சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

தொட்டி மீன் கண்டடைந்த சமுத்திரம்!

ஜெய்சிங் நாகேஸ்வரன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெய்சிங் நாகேஸ்வரன்

அந்தக் கைத்தட்டல் எனக்கு அச்சம் தந்தது. வெட்கித் தலைகுனிந்துகொள்வேன். ஏன் அவர்களிடம் விலகி நிற்க நினைக்கிறேன் என்பது தெரியவில்லை. யார் அவர்கள்? நான் ஏன் அவர்களுக்கு பயந்து விலகி இருக்க முயல்கிறேன்?

‘எங்கள் வீட்டில் மீன் தொட்டி ஒன்று இருந்தது. அந்தக் கண்ணாடித்தொட்டிக்கு அப்பால் ஒரு உலகம் இருப்பதைத் தொட்டி மீன் பார்க்கிறது. ஆனால் கண்ணாடிக்குள்ளேதான் வாழ வேண்டும் என்று அதற்குக் கற்பிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. ஒருநாள் அந்த மீன், கண்ணாடித் தொட்டியை உடைக்க முற்பட்டது; உடைத்தது; சமுத்திரங்கள் தெரிந்தன; நீந்தத் தொடங்கியது…கற்பிதங்கள் உடைந்தன.'

புகைப்படத் தொகுப்பு
புகைப்படத் தொகுப்பு

இப்படி மீனாகத் தன்னை உருவகம் செய்து எழுதியவர் ஜெய்சிங் நாகேஸ்வரன். ‘ஐ ஃபீல் லைக் எ ஃபிஷ்’ எனும் புகைப்படத் தொகுப்பிற்கு அவர் எழுதிய வார்த்தைகள் இவை. மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த சுயாதீன புகைப்படக் கலைஞரான இவர் 15 வருடங்களாக இத்துறையில் இயங்கிவருகிறார். விளிம்பு நிலை மக்களின் வாழ்வையும், கிராமத்து வாழ்வின் சிக்கல்களையும் இவரது படைப்புகள் ஆவணப்படுத்துகின்றன. சமீபத்தில் ஜப்பானின் கியோட்டோ நகரில் நடந்த போட்டோகிராபி திருவிழாவில் இவரது புகைப்படங்கள் விருதுகளைப் பெற்றுள்ளன. 170 நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரம் புகைப்படக் கலைஞர்கள் பங்குபெற்ற அவ்விழாவில் இந்தியாவிலிருந்து தேர்வான ஒரே கலைஞர் இவர்தான். இவர் எடுத்த ‘தி லாட்ஜ்’ எனும் திருநங்கைகளின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் புகைப்படக் கதை அங்கு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வாடிப்பட்டி டூ ஜப்பான் பயணம் எப்படிச் சாத்தியமானது என்று அவரிடம் பேசினேன்.

“பூர்வீகம் பாப்பாப்பட்டி கிராமம். இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர் முல்லைப் பெரியாறு அணை கட்டுவதற்காக எங்கள் குடும்பம் வாடிப்பட்டியில் தஞ்சம் அடைந்தது. உழைத்து முன்னேறி ஆசிரியரான என் பாட்டி பொன்னுத்தாயி, காந்திஜி தொடக்கப் பள்ளியைத் தொடங்கினார். என் வாழ்வில் நான் கண்ட முதல் அதிசயம் என் பாட்டிதான். அவர் நடத்திய பள்ளி ஒரு கலவரத்தில் இடிக்கப்பட்டது. ஆனால் துவண்டுவிடாமல் மரத்தடியில் பாடம் நடத்தினார். சிறுவயதில் டிஸ்லெக்சியா பாதிப்பு எனக்கு இருந்தாலும் போராடிப் படிக்க உதவியது, அந்த நம்பிக்கைதான். மாஸ் கம்யூனிகேஷன் படித்த நான் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனிடம் உதவியாளராகச் சேர்ந்தேன்” என்று தன் பயணத்தின் தொடக்கத்தை விவரிக்கிறார் ஜெய்சிங்.

புகைப்படத் தொகுப்பு
புகைப்படத் தொகுப்பு

ரவி.கே.சந்திரனிடம் நான்கு படங்கள் பணியாற்றிய ஜெய்சிங், பிரபலங்களுக்குப் புகைப்படங்கள் எடுப்பதை வாழ்வாதாரமாகக் கொண்டாலும் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைத் தொடர்ந்து பதிவுசெய்து வந்திருக்கிறார். அப்போது மும்பை மாநகரின் ரயில் பயணங்களில் சந்தித்த திருநங்கைகளின் கைத்தட்டல் அவரது வாழ்வின் திருப்புமுனையாக இருந்திருக்கிறது.

“அந்தக் கைத்தட்டல் எனக்கு அச்சம் தந்தது. வெட்கித் தலைகுனிந்துகொள்வேன். ஏன் அவர்களிடம் விலகி நிற்க நினைக்கிறேன் என்பது தெரியவில்லை. யார் அவர்கள்? நான் ஏன் அவர்களுக்கு பயந்து விலகி இருக்க முயல்கிறேன்? இதே போலத்தானே ஊரில் பலருக்கு மத்தியில் பட்டியல் சமூகம் என்பதால் நாமும் விலக்கி வைக்கப்பட்டோம். அவர்களை என்னோடு பொருத்திப் பார்த்து இருண்மையினால் குழம்பினேன். அப்போது என் தந்தையிடம் பேசினேன். அவர் விழுப்புரம் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா பற்றிக் கூறினார். ‘அங்கு சென்று வா, அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்' என்றார். எதையும் யோசிக்காமல் அங்கு போனேன்” என்கிறார் ஜெய்சிங்.

ஜெய்சிங் நாகேஸ்வரன்
ஜெய்சிங் நாகேஸ்வரன்

“திருவிழா நடக்கும் இடத்திற்குச் சென்றேன். அங்கு நான் பார்த்த காட்சிகள் அனைத்தும் புதுமையானவை. ஆயிரக்கணக்கான திருநங்கைகள் ஒரு சில நாட்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ அங்கே இறங்குகிறார்கள் என்பது புரிந்தது. அவர்களிடம் பேச முற்பட்டேன். ஆரம்பத்தில் என்னை சந்தேகக் கண்ணோடு பார்த்தவர்கள் பின் என் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டனர். அவர்கள் தங்கியிருந்த லாட்ஜுக்கு அழைத்துச் சென்று தங்கள் கதையைச் சொல்ல ஆரம்பித்தனர். குற்ற உணர்வில் இருந்த எனக்கு நெருங்கிப் பழகி அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதே, திருநர்களை அறிந்துகொள்ள ஒரே வழி என்று தெரிந்தது. அதை அவர்கள் உரிமையுடன் புகைப்படமாக ஆவணப்படுத்தத் தொடங்கினேன். அன்று இருட்டிலிருந்து தோன்றிய வெளிச்சம்தான் இன்று ஜப்பான் வரை என்னை அழைத்துச் சென்றிருக்கிறது” என்று உணர்ச்சிபூர்வமாகப் பயணத்தை விவரிக்கிறார் ஜெய்சிங்.

ஜெய்சிங் தான் எடுக்கும் புகைப்படங்களை ஒரு கதை வடிவமாகவே கொண்டு வர விருப்பப்படுகிறார். ‘எதை நாம் தேடிக் கொண்டிருக்கிறோமோ, அது நம்மைத் தேடிக் கொண்டிருக்கிறது’ எனும் ரூமியின் வாக்கியத்தைப் போல பாகுபாடுகளிடம் இருந்து தள்ளி நிற்க ஊரை விட்டு விலகிச் சென்றவரை, கொரோனாப் பெருந்தொற்று மீண்டும் ஊருக்கு அழைத்தது. வீட்டில் முடங்கிக்கிடந்த அவருக்கு பொன்னுத்தாயி பாட்டியின் குரல், ‘இந்த ஊர படம் புடியேன்’ என்று சொல்வதுபோல கேட்டிருக்கிறது. அது தன் வாழ்வின் இரண்டாம் அதிசயம் என்கிறார் ஜெய்சிங்.

“என் ஊரில் ஆற்றில் நீந்துவது, மீன் பிடிப்பது, நண்பர்களுடன் திறந்தவெளியில் விளையாடுவது, மாடு மேய்ப்பது, நட்சத்திரங்களின் கீழ் உறங்குவது போன்ற இனிய நினைவுகள் எனக்கு உண்டு. மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அன்று நான் பார்த்த நிலம் இப்போது கிடையாது, இப்போது பார்க்கிற நிலம் அடுத்த தலைமுறைக்குப் பார்க்கக் கிடைக்காது என்பதை உணர்ந்து புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கினேன். நான் வளர்ந்த இடத்தின் அழகு, என் முழுப் புகைப்பட வாழ்க்கையையும் ஈர்க்கும் ஒரு நெருக்கத்தைத் தந்தது. அதை ‘ஐ ஃபீல் லைக் எ ஃபிஷ்’ என்று புகைப்படத் தொகுப்பாக்கினேன். அது 13வது `ஆப்பிரிக்கன் ஃபினாலே ஆஃப் போட்டோகிராபி’-யில் பெரும் வரவேற்பு பெற்றது” ஜெய்சிங்கின் குரலில் அவ்வளவு பெருமிதம்.

புகைப்படத் தொகுப்பு
புகைப்படத் தொகுப்பு

இந்தியாவின் காட்சி உணர்வில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வியல் பெரிதும் நடைமுறையில் இல்லை என்கிறார் ஜெய்சிங். ‘‘அதனை ஆவணப்படுத்த வேண்டியது விளிம்பு நிலையிலிருந்து வளரும் கலைஞர்களின் கடமை. அதற்கான முயற்சியில் அனைவரையும் ஒன்றுதிரட்டும் பணியில் ஈடுபடப்போகிறேன்” என்கிறார் இவர்.

2013-ம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற ‘Rencontres Cinmatographiques de Cerbre’ போட்டியில் ‘தி லாட்ஜ்’ படைப்பிற்காக இரண்டாம் பரிசை வென்ற இவர், தெற்காசிய நாடுகளில் மிக முக்கியமாகக் கருதப்படும் ‘Serendipity Arles Grant’ நல்கை போட்டியில் கடைசி 10 நபர்களில் ஒருவராகவும் வந்திருக்கிறார். நியூயார்க் நகரில் செயல்படும் மேக்னம் அறக்கட்டளையின் புகைப்படம் எடுத்தல் மற்றும் சமூக நீதி உறுப்பினராகவும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இத்தனை வருடங்கள் புகைப்படங்களில் கதை சொன்னவருக்கு, திரைப்படங்களில் கதை சொல்லும் கனவும் இருக்கிறது. அவரது பாட்டி தொடங்கிய பள்ளி 70 ஆண்டுகளைத் தொடவிருக்கிறது. அதை மறுசீரமைப்புச் செய்து ராகுல் காந்தியை வைத்துத் திறக்க வேண்டும் என்பது இவரது ஆசை. மேலும் விளிம்புநிலையில் இருக்கும் மாணவர்களுக்கு கேமரா வழங்கி இலவசமாகப் பயிற்சி தருவதையும் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டுள்ளார் ஜெய்சிங்.

சமுத்திரங்கள் காத்திருக்கின்றன பல தொட்டி மீன்களுக்கு!