1928 ஆம் ஆண்டு டிசம்பர் 22 நாள்.
கிறிஸ்துமஸ்-க்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை.
சூசையம்மாளுக்கும் அந்தோணிமுத்துக்கும் திருமணம் நடந்து கொஞ்ச நாட்கள் தான் ஆகியிருந்தது. வில்லிசேரிதான் சூசையம்மாளுக்குச் சொந்த ஊர்.
தற்போதைய மதுரை- திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் கோவில்பட்டிக்கும் கயத்தாறுக்கும் இடையே அமைந்துள்ள கிராமம் வில்லிசேரி. பிரதான சாலையில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ளே செல்லவேண்டும். அங்கு கொஞ்சம் நிலம், சின்னதாக ஒரு சொந்த வீடு என இருந்தாலும், அன்றாட வாழ்வில் எல்லாவற்றுக்கும் ஆதிக்க ஜாதிக்காரர்களை சார்ந்து வாழவேண்டிய நிலையே இருந்தது.
`வயக்காட்டுல நாம பாத்த வேலைக்கு மொதலாளிய பாத்து கூலி வாங்கப்போனீகளே என்னாச்சி?' என்று கேட்ட சூசையம்மாளிடம், `காசு எங்கடே ஓடிறப்போவுது, வரும்போது வரும்ன்னு சொல்லி அடுத்த வாரம் பாத்துக்கலாம்னு எப்பவும் போல சொல்லிட்டார் மொதலாளி' என்றார் அந்தோணிமுத்து.
`நாம ஒழைச்ச காச, நாம வாங்குததுக்கு நாய் பாடு பட வேண்டி கிடக்கு. என்ன செய்ய அவங்க கைலதான் பூரா நெலமும் இருக்கு. அவங்களா பாத்து வேல கொடுத்தாதான் ஆச்சு என்ன செய்ய. நமக்கும் வயிறுன்னு ஒன்னு இருக்கு. அதுல மூணு வேல பசிக்குல்லா' என்றார் சூசையம்மாள்.
`எனக்கென்னவோ நாம எஸ்டேட் வேலக்கிப்போனா, நமக்கு விடிவு காலம் பொறக்கும். நம்ம பிள்ளேலு நம்மளமாரி கஷ்டப்படாம நல்லா இருப்பாங்கன்னு தோனுது' என்றவருடன் சரியென உடன்பட்டார் சூசையம்மாள்.
தாம் மட்டுமல்லாது தமது வாரிசுகளும் தலைமுறை தலைமுறையாக, ஊருக்குத் திரும்பிவரமாட்டார்கள் என்றோ, பிழைப்பு தேடி ஏதிலியாகச் செல்லும் எஸ்டேட் பகுதியே தங்களின் சொந்த ஊராக மாறப்போகிறது என்பதையோ, அவர்களின் நான்காம் தலைமுறை வாரிசுகளில் ஒருவனான நான் இவ்வாறு அவர்களின் பாடுகளைக் குறித்து பதிவு செய்வேன் என்றோ, எனது தாயாரின் தாத்தா பாட்டியான அந்த தம்பதியர் கனவில் கூட யோசித்திருக்க வாய்ப்பில்லை.
எனது பாட்டன் பூட்டியின் மனநிலையை ஒத்த பலரையும், வலைவீசிப் பிடித்தார்கள் அந்ததந்த பகுதிகளைச் சேர்ந்த கங்காணிகள்.
அடிமாட்டு கூலிக்கு ஆட்கள் கிடைத்தாலும், மாஞ்சோலை எஸ்டேட்டை பிபிடிசி கம்பெனியால் அத்தனை எளிதாக உருவாக்கிட இயலவில்லை. வேலைக்கு ஆட்களைக் கூட்டிக்கொண்டு வரவும், அவர்களைக் கொண்டு எஸ்டேட்டை புதிதாக உருவாக்கிடவும் பகீரத பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியதிருந்தது.
1800களின் தொடக்கத்தில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தின் பகுதிகளான நீலகிரி, கோயமுத்தூர், மற்றும் தற்போதைய கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தனியார் நிறுவனங்களால் தேயிலை பயிரிட ஆரம்பிக்கப்பட்டது.
எஸ்டேட்டை உருவாக்குதல், அதற்காக மேஸ்திரிகளை கண்டறிதல், அவர்களைக் கையாளுதல், அவர்களின் மூலமாக தேவைக்கான கூலி ஆட்களைக் கொண்டுவருதல் எனப் பலவற்றையும் கவனத்தில் கொண்டது கம்பெனி. எஸ்டேட்டை உருவாக்கிட தேவையான அனுமதிகளை அப்போது நிர்வாகம் செய்த ஆங்கிலேய அரசிடம் பெறுவதில் சிக்கல் இருக்கக்கூடாது என்பதற்காக ஆங்கிலேய அதிகாரிகளிடம் எஸ்டேட் பொறுப்பைக் கொடுத்தது கம்பெனி.
ஆரம்பகால கஷ்டங்களைக் குறித்து கேட்கும் போதெல்லாம், எஸ்டேட்டிலிருந்து கூலிகள் தப்பிவிடாமல் இருக்க கங்காணிகளால் எப்போதும் கண்காணிக்கப்பட்டு வந்தனர் என்றும், மேஸ்திரிகளின் நிழலாக செயல்பட்டு வந்த அவர்களின் கையாட்கள் `கோல் மேஸ்திரி' என்று அழைக்கப்பட்டார்கள் என்றும், அவர்களின் பாதுகாப்பு வளையத்தையும் மீறி காட்டிலிருந்து தப்பித்த சிலரை பிடித்துவந்து, அவர்களால் எளிதில் ஓட இயலாத அளவுக்கு அவர்களின் ஏதாவதொரு கணுக்கால் நரம்பினை அறுத்து விடுவார்கள் என்றும் அதனை நேரில் கண்ட தாத்தா பாட்டிகள் தங்களின் அனுபவத்தை மிரட்சியுடன் அவ்வப்போது என்னிடம் பகிர்ந்து கொள்வார்கள்.
எஸ்டேட்டிலிருந்து தப்பிக்க முயன்று பிடிபட்டவர்களையும், அங்கேயே வேலைபார்த்து வந்த மற்ற கூலிகளையும் தொடர்ந்து பயத்திலேயே வைத்திருக்கவும், அவர்களை தக்கவைக்கவும், அடியாட்களின் துணையை மட்டும் நம்பியிருக்காமல், இரண்டு சட்டங்களின் துணையையும் நாடியது பிபிடிசி. அதில் உச்சபட்ச கொடுமை என்னவென்றால் அந்த இரண்டு சட்டங்களும் மாஞ்சோலை எஸ்டேட் உருவாவதற்கு சில ஆண்டுகள் முன்னரே ரத்து செய்யப்பட்டுவிட்டன என்பதுதான்.
மெட்ராஸ் மாகாணத்தில் தோட்டப்பயிர்களை பயிரிடும் மாவட்டங்களில் வேலைசெய்யும் கூலித்தொழிலாளர்களின் நிலையை ஒழுங்குபடுத்தி வரையறுப்பதற்காக 1903ஆம் ஆண்டில் Madras Planters Labours Act கொண்டுவரப்பட்டது. சுமார் 25 ஆண்டுகள் நடப்பில் இருந்த அந்த சட்டமானது 1927ல் நீக்கறவு செய்யப்பட்டது. அதற்கும் முன்பாக 1859ஆம் ஆண்டு “Workman’s Breach of Contract Act” என்றொரு சட்டம் இயற்றப்பட்டது. 66 ஆண்டுகள் அமலில் இருந்த இந்த சட்டமானது, 1925ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.
இந்த இரு சட்டங்களின் கீழ் எஸ்டேட் பகுதிகளில் வேலை பார்ப்பதற்காக தோட்ட அதிபர்கள், மேஸ்திரிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் இடையே ஒப்பந்தங்கள் ஏற்படுத்திக்கொள்ள வழிவகை செய்யப்பட்டிருந்தது. ஒப்பந்தத்தின் விதிகள் மீறப்பட்டால், இந்த இரண்டு சட்டங்களின் கீழ் மட்டுமின்றி, இந்திய தண்டனை சட்டத்தின் படியும் சிறைதண்டனையும், அபராதமும் விதிக்கமுடியும். இந்திய தண்டனை சட்டத்தில் அதற்காக உருவாக்கப்படிருந்த இரு பிரிவுகளும் 1925ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டன.
ஆனால் சட்டங்கள் இரத்து செய்யப்பட்டது குறித்த விபரம் எதுவும் பரவலாக விளம்பரம் செய்யப்படவில்லை. கைபேசியில் உலகத்தைக் கையாளும் இந்த தலைமுறைக்கே சட்டங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில், ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், அதுவும் எழுதப்படிக்க வாய்ப்பு மறுக்கப்பட்ட, கைநாட்டு வைக்கும் கூலிகளின் நிலைமையை குறிப்பிட்டு சொல்லவும் வேண்டுமா என்ன?
வேலைக்கு ஆட்களைக்கொண்டுவருவது தொடர்பாக தோட்ட அதிபர்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் நபர்கள் `மேஸ்திரி' என்று அழைக்கப்பட்டார்கள். பெரும்பாலான தொழிலாளர்களுக்கு எஸ்டேட்டின் முதலாளி யாரென்ற விபரம் கூடத்தெரியாது. அவர்களின் பார்வையில் அன்றாடம் தங்களுக்கு வேலையும் அதற்கான கூலியும் கொடுக்கும் முதலாளி தங்களின் மேஸ்திரிமார்களே.
எஸ்டேட் முதலாளியிடம் மற்றும் தொழிலாளிகளிடம் என மாதந்தோறும் இரண்டு பக்கமும் காசு பார்த்துவிடுவார்கள் மேஸ்திரிகள். இதனால் கம்பெனி கொடுத்த குறைவான கூலியும் தொழிலாளர்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. கைக்கு கிடைக்கும் கூலியானது அன்றாடத்தேவைக்கே சரியாக இருந்ததால் வாங்கிய முன்பணம் கொஞ்சமும் குறையாமல் அப்படியே இருந்தது.
தொழிலாளர்களை எஸ்டேட்டில் தங்க வைத்து இரண்டு மாத காலத்திற்குக் கூடுதலாக வேலை வாங்கிட ஒப்பந்தம் போடக்கூடாது என்று சொல்லும் அதே வேளையில் அதிலிருந்து தப்பிக்கும் வகையில், எஸ்டேட்டிலிருந்து 15 மைல் தொலைவிற்குள் தொழிலாளியின் வீடு இருந்தாலோ, எஸ்டேட்டில் கூலிகளை லயன்வீடுகளில் (Coolie Lines) தங்கவைத்தாலோ ஆண்டுக்கு ஒருமுறை அந்த ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றொரு பிரிவும் சேர்க்கப்பட்டது.
வீடு, நிலம், வாகனம், தொழில் மேம்பாடு, செல்போன் வாங்க என ஏதாவதொரு காரணத்திற்காக தற்போது தனியாரிடம் கடன் வாங்கும்போது, அந்தக் கடன் ஒப்பந்த விதிகள் நமக்கு விளக்கப்படும் விதத்தை பலரும் அறிவோம். நாம் எவ்வளவு படித்த நபராக இருந்தாலும் அந்த ஒப்பந்தத்தின் நகல் கூட நமக்கு வழங்கப்படாது. 100 ஆண்டுகளுக்கு முன்னர், வாழ்க்கையைக் கடத்துவதற்காக மலைப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த கூலித்தொழிலாளர்களுக்கு எவ்விதம் அந்த ஒப்பந்தம் விளக்கப்பட்டிருக்கும் என்பதை நாம் யூகித்துக்கொள்ளலாம்
வாங்கிய முன்பணத்தில் பாக்கித் தொகையை முழுமையாக செலுத்திட தயாராக இருந்தாலும் மூன்று மாத அறிவிப்பு கொடுத்து அந்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவரலாம். செலுத்தவேண்டிய தொகையுடன், மீதமிருக்கும் ஒப்பந்த காலத்திற்கு அல்லது அதிகபட்சமாக மூன்று மாத காலத்திற்கு நாளொன்றிற்கு மூன்று அணா வீதம் திரும்பசெலுத்தி தனது ஒப்பந்தத்தினை ஒரு தொழிலாளி முடிவுக்குக் கொண்டுவரலாம்.
தகுந்த காரணமின்றி வேலைக்குச்செல்லாமல் இருந்தால் / வேலைபார்க்க மறுத்தால், அதற்கு 7 நாட்கள் சிறை தண்டனை அனுபவிப்பதோடு, நாளொன்றுக்கு அரையணா வீதம் முதலாளிக்கு இழப்பீடும் கொடுக்கவேண்டும்.
ஒப்பந்த வேலையை முடிக்காமல் எஸ்டேட்டிலிருந்து ஓடிவிட்டால், அவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், 50 ரூபாய் அபராதமும் விதிக்கலாம். அபராதம் செலுத்திட தவறுபவரின் சொத்தினை ஏலம் விட்டு அந்த தொகையை எடுத்துக் கொள்ளமுடியும். அவ்வாறு வசூலித்த தொகையினை நீதித்துறை நடுவர் எஸ்டேட் உரிமையாளரிடம் சேர்த்துவிடுவார்.
தண்டனை காலத்தில் ஒரு தொழிலாளி தனது ஒப்பந்தப்படி மீண்டும் வேலைசெய்ய சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் தண்டனை முடிவுக்கு வரும். சிறை தண்டனையை முழுமையாக அனுபவித்துவிட்டார் என்பதற்காக மட்டுமே ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிடாது. தண்டனை காலம் முடிந்தபிறகு மீண்டும் அவர் எஸ்டேட் வேலைக்குச் செல்லவேண்டும். அதற்கு மறுப்பது தனிக்குற்றம். அந்த குற்றத்திற்காக மீண்டும் அவருக்கு சிறைதண்டனை விதிக்க முடியும்.
தற்காலத்தில் அரசு நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கென தனியே சட்டமும், நன்னடத்தை விதிகளும் உள்ளன. உரிய அனுமதியின்றி வேலைக்கு வராமல் ஒருவர் இருந்தால் அவரை `விட்டோடி' என அறிவித்து, அதிகபட்சமாக அவரை பணியில் இருந்து நீக்கலாம். ஆனால் அதற்காக சிறை தண்டனை விதிக்க முடியாது. அதே வேளையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவருக்கு அரசு ஊழியருக்கான விதிகள் பொருந்தாது.
ஆனால், அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக பெரும் தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக இரண்டு சட்டங்கள் நம் பகுதியில் நடப்பில் இருந்துள்ளது. இரு தனியர்களுக்கு இடையேயான ஒப்பந்த மீறுகைக்காக சிறைதண்டனை விதிக்கத்தக்க வகையிலான கொடுஞ்சட்டங்கள் இயற்றப்பட்டதே கொடூரம். இரத்து செய்யப்பட்டபிறகும் அந்த சட்டங்கள் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் வாழ்ந்த, சமூகத்தின் கடை நிலையில் இருக்கும் கூலித்தொழிலாளர்களுக்கு எதிராக நீண்ட காலம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. செல்வாக்கு மிக்கவர்களால், மிகப்பெரும் உழைப்புச் சுரண்டல் நம் அருகாமையிலேயே நடந்தேறியுள்ளது ஆனால் அது குறித்து போதுமான பதிவுகள் கூட நம்மிடையே இல்லை என்பது வருந்தத்தக்கது.
- சாட்சியம் தொடரும்
படங்கள் - `மாஞ்சோலை' செல்வகுமார்