சமூகம்
அலசல்
Published:Updated:

படிப்பை நிறுத்துவதை தவிர வேற வழியில்லை... சட்டம் பயிலும் மாற்றுத்திறனாளிகளின் குமுறல்!

மாற்றுத்திறனாளிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
மாற்றுத்திறனாளிகள்

இளம்பிள்ளை வாதத்தால என் ரெண்டு கால்களும் செயலிழந்துடுச்சு. ஆரம்பத்துல, திருச்சியில இருக்குற ஒரு ஆதரவற்றோர் இல்லத்துலதான் வளர்ந்தேன்.

சென்னை காசிமேடு பேருந்து நிலையம் அருகே, இரு கால்களும் செயலற்ற மாற்றுத்திறனாளி நண்பர்கள் இருவர் தரையில் தவழ்ந்தபடி கல்லூரிப் புத்தகங்களோடு சென்றுகொண்டிருந்தார்கள். அந்தக் காட்சி நம் மனதைப் பிசைய, அவர்களிடம் பேச்சுக்கொடுத்தோம்...

“என் பேரு காசிம் உசைன். சொந்த ஊரு ராமநாதபுரம், அங்கேயேதான் பள்ளிப் படிப்பை முடிச்சேன். சின்ன வயசுலருந்தே சட்டம் படிக்கணும்னு ஆசை. ஆனா, குடும்பச்சூழல் காரணமா சிவகங்கை அரசுக் கலைக் கல்லூரியில மேற்படிப்பு முடிச்சேன். 34 வயசுக்குப் பிறகு, புதுப்பாக்கம் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் இடம் கிடைச்சுது. அங்கதான் தமிழ் வழியில் பி.ஏ., எல்.எல்.பி படிச்சுக்கிட்டு இருக்கேன். எனக்குன்னு வருமானம் ஏதும் இல்லை. அரசு தரும் மாற்றுத்திறனாளி உதவித்தொகையில புத்தகங்கள் வாங்கிப் படிக்கிறேன். என் வீடு இருக்கும் காசிமேட்டிலிருந்து புதுப்பாக்கம் சட்டக் கல்லூரிக்குப் போய்ட்டு திரும்பணும்னா தினமும் 80 கி.மீட்டருக்கு மேல பயணிக்கணும். மூணு, நாலு பஸ் ஏறி, இறங்கணும். ரெண்டு கால்களும் செயல்படாததால, கைகளைத் தரையில ஊன்றி தவழ்ந்தேதான் பஸ் ஸ்டாப்புகளுக்கும், கல்லூரிக்கும் போயிட்டுத் திரும்பணும்.

மாற்றுத்திறனாளிகள்
மாற்றுத்திறனாளிகள்

பல நாள்கள் வெயில்ல தவழ்ந்து உள்ளங்கை பொத்துப்போய் புண்ணாகிடும். அதையெல்லாம் பார்த்தா படிக்க முடியாதே சார்... கஷ்டம்தான் ஆனாலும் நிறைய படிக்கணும்னு மனசு முழுக்க ஆசை. நல்லா படிச்சு அதன் மூலமா எங்களை மாதிரியானவங்களுக்கு முடிஞ்ச சட்ட உதவிகளைச் செஞ்சு தரணும்னு விரும்புறேன் சார்...” என்றார் வலி நிறைந்த புன்னகையோடு.

மற்றொரு மாற்றுத்திறனாளியான மணிகண்ட பிரபாத்திடம் பேசினோம். “திருச்சி மாவட்டத்தில இருக்கிற ஒரு சின்ன கிராமத்தைச் சேர்ந்தவன் நான். இளம்பிள்ளை வாதத்தால என் ரெண்டு கால்களும் செயலிழந்துடுச்சு. ஆரம்பத்துல, திருச்சியில இருக்குற ஒரு ஆதரவற்றோர் இல்லத்துலதான் வளர்ந்தேன். மேற்படிப்புக்காக சென்னைக்கு வந்து கொருக்குப்பேட்டைல வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கினேன். ஆனா, பொருளாதாரச் சிக்கல் காரணமா மேற்படிப்பைத் தொடர முடியாம போயிடுச்சு. அதனால படிப்பைப் பாதியிலே நிறுத்திட்டு சின்னச் சின்னக் கூலி வேலைகளுக்குப் போக ஆரம்பிச்சிட்டேன். என் நிலைமையைப் புரிஞ்சுகிட்டு எனக்கு உதவணும்னு முன்வந்த ஒருசிலர் மூலமா புதுப்பாக்கம் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில படிக்க வாய்ப்பு கிடைச்சது. நானும் காசிமும் ஒரே வகுப்புலதான் படிக்கிறோம். காலை 10 மணிக்குள்ள ரெண்டு பேரும் கல்லூரி வளாகத்துல இருக்கணும். பஸ் பிரயாணம்தான் எங்களுக்கு மிகப்பெரிய சவால். எங்க வழித்தடத்துல ஸ்ட்ரெய்ட் பஸ்ஸும் கிடையாது. பல நேரங்கள்ல பஸ்ஸுக்குக் காத்திருக்குறதே பெரிய பிரச்னையா இருக்கும். அப்படியும் தினமும் 5 கி.மீ வரை நாங்க பொது இடங்கள்ல தவழ்ந்துதான் போகணும். வேற வழியில்ல, கஷ்டங்களை, சிரமங்களைப் பொருட்படுத்தாம பஸ்ஸுல ஏறி, இறங்கிக் கல்லூரிக்குப் போய்க்கிட்டிருக்கோம்.

மாற்றுத்திறனாளிகள்
மாற்றுத்திறனாளிகள்

இப்போவே சென்னையில வெயில் ஆரம்பிச்சிருச்சு. வரக்கூடிய நாள்கள்ல என்ன ஆகுமோ தெரியல. மழைலாம் பெய்ஞ்சா ரொம்பவே கஷ்டமாகிடும். எங்களுக்கு 60% அட்டெண்டன்ஸ் இருந்தாத்தான் தேர்வு எழுத முடியும். அதனால கல்லூரிக்கு அதிகமா லீவு போட முடியாது. இந்த மாச இறுதியில தேர்வு தொடங்குது. இன்னும் நாலு வருஷம் படிப்பு மிச்சம் இருக்கு. எங்க படிப்பு தடைபடாம இருக்க, மாற்றுத்திறனாளிகள் ஓட்டுற வாகனம் கிடைச்சா நல்லா இருக்கும்” என்றார் எதிர்பார்ப்புகளுடன்.

பல்வேறு இடையூறுகளைப் புறந்தள்ளி, கல்லூரி வாசலைத் தொட்டிருக்கும் மாற்றுத் திறனாளிகளான காசிம் உசைன், மணிகண்ட பிரபாத் ஆகியோருக்கு இப்போதைய அத்தியாவசியத் தேவை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் இருச்சக்கர வாகனம். வாகனம் ஓட்டுவதற்கான தகுதிச் சான்றும், அரசு கேட்கும் ஆவணங்களும் அவர்களிடம் இருக்கின்றன.

அரசும் அதிகாரிகளும் மனது வைப்பார்களா?