
தமிழ்நாடு அரசின் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் இவர்களுக்கு வீடுகட்ட ஏற்பாடு செய்தோம். இதற்காக, குடிசை மாற்று வாரியத்தின் நிபந்தனை அடிப்படையில், இவர்களது பட்டாவை குடிசை மாற்று வாரியத்துக்கு மாற்றினார்கள்.
“இலவச வீடு கட்டித்தருவதாக எங்களது பட்டாக்களை வாங்கிச் சென்ற அதிகாரிகள், இதுவரை வீடும் கட்டித்தரவில்லை; பட்டாவையும் திருப்பித் தரவில்லை” என்று கண்ணீர் வடிக்கிறார்கள், மதுரை மாவட்டம், போத்தம்பட்டியிலுள்ள நாடோடிப் பழங்குடியின மக்கள்.
இது குறித்து நம்மிடம் பேசிய போத்தம்பட்டி நரிக்குறவர் குடியிருப்பின் தலைவி ராணி அம்மாள், “மலையடிவாரத்தில் தகர செட்டுகளுக்குள் பாம்பு, விஷப்பூச்சி, பன்றிகளுக்கு மத்தியில் வாழ்ந்துவருகிறோம். முன்பு மதுரை கலெக்டராக இருந்த சகாயம்தான் எங்கள் நிலைமையைப் பார்த்து, 60 குடும்பங்களுக்கும் தலா ஒன்றரை சென்ட் வீதம் வீட்டுமனைப் பட்டா கொடுத்தார். அதன் பிறகு கலெக்டராக வந்த வீரராகவராவ், எங்களுக்கு அரசுத் திட்டத்தில் வீடு கட்டித்தருவதாக சொன்னார். அதற்கான ஒப்பந்தம் போடும்போது, எங்களது பட்டாக்களை அதிகாரிகள் வாங்கிக் கொண்டார்கள்.

ஆனால், அதற்குப் பிறகு எந்த அதிகாரியும் இங்கே வந்து எட்டிக்கூடப் பார்க்கவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால், ‘வேலையைச் சீக்கிரம் ஆரம்பித்துவிடுவோம்’ என்ற ஒரே பதிலை, தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். `வீடு கட்டித்தரவில்லை என்றாலும் பரவாயில்லை; எங்கள் பட்டாக்களையாவது திருப்பிக் கொடுங்கள்’ என்று கெஞ்சியும் பலனில்லை. அது இருந்தால் கடன்பட்டு குடிசையாவது போட்டுக்கொள்வோம்” என்றார்.
இது குறித்து உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பனிடம் கேட்டபோது, “அந்த மக்கள் வசிக்கும் பகுதிக்கு தெருவிளக்கு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்தேன். அவர்கள் இந்தப் பிரச்னை குறித்து ஏதும் சொல்லவில்லையே... இது குறித்து விசாரித்து அதிகாரிகளிடம் பேசுகிறேன்” என்றார்.

ஆர்.டி.ஓ சங்கரலிங்கமோ, “பட்டா வழங்குவது மட்டும்தான் எங்கள் பணி. அதில் இலவச வீடு கட்டிக் கொடுப்பது உசிலம்பட்டி பி.டி.ஓ கட்டுப்பாட்டில்தான் வரும்” என்றார்.
உசிலம்பட்டி பி.டி.ஓ கண்ணனிடம் விளக்கம் கேட்டபோது, “தமிழ்நாடு அரசின் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் இவர்களுக்கு வீடுகட்ட ஏற்பாடு செய்தோம். இதற்காக, குடிசை மாற்று வாரியத்தின் நிபந்தனை அடிப்படையில், இவர்களது பட்டாவை குடிசை மாற்று வாரியத்துக்கு மாற்றினார்கள். இதையடுத்து, அடுக்குமாடி வீடுகளைக் கட்டித்தர வாரியம் அனைத்து ஏற்பாடுகளையும் இறுதி செய்தபோது ‘அது வேண்டாம்... எங்களுக்கு தனித்தனி வீடுகளாகத்தான் வேண்டும்’ என்று இவர்கள் மறுத்துவிட்டனர். அதனால் திட்டம் அப்படியே நின்றுபோனது. தற்போது மத்திய அரசு அறிவித்திருக்கும் ‘வீடில்லாத குடும்பத்தினருக்கு வீடுகட்டிக் கொடுக்கும் திட்ட’த்தில் இவர்களைச் சேர்த்திருக்கிறோம். இந்தத் திட்டத்தில் உசிலம்பட்டி ஒன்றியத்துக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டால், இவர்களுக்குத்தான் முன்னுரிமை அளிப்போம்” என்றார்.
6 ஆண்டுகளாக இழுத்தடித்தது போதும். விரைந்து செய்யுங்கள் அதிகாரிகளே!