`கொத்தடிமை.’ கேட்டாலே குலைநடுங்க வைக்கும் ஒரு வார்த்தை. ஏதோ ஒரு தேவை, அவசரத்துக்காக சொற்பத் தொகையைக் கடனாக வாங்குபவர்கள்தான் இந்த மீள முடியாத வலையில் மாட்டிக்கொள்கிறார்கள்.
வாங்கிய கடனை அடைக்க முடியாமல் காலம் முழுக்க ஏன்... பரம்பரை பரம்பரையாக அடிமையாக வேலை பார்ப்பவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். செங்கல்சூளைகள், சர்க்கரை ஆலைகள், விவசாய வேலைகள், கூலி வேலைகள் எனப் பரவியிருக்கும் கொத்தடிமைத் தொழில் இந்த நூற்றாண்டிலும் தொடர்வது மனிதகுலத்துக்கு மிகப்பெரிய சாபக்கேடு.
கொத்தடிமைகளாக இருப்பவர்களின் துயரம் ஒருபக்கம். அவர்களின் வாரிசுகளுக்கு இழைக்கப்படும் அநீதி மறுபக்கம். முக்கியமாக இந்தப் பிள்ளைகளுக்கு மறுக்கப்படுவது கல்வி. பள்ளிப் பருவத்தை இழக்கும் பிள்ளைகளின் நிலை எந்தக் குழந்தைக்கும் ஏற்படக்கூடாத சோகம்.

இந்தச் சூழலில், பல ஆண்டுக்காலமாக சூளையிலும் ஆலையிலும் `கொத்தடிமை' முறையின் கொடூரச் சங்கிலியால் கட்டப்பட்டிருந்து மீட்கப்பட்டவர்களில் சிலர் தங்கள் பிள்ளைகளை பெரும்பாடுபட்டு, படிக்கவைத்திருக்கிறார்கள்; தங்களின் `முதல் தலைமுறை பட்டதாரி’ கனவுக்கு முன்னெடுப்பாக அந்தப் பிள்ளைகளை ப்ளஸ் டூ தேர்வில் வெற்றிபெற செய்திருக்கிறார்கள். இந்தத் தகவல் நம் காதுகளை எட்டியது. களத்தில் இறங்கினோம்.

திருவண்ணாமலை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் செங்கல்சூளைகளிலும், பிற ஆலைகளிலும் பல ஆண்டுக்காலமாக கொத்தடிமைகளாக `சித்ரவதை' அனுபவித்து, பின்னர் அரசாங்கத்தால் மீட்கப்பட்டவர்களின் பிள்ளைகள் ஆறு பேர் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சிபெற்றிருக்கின்றனர். பொருளாதார, சமூக, நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில், `முதல் தலைமுறை பட்டதாரிகள்' என்ற மாபெரும் லட்சியக் கனவை நோக்கிய இந்தப் பிள்ளைகளின் பயணத்தில், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி என்பது நிச்சயம் `மிகப்பெரிய மைல்கல்.’ முட்டி மோதி, தட்டுத் தடுமாறி ப்ளஸ் டூ தேர்வை முடித்திருக்கும் இந்தப் பிள்ளைகள், ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்., இன்ஜினீயர் என மாபெரும் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு, தங்கள் ஓட்டத்தைத் தொடங்கவிருக்கின்றனர். அதேநேரத்தில், பொருளாதார வசதியோ, உயர்கல்விக்கான வழிகாட்டுதலோ கிடைக்காத காரணத்தால், இந்தப் பிள்ளைகளின் கல்லூரி மேற்படிப்பு என்பது கேள்விக்குறியாகியிருக்கிறது.
இவர்களில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த லாவண்யா 411 மதிப்பெண்களும், கன்னியம்மாள் 326 மதிப்பெண்களும், தீபிகா 316 மதிப்பெண்களும், திருவள்ளுவரைச் சேர்ந்த ஷோபனா 388 மதிப்பெண்களும், ராசாத்தி 278 மதிப்பெண்களும், தனுஷ் 261 மதிப்பெண்களும் பெற்று ப்ளஸ் டூ-வில் தேர்ச்சிபெற்றிருக்கின்றனர்.
இந்த ஆறு மாணவர்களும் கொத்தடிமைத்தனத்தின் பிடியில் சிக்கிய குடும்பங்களில் பிறந்தவர்கள். அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்டவையும், முறையான கல்வி வழிகாட்டுதல்களும் மறுக்கப்பட்டவர்கள். இந்தச் சூழலிலும், தலைமுறை தலைமுறையாகத் தங்கள் குடும்பங்கள் சிக்கியிருக்கும் அடிமைச் சங்கிலியிலிருந்து விடுபட `கல்விதான் ஒரே வழி' எனும் வைராக்கியம் கொண்டவர்கள், நல்ல ஆசிரியர் பெருமக்கள், நண்பர்களின் ஆதரவால் இந்த ஏழைப் பிள்ளைகளுக்கு இந்தத் தேர்வு வெற்றி சாத்தியமாகியிருக்கிறது.

மாணவி கன்னியம்மாளிடம் பேசினோம். ``2010-2014 வரை என்னுடைய பெற்றோர் வாங்கிய கடனுக்காக, செங்கல்சூளையில் கொத்தடிமைகளாகப் பணிபுரிந்தனர். அப்போது நான் சிறு குழந்தை, என் உறவினர் வீட்டில் தங்கிப் படிப்பைத் தொடர்ந்துகொண்டிருந்தேன். விடுமுறை நாள்களில் அம்மா, அப்பாவைப் பார்க்கச் செல்லும்போது, நானும் அவர்களுடன் வேலை செய்திருக்கிறேன். விடுதியில் தங்கித்தான் பள்ளிப் படிப்பை நிறைவு செய்திருக்கிறேன். என் பள்ளியில் இயற்பியல், வேதியல் உட்பட நான்கு பாடங்களுக்கு ஆசிரியர்களே வரவில்லை. பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள் சிலர் தேர்வுக்கு முன்பு எங்களுக்குக் கொஞ்சம் சொல்லிக்கொடுத்தார்கள்.

என்னுடைய இலக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்பது. என்னைப்போலவே பல குழந்தைகள் கஷ்டப்பட்டுப் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அரசு சார்பில் முறையான கல்வி கற்கவும், வழிகாட்டுதல் கிடைக்கவும் வழிவகை செய்தால் நன்றாக இருக்கும். பொருளாதாரச் சிக்கல் அதிகமாக நெருக்குகிறது. பெற்றோர் தினக்கூலிகள் என்பதால் கிடைக்கும் வருமானம், வயிற்றைக் கழுவவே சரியாக இருக்கிறது. இருப்பினும், நான் என்னுடைய குடும்பத்தின் நிலையை நிச்சயம் மாற்றுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்காக என்னுடைய படிப்பைத் தொடர்வேன்" என்றார்.
மாணவன் தனுஷிடம் பேசியபோது, ``என்னுடைய பெற்றோரும் கொத்தடிமைகளாக இருந்து அரசாங்கத்தால் மீட்கப்பட்டவர்கள்தான். அந்த அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வந்த அவர்கள், சிறு சிறு கூலி வேலைகளைச் செய்து என்னைப் படிக்கவைத்தனர். அரசுப் பள்ளியில் படித்ததால், என்னுடைய கல்விக்கென பெரிய செலவில்லை. எங்களுக்கு ஒரு வீடுகூட இல்லை. குடிசை அமைத்து அதில்தான் வாழ்கிறோம். அந்தக் குடிசை சிறு மழைக்கே தாங்காது. என்னுடைய ஆசிரியரின் உதவியால்தான் விடுதியில் தங்கி, படிப்பை நிறைவு செய்திருக்கிறேன். ஐ.பி.எஸ் ஆக வேண்டுமென்பதே என்னுடைய லட்சியம். நிச்சயம் அதற்கான என்னுடைய முயற்சிகளைத் தொடர்வேன்" என்றார் மனஉறுதியுடன்.

மாணவி ஷோபனா நம்மிடம் பேசுகையில், ``ஒரு மருத்துவத் தேவைக்குப் பணம் வாங்கியதால், என்னுடைய தாத்தா காலத்திலிருந்து, இரண்டு தலைமுறைகளாக என்னுடைய அப்பா, அம்மாவரை கொத்தடிமைகளாக `கொடுமை' அனுபவித்துவந்தனர். 2005-ல் தான் அரசாங்கத்தால் அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டனர். என்னுடைய அப்பா மூட்டை தூக்கும் கூலி வேலை செய்து எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறார். அம்மா, பள்ளிக்கூடம் ஒன்றில் கூட்டிப் பெருக்கும் வேலையைச் செய்துவருகிறார். மிகவும் கஷ்டமான சூழலில்தான் என் பள்ளிப்படிப்பை நிறைவு செய்திருக்கிறேன். எனக்கு மென்பொருள் பொறியியலாளராக வேண்டும் என்ற கனவு இருக்கிறது. அது மெய்ப்பட நான் தொடர்ந்து படிப்பேன்" என்று கூறினார்.

மாணவி ராசாத்தியிடம் பேசியபோது, "என் பெற்றோர் கடன் பெற்றதற்காக 2011-2019 வரை கொத்தடிமைகளாகப் பணிபுரிந்தனர். அந்தச் சமயத்தில் நான் பள்ளி விடுதியில் தங்கி, என்னுடைய பள்ளிப்படிப்பைத் தொடர்ந்துகொண்டிருந்தேன். படிப்பை நிறைவு செய்வதற்கு என்னுடைய ஆசிரியர்கள், நண்பர்கள் பெரிதும் உதவினர். செவிலியராக வேண்டும் என்பதே என்னுடைய ஆசை" எனக் கூறினார்.

மற்றவர்களைப்போலவே பல இன்னல்களையும் சிரமங்களையும் தாண்டி தேர்ச்சிபெற்றிருக்கும் லாவண்யா வழக்கறிஞராகவும், தீபிகா வங்கி மேலாளராகவும் ஆவதே தங்களின் கனவு எனத் தெரிவித்தனர். இவர்கள் அனைவருமே 'கல்வி ஒன்றுதான் தங்களின் இயலாமைச் சங்கிலியை உடைத்தெறியும் ஒரே ஆயுதம்' என்பதை தெளிவாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது.
மாணவி லாவண்யாவின் தந்தை பூமிநாதன், ``என் குடும்பத்திலேயே முதன்முறையாக என்னுடைய மகள்தான் பன்னிரண்டாம் வகுப்பு நிறைவு செய்திருக்கிறார் என்பதை நினைக்கும்போது, மிகவும் பெருமையாக இருக்கிறது. அமைதியாகப் படிக்க வேண்டும் என்பதற்காக, என்னுடைய மகள் பல நாள்கள் இரவு 11 மணி முதல் 2 மணி வரையெல்லாம் படித்திருக்கிறாள்.அவள் இவ்வளவு மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்றிருப்பது கடின முயற்சியின் பலன்தான். எப்படியாவது அவளை மேற்படிப்பு படிக்கவைப்பேன்" என்றார் பெருமிதத்துடன்.
தனுஷின் தாய் தனலட்சுமியிடம் நம்மிடம் பேசுகையில், ``வீடு கட்ட வேண்டும் என 30,000 ரூபாய் பணம் வாங்கியதற்காக, எங்களை ஏமாற்றி 2016-2019 வரை கொத்தடிமைகளாக வைத்திருந்தனர். பின்பு அரசின் உதவியால்தான் அங்கிருந்து மீட்கப்பட்டோம். எங்களைப் போன்றவர்களின் கஷ்டம் எங்களின் பிள்ளைக்கு வரக் கூடாது என எப்போதும் எண்ணிக்கொண்டிருப்பேன். எங்களுடைய இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியிலும், அவன் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதே எனக்குப் பெரும் நம்பிக்கையளித்திருக்கிறது" என்றவரின் கண்களில் கண்ணீர்த்துளிகள் கோடிட்டன.

கன்னியம்மாவின் தாய் கஸ்தூரி, ``என்னுடைய மாமனாரின் மருத்துவச் செலவுக்காக 15,000 ரூபாய் முன்பணம் பெற்றோம். அதற்கு பதிலாக ஆயிரம் கற்களுக்கு 550 ரூபாய் எனும் கணக்கில், செங்கல்சூளையில் பணியாற்றத் தொடங்கினோம். மூன்று வருடங்கள் கடந்தும், கல் அறுத்துக்கொண்டேதான் இருந்தோம். ஆனால், எங்கள் கடன் முடியவில்லை எனக் கூறி எங்களை ஏமாற்றி வேலை வாங்கிக் கொண்டேயிருந்தனர். 2010-2014 வரை கொத்தடிமைகளாகப் பணியாற்றிய எங்களை அரசுதான் மீட்டது. அங்கிருந்து வெளியே வந்தும், எங்களுக்கு முறையான வேலை எதுவும் கிடைக்கவில்லை... விவசாய நிலங்களில் கூலி வேலை, 100 நாள் வேலை எனக் கிடைப்பதைச் செய்து கொண்டிருக்கிறோம். எங்கள் மகள், குடும்பத்தின் நிலையை உணர்ந்து, படித்து தேர்ச்சி பெற்றிருக்கிறாள். அவளுடைய கனவு நிறைவேறத் தொடர்ந்து பாடுபடுவோம்" எனக் கூறினார்.

சோபனாவின் தாய் இந்திரா, ``நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டுவிட்டோம். சமீபத்தில் எங்களுடைய வீடுகூட எரிந்துபோய்விட்டது. இவ்வளவு கஷ்டத்துக்கு மத்தியில் எங்களுடைய மகள் படிப்பாள் என நான் ஏதிர்பார்க்கவில்லை. அவள் படித்து, தேர்ச்சிபெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.
`தேர்வு வெற்றி' என்பது இந்த மாணவர்களுக்கு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. குடும்ப வறுமை, சமூக நெருக்கடி எனப் பெரும் போராட்டத்தையே சந்தித்திருக்கிறார்கள். இந்தக் கடைநிலை மக்களின் பிள்ளைகள் முட்டி, மோதி மேலே வருவதற்கு முயன்றுகொண்டேயிருக்கிறார்கள். இவர்கள் மேல்நிலை பள்ளிப்படிப்பை முடித்திருப்பதை பெரிய சாதனையாகத்தான் கருதவேண்டியிருக்கிறது. தங்கள் வாழ்வை மாற்றியமைக்க, இந்தப் பிள்ளைகள் `கல்வி' எனும் பேராயுதத்தை ஏந்தியிருக்கிறார்கள். இவர்கள் செல்ல வேண்டிய தூரம், நெடுந்தூரம்!

உழைப்புச் சுரண்டலை உடைத்து, சமத்துவமான சமுதாயத்தை உருவாக்கும் சக்தி கல்விக்குத்தான் உண்டு என்பதை அழுத்தமாக வலியுறுத்தியிருக்கிறது இவர்களின் தேர்ச்சி. இத்தகைய மாணவர்களுக்கு உதவுவதும், அவர்கள் அனைவரும் முறையான கல்வி பெறுவதற்கான வாய்ப்பை உறுதிசெய்வதும் நம் ஒவ்வொருவரின் கூட்டுப் பொறுப்பு. உரியவர்களுக்கு இவர்களின் குரல் போய்ச் சேர்ந்தால் சரி. சேரும் என நம்புவோம்!
கல்வி பெறுவதற்கான வாய்ப்பை உறுதிசெய்வதும் நம் ஒவ்வொருவரின் கூட்டுப் பொறுப்பு. உரியவர்களுக்கு இவர்களின் குரல் போய்ச் சேர்ந்தால் சரி. சேரும் என நம்புவோம்!