சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

ஒரு கனவின் மதிப்பு ரூ.8,000 கோடி! - அமெரிக்கர்களுக்கு சவால் விடும் தமிழர்!

ஆனந்த்பாபு பெரியசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
ஆனந்த்பாபு பெரியசாமி

- என்.சி.மோகன்தாஸ்

`உங்களிடம் ஒரு ஆப்பிள் இருக்கிறது, நண்பரிடம் ஒன்று இருக்கிறது. இருவரும் பகிர்ந்துகொள்கிறீர்கள். இப்போதும் இருவரிடமும் ஒவ்வொரு ஆப்பிள்தான் இருக்கும். உங்களிடம் ஒரு ஐடியா இருக்கிறது, நண்பரிடம் ஒன்று இருக்கிறது. இருவரும் பகிர்ந்துகொள்கிறீர்கள். இப்போது இருவரிடமும் இரண்டு ஐடியாக்கள் இருக்கும். ஐடியாக்களின் மகத்துவமே இதுதான். அவை விலைமதிப்பற்றவை. ஆனால், ஐடியாக்கள் வெறும் ஐடியாக்களாகவே இருந்தால் அவற்றுக்கு மதிப்பில்லை. செயலாக மாறும்போதுதான் உங்களுக்கு அவை அடையாளம் கொடுக்கும்'' என்று சொல்லிச் சிரிக்கிறார் ஆனந்த்பாபு பெரியசாமி.

உலகப் புகழ்பெற்ற தமிழராக சுந்தர் பிச்சையை நமக்கெல்லாம் தெரியும். அவரது சாதனை, திறமையெல்லாம் நம் நாட்டிற்குப் பெருமை சேர்த்துவருவதில் நிச்சயம் பெருமிதம் கொள்கிறோம். அவரைப்போலவே வேறு வகையில், சொந்தமாய்த் தொழில் ஆரம்பித்து வெளிச்சம் படாமல் கோலோச்சும் தொழில் முனைவோர்களும் உண்டு. அந்தச் சிலரில் ஒருவர், அமெரிக்காவின் ‘MinIO’ (மின்.ஐ.ஓ) மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் ஆனந்த்பாபு பெரியசாமி. மின்.ஐ.ஓ நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 8,000 கோடி ரூபாய்க்கும் மேல்! கிளவுட் ஸ்டோரேஜிங் தொழில்நுட்பத்தில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனம். எளிய முறையில், குறைந்த செலவில் ஃபைல்கள் மற்றும் தகவல்களைச் சேமித்து வைக்கும் வசதிகளைத் தரும் தொழில்நுட்பம் இவர்களுடையது. அமெரிக்காவின் டாப் 10 வங்கிகள், டாப் 10 ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்பது, டாப் 10 ஆயுத நிறுவனங்களில் எட்டு, மின்.ஐ.ஓ சேவையையே பயன்படுத்துகின்றன.

ஆனந்த்பாபு பெரியசாமி
ஆனந்த்பாபு பெரியசாமி

சேலம் மாவட்டத்தின் தண்ணீர் குட்டப்பட்டி என்ற குக்கிராமத்திலிருந்து கிளம்பி, இன்று அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் சேவைபுரியும் ஒரு மாபெரும் நிறுவனத்தை நடத்திவரும் ஆனந்த்பாபுவின் வளர்ச்சியும் வாழ்வும் ஒரு திரைப்படத்தைவிட சுவாரசியமானது. எவரையும் வசீகரிக்கச் செய்வது. அவரை இந்த அளவிற்கு வளர்த்து தனி ஒருவராக உருவாக்கியது, அவர் அம்மா வடிவாம்பாள்.

ஆனந்தின் அப்பா பெரியசாமி, கிராமத்து விவசாயக் குடும்பத்தில் பிறந்து, குடும்பச்சூழல் காரணமாக கல்லூரிப் படிப்பை முடிக்க முடியாமல் மேட்டூர் கெம்பிளாஸ்ட் நிறுவனத்தில் சேஃப்டி ஆபீசராகப் பணிபுரிந்தவர். அங்கு ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் சிக்கிய ஊழியர்களைக் காப்பாற்றுவதற்காகச் சென்றபோது தன் உயிரைத் துறந்தவர். அப்போது ஆனந்த் ஒன்பதாம் வகுப்பும், அக்கா பாரதி கல்லூரியிலும் படித்துக்கொண்டிருந்தனர். சொந்த வீடு கிடையாது, சேமிப்பு கிடையாது. கம்பெனி குவார்ட்டர்ஸ் கொடுத்திருந்ததால் சமாளித்து, குடும்பம் நடந்தது. ‘‘அப்பா எங்களுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. பணப்பற்றாக்குறையை எங்கள்மேல் திணிக்காமல், எங்களுக்கு வேண்டியதையெல்லாம் செய்து கொடுத்தார். இருப்பதை வைத்துக்கொண்டு எங்களை ராஜ வாழ்க்கை வாழ வைத்தார்'' என்று நெகிழ்கிறார் ஆனந்த்.

ஆனந்த் படிப்பில் சுமார்தான். குவார்ட்டர்ஸில் இருந்த சக மாணவர்கள் நன்றாகப் படித்து நல்ல மார்க் வாங்குவார்கள். ‘வாழ்வில் கல்விதான் முக்கியம், அதுதான் நமது சொத்து' என்று அறிவுறுத்தினாலும்கூட, குறைந்த மார்க் வாங்கிய மகனை அப்பா நோகடித்ததில்லை. அவன் எப்படியும் நல்ல நிலைக்கு வந்துவிடுவான் என்கிற நம்பிக்கை அன்றே அவர்களுக்கு இருந்தது.

அம்மாவுடன்  ஆனந்த்பாபு பெரியசாமி
அம்மாவுடன் ஆனந்த்பாபு பெரியசாமி

அவர் இருந்தவரை வீட்டில் எல்லாம் இருந்தன. போன பின்பு எதுவுமே இல்லாத வெறுமை. வறுமையும் கஷ்டங்களும் அறியாத குடும்பம் ஆடிப்போயிற்று. பியுசி வரை படித்திருந்த அம்மாவுக்கு எதுவும் தெரியாது. மூன்று மாதங்கள் அப்படியே பிரமை பிடித்திருந்தவர், கணவரது கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் அதிலிருந்து மீண்டெழுந்தார்.

அப்பாவின் கம்பெனியிலிருந்து வந்த பிடிப்பு மற்றும் இன்ஷூரன்ஸ் தொகை மட்டுமே மிஞ்சியிருந்தது. அதை வைத்துக்கொண்டு தாரமங்கலம் போய்க் குடியேறினர். அதன்பின் அவர்களுக்கு எல்லாமே அம்மாதான். எல்லாக் கஷ்டங்களையும் கடந்து, பிள்ளைகளைப் படிக்க வைத்தார் அம்மா. இடையில் மகள் பாரதிக்குத் திருமணம் நடந்தது. ஏ.டி.எஸ்.பி-யான மருமகன் மணி, அவருக்கு மகனாக வாய்த்து அனைத்து வழிகளிலும் உதவிவந்தார். அதுவரை கஷ்ட நஷ்டங்களை அறியாத ஆனந்துக்கு அப்போது எல்லாம் புரிந்தது. ஆனாலும்கூட படிப்பில் முன்னேற்றமில்லை. ஆனந்தை டாக்டராக்க ஆசைப்பட்டார் மருமகன். மகன் இன்ஜினீயர் ஆகவேண்டும் என அம்மாவுக்கு ஆசை. ஆனால், அம்மாவுக்கு சிரமம் தராமல் ஏதேனும் சயின்ஸ் பட்டப்படிப்பில் சேரலாம் என்பது ஆனந்தின் எண்ணமாக இருந்தது. அம்மா விடவில்லை. ‘எல்லாம் நான் பார்த்துக்கிறேன்' என்று வீட்டை அடமானம் வைத்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆனந்தை கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் சேர்த்துவிட்டார்.

‘‘ஆனந்திற்குப் படிப்பைவிட கம்ப்யூட்டர்கள் மேல்தான் அதிக ஆர்வம் இருந்தது. கம்ப்யூட்டர் வாங்கும் அளவுக்கு வசதியில்லாத குடும்பம். எப்போதும் கல்லூரியின் கம்ப்யூட்டர் லேபிலேயே தவம் கிடப்பான். படிக்கும்போதே புதிய புதிய மென்பொருள்கள் எழுத ஆரம்பித்தான். அவை புரொபசர்களைக் கவர்ந்தன. அதனால் லேபையே அவனது பொறுப்பில் விட்டனர். நண்பர்களுடன் அரட்டை என்றெல்லாம் நேரத்தை வீணடிக்காத குணம் அவனுக்கு'' என்று சிலாகிக்கிறார், ஆனந்தின் வகுப்புத் தோழரும் பிரபல பத்திரிகையாளர் லேனா தமிழ்வாணனின் மகனுமான அரசு லட்சுமணன்.

1999-ல் படிப்பு முடிந்தது. பெரிதாக மார்க் எடுக்காவிட்டாலும்கூட, ஆனந்தின் மென்பொருள்களைப் பற்றி புரொபசர்கள் மூலம் அறிந்த NewGen எனும் நிறுவனம், ‘எங்களுக்கு இப்படி ஒருவர்தான் வேண்டும்' என்று டெல்லிக்கு ஆனந்தைக் கூப்பிட்டுக்கொண்டது. ஆனந்தின் திறமையை அங்கீகரித்து ஆறு மாதங்களிலேயே அவருக்குப் பெரிய பொறுப்பு கொடுத்தது.

‘எதையும் நமக்கென்று வைத்துக் கொள்ளக்கூடாது, பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்' என்று சின்ன வயதிலிருந்தே சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டதால் ஆனந்தின் செயல்பாடுகளும் அப்படியே அமைந்தன. ஒருமுறை உருவாக்கிய பிறகு, வாங்கும் ஒவ்வொருவருக்கும் விலை வைத்து விற்கப்படும் வழக்கமான மென்பொருள்களுக்கு மாற்றாக, எல்லோரும் இலவசமாகப் பயன்படுத்த அனுமதிக்கிற ஓப்பன் சோர்ஸ் மென் பொருள்களை உருவாக்க ஆர்வம் காட்டினார். அவற்றை இணையம் மூலம் பொதுமைப்படுத்துவார்.

அவற்றை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், அவற்றை வளப்படுத்தவும் செய்யலாம். இது வியாபார நோக்கத்திற்கு எதிரானது. ஆனாலும்கூட ஆனந்த் அதற்காகக் கவலைப்படுவதில்லை. இந்த Open source software ஒரு காலத்தில் தன்னை உச்சத்துக்குக் கொண்டுசெல்லும் என்று அப்போது அவருக்குத் தெரியாது.

டெல்லி வேலையை விட்டுவிட்டு, சேவை நிறுவனங்களில் இணைந்து பணியாற்றி, அதன்பின் பெங்களூரில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் சாதாரண வேலையைச் செய்து தடுமாறிக்கொண்டிருந்த ஆனந்துக்கு அமெரிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், தன்னை ஆளாக்கிய அம்மாவைத் தனியே விட்டுவிட்டுப் போக அவருக்கு விருப்பமில்லை. அம்மா அவரைக் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தார்.

அமெரிக்காவில் அவர் செய்த முதல் வேலையே அவருக்குத் தனி அடையாளம் தந்தது. அமெரிக்க எரிசக்தித் துறைக்காக அவரது குழு உருவாக்கிய ‘Thunder’, உலகின் அதிவேகமான இரண்டாவது சூப்பர் கம்ப்யூட்டர் என்ற பெருமையைப் பெற்றது. ஆனால், அந்த நேரத்தில் தனக்காக ஒரு சாதாரண கம்ப்யூட்டர்கூட வாங்க முடியாத பொருளாதார நிலையில் அவர் இருந்தார் என்பதுதான் யதார்த்தம்.

மனைவியுடன்  ஆனந்த்பாபு பெரியசாமி
மனைவியுடன் ஆனந்த்பாபு பெரியசாமி

அங்கு அறிமுகமான தன் நண்பர் ஹிதேஷ் செலானியுடன் இணைந்து கிளவுட் கம்ப்யூட்டிங் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றைத் தொடங்கக் கனவு கண்டார் ஆனந்த். திரைப்படங்கள், வீடியோக்கள், புகைப்படங்கள், ஆவணங்கள் என்று எல்லாவற்றையும் கிளவுட் ஸ்டோரேஜில் சேமித்து வைக்கும் வசதிகள் செய்து தரும் ஒரு நிறுவனம் என்பது அவர்களின் கனவு. அமெரிக்காவே பொருளாதார நெருக்கடியில் தடுமாறிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு நிறுவனம் தொடங்குவதற்குத் தனித் துணிச்சல் வேண்டும். போட்டியாளர்கள் எல்லாம் பெரிய நிறுவனங்கள். எல்லோரும் பெரும் செலவு செய்து சர்வர் ரூம் வைத்து, ஏகப்பட்ட ஹார்டுவேர்களை வாங்கி ஃபைல்களைச் சேமித்த காலத்தில், இணையத்தில் சேமிக்கலாம் என்று சொல்வதை யாரும் நம்புவார்களா என்று தெரியாத நிலை. இந்தத் துறையில் பெரிதாக முன் அனுபவமும் இல்லாத ஸ்டார்ட் அப் நிறுவனம். இப்படி எல்லாமே ஆனந்துக்கு எதிராக இருந்தன.

‘உங்க பிசினஸ் மாடல் ஜெயிக்குமா என்பது சந்தேகம்தான்' என்று எல்லோரும் சொன்னார்கள். நம்பிக்கை இல்லாமல்தான் ஒரு தொழிலதிபர், இரண்டு லட்சம் டாலர் முதலீடு செய்யவும் முன்வந்தார். நண்பரின் வீட்டில் ஒரு சிறிய அறையில் நிறுவனத்தைத் தொடங்கினர். அங்கேயே தங்கி, அங்கேயே தூங்கி உழைக்க வேண்டியிருந்தது. எவரிடம் தங்கள் நிறுவனத்தின் கனவை ஆனந்த் விவரித்தாலும், அவர்கள் எதிர்மறையாகவே பேசுவார்கள். நிறுவனத்தில் வேலை பார்த்த மிகச் சிலருக்குக்கூட சம்பளம் தருவதே சிரமமாக இருந்தது. தங்கள் முதல் வாடிக்கையாளரைத் தேடிப் பிடிக்கவே பல மாதங்கள் ஆகின. இத்தனை தடைக்கற்களையும் தாண்டி அந்த நிறுவனம் வளர்ந்தது. GLUSTER எனும் அந்த மென்பொருள் நிறுவனம் ஐந்தே ஆண்டுகளில் அசுர வளர்ச்சி கண்டது. அதை RED HAT எனும் உலகப் புகழ்பெற்ற நிறுவனம் ரூ.667 கோடி கொடுத்து வாங்கும் அளவுக்கு இமாலய வளர்ச்சி.

ஆனந்த்பாபு பெரியசாமி
ஆனந்த்பாபு பெரியசாமி

அதை விற்ற பின்பு ஆனந்த்பாபு சும்மா இல்லை. படிப்பு, ஆராய்ச்சி என்று அடுத்த ரவுண்டுக்குத் தயாரானார்.

ஆனந்த்பாபுவின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உரமிட்டது அப்பா, அடித்தளமாக இருந்தது அம்மா என்றால், அதில் திருப்பமும் வளமும் தந்தவர், மனைவி கரீமா கபூர். டெல்லிவாசியான கரீமா, பொருளாதாரத்தில் பிஹெச்.டி முடித்து, ஊரில் பார்த்துவந்த பெரிய வேலையை விட்டுவிட்டு இவருடன் அமெரிக்காவிற்குப் போய் ஐக்கியமானவர். அவருடைய தூண்டுதல் மற்றும் திட்டமிடலில் 2015-ல் கரீமா, நண்பர் ஹர்ஷாவுடன் சேர்ந்து ஆனந்த்பாபு ஆரம்பித்ததுதான் மின்.ஐ.ஓ நிறுவனம். இன்று இவர்களது மென்பொருள்களை தினந்தோறும் 10 லட்சம் பேருக்கு மேல் டவுன்லோடு செய்கிறார்கள். அமெரிக்காவின் பெரிய நிறுவனங்களுக்கு சவால் விட்டு, தங்கள் நிறுவனத்தை வளர்த்திருக்கிறார். ‘‘மின்.ஐ.ஓ என்பது மினிமலிசத்தின் சுருக்கம்தான். சிக்கலான பிரச்னைகளுக்கு எளிமையான தீர்வுகளை உலகம் விரும்புகிறது. அதை நாங்கள் தருகிறோம்'' என்கிறார் ஆனந்த்பாபு.

அகஸ்தியா பெரியசாமி, ஆரியமான் பெரியசாமி என இவர்களுக்கு இரண்டு வாரிசுகள். ‘‘தொழில்முனைவோர் ஆகவேண்டும் என்று நான் நினைத்ததே கிடையாது. ஒரு இனிய விபத்து மாதிரி இது நடந்துவிட்டது. ஒரு போர்க்களத்தில் களமாடும் வீரனின் உடலில் சாதாரண சருமத்தைவிட தழும்புகளே அதிகம் இருந்தால், அவன் வெற்றிவீரன். என் பயணமும் அப்படிப்பட்ட தழும்புகள் நிறைந்ததுதான். தொழில்முனைவோராக நீங்கள் ஜெயிப்பதற்கு ஏதோ ஒன்றைப் புதிதாக உருவாக்க வேண்டும். ஆனால், அதுமட்டுமே உங்கள் உலகம் இல்லை. அது உங்கள் பயணத்தின் சிறிய பகுதி. நம்முடன் இணைந்திருப்பவர்களை ஒழுங்காக நிர்வகிக்க வேண்டும். நாம் ஜெயிப்பதுபோலவே அவர்களும் ஜெயிக்க வேண்டும்.

வெற்றிகரமான பிசினஸ் மாடல் என்று எதுவுமே இல்லை. எனக்கு இதில் வெற்றி கிடைத்தது. எல்லோருக்குமே கிடைக்கும் என உத்தரவாதம் இல்லை. ஒவ்வொருவரும் தங்களுக்குப் பொருத்தமான ஒன்றைத் தேடிக் கண்டடைய வேண்டும். உங்கள் வேல்யூ சிஸ்டம் உயர்வாக இருக்க வேண்டும். ஒரு நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு உங்களிடம் ஒரு காரணம் இருக்க வேண்டும். சரியான காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டால் நிச்சயம் ஜெயிக்கலாம். அதற்கு நானே உதாரணம்'' என்று சொல்லிச் சிரிக்கிறார் ஆனந்த்பாபு.