என் டைரி - 339 - பரிதாப ‘பலி ஆடு’!
29 வயதாகியும் திருமணம் முடியாமல் இருந்தேன். அதனால், ஆறு மாதங்களுக்கு முன் வந்த வரனை, பெரிய விசாரணைகள் ஏதுமின்றி மணமுடித்தனர் எனக்கு. கணவர் வீட்டில் பாடாய்ப்படுத்தி எடுக்கும் மாமியார்தான் வாய்த்தார். பெரும்பாலான வீடுகளிலும் இது சகஜம்தான் என்றாலும், என் மாமியார் திட்டமிட்டு நடத்துவதாகவே தோன்றியது எனக்கு.
24 மணி நேரமும் கிச்சனிலேயே இருக்க வேண்டும். வரும் விருந்தினர்கள், அக்கம்பக்கம் என யாரிடமும் பேசக் கூடாது. பகலில் கணவரிடம் பேசவே கூடாது. அப்படியே பெட்ரூமில் பேசினாலும், கதவைத் திறந்து வைத்துக்கொண்டுதான் பேச வேண்டும். நல்லநாள், கரிநாள், விரதநாள் என்றெல்லாம் சாக்கு சொல்லி, தாம்பத்யத்தில் இணைவதற்கான நாட்களையும் அவரே முடிவெடுப்பார். கணவரோ, 'அம்மா மனசு கோணாம பார்த்துக்கோ’ என்பதை மட்டும் கிளிப்பிள்ளை போல சொல்வார்.

இந்நிலையில் நான் கர்ப்பமானேன். ஆனால், இதுகுறித்த சந்தோஷம்... மாமியாருக்கோ, கணவருக்கோ இல்லை. 'என்ன குடும்பம் இது, எதற்குத் திருமணம் செய்தார்கள்’ என்று அழுகையும் குழப்பமுமாகக் கழிந்தன நாட்கள். அப்போதுதான், மாமியாரும், கணவரும் வெளியூர் சென்றிருந்த நாளில் பக்கத்து வீட்டுப் பெண் சொன்னார் அந்தச் சதியை. என் கணவருக்கு ஏதோ 'தார தோஷம்’ இருப்பதாகவும், அதைக் கழிப்பதற்காகவே முதலில் என்னைத் திருமணம் செய்திருப்பதாகவும், என்னை விவாகரத்து செய்துவிட்டு, தயாராக இருக்கும் உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார்.
சில தினங்களில் என் கணவர் என்னை வெளியூருக்கு அழைத்தார். பயணத்தின் மூலமாக கருவை கலைக்கத் திட்டமிடுகிறார்கள் என்று புரிந்து, உடல்நிலையைக் காரணம் காட்டி மறுத்துவிட்டேன். பிறகு, கருவைக் கலைத்துவிடும்படி கணவரும், மாமியாரும் நேரடியாகவே மிரட்டினார்கள். பெரியவர்களை வைத்து பஞ்சாயத்துக் கூட்டியபோது, என் நடத்தையை தவறாகக் கூறினார்கள். பொங்கி எழுந்த நான், அவர்களின் மறுமணத் திட்டத்தை போட்டுடைத்தேன். சமரசம் எதுவும் ஏற்படவில்லை என்பதால், பிறந்த வீட்டுக்கு மூட்டை கட்டப்பட்டேன். ஒரு வாரத்தில் விவாகரத்து நோட்டீஸ் வந்துவிட்டது.
'வாழாத வாழ்க்கைக்கு எதற்குக் குழந்தை? கலைத்துவிட்டு, அவனை விவாகரத்து செய்துவிடு’ என்கிறார்கள் சிலர். அப்படிச் செய்துவிட்டால், ஒரு பெண்ணின் வாழ்க்கையைத் துச்சமாக நினைத்த கணவர் வீட்டினரின் திட்டம் நிறைவேறிவிடுமே என்ற ஆதங்கம் ஒருபுறம் கோபத்தை பொங்க வைக்கிறது. 'எனக்கு என் குழந்தை வேண்டும்' என்கிற தவிப்பும் சேர்ந்துகொண்டு கோபத்தை அதிகப்படுத்துகிறது. அதேசமயம், 'இனி, போராடிச் சேர்ந்தாலும் இந்தத் திருமண வாழ்க்கையில் இனிப்பு ஏதும் இருக்கப் போவதில்லை' என்கிற உண்மை, அழுகையைப் பொங்க வைக்கிறது!
என்ன செய்யட்டும் தோழிகளே?
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...
என் டைரி 338-ன் சுருக்கம்
''பதின்ம வயது முதலே, அழகான மாப்பிள்ளையைக் கல்யாணம் கட்டிக்கொள்ள வேண்டும் என்பது என் கனவு. நினைத்தது போலவே அழகான மற்றும் அன்பான மாப்பிள்ளை கிடைத்தார். பூர்வஜென்ம பலன் என்று எண்ணி மகிழ்ந்த நான், அடுத்த மாதமே கருவுற்றேன். ஆனால், என் சீமந்தவேளையில் விபத்தில் பலியாகி மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டார் என்னவர். ராசியில்லாதவள் என்று புகுந்தவீட்டார் தள்ளிவைக்க, வற்றாத கண்ணீருடனும், பெற்றெடுத்த பிஞ்சுடனும் பெற்றோருடன் வசிக்கிறேன். கணவருடன் நான் வாழ்ந்த அந்த வீட்டில், அவருடைய நினைவுகளுடன் தொடர்ந்து வாழ வேண்டும் எனும் என் விருப்பத்துக்கு குறுக்கே நிற்கின்றனர்... புகுந்த வீட்டார். அவரின் நினைவுகளோடு, அவர் வீட்டில் வாழ எனக்கு உரிமை கிடைக்குமா?'
வாசகிகள் ரியாக்ஷன்
ஒவ்வான்றுக்கும் பரிசு:

100
வழக்கு போடு!
உன் நிலைமை எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது. நல்ல ஒரு வக்கீலைப் பார்த்து, புகுந்த வீட்டார்மீது வழக்குப் போடு. உன் கணவனுக்கு, அந்த வீட்டில் நிச்சயமாக பங்கு உண்டு. அவர் ஒரே மகன் என்றால், முழு சொத்தும் அவருக்கே. சட்டப்படி உனக்கும், உன் பிள்ளைக்கும் வரவேண்டியது... வந்துவிடும். குழந்தையின் எதிர்காலத்துக்கு சொத்துரிமை தேவை. மேலும் உன் இளவயது காரணமாக உன் பெற்றோரிடம் சொல்லி மறுமணத்துக்கு ஏற்பாடு செய். நீண்ட ஆயுளுடைய அன்பான கணவன் கிடைக்க வாழ்த்துகள்.
- ராஜேஸ்வரி வெங்கட், சென்னை-82
பொறுமையாக காத்திருங்கள்!
எந்தப் பெண்ணுக்கும் இதுபோன்ற நிலை வரவே கூடாது. சரியாகப் பார்த்தால் அந்த மகனை இழந்த பெற்றோர், ஒட்டுமொத்த பாசத்தையும் உங்கள் மீதும், உங்கள் குழந்தை மீதுமே காட்ட வேண்டும். அதுதான் நியாயமும். பழுக்காத பழத்தை தடியால் அடித்து பழுக்க வைத்தால் சுவை தராது. எனவே, கொஞ்ச நாள் பொறுமையாக இருங்கள். நிச்சயம், அவர்கள் மனம் தெளிவடைந்து உங்களை நாடி வருவார்கள். அதுவரையிலும் உங்கள் குழந்தையை வளர்ப்பதில் முழுகவனம் செலுத்துங்கள்.
- இ.டி.ஹேமமாலினி, அயனாவரம்
குழந்தையால் எல்லாம் மாறும்!
சகோதரி... கொஞ்ச நாட்கள் வாழ்ந்த உனக்கே அவரது பிரிவு தாங்க முடியவில்லை. அவர் குணத்தால் ஈர்க்கப்பட்டிருக்காய் என்றால், அவரது பெற்றோருக்கு எப்படியிருக்கும். நீ கொஞ்சம் பொறுமையாக இரு. குழந்தையின் முகம் பார்த்து அவர்கள் மாறுவார்கள். நடுநடுவே அவர்கள் வீட்டுக்குச் சென்று குழந்தையைக் காண்பித்து, இனிமையாகப் பழக விட்டு வா! காலப்போக்கில் குழந்தைக்காகவே உன்னையும் சேர்த்துக்கொள்வார்கள்.
- ஐஸ்வர்யா, ஸ்ரீரங்கம்