்சு அசல் அப்பா போலவே வந்து பிறந்தான் மகன். கண்ணீர் பெருக்கோடுதான் அவனைக் கொஞ்சிக் கொண்டிருக்கிறேன். நான் வேண்டியபடியே கணவனைக் கொடுத்த கடவுள், அதேவேகத்தில் பறித்துக்கொண்ட துயரம் ஒரு பக்கம்; 'ராசியில்லாதவள்' என்று என் புகுந்த வீட்டினர் தள்ளிவைத்த கொடுமை மறுபக்கம் என நொந்து நூலாகிக் கிடக்கிறேன். இப்போது பெற்றோருடன் வசிக்கும் என் ஒரே ஒரு கண்ணீர் கோரிக்கை... கணவருடன் நான் வாழ்ந்த அதே வீட்டில் தொடர்ந்து வாழ வேண்டும்; ஒவ்வொரு சதுர அடியிலும் நிறைந்திருக்கும் அவர் நினைவுகளுடனும், அவர் குழந்தையுடன் வாழ வேண்டும் என்பதுதான். ஆனால், இதற்கு என் மாமியார் வீட்டினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். 'உன்னை மதிக்காத வீட்டுக்கு நீ போகவேண்டாம்...’ என்று தடுக்கும் பெற்றோர், என் கோரிக்கைக்காகப் பரிந்து பேச வர மறுக்கிறார்கள். ஏற்கெனவே ரணமாகிக் கிடக்கும் என் உள்ளத்தின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள யாருமே இல்லை.

கணவரோடுதான் வாழமுடியவில்லை... கணவரின் நினைவுகளுடன் அவர் வீட்டில் வாழ்வதற்கு உரிமையாவது கிடைக்குமா? வழிசொல்லுங்கள் தோழிகளே!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி - 338

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 337-ன் சுருக்கம்

''அறியாப்பருவத்தில் நடந்தது என் திருமணம். ஆணாதிக்கம், குடிப்பழக்கம், சந்தேகம் என அனைத்து தீயபழக்கங்களும் உள்ள கணவரால் வாழ்க்கையே நரகமானது. மனைவியாக அல்ல, ஒரு மனுஷியாகக்கூட அவர் மதிப்பதில்லை. இப்படியே ஓடிவிட்டன 20 ஆண்டுகள். எனக்கு ஒரு மகள், ஒரு மகன். வீட்டில் கணவரின் கையே ஓங்கியிருக்கும் என்பதால், அவருடைய கதகதப்பில், அவர் போலவே வளர்ந்தான் மகன். 'பொண்ணுங்க எதுக்கும் லாயக்கில்லாதவங்க, ஆம்பளைங்கதான் பெஸ்ட்’ என்று அக்காவிடமே கேவலமாகப் பேசும் அளவுக்கு இருக்கிறது அவன் போக்கு. 'அக்காவுக்கு மரியாதை கொடுக்கணும்டா’ என்று எடுத்துச் சொன்னால், 'பொம்பளை பிள்ளைகிட்ட 'ஸாரி’ கேட்க சொல்றியா..?’ என்று ஆண் திமிர் கொப்புளிக்கிறது. 'அப்பாவைப் போலவே மகனும் நாளை தன் மனைவியை அடிமையாக நடத்துவானோ?’ என்று நினைக்கும்போது இதயம் வெடிக்கிறது.

பெண்மைக்கு எதிரான என் மகனின் குணத்தை மாற்ற என்ன செய்யட்டும் தோழிகளே?!''

வாசகிகள் ரியாக்ஷன்

ஒவ்வான்றுக்கும் பரிசு:

என் டைரி - 338

 100

திமிருக்கு பணியாதே!

பிள்ளைகளுக்குப் பெற்றோர்தான் ரோல் மாடல் என்பார்கள். அதுதான் இங்கேயும் நடந்திருக்கிறது. இது ஒன்றும் பிறவிக் குணமல்ல. எனவே, கொஞ்சம் கொஞ்சமாக புரியவைத்தால் நிச்சயமாக மாறுவான் உங்கள் மகன். 'அப்பாவைப் போல இருக்காதே’ என்று உங்கள் மகனுக்கு அறிவுரை கூறுவதைவிட, உங்களது அன்பான அணுகுமுறையால் பெண்களின் உயர்வை அவன் உணரும்படி செய்யுங்கள். கூடவே, அவனுடைய எல்லா திமிர் நடவடிக்கைகளுக்கும் பணிந்துவிட வேண்டாம். சமயங்களில் அவனைக் கண்டுகொள்ளாததுபோல் இருங்கள். இதெல்லாம் அவனை யோசிக்க வைக்கும். மனம் மாற வைக்கும்!

- என்.ரங்கநாயகி, கோவை

அன்பாக, ஆதரவாக பேசு!

சரித்திரத்தில் புகழ்பெற்ற பெண்களின் பட்டியலை உன் பையன் புரியும்படி எடுத்துச்சொல். அன்புக்கு அடிபணியாதவர்கள் யாருமிலர்; 'கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’ என்பதை நினைவில்கொண்டு அன்பாக, ஆதரவாக பேசு. ஆணுக்குப் பெண் சரிசமம் என்பதை அவன் புரிந்துகொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை.

- எஸ்.சரஸ்வதி, அரும்பாக்கம்

மகன் மாறுவான்... கவலை வேண்டாம்!

திரும்பத் திரும்ப இதைப் பற்றியே உங்கள் பையனிடம் எடுத்துச் சொன்னால் எரிச்சல்தான் வரும். ஒருவேளை உங்கள் வீட்டில் மாமியார் இருந்து, அவரிடம் உங்கள் கணவர் நடந்துகொள்ளும் முறை... அத்தனை அன்பானதாக இருந்தாலோ, அல்லது அக்கம்பக்கத்தில் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் வீடுகள் இருந்தாலோ... இதெல்லாம் மகனின் கவனத்துக்கு வரும் வகையில் பார்த்துக்கொள்ளுங்கள். போகப்போக அவனே புரிந்துகொள்வான். அவனுடைய நண்பர்களைப் பார்த்தும் அவனே மாறிக்கொள்வான், கவலைப்படாதீர்கள்.

- பிருந்தா ரமணி, பழங்காநத்தம்