சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

கிளியோபாட்ரா என்ன நிறம்?

கிளியோபாட்ரா பழைய ஓவியம்
பிரீமியம் ஸ்டோரி
News
கிளியோபாட்ரா பழைய ஓவியம்

கிளியோபாட்ராவின் நிறம் குறித்த சர்ச்சை எழுவது இது முதல் முறையல்ல! பேரழகியாக அறியப்படும் கிளியோபாட்ரா குறித்த வரலாற்றைவிட கற்பனைப் புனைவுகளே உலகெங்கும் பரவியிருக்கின்றன.

இறந்து 2,000 ஆண்டுகளுக்குப் பிறகு, கிளியோபாட்ராவின் நிறம் குறித்த கொந்தளிப்பு எகிப்து நாட்டில் எழுந்திருக்கிறது. காரணம், நெட்ப்ளிக்ஸில் வெளியான ‘Queen Cleopatra' டாக்கு டிராமா. நான்கு பாகங்களாக நெட்ப்ளிக்ஸ் உருவாக்கியிருக்கும் இதன் முதல் பாகம் மே 10 அன்று வெளியானது. இதில், பிரிட்டிஷ் கறுப்பின நடிகையான அடேல் ஜேம்ஸ், கிளியோபாட்ராவாக நடித்திருப்பதுதான் சர்ச்சைகளுக்குக் காரணம்.

எகிப்து நாட்டின் சுற்றுலா மற்றும் பழங்காலப் பொருள்கள் அமைச்சகம், ‘கிளியோபாட்ரா கிரேக்கப் பெண் தோற்றத்தில்தான் இருந்தார். அவருக்கு வெள்ளை நிற சருமம்தான். அவரைக் கறுப்பினத்தவராகச் சித்திரிப்பது சரியல்ல' என்று கண்டித்துள்ளது. எகிப்தின் முதிய தொல்லியல் ஆய்வாளர் ஜாஹி ஹவாஸ், ‘கிளியோபாட்ரா அலெக்ஸாண்ட்ரியாவில் பிறந்தவர். கிரேக்கத்தின் மாசிடோனியப் பரம்பரையில் வந்தவர். ஆப்பிரிக்கப் பெண் தோற்றத்தில் அவர் இல்லை' என்று மறுத்திருக்கிறார். மஹ்மூத் அல் செமாரி என்ற வழக்கறிஞர், நெட்ப்ளிக்ஸ் மீது வழக்கு போடப்போவதாக அறிவித்திருக்கிறார். எகிப்தின் al-Wathaeqya என்ற சேனல், ‘எங்கள் மகாராணி கிளியோபாட்ராவின் வரலாற்றை உண்மைத்தன்மையுடன் நாங்களே டாக்குமென்டரியாக எடுத்து உலகின் பல மொழிகளில் வெளியிடப் போகிறோம்' என்று கூறியுள்ளது.

கிளியோபாட்ரா பழைய ஓவியம்
கிளியோபாட்ரா பழைய ஓவியம்

கிளியோபாட்ராவின் நிறம் குறித்த சர்ச்சை எழுவது இது முதல் முறையல்ல! பேரழகியாக அறியப்படும் கிளியோபாட்ரா குறித்த வரலாற்றைவிட கற்பனைப் புனைவுகளே உலகெங்கும் பரவியிருக்கின்றன. அதனாலேயே, வரலாற்றில் அதிகம் ஆராய்ச்சிக்குள்ளான அரசியாக அவர் இருக்கிறார். அலெக்ஸாண்டரின் படையெடுப்பில் எகிப்து வீழ்ந்தபோது, அதன் நிர்வாகியாக தாலமி என்பவரை நியமித்தார் அலெக்ஸாண்டர். கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் அந்த தாலமி வம்சம் எகிப்தை ஆண்டது. அந்த வம்சத்தில் வந்து ஏழாம் கிளியோபாட்ரா என்ற பெயருடன் கி.மு 51-ம் ஆண்டில் அரியணை ஏறியவர் இவர். மருத்துவம், தத்துவம் படித்தவர், சிறந்த விவாதத்திறன் பெற்றவர், போர்க்கலை அறிந்தவர், பல மொழிகள் பேசியவர் என்றெல்லாம் கிளியோபாட்ரா குறித்த உண்மைகள் பலருக்குத் தெரியாது. அவரின் மயக்கும் அழகே எல்லாவற்றையும் தாண்டி முன்னிலை பெற்றது.

ஆட்சியைப் பிடித்தது முதல் அவருக்கும் அவர் சகோதரனுக்கும் சண்டை. இது உள்நாட்டுப் போராக மாறியது. பக்கத்திலேயே இருந்த ரோமப் பேரரசு எகிப்தை விழுங்கப் பார்த்த நேரம் அது. ரோமை ஆண்ட ஜூலியஸ் சீஸரின் உதவியுடன் சகோதரனை வீழ்த்திய கிளியோபாட்ரா, பிறகு சீஸரின் அந்தரங்கத் தோழியாக மாறி ஒரு குழந்தையும் பெற்றார். சீஸர் கொல்லப்பட்ட பிறகு அதிகாரத்துக்கு வந்த மார்க் ஆண்டனியின் தோழியாகவும் மாறினார். ரோம் குடியரசின் படைகளால் வீழ்த்தப்பட்டு மார்க் ஆண்டனி தற்கொலை செய்துகொண்ட போது, கிளியோபாட்ராவும் விஷம் குடித்து இறந்தார். கி.மு 30-ம் ஆண்டு தன் 39 வயதில் கிளியோபாட்ரா இறந்தபோது, எகிப்து தனி அரசு என்ற அடையாளத்தை இழந்து ரோமப் பேரரசுடன் இணைக்கப்பட்டது. மாபெரும் ரோமப் பேரரசை சமாளித்து எகிப்தின் சுயாட்சியைக் காப்பாற்றிய கடைசி அரசி என்ற வகையில் எகிப்து மக்களுக்குக் கிளியோபாட்ரா மீது பெரும் மரியாதை உண்டு. அதனால்தான் அவரை அவமதித்தால் கோபப்படுகிறார்கள்.

குயின் கிளியோபாட்ரா (நெட்ப்ளிக்ஸ் தொடர்)
குயின் கிளியோபாட்ரா (நெட்ப்ளிக்ஸ் தொடர்)

தாலமி வம்சத்தினர் எகிப்தை 300 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும், தாய்மொழியான கிரேக்க மொழியே பேசினார்கள். திருமண உறவுகளையும் கிரேக்கத்தில்தான் வைத்துக்கொண்டார்கள். ‘‘கிளியோபாட்ராவின் தந்தைவழி குறித்து எந்தக் குழப்பமும் இல்லை. அவர்கள் கிரேக்கர்கள்தான். ஆனால், எகிப்தில் இருந்த பெண்களையும் அவர்கள் அந்தப்புரத்தில் வைத்திருந்தார்கள். அவர்களில் கறுப்பினத்தவரும் உண்டு. கிளியோபாட்ராவின் அம்மா, அம்மாவழிப் பாட்டி ஆகியோர் யார் என்பது தெரியவில்லை. அப்போது எகிப்தில் பேசப்பட்ட கோப்டிக் என்ற மொழியைப் பேசிய தாலமி வம்ச ஒரே ஆட்சியாளர் கிளியோபாட்ராதான். அம்மாவழியில்தான் அவருக்கு இந்த மொழி வாய்த்திருக்கும். நிறைய ஆய்வாளர்கள் கிளியோபாட்ரா கறுப்பு நிறத்தவர் என்கிறார்கள். அதனால்தான் இப்படிக் காட்சிப்படுத்தினோம்'' என்கிறார்கள் இந்த டாக்கு டிராமாவுக்கான ஆய்வுகளைச் செய்தவர்கள்.

‘‘கிளியோபாட்ரா வாழ்ந்த காலத்திலேயே செய்த அவரது சிலை இப்போதும் ஜெர்மனியில் இருக்கிறது. கிரேக்கப் பெண் போலவே அதில் இருக்கிறார். அவரின் ஏராளமான ஓவியங்கள் உண்டு. ஒன்றும் அவரை இப்படிக் காட்டவில்லை. கற்பனைக் கதை என்றால் அவர்கள் இஷ்டத்துக்கு எடுக்கலாம். டாக்கு டிராமா எனும்போது உண்மைக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் அல்லவா?'' என்று கொதிக்கிறார்கள் எகிப்தின் வரலாற்று ஆய்வாளர்கள்.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்தாலும், ஆசிய மற்றும் ஐரோப்பியப் பண்பாடுகளின் கலவையாகவும் நிறக்கலவையாகவும் இருக்கும் நாடு எகிப்து. அந்த நாட்டுக்கு மேற்கத்திய உலகம் கறுப்பு அடையாளம் தருவதற்குப் பின்னால் அரசியல் சூழ்ச்சி இருப்பதாக எகிப்து மக்கள் கருதுகிறார்கள். கிளியோபாட்ரா டாக்கு டிராமாவுக்கு எதிர்ப்பு வருவதற்கு நிஜமான காரணம் இதுதான்.