லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

“சுந்தர் பிச்சை எங்களைத் தேடி கண்டிப்பா வருவார்!”

பாண்டியன், விஜயலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
News
பாண்டியன், விஜயலட்சுமி

‘புத்தக தம்பதி’யின் நெகிழ்ச்சிக்கதை

புத்தகங்களை ‘நல்ல நண்பன்’ என்பார்கள். ஆனால், அதற்கும் மேலாக, புத்தகங்களை உயிராக நேசிக்கிறார், சென்னையைச் சேர்ந்த பாண்டியன். அசோக் நகரில் ‘நூல் பாண்டியன்’ என்றால் இவரின் ‘ஓம் ஆதிபராசக்தி பழைய புத்தகக்கடை’க்கு பலரும் விலாசம் சொல்வார்கள்.

பி.டி.ராஜன் சாலை - காமராஜர் சாலை சந்திக்கும் முனையில் (நாகாத்தம்மன் கோயில் எதிர்புறம்) இரண்டாவது மாடியில் இருக்கிறது இந்தப் புத்தகக்கடை. 300 சதுரஅடி பரப்பளவு கொண்ட சிறிய கடைதான். ஆனால், அதில் பல லட்சம் புத்தகங்கள் குவிந்துகிடக்கின்றன. இருவர் மட்டுமே உட்கார இடமிருக்கும் அந்த அறையின் மையப்பகுதியில், வாடிக்கையாளர்களின் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர் பாண்டியனும் அவர் மனைவி விஜயலட்சுமியும்.

“ஸ்கூல் படிக்கிறப்போ தினமும் வீடு வீடா நியூஸ் பேப்பர் போடுவேன். கூடவே, பழைய புத்தகங்களை கம்மியான விலைக்கு வாங்கி விற்க ஆரம்பிச்சேன். பலவிதமான தொழில்கள் செஞ்சும், புத்தக வியாபாரத்துலதான் எனக்கு நாட்டம் இருந்துச்சு. ஸ்கூல் படிப்பை முடிக்கிறதுக் குள்ள இதுவே எனக்கு முழுநேர தொழிலாகிடுச்சு” - புன்னகையுடன் சொல்லும் பாண்டியன், ஆரம்பகாலத்தில் 18 ஆண்டுகள் நடைபாதையில் புத்தகங்களை விற்பனை செய்திருக்கிறார். பின்னர், கடந்த 23 ஆண்டுகளாக இந்தக் கடையை நடத்திவருகிறார்.

புத்தகங்கள்
புத்தகங்கள்

பாண்டியனின் புத்தகக் காதலை முழுமையாகப் புரிந்துகொண்டு அவரைக் கரம்பிடித்த விஜயலட்சுமி, “கல்யாணமானதிலேருந்து 29 வருஷங் களா புத்தக வியாபாரத்துல இவருக்கு ஒத்தாசையா இருக்கேன். எங்க வாழ்க்கையில அதிக நேரத்தைப் புத்த கங்களுக்காகத்தான் செலவிட்டிருக் கோம்” என லயித்துச் சொல்கிறார்.

கடைக்கு சற்று தொலைவிலிருக்கும் குடோனுக்கு நம்மை அழைத்துச் சென்றார் பாண்டியன். அங்கேயும் பாடப்புத்தகங்கள், இலக்கியங்கள், ஆய்வு நூல்கள், புதினங்கள், இதிகாசங்கள், தத்துவ நூல்கள், மொழி பெயர்ப்பு நூல்கள் என பல லட்சம் புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றில், எந்தப் புத்தகம், எத்தனையாவது வரிசையில் இருக்கிறது என்பதை மனக்கணக்கில் வைத்திருக்கிறார் பாண்டியன்.

“ஸ்கூல் மற்றும் காலேஜ் ஸ்டூடன்ட்ஸ், ஆராய்ச்சியாளர்கள், கல்வி யாளர்கள், போட்டித்தேர்வுக்குப் படிக்கிறவங்க, சினிமா படைப் பாளிகள்னு பலதரப்பினரும் எங்க கடைக்கு வருவாங்க. யாருக்கு என்ன புத்தகம் தேவைப்படும்னு தெரியா தில்லையா? அதனால, கிடைக் கிற பல மொழிப் புத்தகங்களையும் வாங்கி வெச்சுக்கிட்டே இருப்போம்.

கடைக்குப் பக்கத்துலதான் எங்க வீடு இருக்கு. இடவசதி இல்லாம வீட்லயும் நிறைய புத்தகங்களை வெச்சிருக்கோம். எங்க சேமிப்பு, வருமானம் எல்லாத்தையும் புத்தங்களுக்குத் தான் செலவிடுறோம். எங்க கிட்ட இல்லாத புத்தகத்தையும் சில தினங்களுக்குள் வாங்கிக் கொடுத்திடுவோம். முன்பு ஒரு கோடி புத்தகங்கள் வரை வெச்சிருந்தோம். மழை யாலயும் கறையான் தொந்தரவாலும் நிறைய புத்தகங்களை இழந்துட்டோம். இப்போ 60 லட்சம் புத்தகங்கள் வரை வெச்சிருக்கோம்.

புத்தகம் வேணும்னு காலையில ஏழரை மணியிலேருந்து அழைப்புகள் வர ஆரம்பிக்கும். வெளிநாடுகள்ல இருந்தும் ஆர்டர் வரும். ஒவ்வொரு புத்தகத்துக்கும் வாங்கின விலையைவிடக் கொஞ்சம் கூடுதலா விலைவெச்சு கொடுப்போம். ஸ்கூல், காலேஜ் புத்தகங்கள் சில வருஷங்களுக்கு ஒருமுறை சிலபஸ் மாத்திட்டா, எங்களுக்கு இழப்புதான்.

வரவேற்பு இல்லாத புத்தகங்களா இருந்தா, எங்களுக்கு நஷ்டம் வந்தாலும் பரவாயில்லைனு கம்மியான விலைக்கும் கொடுத்திடு வோம். இந்தத் தொழில்ல நிலையான வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. இதை உணர்ந்து சேவை தொழிலாதான் இப்ப வரைக்கும் இந்தக் கடையை நடத்திட்டிருக் கோம்...” பாண்டியனின் பேச்சில் தன்னிறைவும் பெருமிதமும் இழையோடுகின்றன.

பாண்டியன், விஜயலட்சுமி
பாண்டியன், விஜயலட்சுமி

வாகன நெரிசல் மிகுந்த பகுதியில் கடை அமைந்திருப்பதால், தூசு சேராமல் புத்தகங் களைப் பராமரிப்பது சவாலான வேலைதான். அதையும் இன்முகத்துடன் செய்யும் விஜய லட்சுமி, “பராமரிப்புகூட எங்களுக்குப் பிரச்னையில்லை. ஆனா, கடை மற்றும் குடோனுக்கு மட்டுமே மாசம் பொறந்தா முப்பதாயிரம் ரூபா வாடகை கொடுக்கணும். இதில்லாம வீட்டு வாடகை தனி. கணக்குப் பார்த்து செஞ்சா இந்தத் தொழிலை இத்தனை வருஷமா நடத்தியிருக்க முடியாது. இட நெருக்கடி அதிகமாகவே, ‘நாம வேற தொழில் பண்ணலாமா?’னு இவர்கிட்ட கேட்டிருக்கேன். ‘பலரோட முன்னேற்றத்துக்கும் நம்ம தொழில் ஏணியா இருக் குது. அதுக்காகவாச்சும் நாம கஷ்டப்பட்டாலும் தப் பில்லே’னு சொன்னார். அதே தான் இப்போ என் விருப்பமும்” என்று உள்ளத்திலிருந்து சொல்ல, தன் வி.ஐ.பி வாடிக்கையாளர்கள் குறித்த சுவாரஸ்யமான தகவலைச் சொன்னார் பாண்டியன்.

``ஆல்பாபெட் மற்றும் கூகுள் நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சை, என் ஆரம்பகால கஸ்டமர். ஸ்கூல் படிக்கிற பையனா பல வருஷம் என்கிட்ட புத்தகங்கள் வாங்கி யிருக்கார். அப்பவே அபார திறமையாளரா இருந்தவர், டென்த் படிக்கிறப்போவே எம்.எஸ்ஸி புத்தகத்தை என்கிட்ட படிக்க வாங்கினார். என்னை மறந்திருக்க மாட்டார்னு நினைக்கிறேன். என்னைக்காச்சும் ஒருநாள் அவர் கண்டிப்பா எங்களை வந்து பார்ப்பார்னு நம்புறேன். எழுத்தாளர் ஜெயகாந்தன் சார் உட்பட பல பிரபலங்கள் என்கிட்ட புக்ஸ் வாங்கியிருக்காங்க” என்கிறார் பெருமையுடன்.

“ புத்தக வாசிப்பைப் பெரிசா நேசிக்கிறவங்க, தேடிப்பிடிச்சாவது புத்தகங்களை வாங்கு றாங்க. அப்படியானவங்கதான் எங்களுக்கான நம்பிக்கை. அவங்களுக்காக எங்க காலம் உள்ளவரைக்கும் இந்தத் தொழிலை சோர்வடையாம பண்ணுவோம்” வாஞ்சை யான பேச்சில், புத்தக பொக்கிஷங்களுக்கு நடுவே மனிதநேய சுடர்களாக மின்னுகின்றனர், இந்தப் புத்தக தம்பதியர்.“