கட்டுரைகள்
Published:Updated:

“திரும்பின பக்கமெல்லாம் அம்மாக்கள் இருக்காங்க!”

மதுரை அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை
பிரீமியம் ஸ்டோரி
News
மதுரை அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை

ஒருநாள் அப்பாவும் ஆக்சிடென்ட்ல இறந்துட்டார். அதனால் ரொம்பவும் உடைஞ்சுபோன அம்மா, எங்களைக் கூட்டிக்கிட்டு மும்பையில இருந்த அவங்க சிஸ்டர் வீட்டுக்குப் போனப்போ, எங்களை உள்ள சேர்க்கல.

ரீட்டா வந்துவிட்டாலே நோயாளிகள் முதல் டாக்டர்கள் வரை உற்சாகமாகிவிடுகிறார்கள். ‘ரீட்டா இன்று என்னுடன்தான் சாப்பிடணும்’ என்று மருத்துவமனை ஊழியர்கள் மத்தியில் போட்டியே நடக்கிறது. தீபாவளி, கிறிஸ்துமஸ் என அனைத்துப் பண்டிகை நாள்களும் அவர்களுக்கானவை. ரீட்டாவும் அவள் தம்பி அலெக்ஸும் மனம் வருந்திவிடக்கூடாது என்று ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறார்கள். யார் இவர்கள்? ஏன் இவர்களைக் கொண்டாடுகிறார்கள்?

வெறுப்பும் வன்மமும் சுயநலமும் அதிகரித்துவரும் சூழலில், பிறருக்கு உதவும் மனிதர்களும் வாழ்கிறார்கள் என்பதை சமீபத்தில் ‘அயோத்தி' திரைப்படத்தில் பதிவு செய்திருந்தார்கள். இதுபோன்ற நெகிழவைக்கும் நிகழ்வுகள் நம் கவனத்துக்கு வராமல் ஆங்காங்கு நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் மதுரை அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் பணியாற்றும் ரீட்டாவின் கதை. எட்டு ஆண்டுகளுக்கு முன் டெல்லியிலிருந்து மதுரை வந்து உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் ரோஸ்பெக் என்பவர் இறந்துவிட, ஆதரவற்ற, மொழி தெரியாத அவருடைய பிள்ளைகள் ரீட்டா, அலெக்ஸ் ஆகியோரை அம்மருத்துவமனை டாக்டர்கள், நர்ஸ்கள், ஊழியர்கள் சேர்ந்து வளர்த்து ஆளாக்கினர். தற்போது 22 வயதாகிவிட்ட அந்தப் பெண்ணுக்கு வரன் தேடுகிறார்கள் என்ற தகவல் ஆச்சரியப்படுத்தியது. தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படும் மருத்துவமனை என்று பெயர்பெற்ற மதுரை, தோப்பூர் ஆஸ்டின்பட்டி அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் ரீட்டாவையும், அலெக்ஸையும் சந்தித்தேன்.

ரீட்டா, காந்திமதிநாதன், அலெக்ஸ்
ரீட்டா, காந்திமதிநாதன், அலெக்ஸ்

நம்மிடம் பேசினார் ரீட்டா. ‘‘அம்மாவுக்கு சொந்த ஊர் மதுரைதான். ஸ்கூல் படிச்சிட்டு இருக்கும்போதே அவங்க பெற்றோர் இறந்துட்டாங்க. படிச்சிட்டு பெங்களூர்ல ஐ.டி கம்பெனியில வேலை செய்யும்போது, அங்கு வேலை பார்த்த டெல்லியைச் சேர்ந்த பெர்னாண்டோவைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. ஆனா, அது அம்மாவோட சொந்தங்களுக்குப் பிடிக்கல. அதுபோல அப்பா குடும்பத்திலும் கல்யாணத்தை ஏத்துக்கல. டெல்லிக்குப் பக்கத்துல வாழ்ந்தாங்க. அங்கதான் நாங்க பொறந்தோம். அம்மா அங்க ஒரு ஸ்கூல்ல டீச்சரா வேலை பார்த்தாங்க. பிசினஸ் பண்ணிட்டிருந்த அப்பா, கொஞ்ச வருஷம் கழிச்சு அவங்க சொந்தக்காரப் பெண்கூட எப்படியோ தொடர்பு ஏற்பட்டு ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டார். இதை அம்மாவால ஜீரணிக்க முடியல. உறவுக்காரங்க யார்கிட்டேயும் உதவி கேட்க முடியல. சித்தியும் ரொம்பக் கொடுமைப்படுத்த ஆரம்பிச்சாங்க. அவங்களோட ரெண்டு குழந்தைகளையும் பார்த்துக்கணும்னு என்னை ஸ்கூலுக்குப் போக விடலை. அம்மா வச்சிருந்த பணத்தையெல்லாம் எடுத்துக்கிட்டவங்க, அம்மாவை வேலைக்காரி மாதிரி நடத்த ஆரம்பிச்சாங்க. இதனால அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமப்போச்சு. அப்பா எதையும் கண்டுக்கலை.

ஒருநாள் அப்பாவும் ஆக்சிடென்ட்ல இறந்துட்டார். அதனால் ரொம்பவும் உடைஞ்சுபோன அம்மா, எங்களைக் கூட்டிக்கிட்டு மும்பையில இருந்த அவங்க சிஸ்டர் வீட்டுக்குப் போனப்போ, எங்களை உள்ள சேர்க்கல. சென்னையில டாக்டரா இருக்குற இன்னொரு சிஸ்டரைத் தேடிப் போனப்போ ‘வீட்டுப் பக்கம் வராதே’ன்னு திட்டி அனுப்பிட்டாங்க. ‘எனக்கு உடம்பு மோசமா போயிட்டிருக்கு. அதுக்குள்ளே உங்களை சொந்தக்காரங்க கிட்டே ஒப்படைச்சுடணும்’னு அம்மா புலம்ப ஆரம்பிச்சாங்க. ‘மதுரை டி.வி.எஸ் நகர்ல மாமா ஒருத்தர் இருக்கார், அவரைப் பார்க்கப் போலாம்’னு கூட்டி வந்தாங்க, ஆனால், அவர் வீட்டைக் கண்டுபிடிக்க முடியல.

மதுரை அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை
மதுரை அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை

நடக்குற சம்பவங்களை என்னால ஓரளவு புரிஞ்சுக்க முடியுது. ஆனால், என் தம்பிக்கு எதுவுமே தெரியல. அடுத்து எங்க போறதுன்னு தெரியல. கொண்டு வந்த பணமும் செலவாகிடுச்சு. அம்மா உடல்நிலை ரொம்ப மோசமாச்சு. திரும்ப டெல்லிக்கே போயிடுவோம்னு மதுரை ரயில்வே ஸ்டேஷன் போனப்ப அம்மா மயங்கி விழுந்துட்டாங்க. என்ன பண்ணுறதுன்னு தெரியாம அம்மா பக்கத்தில் உட்காந்து அழுதுகிட்டிருந்தோம்.

அங்கிருந்தவங்க எங்ககிட்டே பேசறாங்க. நாங்க இந்தில பேசினது அவங்களுக்குப் புரியல. ஆட்டோவுல ஏத்தி ஜி.எச்-ல கொண்டு விட்டாங்க. அங்கே அம்மாவை டெஸ்ட் பண்ணி, காசநோய் மோசமா அட்டாக் ஆகியிருக்கு, எப்ப வேணும்னாலும் உயிர் போயிடும், இங்க வச்சிக்க முடியாது, டெல்லிக்கே போயிடுங்கன்னு சொன்னாங்க. எனக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியல. கையில பணமில்லை. டெல்லியில சொந்தம்னு சொல்லிக்க யாருமில்லை. அம்மாவுக்கு மனநிலையும் சரியில்லாமப்போச்சு. திடீர்னு எங்காவது கிளம்பிப் போயிட்டாங்கன்னா என்ன பண்ண முடியும்?

அப்போது அங்கிருந்த ஒரு டாக்டர் ‘நீங்க தோப்பூர் டி.பி ஹாஸ்பிடலுக்குப் போங்க’ன்னு எங்களை ஆட்டோவுல ஏத்தி அனுப்பி வச்சார். இங்க வந்ததும், இந்த அங்கிள் (ஆர்.எம்.ஓ காந்திமதிநாதன்) உடனே அட்மிஷன் போட்டு சிகிச்சை கொடுத்தாங்க. அதோடு எங்களுக்கும் டி.பி இருந்தது தெரிந்தது. எங்களையும் அட்மிட் பண்ணினாங்க. அம்மாவுக்கு உடல்நிலை ரொம்ப மோசமாச்சு. கடைசி நாள் என்கிட்டே நல்லா பேசினாங்க, ‘தம்பியை நல்லபடியா பார்த்துக்க, நமக்கு எந்தச் சொந்தமும் இல்லை, அதனால ஏதாவது ஹாஸ்டல்ல சேர்ந்திடுங்க’ன்னு அழுதுக்கிட்டே சொல்லிட்டு இறந்துட்டாங்க. எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியல. அப்ப, இங்கிருந்தவங்க எல்லோரும் எங்களுக்கு ஆறுதல் சொல்லி பக்கத்துல இருந்த கல்லறையில நல்லபடியா அம்மாவ அடக்கம் செஞ்சாங்க.

என்னோட இடதுபக்க நுரையீரல் டி.பி-யால பாதிக்கப்பட்டதால ட்ரீட்மென்ட் கொடுத்தாங்க. அப்ப, நர்ஸ் சுமதியக்கா என்னையும் தம்பியையும் அவங்க பிள்ளைங்க மாதிரி பார்த்துக்கிட்டாங்க. அவங்களோட சேர்ந்த மற்ற நர்ஸ்களும், ஸ்டாஃப்களும் எங்ககூடவே இருப்பாங்க, தமிழ் சொல்லிக் கொடுத்தாங்க. நாங்க வீட்டுலகூட அவ்வளவு சந்தோஷமா இருந்தது கிடையாது. அம்மாவை இழந்திருந்த எங்களுக்கு இங்க திரும்பின பக்கமெல்லாம் அம்மாக்கள் இருக்காங்க.

நான் ஓரளவு தேறியதும், எங்களைத் தத்து எடுக்க சிலபேரு வந்தாங்க. எங்களுக்குப் போக இஷ்டமில்லை. இங்கேதான் இருப்போம்னு சொன்னோம். சட்டப்படி அப்படி வச்சுக்க முடியாதுன்னு சொன்னதால ஹாஸ்டல்ல சேர்ந்து படிக்க ஒத்துக்கிட்டோம். ஆர்.எம்.ஓ அங்கிளே சேர்த்துவிட்டாரு. ஹாஸ்டலில் சிஸ்டர்ஸ் நல்லா பார்த்துக்கிட்டாங்க. லீவுக்கெல்லாம் இங்க வந்துடுவோம். இப்படியே 18 வயசு வரைக்கும் ஹாஸ்டல்ல தங்கியிருந்து படித்தேன்.

அடுத்து வேற ஹாஸ்டல் மாறணும்னு சொன்னாங்க. ‘எனக்கு இந்த ஹாஸ்பிட்டல்தான் வீடு, இங்கேயே இருக்கணும்’னு மதுரை கலெக்டர்கிட்டே சொன்னேன். அதுக்கு அவர் ஒத்துக்கிட்டார். அதோடு ஆர்.எம்.ஓ அங்கிள் எனக்கு இங்க பத்தாயிரம் ரூபாய் சம்பளத்துல வேலை பார்க்க ஏற்பாடு செய்து இங்கேயே தங்க வசதி செஞ்சு கொடுத்திருக்காங்க. அம்மாவோட இழப்பின் வலி தெரியாத வகையில் எங்களை வளர்த்தாங்க.

இங்குள்ள மனநல பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கும், நோயின் தீவிரத்துக்கு ஆளாகி மரணத்துக்கான நாள்களை எண்ணிக் கொண்டிருக்கிற புற்றுநோயாளிகளுக்கும் கவுன்சலிங் கொடுக்கிறேன். அவங்க கதையையெல்லாம் கேட்கும்போது என் வேதனையே பரவாயில்லைன்னு தோணும். இனி எங்களை சொந்தம்னு சொல்லிட்டு யார் வந்து கூப்பிட்டாலும் போகமாட்டேன். இதுதான் என் வீடு. இங்குள்ள எல்லோரும் என் உறவினர்கள்’’ என்றார் நெகிழ்ச்சியாக.

ரீட்டா,  அலெக்ஸ்
ரீட்டா, அலெக்ஸ்

தோப்பூர் மருத்துவமனை அதிகாரி டாக்டர் காந்திமதிநாதனிடம் பேசினேன். ‘‘ரீட்டா போல இந்த மருத்துவமனையில் நோயாளியாக வருகிற ஒவ்வொருவரிடமும் ஒரு கதை இருக்கு, மருத்துவ சிகிச்சையோடு எங்களால் முடிந்தவரை அவர்களுக்குப் பாதையைக் காட்டுகிறோம். எட்டு வருடங்களுக்கு முன் தன் அம்மா, தம்பியோடு எந்த ஆதரவும் இல்லாமல் இங்க வந்து நின்றாள் ரீட்டா. அவள் அம்மாவைக் காப்பாற்ற முடியவில்லை. ஆனால், டி.பி பாதிப்புக்குள்ளான ரீட்டாவையும் தம்பி அலெக்ஸையும் இங்குள்ள எல்லோரும் சேர்ந்து காப்பாற்றினோம்.

அவள் தாய் மரணிக்கும்போது, ‘இரண்டு பிள்ளைகளை தனியாக விட்டுப் போகிறோமே’ என்ற பரிதவிப்பிலேயே இறந்ததாக அருகிலிருந்து பார்த்தவர்கள் தெரிவித்தார்கள். அது எங்களையும் என்னவோ செய்தது. அதனால் எல்லோருமே சேர்ந்து இருவரையும் நல்லபடியாகப் பராமரிக்க வேண்டும் என்று போட்டி போட்டு கவனித்தோம். இன்று இங்கேயே வந்துவிட்டாள். ராஜாஜி மருத்துவமனை டீன் ரத்தினவேலிடம் இவள் நிலைமையை எடுத்துச் சொன்னோம். அவர்தான் ரீட்டாவுக்கு தற்காலிகப் பணிக்கு உத்தரவிட்டார். தம்பி அலெக்ஸ் ஐ.டி.ஐ-யில் படித்துவருகிறான். சீக்கிரம் ரீட்டாவுக்கு ஒரு திருமணத்தைச் செய்து வைத்துவிட வேண்டும் என்பதுதான் இப்போது எங்களுக்கு இருக்கும் ஆசை. இதற்காக எங்கள் டாக்டர்கள், நர்ஸ்கள், ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து நல்ல மாப்பிள்ளையைத் தேடிக்கொண்டிருக்கிறோம். ஜாம் ஜாமென்று திருமணத்தைச் செய்து வைப்போம். மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய வயதில் இழப்புகளையும் சோகத்தையும் மட்டுமே சுமந்த அவள் இனியாவது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், அவளைப் புரிந்துகொண்ட நல்ல மணமகன் அமைய வேண்டும்’’ என்றார்.

ரீட்டாவும் அலெக்ஸும் என்றும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்!

****

காசநோயை குணப்படுத்த முடியாது, மரணம்தான் என்று அந்தக் காலத்தில் நோயாளிகளை வீட்டை விட்டு விரட்டிவிடுவார்கள், அல்லது ஊருக்கு ஒதுக்குப்புறமாக அனுப்பிவிடுவார்கள். காசநோயாளிகளை இந்தச் சமூகம் தீண்டத்தகாதவர்களாகப் பார்த்தது. அதன்பின்பு அரசு பல ஊர்களில் காசநோய் மருத்துவமனைகளை ஊருக்கு வெளியிலேயே அமைத்தது. அதை காட்டாஸ்பத்திரி என்பார்கள். அப்படித்தான் மதுரை, தோப்பூர் மருத்துவமனையும் இருந்தது. பத்து வருடங்களுக்கு முன் டாக்டர் காந்திமதிநாதன் மருத்துவ அதிகாரியாக இங்கு பொறுப்பேற்றது முதல் அதன் வடிவமே மாறிவிட்டது. பூங்காவனத்துக்குள் அமைந்துள்ள நட்சத்திர விடுதி போல மருத்துவமனையை மாற்றியுள்ளார். அதனால், நலம்பெற்றாலும் வீட்டுக்குச் செல்லாமல் இங்கேயே இருக்கிறேன் என்று அடம்பிடிக்கிறார்கள் நோயாளிகள்.