நேற்று முன்தினம் ஓவியர் முகிலனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக ம.க.இ.க முன்னாள் செயலாளர் மருதையன் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் முகிலனின் சமூகம் சார்ந்த பணிகளையும், அவரது ஓவியக் கண்காட்சிகளைப் பற்றியும் பேசி, அவருக்கு உதவி வேண்டும் என்ற செய்தியினை வெளியிட்டிருந்தார். யார் இந்த முகிலன்?

இவரது பெயரைக் கேட்டவுடன் ஒரு கூட்டத்தில் இவர் சொன்ன கதையைக் கேட்டதுதான் நினைவுக்கு வருகிறது. "நாங்கள் மக்களுக்கு எதிராகத் தண்ணீரை உறிஞ்சும் பன்னாட்டு நிறுவனத்துக்கு எதிராக ஓவியக் கண்காட்சி ஒன்றை நடத்தத் திட்டமிட்டோம். தாமிரபரணியைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதற்கான பிரசாரத்தில் இறங்கியிருந்தோம். அப்போது நகரின் இரைச்சல் மிகுந்த பேருந்தில் ஏறிப் பேச ஆரம்பித்தோம். தங்கள் வாழ்வாதாரம் எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்று நாங்கள் பேசத் தொடங்க, உணர்ச்சி மிகுதியால் பேருந்து அமைதியானது.
அப்போது அந்தக் கூட்டத்தை விலக்கி விட்டு ஒரு பார்வை மாற்றுத்திறனாளி அம்மா நாங்கள் வைத்திருந்த பிரசார உண்டியலில் 2 ரூபாயைப் போட்டார். அந்தச் சத்தம் எனக்கு இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறது. அந்த ஓசைதான் நான் இதுவரைக் கேட்ட பெரிய போராட்ட முழக்கம். அதுவே என்னை ஓட வைத்துக் கொண்டு இருக்கிறது" என்பதுதான் அது.

கேலிச்சித்திர வரலாறுதான் முகிலனை மக்கள் சார்ந்த ஓவியங்களை வரைய வைத்திருக்கிறது என்று சொல்லலாம். மீனவர்களையும், அன்றாட கூலிகளையும், ரிக்ஷாகாரர்களையும் கிண்டல் செய்த ஓவியங்களே அன்று வெகுஜன ஊடகங்களில் அதிகமாக வந்திருக்கின்றன. ஆனால் அப்போது அன்றாட கூலிகளையும் கண்ணியத்துடன் ஓர் ஓவியர் வரைந்திருக்கிறார். அவர் பெயர் உதயன். அவரால் ஈர்க்கப்பட்டு, தான் சார்ந்த விவசாயக் குடும்பச் சூழல்களை வரைய ஆரம்பித்தவர்தான் முகிலன். பின்னாளில் பொருளாதாரப் பட்டதாரியான அவர், சென்னைக் கவின் கல்லூரியில் இணைந்து ஓவியமும் பயின்றுள்ளார்.
தன் தூரிகையின் வண்ணங்கள் ரசனையை மட்டும் சார்ந்ததல்ல, அந்த மை சாமானிய மக்களின் உழைப்பின் வேர்வையையும், துயரின் கண்ணீரையும் பேசுகிறது என்றவர் முகிலன். மரங்களும் செடிகளும் மனிதர்களும் மலைகளும் மட்டும் ஓர் ஊரினைப் பிரதிபலிக்க முடியாது. அந்த ஊரின் சமூகப் பிரச்னைகளைச் சொல்வது, அங்கு நிலவும் சமூகப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை வரைவது ஆகியவற்றின் மூலம்தான் அதைப் பிரதிபலிக்க முடியும் என்று வாதிடுபவர் முகிலன்.

20 ஆண்டுகளுக்கு மேலாக மக்களுக்கான ஓவியங்களை வரைகின்ற முகிலன். "என் ஓவியங்கள் வரவேற்பறையில் வைப்பதற்கானது மட்டுமல்ல, அது மக்களுக்கானது” என்று கூறி பொது மக்கள் அதிகமாகக் கூடுகின்ற இடங்களில் கண்காட்சிகளை நடத்தினார்.
இவர் கண்காட்சிகளில் சிலவற்றைப் பட்டியலிட்டால் அதில் 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்துக்கு எதிராக நடந்த ஓவியக் கண்காட்சி, 2004-ம் ஆண்டு தாமிரபரணி எங்கள் ஆறு என்று பன்னாட்டுக் குளிர்பானத்தை எதிர்த்து நடத்திய கண்காட்சி, 2009-ம் ஆண்டு ஈழப் போராட்டம் உச்சத்திலிருக்கும் போது மக்கள் அதிகமாகக் கூடும் சென்னை எம்.ஜி.ஆர் நகர் சந்தையில் போரின் துயரை விளக்கிய கண்காட்சி, பழங்குடி மக்களுக்கு எதிராக 'ஆபரேஷன் கிரீன்ஹன்ட்' என்று காடுகளை விட்டு மக்களைத் துரத்திய அரசை எதிர்த்து நடத்திய கண்காட்சி, 2019-ம் ஆண்டு ஸ்டெர்லைட் படுகொலை, கஜா புயல், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் பட்டியலின மக்களுக்கு எதிரான பிரச்னைகளை மையப்படுத்தி லயோலா கல்லூரியில் நடத்தப்பட்ட ஓவியக் கண்காட்சி என்று அந்தப் பட்டியல் நீள்கிறது.
மேலும் 'வேர்கள்' என்று ஒரு கலை பழகுதல் முகாமினை நடத்தி சிறுவர்களுக்கு ஓவியப் பயிற்சியையும், சமூகம் சார்ந்த புரிதலையும் பயிற்றுவித்து வருகிறார் முகிலன்.

இப்படி மக்களுக்காக இயங்கிய மனிதர் இன்று மாரடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நலம் குறித்து விசாரிக்க அவரது எண்ணுக்குத் தொடர்பு கொண்ட போது, அவரது மனைவி, "இப்போது உடல்நிலை சற்று தேறியுள்ளது தோழர். முடிந்தால் நேரில் வந்து பாருங்கள். ஆனால் அவரால் அதிகம் பேச முடியாது" என்று கூறினார்.
மேலும் நிதி உதவி ஏதாவது தேவைப்படுகிறதா என்று கேட்டபோது "நீதி தேவை இருக்கிறது. ஆனால் அது குறித்து எழுத வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டார். முகிலன் உடல் நலம் மீண்டு வர வேண்டும். அந்த பார்வை மாற்றுத்திறனாளி உண்டியலில் விழ செய்த உரிமைச் சத்தம் அவர் மீண்டு வர உதவும் என்று நம்புவோம்.