
120 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் முன்னோர்கள் கைத்தறி மூலம் நெசவுத்தொழிலை மேற்கொண்டபோது, இந்த ஊரில் வசித்த இஸ்லாமியக் குடும்பத்தினர் பலவகைகளில் உதவியிருக்கிறார்கள்
மத மாச்சர்யங்களைக் கடந்து முருகன் கோயில் திருவிழாவின் ஓர் அங்கமாக, இந்து - இஸ்லாமியர்கள் கைகோத்து நடத்தும் ‘சந்தனம் பூசும்' நிகழ்வு ஆச்சர்யத்தையும் நெகிழ்வையும் ஏற்படுத்துகிறது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையத்தில்தான் இந்தத் திருவிழா, 120 ஆண்டுகளாக நடந்துவருகிறது.
குருசாமிபாளையத்தில் இருக்கும் பழைமையான சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் 15 நாள் பங்குனி உத்திர திருவிழாவின் கடைசி நாளில் நடக்கும் மஞ்சள் நீராட்டு விழாவின்போதுதான் இந்த ‘சகோதரத்துவ' வைபோகம் நிகழ்த்தப்படுகிறது. இந்த ஆண்டும் நடைபெற்ற அந்தத் திருவிழாவுக்கு, குருசாமிபாளையம் மக்கள் கொடுத்த அழைப்பின் பேரில், ராசிபுரத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வருகை தந்தனர்.

அவர்கள் கைகளில் பழங்கள், தேங்காய், நாட்டுச் சர்க்கரை, பொட்டுக்கடலை, வெள்ளைக்கொடி உள்ளிட்ட பொருள்கள் இருந்தன. இஸ்லாமியர்கள் முதலில் அந்த வெள்ளைக்கொடியில் சந்தனம் தெளிக்கின்றனர். அதன்பிறகு, கோயிலின் ராஜகோபுரத்தின் கீழ் உள்ள கல் மண்டபத்தில் சந்தனத்தைத் தெளித்து, ‘நோய் நொடியிலிருந்து ஊர் மக்களைக் காப்பாயாக...' என்று மனமுருகி வேண்டுகின்றனர். அதன்பிறகு அந்த வெள்ளைக்கொடியோடு இந்து மக்கள் சகிதம், கோயிலைச் சுற்றித் தேர்போகும் வீதியில் இஸ்லாமியர்கள் சுற்றி வருகின்றனர். அப்போது, சந்தனக்குழம்பில் தங்கள் கைகளைப் பதித்து, கோயிலைச் சுற்றியுள்ள இந்துக்களின் வீட்டு முன்பக்கச் சுவரில் சந்தனச் சுவட்டைப் பதிக்கின்றனர். அதோடு, அந்த வீடுகளில் வசிப்பவர்களின் இரண்டு கைகளிலும் சந்தனத்தைப் பூசுகின்றனர்.

தொடர்ந்து, கோயிலைச் சுற்றி பவனி முடிந்ததும், அந்தப் புளியமர உச்சியில் கடந்த வருடம் கட்டப்பட்ட கொடியை அகற்றிவிட்டு, இப்போது கொண்டுவந்த புதிய வெள்ளைக்கொடியைக் கட்டி, ‘ஒற்றுமை செழித்தோங்குக...' என்று இருதரப்பும் உரக்க உச்சரிக்கின்றனர். அதன்பிறகு, இஸ்லாமியர்களை மரத்தடியில் அமரவைத்து, அவர்களுக்கு இந்துக்கள் மாலை அணிவித்துச் சிறப்பு செய்கின்றனர். பதிலுக்கு, இஸ்லாமியர்கள், இந்துமதப் பெரியவர்களின் கழுத்தில் மாலை அணிவித்து, நெற்றியில் சந்தனப்பொட்டு வைக்கின்றனர். அதன்பிறகு, ‘எல்லா மக்களும் நலம் பெற வேண்டும்' என்று இஸ்லாமியர்கள் அந்த மரத்தடியில் அமர்ந்து ‘துவா' ஓதுகின்றனர். தொடர்ந்து, இஸ்லாமியர்களை அழைத்துப்போய் மண்டபத்தில் அவர்களுக்கு விருந்தோம்பல் செய்து இன்முகத்துடன் வழியனுப்பி வைக்கின்றனர்.

குருசாமிபாளையம் பெரிய தனக்காரர் ராஜேந்திரன், ‘‘எங்கள் ஊர் 4,000 தலைக்கட்டுகள் கொண்டது. பலரும் நெசவுத்தொழில் செய்பவர்கள். 120 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் முன்னோர்கள் கைத்தறி மூலம் நெசவுத்தொழிலை மேற்கொண்டபோது, இந்த ஊரில் வசித்த இஸ்லாமியக் குடும்பத்தினர் பலவகைகளில் உதவியிருக்கிறார்கள். அதில் முக்கியமானது, தட்டுக்குச்சியில் பண்ணை (அச்சு) செய்வது. அதை எங்கள் முன்னோர்களுக்குச் செய்து கொடுத்தது இஸ்லாமியர்கள்தான். இதனால் தொழில் முன்னேற்றம் கண்டுள்ளது. எனவே, எங்கள் முன்னோர்கள், அண்ணன் தம்பியாக உறவுமுறை வைத்துப் பழகியிருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் கொடிய தொற்றுநோய்களால் பலர் இறந்திருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் அப்போதும் உதவினர்.

இந்த எல்லாவற்றுக்கும் பதில் மரியாதை செய்யும்விதமாக, முருகன் கோயில் திருவிழாவின் ஓர் அங்கமாக இந்தச் சந்தனம் பூசும் நிகழ்வைச் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். அதை 120 ஆண்டுகளாக விடாமல் செய்கிறோம். அதேபோல், ரம்ஜான் நோன்புக் காலங்களில் ராசிபுரம் இஸ்லாமியர்கள் எங்களை அழைத்து, இப்தார் விருந்து கொடுப்பார்கள். இன்னும் பல நூறு ஆண்டுகள் இந்தப் பரஸ்பர சகோதரத்துவ நிகழ்வு தொடரும்’’ என்றார் உணர்ச்சி மேலிட!

ராசிபுரம் கிழக்குத்தெரு சுன்னத் ஜமாத் தலைவரும், முத்தவல்லியுமான டி.கே.உசேன், ‘‘அந்த மரத்தின் உச்சியில் திருவிழாவின்போது எங்களால் கட்டப்படும் வெள்ளைக்கொடி, ஆண்டு முழுவதும் பறந்தபடி, இந்து - இஸ்லாமிய ஒற்றுமையைப் பறைசாற்றிக்கொண்டே இருக்கும். அடுத்த ஆண்டு திருவிழாவின்போது, பழைய கொடியை அகற்றிவிட்டு புதிய கொடியைக் கட்டுவோம். எந்தக் காரணத்துக்காகவும் அந்தப் புளியமரத்துக் கிளையைக்கூட வெட்டாமல் பாதுகாக்கிறார்கள். இந்த ஒற்றுமை சாங்கியம் இன்னும் பல நூற்றாண்டுகள் தொடரும்’’ என்றார்.
மதங்களைக் கடந்து மனங்களை வெல்லும் இந்த ஒற்றுமை, நங்கூரமாக நிலைபெறட்டும்!