Published:Updated:

மாஞ்சோலை: சாராயம் எஸ்டேட்டுக்குள் நுழைந்து வாழ்வை வஞ்சித்த கதை| 1349/2 எனும் நான் - பகுதி 11

மாஞ்சோலை- மலையும் மனிதர்களும்

உடல் உழைப்பினை மட்டுமே பிரதானமாகக் கொண்ட எஸ்டேட் பகுதியிலும் சாராயம் விதிவிலக்கின்றி புழக்கத்தில் இருந்தது.

Published:Updated:

மாஞ்சோலை: சாராயம் எஸ்டேட்டுக்குள் நுழைந்து வாழ்வை வஞ்சித்த கதை| 1349/2 எனும் நான் - பகுதி 11

உடல் உழைப்பினை மட்டுமே பிரதானமாகக் கொண்ட எஸ்டேட் பகுதியிலும் சாராயம் விதிவிலக்கின்றி புழக்கத்தில் இருந்தது.

மாஞ்சோலை- மலையும் மனிதர்களும்
தமிழ்நாட்டில் கடந்தவாரம் நடந்த கள்ளச்சாராய சாவுகளைத் தொடர்ந்து, சாராயம் குறித்த விவாதங்கள் பரவலானது. உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் சாராயம் தாமாகவே வந்து ஒட்டிக்கொள்ளும் என்பது வரலாறு. உடலுழைப்பினை மட்டுமே பிரதானமாகக் கொண்ட எஸ்டேட் பகுதியிலும் சாராயம் விதிவிலக்கின்றி புழக்கத்தில் இருந்தது.

சாராய நெடி நாலுமுக்கு எஸ்டேட்டில் 1960களின் பிற்பாதியில் அடிக்கத் துவங்கிவிட்டது. வழக்கமான 'குடும்ப கஷ்டம்' என்பது போக, எஸ்டேட் மக்கள் அவர்களே காய்ச்சிய சாராயத்தைக் குடிப்பதற்கு கூறிக்கொண்ட 'சிறப்பு' காரணங்கள், அதீத பனி, பெய்துகொண்டேயிருக்கும் மழை, கடுமையான உடலுழைப்பால் ஏற்படும் உடல் அசதி....இத்யாதி.

கருப்பட்டி, காட்டு ஊமத்தம் பூ/காய், வேல மரப்பட்டை இவற்றுடன் போதை உண்டாக்கும் சில காட்டுமர வேர்கள் கொண்டு சாராயம் வடித்தார்கள்

காட்டுக்குள் ஓடைக்கு அருகே கற்களால் அடுப்பு உண்டாக்கி, விறகுகளால் தீ மூட்டி, அடர்ந்த வனப்பகுதிக்குள் ஓடும் மாசுபடாத தண்ணீரைப் பயன்படுத்தி, காட்டு மரங்களின் வேர்களைக் கொண்டு உண்டாக்கிய ஊறலை வைத்து சாராயம் காய்ச்சுவதால் எஸ்டேட்டில் வடிக்கும் சாராயம் சுவை மிகுந்ததாக இருக்கும் என்று அதனைப்பருகிய மூத்த "குடி"மக்கள் சொல்லக் கேள்வி.

மழை
மழை

1960களின் பிற்பகுதியில் கோதையாறுக்கு வெளியூரிலிருந்து வேலைக்கு வந்த ஒரு தம்பதியினர், அணைக்கட்டு பணியை விட்டுவிட்டு காட்டுக்குள் சாராயம் வடிக்க ஆரம்பித்து முன்னிலும் அதிகமாய் சம்பாதித்தனர். எஸ்டேட் சாராயத்திற்கு தனிச்சுவை இருந்ததால், கோதையாறு அணைக்கட்டு வேலைக்கு வந்த ஊர்நாடு தொழிலாளர்கள் மூலமாக வெளியூர்களுக்கும் செய்தி பரவி, பல ஊர்களிலும் அந்த சாராயம் பிரசித்தி பெற்றது.

1985 - 1990 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், நாலுமுக்கில் '40 ஏக்கர்', '1ஆம் காடு', '11-ஆம் காடு' தாண்டி கோதையாறுக்குச் செல்லும் சோலைக்குள், எஸ்டேட்டுக்கு தண்ணீர் சேகரிக்கும் பம்ப் ஹவுசுக்குக் கீழே, என வேறுவேறு இடங்களில் தொழிலாளர்களில் சிலர் சாராயம் காய்ச்சினார்கள். மலையாளி, தமிழர் என பாரபட்சமில்லாமல் தனித்தனி குழு சாராயம் வடித்தது. இயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரித்ததால் எஸ்டேட்டில் காய்ச்சிய சாராயத்தால் உயிரிழப்பு ஏதுமில்லை.

எளிதில் எவரும் வர இயலாது என்பதால் அடர்ந்த வனப்பகுதியிலும், தண்ணீர் தேவை இருப்பதால் நீரூற்றுகளுக்கு அருகேயும், இரவுவேளையில் பொழியும் கடும் பனியில் இருந்து காத்துக்கொள்ளும் வகையில் மறைவாயிருக்க பாறைப் புடவு (சிறிய குகை) இருக்கும் பகுதியாய் பார்த்தும் சாராயம் காய்ச்சுவதற்கான இடத்தை தேர்ந்தெடுப்பார்கள்.

தீ எரிக்கும் போது மேலெழுந்து வரும் புகையைக் கொண்டு காட்டுக்குள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் பகல் பொழுதில் கண்டுபிடித்துவிடலாம். அதிலிருந்து தப்பிக்க, புகை வெளியேறுவதை கண்டுணர முடியாத இரவு நேரத்தில்தான் காட்டுக்குள் சாராயம் காய்ச்சுவார்கள். அதிகாலைக்குள் வேலையை முடித்துவிட்டு, அங்கு சாராயம் காய்ச்சியதற்கான எந்த தடையமும் இல்லாமல் அப்புறப்படுத்திவிட்டு விடிவதற்குள் வீடு திரும்பிவிடுவார்கள்.

 பாறைப் புடவு
பாறைப் புடவு

வடித்த சாராயத்தை குடங்களில் ஊற்றி, குடியிருப்புக்குப் பக்கத்திலுள்ள காடுகளிலும், அளவு குறைவாய் இருக்கும்போது வீட்டிலும் மறைத்து பின்னர் பாட்டில்களிலும், டம்ளர்களிலும் இதர தொழிலாளர்களிடையே விற்று வந்தார்கள். விற்பனைக்காக இல்லாமல் தங்களின் சொந்த உபயோகத்திற்காய் வீட்டிலேயே கொஞ்சமாய் சாராயம் தயாரித்துக்கொண்டவர்களும் உண்டு.

1990களின் துவக்கத்தில் காவல்துறையின் கடுமையான கெடுபிடிகள் காரணமாக தொழிலாளர்கள் சாராயம் காய்ச்சும் தொழிலை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிட்டார்கள். அதன்பிறகு தமிழ்நாடு அரசே மதுவிற்பனை செய்ய ஆரம்பித்ததால் தொழிலாளிகள் யாரும் சாராயம் காய்ச்சவேண்டிய தேவை எழவில்லை. அரசின் கைக்குப்போன பின்னர் சாராயம், "மது"வாக மாறிப்போனது.

அரசே நேரடியாக சாராய விற்பனையைத் தொடங்கியபிறகு, நாலுமுக்கு மாட்டுப்பட்டி முக்கில், மண் வைத்தும், மேலே தகரம் போட்டும் கட்டப்பட்ட ஒரு பெட்டிக்கடையில் மது விற்கப்பட்டது. மில்லி லிட்டர் கணக்கில் மது விநியோகம் செய்யப்பட்டதால், "மில்லி கடை" என்று அதனைச்சொல்ல ஆரம்பித்தார்கள். கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த அரசியல்கட்சி பிரமுகர் ஒருவர் எஸ்டேட் தொழிலாளியை வேலைக்கு அமர்த்தி அந்த கடையை நடத்தினார். அதன் மூலம் அவருக்கு அதிக வருவாய் கிட்டியதால், நாலுமுக்கில் இருக்கும் மாரியம்மன் கோயில் கொடைக்கு, தொடர்ந்து சில ஆண்டுகள் மதிப்புமிக்க பொருட்களை அன்பளிப்பு செய்துவந்தார்.

இடையில் கொஞ்ச காலம் பாக்கெட் சாராயம் விற்பனைக்கு வந்தது. கீழேயிருந்து பேருந்தில் மலைக்கு கொண்டுவந்து சிலர் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டிருக்கும் பாக்கெட் சாராயத்தை கடைகளில் வைத்து ஒளிவுமறைவாக விற்றார்கள்.

பனி படர்ந்த நாலுமுக்கு
பனி படர்ந்த நாலுமுக்கு

உடல் உபாதைகளுக்கு கேரளாவில் பெரும்பாலும் பிரச்சனைகளின் தன்மைக்கேற்ப மருந்தாக பலவகையான ஆயுர்வேத 'அரிஷ்டங்களை' கொடுப்பார்கள். அதில் ஒரு அரிஷ்டத்தை தேவைக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் கொஞ்சம் போதையேறி கிறக்கமாக இருக்கிறது என்பதை மலையாள தேசத்தைச் சேர்ந்த தொழிலாளி எவரோ கண்டுபிடித்துவிட்டார். எஸ்டேட்டில் ஒரு கடையில் அந்த அரிஷ்டம் விற்பனைக்கு வந்தது. எதுவும் கிடைக்காததற்கு இதாவது கிடைக்கிறதே என்று திருப்தியடைந்து கொண்டார்கள் மதுப்பிரியர்களில் சிலர். மருந்து என்பதால் எவ்வித பிரச்சனையுமின்றி வெளிப்படையாக விற்பனை செய்துவந்தார் அந்த கடைக்காரர். ஒருமுறை அதனைக்குடித்த போதையில் குடியிருப்பின் சுவரில் முட்டிக்கொண்டதில் ஒரு "குடி"மகனுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. அன்றிலிருந்து அந்த அரிஷ்டத்துக்கு "செவரு முட்டி" என்று பெயர் வந்தது.

மாஞ்சோலை: சாராயம் எஸ்டேட்டுக்குள் நுழைந்து வாழ்வை வஞ்சித்த கதை| 1349/2 எனும் நான் - பகுதி 11

1988ல் களக்காடு- முண்டந்துறை புலிகள் சரணாலயம் உருவாக்கப்பட்டது. அதன் எல்லைக்குள் மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகள் வந்ததால், எஸ்டேட்டில் மதுக்கடைகள் (TASMAC) நடத்த அறிவிக்கப்படாத தடை இருந்தது. அதனால் நினைத்த மாத்திரத்தில் எஸ்டேட்டில் மது கிடைத்துவிடாது - மதுப்பிரியர்கள் அல்லோல கல்லோலப்பட்டுப் போனார்கள்.

வீட்டில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, மதுப்பிரியர்கள் சாராயத்தை அடையாளப்படுத்த வைத்துக்கொண்ட சங்கேத வார்த்தை "இருமல் மருந்து"!

பேருந்தில் கீழே நகருக்குச் சென்று அன்றே திரும்புவர்களிடம் மதுபாட்டில் வாங்கி வரச்சொல்லி தனியாகவோ, சிலர் சேர்ந்தோ காசு புழங்கும்போது கொடுத்துவிடுவார்கள். ஒருமுறை பேருந்தில் கல்லிடைக்குப்போன, அப்போது இரண்டு சின்ன பிள்ளைகளுக்கு தகப்பனான சந்தோஷ் அண்ணனிடம், சுற்றிலும் நிறைய பெண்கள் இருந்ததால், சங்கேத வார்த்தையில் "இருமல் மருந்து" வாங்கிட்டு வந்திரு தம்பி என்று காசு கொடுத்துவிட்டார் அப்பா. பேருந்து எஸ்டேட் வந்துசேரும் வரைக்கும் இருப்பு கொள்ளவில்லை. வரப்போகும் பாட்டிலை எதிர்நோக்கி பேராவலுடன் காத்திருந்தவர், பேருந்து வந்ததும் வாங்கிவந்தவரிடம் பேப்பர் பொதியலை வாங்கி வேகவேகமாய் பக்கத்தில் இருந்த தபால் அலுவலகத்துக்குப் பின்புறம் தன் சகாக்களுடன் போனார் அப்பா.

உற்சாகத்தின் உச்சத்தில் பார்சலை பிரித்தபோது, அங்கே இருந்ததோ மதுபாட்டிலுக்குப் பதிலாக இருமல் மருந்தான `க்ளைகோடின்'. அதனைக்கண்டு அப்பாவும் அவர்தம் குழுவினரும் அடைந்த ஏமாற்றத்தைச் சொல்லி மாளாது. எஸ்டேட் மேலாளரை எட்டும் அளவுக்கு காடு முழுவதும் அந்த செய்தி பரவி, சிரிப்பலைகளை உண்டு செய்தது அவர்களின் சங்கடமான நிலை.

மாஞ்சோலை மலைப்பகுதிக்குள் வரும் பேருந்து பயணிகளை, மணிமுத்தாறு அணைக்கட்டு பகுதியில் இருக்கும் வன சோதனைச்சாவடியில் அங்குள்ள வனத்துறையினர் சோதனை செய்வார்கள். இருந்தாலும், அவர்களிடம் அகப்படாமல் மறைத்து சிலர் மது பாட்டில்களை மலைக்கு கொண்டுவந்து, பெட்டி கடைகளிலும், தங்களது வீடுகளிலும் வைத்து விற்பனை செய்துவந்தார்கள்.

சோதனைச்சாவடி
சோதனைச்சாவடி

எஸ்டேட்டில் மது அருந்தாத தொழிலாளர்கள் இருந்த போதிலும், அவர்களின் எண்ணிக்கை சொற்பமே. "அரை ரேட்" என சொல்லப்படும், எஸ்டேட் தொழிலாளர்களின் பதினெட்டு வயதுக்குக் குறைவான குழந்தைத் தொழிலாளர்கள் கையிலும் காசு புழங்கிய சமயமது. எஸ்டேட்டில் வேறு பொழுதுபோக்கோ, செலவழிக்க வழியோ இல்லாத காரணத்தால், சம்பளத்தில் பெரும்பகுதி மதுக்கடைகளின் கல்லாப்பெட்டியை நிரப்பியது. மதுவை சில்லறை விற்பனை செய்த தொழிலாளர்கள் எஸ்டேட்டுக்குள் செல்வந்தர்களானார்கள்.

சாராயம் கோலோச்சிய காலத்தில் குடும்பத்தலைவிகள் பலரும் நிம்மதியைத் தொலைத்தனர். மதுவுக்கு ஆட்பட்டதால் பல குடும்பங்களில் ஏற்கனவே இருக்கும் கடன் மேலும் அதிகரித்து, அதனால் வறுமையும் அதிகரித்தது. அதனைச்சொல்லி மேலும் குடிக்கு அடிமையாகிப் போனார்கள் பலர். மதுவை அருந்திய கூலிகளை மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரையும், பிள்ளைகளையும், அவர்களின் கல்வியையும் வெகுவாக பாதித்தது.

1970களின் பிற்பகுதியில் சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்தபோது பிடிக்க வந்த காவல்துறை அதிகாரியை தள்ளிவிட்டு எஸ்டேட்டை விட்டு ஓடினார் ஒரு தொழிலாளி. பின்னர் அவர் எஸ்டேட்டுக்குத் திரும்பவே இல்லை. எஸ்டேட்டில் அவரது மனைவியும் மக்களும் அவரின் துணையின்றியே சுமார் நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.

தனது வீட்டில் நான்கு மாடுகள் வைத்திருந்தார் ஒரு தொழிலாளி. எஸ்டேட் சம்பளம் போக, பால் விற்று நல்ல காசு வந்தது. குடிக்க ஆரம்பித்தார். குடித்துவிட்டு வீட்டிலும் வெளியிலும் பிரச்சனை செய்ததுடன், போதையில் ஆங்காங்கே விழுந்துகிடந்தார். அதனால் குடிக்க வேண்டாம் என அவரிடம் அவரது குடும்பம் பலமுறை சொல்லிப்பார்த்தும் பயனேதுமில்லை. விளைவு அவரது மகன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். அதன் தாக்கத்தினை ஒட்டுமொத்த குடும்பமும் எதிர்கொண்டது. இவ்விதம் காலங்காலமாய் கூலிகளைத் தொடர்ந்து கொன்று வந்தது மது.

மாஞ்சோலை
மாஞ்சோலை

2015க்குப் பிறகு வேலைக்கு ஆட்களை அஸ்ஸாமிலிருந்து இறக்கியது கம்பெனி. வந்த கொஞ்ச காலத்திலேயே ஒரு மர வேரைக் கண்டுபிடித்தார்கள். எஸ்டேட்டை உருவாக்கி நூறு ஆண்டுகளாய் அங்கு வாழ்ந்திட்ட தமிழர்களுக்கும், மலையாளிகளுக்கும் தெரியாத வேர் அது. அந்த வேரைக்காய்ச்சி, பழைய சோற்றில் ஊறப்போட்டு தங்களுக்கான மதுவை தயாரித்து, குடும்பமாய் அருந்தத் துவங்கினார்கள் அஸ்ஸாமியர்கள்.

தற்போது தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தபின்னர், பருகுவதற்கு ஆளில்லாமல் மது விற்பனை என்ற பேச்சுக்கே எஸ்டேட்டில் இடமில்லாமல் போனதில் பல குடும்பங்கள் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள்.

படங்கள்: மாஞ்சோலை செல்வகுமார், அருண் பாஸ்