
எல்லோரும் நான் அன்ன தானம் பண்ணுறதை பெருசா பேசுறாங்க. எம்.ஜி.ஆர், விஜயகாந்த் மாதிரி வள்ளல்கள் முன்னாடி நான் தூசு
நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைந்துவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனந்த விகடன் நேர்காணலுக்காக அவரைச் சந்திக்கச் சென்றிருந்தபோது, ஆசுவாசமாய் பால்கனியில் அமர்ந்தபடி அவர் தன் ஃப்ளாஷ்பேக்கைச் சுழலவிட்டது நேற்று நடந்தது போல இருக்கிறது.
‘‘சினிமா ஸ்டூடியோ கோயமுத்தூர்ல இருந்த காலத்துல லைட்மேனா ‘மாலையிட்ட மங்கை’ படத்துல வேலை பார்த்தவரு அப்பா. ஸ்டூடியோ பூராவும் சென்னைக்கு மாறி வந்த பிறகு மில்லுல சேர்ந்து குடும்பத்தைக் காப்பாத்தினார். அந்த லைட்மேன் அனுபவத்துலதான் எனக்குள்ளயும் சினிமா ஈர்ப்பு இருந்திருக்கும்னு நினைக்குறேன்” என்றவர், சென்னைக்கு வந்து போராடி லஷ்மன் ஸ்ருதி டீமோடு மிமிக்ரி கேசட் போட்டது, சின்னச் சின்ன ரோல்களில் தலைகாட்டியது, அதன்பிறகு சினிமாவில் சண்டைக் காட்சிகளுக்கு டப்பிங் கொடுத்த கதைகளை எல்லாம் சொன்னார். சண்டைக் காட்சிகள் பற்றிச் சொன்னது ரொம்ப புதுசாய் இருந்தது.

“ஆமா சார்... மிமிக்ரில ஒரு வெரைட்டியா ஜாக்கி சான் குங்பூ ஃபைட்டை பண்ணினேன். ‘அபுஹாய்'னு ஒரு சத்தம் தமிழ் சினிமா சண்டைக் காட்சிகள்ல கேட்டிருப்பீங்க இல்ல, அது என்னோடதுதான். நூற்றுக்கணக்கான படங்களுக்கு அபுஹாய் சவுண்ட் கொடுத்திருக்கேன். கமல் சார்தான் அதைக் கண்டுபிடிச்சு நேர்ல கூப்பிட்டுப் பாராட்டினார். ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்துல வாய்ப்பும் கொடுத்தார். நடிக்க வாய்ப்பு இல்லாத நாள்கள்ல என்னை அந்த டப்பிங்தான் காப்பாத்துச்சு. கமல் சார் தொடர்ந்து ‘வெற்றி விழா’, ‘மைக்கேல் மதன காமராஜன்’னு அவர் படங்கள்ல ஃப்ரெண்டா வாய்ப்பு கொடுத்தார். என் முகம் மக்கள் மத்தியில பதிவும் ஆச்சு. ரஜினி ‘பணக்காரன்’ ஷூட்டிங்ல பாராட்டினார்.
வாய்ப்பு தேடி அலைஞ்சப்போ எல்லாம் பெரும்பாலும் பிளாட்பாரத்துலதான் தூங்குவேன். ஒரு வருஷமா 2 சட்டை 2 பேண்ட்தான் என் சொத்தா இருந்துச்சு. வேட்டிதான் எங்கிட்ட இருந்த காஸ்ட்லி உடுப்பு. வடபழனி முருகன் கோயில் தெப்பக்குளத்துல குளிச்சுட்டு ஸ்டூடியோ ஸ்டூடியோவா நடையா நடந்து துணை நடிகனா வளர்ந்த டைம் அது. ஆரம்பக்காலத்துலேயே கல்யாணம் பண்ண முடிவெடுத்தேன். என் கல்யாணப்பத்திரிகைல கமல், சத்யராஜ், பி.வாசு, பிரபுன்னு நாலு பேர் பேரையும் போட்டிருந்தேன். மசூதித் தெருவே, ‘கமலாவது இங்க வர்றதாவது... போடா லூசுப் பயலே’ன்னு காதுபடப் பேசுச்சு. கொட்டுற மழைல, குடைகூட இல்லாம, கார் நுழைய முடியாத அந்த ஏரியாவுக்குள்ள மெயின்ரோட்டுல காரை நிறுத்திட்டு நாலு பேரும் வந்ததை எப்படி நான் மறக்க முடியும்?'' என்று நெகிழ்ந்தார்.
‘‘எல்லோரும் நான் அன்ன தானம் பண்ணுறதை பெருசா பேசுறாங்க. எம்.ஜி.ஆர், விஜயகாந்த் மாதிரி வள்ளல்கள் முன்னாடி நான் தூசு. இதே கோடம்பாக்கத்துல வெறும் பச்சத்தண்ணி குடிச்சுட்டு பசியோடு பல நாள் அலைஞ்சிருக்கேன். அப்போ வைராக்கியமா ஒண்ணு நினைப்பேன். நாம ஜெயிச்சா யாரையும் பசியோடு விட்டுடக்கூடாதுன்னு... அதனால என்னால முடிஞ்சதைச் செய்றேன் சார்!'' என்றார்.
பசித்த வயிற்றுக்கு ஈந்த நல் இதயம் நீங்கள். இறுதி மரியாதை செய்ய வந்த பல கைகள் உங்களை நன்றியோடு தொழுததை அறிவேன். போய் வாருங்கள் மயில்சாமி சார்!