அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

கேரட் அறுவடைத் தொழிலில் குழந்தை தொழிலாளர்கள்! - என்ன செய்யப்போகிறது அரசு?

ஊட்டி கேரட் அறுவடைத் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஊட்டி கேரட் அறுவடைத் தொழில்

கேரட் அறுவடைக்காக இரவு நேரத்தில், வீட்டை விட்டு பல கிலோமீட்டர் தொலைவிலுள்ள தோட்டங்களுக்கு லாரிகள் மூலம் செல்லும் தம்பதிகளில் பலர், தங்களது குழந்தைகளையும் கூடவே அழைத்துச் செல்கின்றனர்.

ஊட்டி கேரட் அறுவடைத் தொழிலில், குழந்தைத் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது!

நீலகிரி மலைக் காய்கறி உற்பத்தியில், ‘ஆரஞ்சு கோல்டு’ என்று அழைக்கப்படும் ஊட்டி கேரட் மிக முக்கிய சாகுபடிப் பயிராக இருக்கிறது. நாள்தோறும் பல நூறு டன் கேரட் அறுவடை செய்யப்பட்டு நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது. இந்தப் பணியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 20,000 தொழிலாளர்கள் வரை ஈடுபட்டுவருகிறார்கள்.

கேரட் அறுவடைத் தொழிலில் குழந்தை தொழிலாளர்கள்!  - என்ன செய்யப்போகிறது அரசு?

சந்தையில் ஃப்ரெஷ்ஷான கேரட் அதிக விலை போகும் என்பதால், உறையவைக்கும் குளிரில் இரவோடு இரவாக கேரட் அறுவடை செய்யப்பட்டு, அதிகாலையில் இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்டு, மொத்த ஏல விற்பனை மண்டிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. அதிகம் கூலி கிடைக்கும் இத்தொழிலில் உள்ளூர் தொழிலாளர்கள் மட்டுமே ஈடுபட்டுவந்த நிலையில், தற்போது பெரும்பான்மையான எண்ணிக்கையில் வடமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், கேரட் அறுவடைக்காக இரவு நேரத்தில், வீட்டை விட்டு பல கிலோமீட்டர் தொலைவிலுள்ள தோட்டங்களுக்கு லாரிகள் மூலம் செல்லும் தம்பதிகளில் பலர், தங்களது குழந்தைகளையும் கூடவே அழைத்துச் செல்கின்றனர். அப்படி அழைத்துச் செல்லப்படும் சிறுவர் சிறுமியர்களையும் தூங்கவிடாமல், கடுங்குளிரில் அறுவடைப் பணியில் ஈடுபடுத்துவதாகவும், அதற்கு ஈடாகச் சொற்பக் கூலியையும் பெற்றோர்கள் வாங்கிக்கொள்வதாகவும் புகார்கள் எழுகின்றன. கள நிலவரத்தை அறிய நேரில் சென்றோம்...

கேரட் அறுவடைத் தொழிலில் குழந்தை தொழிலாளர்கள்!  - என்ன செய்யப்போகிறது அரசு?

ஊட்டி அருகிலுள்ள கொல்லிமலைப் பகுதியில், அதிகாலை உறைபனியில் வடமாநிலத் தொழிலாளர்கள் பலரும் நெற்றியில் டார்ச் லைட்டுகளைக் கட்டிக்கொண்டு கேரட் அறுவடையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். குளிரைச் சமாளிக்க இரண்டு மூன்று கோணிப்பைகளை உடம்பில் போர்த்தியிருந்த தொழிலாளர்களுக்கிடையே குழந்தைத் தொழிலாளர்களும் கலந்திருக்க... அவர்களிடம் மெல்லப் பேச்சுக்கொடுத்தோம். “குளிருக்கு தீ மூட்டினால்கூட முதலாளிகள் திட்டுவார்கள். வெளி ஆட்களுடன் பேசினால் அவ்வளவுதான்...’’ என அரைகுறைத் தமிழில் பயத்துடன் பேசியவாறே நம்மைத் தோட்டத்தை விட்டு வெளியேற்றினர்.

இதையடுத்து, ஊட்டி மற்றும் கேத்தி பாலாடா பகுதிகளில் உள்ள கேரட் சுத்திகரிப்பு மையங்களுக்குச் சென்றோம். இரவு முழுக்க அறுவடைப் பணியில் ஈடுபட்டிருந்த பலரும் வாகனங்களில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த கேரட் மூட்டைகள்மீது படுத்து உறங்கிக்கொண்டிருந்தனர். சுத்திகரிப்பு மையத்துக்குள்ளே... புத்தகப் பைகளைச் சுமக்க வேண்டிய சிறுவர், சிறுமியர் பலரும் கேரட் கூடைகளையும் அவற்றை நிரப்பும் கோணிப்பைகளையும் கையில் வைத்துக்கொண்டு சுத்திகரிப்புப் பணியில் சோர்வுடன் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அவர்களிடம் நாம் பேச முயன்றபோது, மிரட்சியில் அவர்களும் வாய்திறக்கவில்லை.

கேரட் அறுவடைத் தொழிலில் குழந்தை தொழிலாளர்கள்!  - என்ன செய்யப்போகிறது அரசு?

இந்தி தெரிந்த நண்பர் ஒருவர் உதவியுடன் ஜார்க்கண்ட் மாநிலத் தொழிலாளி ஒருவரிடம் பேசினோம், ‘‘குழந்தைகளை இரவு வேலைக்கு அழைத்து வர முதல் காரணம் வறுமைதான். இரண்டாவது, நள்ளிரவு வேலை என்பதால், குழந்தைகளைத் தனியாக வீட்டில் விட்டுவிட்டு வரமுடியாது. வறுமையால், எனது மகளையும் மகனையும் பள்ளிக்கும் அனுப்புவதில்லை. வேலைக்கு வந்தால் டீ, பலகாரம், சாப்பாடு, பணம் எல்லாமே கிடைக்கிறது. எங்களுக்கும் உதவியாக இருக்கிறது’’ என்று சொல்லி நம்மை அதிரவைத்தார்.

பெயர் கூற மறுத்த மற்றொரு பெண் தொழிலாளி, “5 மூட்டை கேரட் அறுவடை செய்து கொடுத்தால் 1,250 ரூபாய் கூலி தருகிறார்கள். நானும் என் கணவரும் வேலைக்கு வந்தால்தான் குறிப்பிட்ட நேரத்துக்குள் 5 மூட்டை அறுவடை செய்ய முடியும். 14 வயது மகளை வீட்டில் தனியாக விட்டுவர முடியாது. எனவே, வேறு வழியின்றி வேலைக்கு அழைத்து வருகிறோம். பலரும் இந்தக் காரணத்துக்காகத்தான் வேலைக்கு அழைத்து வருகிறார்கள். குழந்தைகளால் இரவு குளிரைத் தாங்க முடியாது; தூக்கத்தையும் கட்டுப்படுத்த முடியாது. எனவே, முடிந்த வரை வேலை செய்வார்கள். முடியவில்லை என்றால், கோணிப்பையைப் போர்த்திக்கொண்டு லாரிக்குள்ளேயே படுத்து தூங்கிவிடுவார்கள். அவர்கள் செய்த வேலைக்குத் தகுந்த மாதிரி முதலாளிகள் கூலி கொடுப்பார்கள். நள்ளிரவில் ஊட்டி மார்க்கெட்டின் மெயின் கேட்டுக்கு வந்து பாருங்கள்... எத்தனை குழந்தைகள் பெற்றோருடன் வேலைக்குச் செல்ல லாரிக்காகக் காத்திருக்கிறார்கள் என்பது தெரியும்’’ என்றார்.

கேரட் அறுவடைத் தொழிலில் குழந்தை தொழிலாளர்கள்!  - என்ன செய்யப்போகிறது அரசு?

இந்த விவகாரம் குறித்துப் பேசிய குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சதீஸ் குமார், “நள்ளிரவில் குழந்தைகளைப் பணிக்கு அழைத்துச் செல்வது மிகவும் ஆபத்தானது. எனவே, மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல்துறை, வருவாய்த்துறை என அனைத்துத் துறைகளும் ஆய்வுசெய்து, கடுமையான அபராதம் விதித்து, உரிய நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், “தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுவருகிறோம். அவ்வாறு நடந்தால், நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசுகிற நீலகிரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் தேவகுமாரி, “மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகங்களிலும் வடமாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகள் கூட்டம்தான் நிரம்பிவழிகிறது. பகல் வேளைகளில் முட்டை, சத்துணவு போன்றவற்றை வழங்கி நல்ல முறையில் குழந்தைகளைப் பராமரித்து வருகிறோம். இரவு நேரத்தில் குழந்தைகளுக்கு இப்படி ஒரு சிக்கல் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதுகுறித்து தரவுகளைச் சேகரித்து அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்று சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

கடுமையான நடவடிக்கை என்பதோடு மட்டும் இல்லாமல், தொழிலாளர்களின் பிரச்னைகளைச் சரிசெய்யும் விதமான, குழந்தைகளின் பாதுகாப்பையும் கல்வியையும் உறுதிசெய்யும் விதமான நடவடிக்கையாக அது இருக்க வேண்டும்!