மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாரத்தான் மனிதர்கள் - 28 - நாலு பேருக்கு ஆதரவா இருக்கேன்!

மணிகண்டன்
பிரீமியம் ஸ்டோரி
News
மணிகண்டன்

புதுசா ஸ்கூட்டர் வாங்கினேன். சுயமா பயணம் செய்ய முடிஞ்சுச்சு. அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் தொடர்பு கிடைச்சுச்சு. நிறைய கத்துக்கிட்டேன்.

ஆட்டோவிலிருந்து தவழ்ந்து இறங்கி வாக்கரைப் பிடித்துக்கொண்டு தங்களை நாடிவரும் மணிகண்டனை அவ்வளவு மலர்ச்சியோடு வரவேற்கிறார்கள் அந்த முதியவர்கள். மணிகண்டன் உள்ளே வந்துவிட்டால், அவர் இருக்கிறவரைக்கும் அந்த முதியோர் இல்லம் மகிழ்ச்சியில் திளைக்கும். கையோடு கொண்டு வரும் உணவையும் தின்பண்டங்களையும் அவர்களுக்கு வழங்குவார். சிரிக்க சிரிக்க நிறைய கதைகள் பேசுவார். மதுரையிலிருக்கிற 13 மாநகராட்சி முதியோர் இல்லங்களும், 4 குழந்தைகள் இல்லங்களும் மணிகண்டனின் வருகைக்காகக் காத்துக்கொண்டிருக்கும்.

பயணத்தின்போது சாலை எங்காவது பள்ளம் மேடாக இருந்தாலோ, கழிவுநீர் ஓடினாலோ, தன் கைப்பேசியில் புகைப்படம் எடுத்து உடனடியாக கலெக்டரின் குறைதீர்க்கும் எண்ணுக்கு அனுப்புவார். அடுத்தநாள், சரிசெய்யப்பட்ட அந்த இடத்தைப் புகைப்படமெடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடுவார். மதுரையில் எந்த அமைப்பு மரம் நடுவிழா நடத்தினாலும் அங்கே இருப்பார் மணிகண்டன். மண்வெட்டிகள். மரக்கன்றுகள் தந்து உற்சாகப்படுத்துவார்.

அரசுப்பள்ளிகள் பற்றி எந்த நல்ல செய்தி வந்தாலும் கைநிறைய பரிசுகளோடு அந்தப்பள்ளிக்குச் செல்வார். மாணவர்களுக்குப் பரிசுகள் தந்து ஊக்கப்படுத்துவார். தன் வாகனத்தில் சிறிய மைக்செட் பொருத்திக்கொண்டு மக்கள் கூடும் இடங்களில் நின்று தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்துவார்.

மணிகண்டன்
மணிகண்டன்

மணிகண்டன் ஒரு நெகிழ்வான மனிதர். மதுரைக்காரர்களுக்கு அவர் ‘வழிகாட்டி' மணிகண்டன். பாதங்கள் வளைந்து, நடக்கவியலாத நிலையோடு பிறந்தவர். தவழ்ந்த வாழ்க்கை, 14 வயதுக்குப்பிறகு வாக்கர் உதவியால் நிமிர்ந்திருக்கிறது. தீராத உடல் வலி ஒரு பக்கம் வருத்த, மற்றவர்களைப் புன்னகைக்க வைத்து அதற்கு மருந்திட்டுக்கொள்கிறார் மணிகண்டன்.

‘‘41 வயசாயிருச்சு... பாதி வாழ்க்கை முடிஞ்சுபோச்சு. இன்னும் எவ்வளவு காலம் இருக்கோ! திரும்பிப் பார்த்தா சந்தோஷப்பட ஏதாச்சும் வேணுமேண்ணா. இங்கே பணத்தைவிட ஆதரவுக்காகத்தான் நிறைய பேர் ஏங்குறாங்க. அதைத்தான் நான் குடுத்துக்கிட்டிருக்கேன்...’’ - மணிகண்டன் பேச்சில் அவ்வளவு முதிர்ச்சி.

மணிகண்டன் மதுரை சிம்மக்கல்லைச் சேர்ந்தவர். அப்பா காசி விஸ்வநாதன், அம்மா கமலா. ‘‘சித்தப்பா, பெரியப்பான்னு பெரிய கூட்டுக்குடும்பம் எங்களோடது. குடும்பத்துக்கு ஒரு ஆட்டோமொபைல் டூல்ஸ் கடை இருக்கு. இப்போ நானும் அண்ணனும் அதைப் பார்த்துக்குறோம். எனக்கு மாசம் பத்தாயிரம் சம்பளம். என் வாகனத்துக்குப் பெட்ரோல் போடுறது, என் தேவைகள் போக குறைஞ்சது அஞ்சாயிரமாவது சேமிச்சிருவேன். அதை வச்சுத்தான் இந்தப் பணியெல்லாம்.

மணிகண்டன்
மணிகண்டன்

ஓரளவுக்கு வசதியான குடும்பம். ஒருவிதத்துல அது நல்ல விஷயம். குடும்பத்தில் அத்தனை பேரோட அன்பும் ததும்பத் ததும்பக் கிடைச்சுச்சு. என் குறையை சரிசெய்ய நிறைய செலவு பண்ணிப்பார்த்தாங்க. எல்லா வகையான மருத்துவமும் செஞ்சாச்சு. சரியாகலே. யாராவது ஒருத்தர் தூக்கி வச்சுக்கிட்டே இருந்ததால தவழ்றதுல இருந்த வலி தெரியலே. பள்ளிக்கெல்லாம்கூட அப்படித்தான் போனேன். ஆனா, பொதுவெளியில பரிதாபமும் கேலியும் பெரிய பிரச்னையா இருந்துச்சு. பல இடங்கள்ல ஒதுக்கப்பட்டேன். பெரிய தாழ்வு மனப்பான்மை வந்திருச்சு. உடம்புல இருக்கிற வலியைவிட அது பெரிய வலி. ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளியில முதல் மாணவனா வந்தவன், படிப்புல கவனம் செலுத்த முடியாம பத்தாம் வகுப்புல பெயிலானேன்.

அதுக்கிடையில அப்பாவும் இறந்துட்டார். அப்பா மாதிரியே அண்ணா என்னைப் பார்த்துக்கிட்டார். தவழ்ந்துகிட்டே திரிஞ்சவனை பிசியோதெரபி கொடுத்து வாக்கர்ல நடக்க வச்சார். அதுக்கப்புறம் வாழ்க்கையில ஒரு பிடி கிடைச்ச மாதிரி இருந்துச்சு. எங்க கடையில போய் கம்ப்யூட்டர் கத்துக்கிட்டு கணக்கு வழக்கு பார்க்க ஆரம்பிச்சேன்.

உடல்ல நிறைய பிரச்னைகள் வரும். நடை குறைவா இருக்கதால பசியெடுக்காது. சாப்பாடு குறைவா இருக்கும். அதனால உடம்புல சக்தியும் குறைவா இருக்கும். உயரம், எடை எல்லாமே குறைவுதான். பாத்ரூமெல்லாம் நினைச்ச உடனே போகமுடியாது. அதுக்காகவே சாப்பாட்டையும் தண்ணியையும் குறைச்சுக்கிட்டேன்.

மணிகண்டன்
மணிகண்டன்

ரொம்ப மனசுல பாரமா இருந்துச்சு. அர்த்தமில்லாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துகிட்டிருக்கோமோன்னு தோணுச்சு. ஓரளவுக்கு எனக்கு மனுஷங்க இருக்காங்க. யாருமே இல்லாதவங்க என்ன செய்வாங்கன்னு யோசிச்சேன். பெரிசா பணம் காசு தந்து உதவ முடியாட்டியும், நாலு பேருக்கு ஆறுதலா இருக்க முடிவெடுத்தேன்.

இதுல ஒரு சுயநலமும் இருக்குண்ணே... நாலு பேரு மதிக்க ஆரம்பிச்சா நம்மேல இருக்கிற பரிதாபமும் கேலியும் மாறுமில்லையா! நம்மையும் சக மனுஷனா பார்ப்பாங்கல்ல... முதல்ல சமூக ஊடகங்கள்லதான் ஆரம்பிச்சேன். அப்போல்லாம் ஆட்டோதான். போகும்போது வரும்போது ரோடு சரியில்லைன்னா போன்ல போட்டோ எடுத்து கலெக்டர் ஆபீஸை டேக் பண்ணி பேஸ்புக்ல போடுவேன். ரெண்டு நாள்ல அதை சரி பண்ணுவாங்க. நாம சொன்னா நடக்குதுங்கிறதே மகிழ்ச்சியா இருந்துச்சு. நிறைய பேர் என்னைத் தேடி வந்து பிரச்னைகளைச் சொல்ல ஆரம்பிச்சாங்க. பேஸ்புக்ல என்னை டேக் பண்ணினாங்க. எனக்கு இதெல்லாம் உற்சாகமா இருந்தாலும் வீட்டுல உள்ளவங்க பயந்துட்டாங்க. `உனக்கு ஏம்பா இந்த வேலையெல்லாம்... அதிகாரிங்க, அரசியல்வாதிங்க பகை ஆபத்துப்பா'ன்னாங்க. நான் கோரிக்கையாதான் சொல்வேனே தவிர குற்றமாச் சொல்ல மாட்டேன். என் அணுகுமுறை அதிகாரிகளுக்குப் பிடிச்சிருந்துச்சு. நேரா வந்து பார்த்துப் பேசுவாங்க. கருத்துக் கேட்பு கூட்டத்துக்கெல்லாம் கூப்பிட ஆரம்பிச்சாங்க. காலப்போக்குல வீட்டுல சமாதானமாகிட்டாங்க.

புதுசா ஸ்கூட்டர் வாங்கினேன். சுயமா பயணம் செய்ய முடிஞ்சுச்சு. அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் தொடர்பு கிடைச்சுச்சு. நிறைய கத்துக்கிட்டேன். எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு முதியோர் இல்லம் உண்டு. கட்டணம் கட்டிச் சேர்றது. ஒரு நாள் சாதாரணமா உள்ளே போனேன். புதுசா ஒரு மனுஷனைப் பார்த்ததும் அங்கிருந்த பெரியவங்க ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. அவங்க ஒவ்வொருத்தர்கிட்டயும் ஒரு கதை இருந்துச்சு. மனம் கனத்துப்போச்சு. தனியார்ங்கிறதால ஓரளவுக்கு இங்கே வசதிகள் இருந்துச்சு. மாநகராட்சி நடத்துற இல்லங்களுக்குப் போனேன். அங்கே நிறைய விஷயங்கள் தேவைப்பட்டுச்சு. முதல்ல நல்ல உணவு. எல்லாத்துக்கும் காரணம் நிதி. என் சேமிப்பிலிருந்து கொஞ்சம் தந்தேன். பேஸ்புக்ல எழுதினேன். அதைப் படிச்சுட்டு நிறைய பேர் உதவிகள் செஞ்சாங்க. நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க. ‘நீங்க எழுதுறது பெரிய வழிகாட்டுதலா இருக்கு. இந்தச் செயல்பாடுகளை ஒருங்கிணைங்க'ன்னு சில பேர் சொன்னாங்க. ‘வழிகாட்டி மனிதர்கள்'னு ஒரு அறக்கட்டளையா ஆரம்பிச்சேன். ஆனா அறக்கட்டளைக்கு வெளியில இருந்து ஒற்றைப் பைசா வாங்குறதில்லைன்னு அப்பவே முடிவு பண்ணிட்டேன்.

மாரத்தான் மனிதர்கள்
மாரத்தான் மனிதர்கள்

இன்னிக்கு என் கையில 1,000 ரூபா இருந்தா அதை வச்சு ஏதாவது செய்வேன். ஐயாயிரம் இருந்தா அதை வச்சு செய்வேன். அவ்வளவுதான். அதுக்கு மேல யாருக்காவது ஏதும் தேவையிருந்தா, ‘இங்கே இது தேவையிருக்கு, யாராவது உதவுங்க'ன்னு கேட்பேன். அது தானா நடந்திடும். அதேபோல குழந்தைகள் காப்பகங்களுக்குப் போய் அந்தக் குழந்தைகளோட நேரம் செலவு செய்றதோட அவங்களுக்கு சின்னச் சின்ன உதவிகளையும் செய்ய ஆரம்பிச்சேன். எங்காவது ஒரு நிகழ்ச்சின்னா சமூக ஊடகங்கள்ல எழுதுவேன். நிறைய பேர் வருவாங்க. அவங்களே தேவையான உதவிகளைச் செஞ்சிடுவாங்க.

நம்மூர்ல அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நிறைய மோட்டிவேஷன் தேவைப்படுது. நிறைய திறமையுள்ள குழந்தைகள் அங்கே இருக்காங்க. அவங்களை லேசா தட்டிவிட்டா பெரிய இடங்களுக்குப் போவாங்க. விளையாட்டுப் போட்டிகள், இலக்கியப் போட்டிகள்னு ஜெயிச்ச பிள்ளைகள் பத்தி தினமும் செய்தித்தாள்கள்ல வரும். நேரா அந்தப் பள்ளிக்குப் போய் பிள்ளைகளுக்குப் பரிசுகள், சான்றிதழ் தருவேன். ஆசிரியர்கள், ‘நீங்களே ஒரு மோட்டிவேஷன் ஸ்பீச் கொடுங்க'ன்னு கேட்க ஆரம்பிச்சாங்க. இப்போ அதையும் செஞ்சுக்கிட்டிருக்கேன்.

நம்மூர்ல சுற்றுச்சூழல் விழிப்புணர்வும் ரொம்பக் கம்மிண்ணா. இருக்கிற வளங்களையெல்லாம் அழிச்சுக்கிட்டிருக்கோம். இன்னைக்கு ஒரு மரம் நட்டா பத்து வருஷத்துக்குப் பிறகு, இந்த பூமியை அது ஈரமா வச்சுக்கும். என்னளவுல உக்காந்து நிமிந்து ஒரு மரத்தை நட முடியாது. மதுரையைச் சுத்தி யார் மரம் நடும் நிகழ்ச்சி நடத்தினாலும் மண்வெட்டி, நல்லா விளைஞ்ச மரக்கன்றுகள் வாங்கிட்டு முதல் ஆளா போயிடுவேன். எல்லாத்தையும் அவங்களுக்குத் தருவேன். என் அமைப்புல இருந்து சான்றிதழும் தந்து உற்சாகப்படுத்துவேன்.

கொரோனா நேரத்துல கலெக்டரே கூப்பிட்டு மாஸ்க், தடுப்பூசி பத்தி பிரசாரம் பண்ணச் சொன்னார். என் ஸ்கூட்டர்ல மைக்செட் கட்டிக்கிட்டு மக்கள் கூடுற இடங்கள்ல நின்னு பேசினேன். வாக்கரைப் பிடிச்சுக்கிட்டு வீடு வீடாப் போய் மாஸ்க் தந்து கொரோனாவோட தீவிரம் பத்திப் பேசினேன். ஒவ்வொருமுறை பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடக்கிறபோதும் மதுரைத் தெருக்கள்ல பாலியல் சமத்துவம் பத்திப் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்’’ - உற்சாகமாகப் பேசுகிறார் மணிகண்டன்.

வைகை நதி சீரமைப்பில் மணிகண்டனின் பங்களிப்பு முக்கியமானது. வைகைக்குப் பக்கச்சுவர் கட்டவேண்டும், கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்று இவர் அனுப்பிய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றியது மாவட்ட நிர்வாகம்.

மணிகண்டன்
மணிகண்டன்

‘‘இன்னைக்கு என்னை யாரும் பரிதாபமாவோ, கேலியாவோ பார்க்கிறதில்லைண்ணா. மரியாதையா நடத்துறாங்க. வீட்டிலேயும் எல்லாருக்கும் சந்தோஷம். நிறைய நடக்கிறதால உடம்புல கடுமையான வலியெடுக்கும்ணா. ஆனா அதையெல்லாம் தாண்டி இன்னைக்கு நாம வாழ்ற வாழ்க்கை அர்த்த முள்ளதுடான்னு ஒரு நிம்மதி வந்திருக்கு. இருக்கிற வரைக்கும் பத்துப் பேருக்கு உதவியா, நாலு பேருக்கு வழிகாட்டியா இருந்துட்டாப் போதும்...’’

கலங்கிய கண்களோடு கரம் பற்றி விடைதருகிறார் மணிகண்டன்!

- வருவார்கள்