அலசல்
Published:Updated:

வாட்டியெடுக்குது... வறுமையை சமாளிக்க முடியலை..! - பட்டதாரிப் பெண்ணின் பாசப் போராட்டம்!

மகேஸ்வரி குடும்பம்
பிரீமியம் ஸ்டோரி
News
மகேஸ்வரி குடும்பம்

குழந்தைகளைப் போன்ற இவர்களைச் சமாளிப்பது மிகவும் சிரமம். நடக்கும் எதையும் அவர்களால் புரிந்துகொள்ள முடியாது.

நோயினால் முடங்கிப்போன தந்தை, தாயின் மரணம், மன வளர்ச்சி குன்றிய இரு தங்கைகள், ஒரு தம்பி என ஒட்டுமொத்தச் சோகத்தையும் சுமந்துகொண்டு எதிர்நீச்சல் போட்டுவருகிறார் திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி!

பழைய வத்தலக்குண்டு, சென்றாயப் பெருமாள் மலைக்கோயில் அடிவாரத்தில், முன்பகுதியில் கூரையும், மழைக்காலத்தில் நனையாமல் இருக்க ஒரு பகுதி ஆஸ்பெஸ்டாஸ் சீட்டும் வேயப்பட்ட வீட்டில் வாழ்கிறது மகேஸ்வரி குடும்பம். மன வளர்ச்சி குன்றிய தம்பி, தங்கைகளுக்கு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து சோறு ஊட்டிக்கொண்டிருந்தவரிடம் பேசினோம்.

மகேஸ்வரி
மகேஸ்வரி

‘‘இருள்தேவி (25 வயது), பாண்டீஸ்வரி (23 வயது), பாண்டீஸ்வரன் (21 வயது) என என் உடன் பிறந்த மூவருமே மன வளர்ச்சிக் குறைபாடு கொண்டவர்கள். இன்னும் 5 வயது குழந்தையைப்போலவே இருக்கிறார்கள். விவசாயக் கூலி வேலை செய்துவந்த அப்பா பாண்டியும், பழைய வத்தலக்குண்டு ஊராட்சியில் தூய்மைப் பணி செய்துவந்த அம்மா சூரியகாந்தியும் எங்களைப் பெரும் சிரமப்பட்டு வளர்த்தனர். சாப்பாட்டுக்கே வழியின்றி இருந்த நிலையிலும் மூத்த மகளான என்னை ஆசிரியராக்க வேண்டும் என எம்.காம்., பி.எட் படிக்கவைத்தனர். மாற்றுத்திறனாளிகளான தம்பி, தங்கைகளை மனநலக் காப்பகத்தில் சேர்க்க முடிவெடுத்து சில முயற்சிகளையும் செய்தோம். ஆனால், மூன்று பேராலும் எங்களைவிட்டுப் பிரிந்திருக்க முடியவில்லை.

அதனால், `எவ்வளவு கஷ்டமானாலும் பார்த்துக்கொள்ளலாம்’ என அம்மா உறுதியாக இருந்தார். பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை நானும் அவருக்குத் துணையாக இருந்தேன். எப்படியாவது படித்து முடித்து, ஆசிரியராகி, ஏழ்மையிலிருந்து குடும்பத்தை மீட்டுவிடலாம். மற்றதைப் பார்த்துக்கொள்ளலாம் என வைராக்கியமாகப் படித்து முடித்தேன். 2015-ம் ஆண்டு, சாலையோரத்தில் குப்பையை அள்ளிக்கொண்டிருந்த அம்மா திடீரென மயங்கி விழுந்தார். வீட்டிலிருந்த ஒரே தங்க நகையான வளையலை விற்று, அம்மாவுக்கு மருத்துவம் பார்த்தோம். ஆனாலும் காப்பாற்ற முடியவில்லை. அப்பாவுக்கு நரம்புத் தளர்ச்சி பிரச்னையோடு பல்வேறு உடல் உபாதைகளும் இருப்பதால், வீட்டிலேயே முடங்கிவிட்டார்.

மகேஸ்வரி குடும்பம்
மகேஸ்வரி குடும்பம்

அம்மா இறப்புக்குப் பிறகு, அப்பா, தம்பி, தங்கைகளைப் பார்த்துக்கொள்வது முழுமையாக என் பொறுப்பானது. அவர்களுக்கு பல் துலக்கி, காலைக்கடன்களைச் செய்யவைத்து, குளிப்பாட்டி, உடை மாற்றி, சோறு ஊட்டி, தூங்கவைப்பதற்குள் நாளின் பெரும்பகுதி நேரம் முடிந்துவிடும். இதில், வயதுக்கு வந்த தங்கைகளுக்கு மாதவிடாய்ப் பிரச்னையும் இருக்கிறது. குழந்தைகளைப் போன்ற இவர்களைச் சமாளிப்பது மிகவும் சிரமம். நடக்கும் எதையும் அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. ஒருமுறை வாய்பேச முடியாத பாண்டீஸ்வரியின் பாவாடையில் தீ பற்றிவிட்டது. இதில் அவளின் தொடை, இடுப்புப் பகுதி காயமடைந்தது. இந்தப் பாதிப்பிலிருந்து அவளை குணப்படுத்த இரண்டு ஆண்டுகள் ஆகின. இருள்தேவிக்கு மாதவிடாய் பிரச்னையால் தொடர்ந்து ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் சென்றார். அவரையும் அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சரிசெய்தேன். தம்பி ஒருமுறை வெளியே சென்று தொலைந்து போய்விட்டான். தேடி அலைந்து கண்டுபிடித்தோம். இப்படி, ஒவ்வொரு நாளும் வாழ்க்கை எங்களுக்குப் போராட்டம்தான்!

பாண்டி
பாண்டி

அம்மா இறப்புக்குப் பிறகு, உறவினர்கள் யாரும் எங்கள் வீட்டுக்கு வருவது இல்லை. ஆனால், ஒரு சிலர் என்னைப் பெண் கேட்டு வந்தார்கள். `நான் திருமணம் செய்துகொண்டு போய்விட்டால் இவர்களின் நிலைமை என்னவாகும்?’ என ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தேன். ‘திக்’கென்று இருந்தது. என் தம்பி, தங்கைகளுக்குத் தாயாக இருப்பது என் கடமை. எனவே, திருமண வரன்களை வேண்டாம் எனக் கூறி மறுத்துவிட்டேன்.

‘படிச்ச படிப்புக்கு வேலைக்குப் போ’ என்கிறார்கள். போகலாம்தான். உடனே அப்படி ஒரு வேலை கிடைத்துவிடுமா... இப்போதைக்கு நூறு நாள் வேலைக்குச் செல்கிறேன். கிடைக்கும் விவசாயக் கூலி வேலைகளுக்கும் செல்கிறேன். அதில் கிடைக்கும் வருமானத்தையும் மாற்றுத்திறனாளி களுக்கான உதவித் தொகையையும் வைத்துத்தான் குடும்பத் தேவைகளைச் சமாளித்துக் கொண்டிருக்கிறேன். தினமும் இவர்களைப் பராமரிப்பதற்கு ஒருபுறம் போராடிக்கொண்டிருக்கும் என்னை, மறுபுறம் வறுமையும் வாட்டி யெடுக்கிறது. என் குடும்பத்தைக்கூடச் சமாளித்துவிட முடிகிறது. ஆனால், வறுமையைச் சமாளிக்க முடியவில்லை. என் பெற்றோரின் ஆசையும், என் ஆசையுமான ஆசிரியர் பணி அல்லது அரசுப் பணி கிடைத்தால், என் குடும்பத்தை எப்படியாவது கரையேற்றி விடுவேன்’’ என்கிறார் வைராக்கியத்துடன்.

அவர் கண்களில் வெளிப்பட்ட ஈரத்தில், அவ்வளவு கருணையும், வலியும், நம்பிக்கையும் தெரிந்தன.

வறுமையில் உழலும் குடும்பத்தைக் காப்பாற்ற, ஒற்றை மனுஷியாகப் போராடிவரும் மகேஸ்வரிக்கு தமிழக அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும்!