Published:Updated:

`கலெக்டர் சொன்ன அந்த 100 ரூபாய் கூலி உயர்வு இன்னும் தரல'- ஆட்சியர் அலுவலகத்தில் கலங்கும் தொழிலாளி

தொழிலாளி சாத்தையா

"கண்ணு நல்லாத் தெரியுறவங்க ரெண்டு மணி நேரத்துல ஒரு நாற்காலிய பின்னிடுவாங்க. எனக்கு இடது கண் பார்வை தெரியாததால ஒரு சேர் பின்ன ஐந்து மணி நேரமாகும். கஷ்டப்பட்டு முதுகு வலிக்க சேர் பின்னுறதக் கண்கூடா பார்த்தும் கூலிய கூட்டிக் கொடுக்க மனசு வரமாட்டேங்குது தம்பி இவங்களுக்கு.”

Published:Updated:

`கலெக்டர் சொன்ன அந்த 100 ரூபாய் கூலி உயர்வு இன்னும் தரல'- ஆட்சியர் அலுவலகத்தில் கலங்கும் தொழிலாளி

"கண்ணு நல்லாத் தெரியுறவங்க ரெண்டு மணி நேரத்துல ஒரு நாற்காலிய பின்னிடுவாங்க. எனக்கு இடது கண் பார்வை தெரியாததால ஒரு சேர் பின்ன ஐந்து மணி நேரமாகும். கஷ்டப்பட்டு முதுகு வலிக்க சேர் பின்னுறதக் கண்கூடா பார்த்தும் கூலிய கூட்டிக் கொடுக்க மனசு வரமாட்டேங்குது தம்பி இவங்களுக்கு.”

தொழிலாளி சாத்தையா
நாளை உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட உள்ளது. மே 1 உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்படுவதற்கான வரலாறுகள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

நாடோடியாக இருந்த மனிதன், உழைப்பின் மூலமாகவே இன்றைய நவ நாகரிகமான வாழ்க்கைக்குப் பரிணாமம் அடைந்தான். ஆனால் உழைப்பாளிகளுக்கு அவர்களின் உழைப்புக்கான பிரதிபலன் கிடைக்கிறதா என்பது இன்றளவும் கேள்விக்குறியே. அரசு அலுவலகங்கள், பல தனியார் நிறுவனங்களில் எட்டு‌ மணி நேர வேலை என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக இருந்துவருகிறது. ஆனால் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் இதர உடல் உழைப்புத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் கால நிர்ணயம் இன்றிப் பணியாற்றுகின்றனர்.

ரத்தத்தை வேர்வையாய் சிந்தி உழைத்தாலும் அவர்கள் உழைப்புகேற்ற ஊதியம் கொடுக்கப்படுகிறதா என்றால் இல்லை என்ற பதிலே மிஞ்சுகிறது. அதுபோன்ற ஒரு உடல் உழைப்புத் தொழிலாளியைத்தான் நாம் சந்திக்க நேர்ந்தது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் படிக்கட்டில் அமர்ந்து முதியவர் ஒருவர் நாற்காலிகளுக்கு ஒயர் பின்னிக் கொண்டிருந்தார். நாற்காலிகளில் உள்ள துளைகளை உற்று உற்றுப் பார்த்து மெதுவாக ஒயர்களைக் கோத்துப் பின்னிக்கொண்டிருந்த அவர், அலுவலகத்திற்கு காரில் வந்து இறங்கும் அதிகாரிகளைக் கண்டவுடன் உடனடியாக எழுந்து நின்று வணக்கம் சொல்லிவிட்டு மீண்டும் ஒயர் பின்னும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

நாற்காலிக்கு ஒயர் பின்னும் சாத்தையா
நாற்காலிக்கு ஒயர் பின்னும் சாத்தையா

'அவர் மரியாதை கொடுப்பதைக் கொஞ்சம்கூடக் கண்டுகொள்ளாமல் அதிகாரிகள் சிலர் அவரைக் கடந்து சென்றுவந்தனர். இதனை தூரத்திலிருந்து சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த நான் அவர் அருகில் சென்று ’எதற்காக அதிகாரிகளைக் கண்டவுடன் எழுந்து எழுந்து நிற்கிறீர்கள்’ எனக் கேட்டேன். ”இல்ல தம்பி, எழுந்து நிற்கலன்னா, மரியாதை கொடுக்க மாட்டியான்னு திட்டுவாங்க, ஒயர் பின்னக் கூப்ட மாட்டாங்க, அப்புறம் சாப்பாட்டுக்கு என்ன தம்பி பண்ணுறது” என்று பரிதாபமாகப் பேசிய அவரை, உற்றுப் பார்த்த போதுதான் அவருக்கு இடது கண் தெரியவில்லை‌ என்பதை அறியமுடிந்தது.

தொடர்ந்து அவரிடம் பேசினேன் "ராமநாதபுரம் மாவட்டம் சிறுவயல் கிராமம்தான் என் சொந்த ஊரு. விவசாயம்தான் என்னோட தொழில். ஆனா, போதிய மழை இல்லாததால விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால அந்தமானுக்குப் போய் 20 வருசம் கட்டடக் கூலி வேலை பாத்தேன். எனக்குக் கல்யாணம் ஆகி இரண்டு பொண்ணுங்க, ஒரு பையன் இருக்காங்க. எல்லாருக்கும் கல்யாணம் முடிச்சுக் கொடுத்துட்டேன். அந்தமானில் வேலை பாத்தப்போ கல்லு சிதறிக் கண்ணுல பட்டதுல இடக்கண் பார்வை போச்சு. அதனால சொந்த ஊருக்கு வந்து விவசாயக் கூலி வேலை செஞ்சேன். அதுல போதிய வருமானம் இல்ல. அந்தமான்ல கட்டட வேலைக்கு இடையே விளையாட்டா இந்த நாற்காலிகளுக்கு ஒயர் பின்னுறதைக் கத்துக்கிட்டேன். அதான் பின்னாடி எனக்கு சோறு போடப்போகுன்னு அப்ப எனக்குத் தெரியல.

வேலைக்குப் போகாம வீட்டுல சும்மா இருந்துட்டு மகன்கிட்ட காசு கேக்கக் கூச்சமா இருக்குப்பா, அதனால எனக்குத் தெரிந்த இந்தத் தொழில செய்து கிடைக்கிற வருமானத்தை வச்சு நானும் என் பொண்டாட்டியும் வயித்த கழுவுறோம். அதுக்காக பிள்ளைகள் எங்கள கவனிக்கிறது இல்லன்னு சொல்லல தம்பி. அவங்களும் எங்களை நல்லா பாத்துக்கிறாங்க. ஆனா அவுங்க அவுங்களுக்குன்னு குடும்பம், பிள்ளைகள் இருக்கு. நாம அவங்கள சிரமப்படுத்தக் கூடாதில்லப்பா...”

நாற்காலிக்கு ஒயர் பின்னும் சாத்தையா
நாற்காலிக்கு ஒயர் பின்னும் சாத்தையா

’ஒரு நாற்காலிக்கு ஒயர் பின்னுனா எவ்வளவு கொடுப்பாங்க ஐயா?’

"அந்தக் கொடுமைய ஏன் தம்பி கேக்குறீங்க” தொண்டை அடைக்க, தழுதழுத்த குரலில் பேச்சைத் தொடர்ந்த சாத்தையா,

"ரெண்டு கண்ணு நல்லாத் தெரியுறவுங்களே ஒரு நாற்காலி பின்ன ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஆகும். எனக்கு ஒரு கண்ணுவேற தெரியாது. அதுல உத்து உத்துப் பார்த்து ஒயரக் கோத்துப் பின்னுறதுக்கு குறைஞ்சது அஞ்சு மணி நேரத்துக்கு மேலே ஆகும்பா. விடிய விடிய பின்னிக்கிட்டே இருப்பேன். முதுகெல்லாம் வலிக்கும் தம்பி. ஒரு நாற்காலி பின்னி முடுச்சு ஒப்படச்சா 300 ரூபா தருவாங்க. அதுல ஒயருக்கு 80 ரூபா போய்ரும். மூணுவேள சாப்பாட்டுக்கு குறைஞ்சது 150 ரூபா ஆகும். ஆனா நா இரண்டு வேள மட்டும் 120-க்குள்ள சாப்பிட்டு 100 ரூபாய மிச்சப்படுத்தி என் பொண்டாட்டி 'லட்சுமிட்ட கொடுப்பேன்.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இதே இடத்துல இரவு 12 மணிக்கு நாற்காலிகளுக்கு ஒயர் பின்னிக்கிட்டு இருந்தேன். அப்போ ஆட்சியரா இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் என்னைப் பார்த்து ’விடிய விடிய வேல பாக்குறீங்க, உங்களுக்கு எவ்ளோ காசு தராங்க’ன்னு கேட்டார்.

’ஒரு நாற்காலி பின்னிக்கொடுத்தா 300 ரூபா தராங்கய்யா'ன்னு சொன்னேன், உடனே அதிகாரிகள்கிட்ட 400 ரூபாய்க்குக் குறையாம அவருக்குக் கொடுக்கணும்னு சத்தம்போட்டார். அப்புறம் முதியோர் உதவித்தொகை கிடைக்கிறதான்னு கேட்டார். இல்ல சார், முதியோர் உதவித் தொகை கேட்டு வி.ஏ.ஓ கிட்ட போனா ஆறாயிரம் லஞ்சம் கேக்குறாரு, என்னால கொடுக்க முடியல, அதனால அவரு கையெழுத்துப் போட மாட்டாராருன்னு சொன்னேன், உடனே சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ-க்கு அந்த இரவு நேரத்திலேயும் தொடர்பு கொண்டு எட்டு நாளுக்குள்ள அவருக்கு உதவித்தொகை கிடைக்கிறதுக்கான ஏற்பாடு செய்யலன்னா கடுமையான நடவடிக்கை எடுப்பேன்னு சத்தம் போட்டு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடைக்கிறதுக்கு வழி செஞ்சிட்டுப் போனாரு மகராசன்.

நாற்காலிக்கு ஒயர் பின்னும் சாத்தையா
நாற்காலிக்கு ஒயர் பின்னும் சாத்தையா

ஆனா, அவரு 400 ரூபாய்க்குக் குறையாம கொடுக்கச் சொன்னத அதிகாரிங்க யாரும் காதுல வாங்கல. இப்ப வரைக்கும் அதே 300 ரூபாய்தான். நா கஷ்டப்படுறத கண்கூடா பாக்குறாங்க. ஆனா அதுக்கேத்த கூலி கொடுக்கணுமேங்கிற மனச்சாட்சியே அவுங்களுக்கு இல்ல தம்பி. கூலிய கூட்டிக் குடுங்கன்னு கேட்டா அடுத்து கூப்பிட மாட்டாங்கன்னு நானும் கேட்கிறது இல்லைப்பா. நானும் மூணு வருஷமா இந்த வாசற்படியில் உட்கார்ந்து நாற்காலிக்கு ஒயர் பின்னிக்கிட்டு இருக்கேன். ஒருத்தர்கூட என்கிட்ட வந்து இப்பிடி என்னோட கஷ்டத்தைக் கேட்டதில்லை.

நீங்களாவது வந்து கேட்டீங்க, எனக்கு அதுபோதும் தம்பி. இவுங்க கூலியகூட அதிகமா தரவேணாம் தம்பி, ஒயர் வாங்கிக் கொடுத்து 300 ரூபா கொடுத்தா அதுவே போதும். நா என் பொண்டாட்டிக்கு 200 ரூபாய மிச்சப்படுத்திக் கொடுப்பேன். அவ கொஞ்சம் சந்தோசப்படுவா. இப்ப இருக்குற விலைவாசில 100 ரூபால எப்படி குடும்பம் நடத்த முடியும். அவளோட சிரமத்தைக் கொஞ்சமாவது குறைக்கணும்னு போராடுறேன் தம்பி” என, மனவலிகளை நம்மிடம் கொட்டித்தீர்த்து நாற்காலிக்கு ஒயர் பின்னும் வேலையைத் தொடர்ந்தார் சாத்தையா. அங்கிருந்து கனத்த இதயத்துடன் விடைபெற்றேன்.