Published:Updated:

மரபணு பிரச்னையால் துடித்த சிறுவன்; நிலையை விவரித்த ஜூவி... சிகிச்சைக்கு உத்தரவிட்ட அமைச்சர் மா.சு!

அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் சிறுவன் குடும்பத்தினர்

ஜூனியர் விகடன் செய்தியைத் தொடர்ந்து, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தை, இன்று தன்னுடைய இல்லத்துக்கு நேரில் அழைத்துச் சந்தித்தார்.

Published:Updated:

மரபணு பிரச்னையால் துடித்த சிறுவன்; நிலையை விவரித்த ஜூவி... சிகிச்சைக்கு உத்தரவிட்ட அமைச்சர் மா.சு!

ஜூனியர் விகடன் செய்தியைத் தொடர்ந்து, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தை, இன்று தன்னுடைய இல்லத்துக்கு நேரில் அழைத்துச் சந்தித்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் சிறுவன் குடும்பத்தினர்

சேலம் மாவட்டம், கொங்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி மனோகரன் - பூங்கோதை. இவர்களுக்கு தனீஷ் என்ற 7 வயது மகனும், வஷ்ரியா என்கிற மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சிறுவன் தனீஷ் பள்ளிக்கூடத்துக்குச் சென்றபோது, அங்கு வகுப்பறையில் ஆசிரியர்கள் பாடம் நடத்திக்கொண்டிருப்பதை பார்க்க முடியவில்லையாம். `கண் தெரியவில்லை' என்று ஆசிரியர்களிடம் அழுதிருக்கிறான். தகவலறிந்து பள்ளிக்கு விரைந்த பெற்றோர், உடனடியாகச் சிறுவனை கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவனுக்கு கண்ணாடி அணியும்படி பரிந்துரைத்திருக்கின்றனர். அதன்படி சிறுவன் கண்ணாடி அணிந்திருக்கிறான். இருப்பினும், சிறுவனுக்கு கண்பார்வை சுத்தமாக இல்லாததால், உடனே நியூரோ மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறான்.

சிறுவனின் குடும்பத்தினர்
சிறுவனின் குடும்பத்தினர்

அங்கு சிறுவனை மருத்துவர்கள் பரிசோதித்ததில், அவனுக்கு ’அட்ரினோலூகோடிஸ்ட்ரோபி’ என்கிற மரபணு சார்ந்த பிரச்னை இருப்பது தெரியவந்திருக்கிறது. இந்தப் பிரச்னையால் நாளடைவில் உடலிலுள்ள ஒவ்வோர் உறுப்பாகச் செயலிழந்துபோக வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

இது தொடர்பாக பல்வேறு மருத்துவமனைகளுக்கு ஏறி இறங்கிய சிறுவனின் பெற்றோர், இந்தப் பிரச்னையை சரிசெய்வதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள லட்சக்கணக்கில் செலவாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்ததால், செய்வதறியாமல் நிலைகுலைந்து நின்றிருக்கின்றனர். பிள்ளையின் உடல்நிலை பாதிப்பால் பரிதவிப்பில் இருந்தவர்கள் குறித்த தகவல் விகடன் அலுவலகத்துக்குக் கிடைத்தது.

உடனே சிறுவனின் வீட்டுக்குச் சென்று, அவனின் உடல்நிலை குறித்து விசாரித்து, 21.5.2023 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், `பறிபோன பார்வை... எழாத நாக்கு... கை கால் செயலிழப்பு... மரபணு பிரச்னையால் அவதிப்படும் சிறுவன்!’ எனும் தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

அமைச்சர் ட்வீட்
அமைச்சர் ட்வீட்

ஜூனியர் விகடன் செய்தியைத் தொடர்ந்து, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தை, இன்று தன்னுடைய இல்லத்துக்கு நேரில் அழைத்துச் சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது, சிறுவனுக்குத் தேவையான மேல் சிகிச்சைக்கு அரசு சார்பில் அமைச்சர் பரிந்துரை செய்தார்.

அதைத் தொடர்ந்து, சிறுவனைப் பரிசோதனை செய்ய சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் தேரணிராஜன் தலைமையிலான மருத்துவக்குழுவினர், சிறுவனின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தனர். பின்னர் மருத்துவக்குழுவுடன் பேசிய அமைச்சர், "சிறுவனை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனையைத் தொடங்குங்கள். எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களை அழைத்துவந்து சிறுவனைப் பரிசோதனை செய்யுங்கள். தேவையான உயர் சிகிச்சைகளை விரைந்து செய்யுங்கள்" என அறிவுறுத்தினார்.

சிறுவனின் குடும்பத்துடன் அமைச்சர்
சிறுவனின் குடும்பத்துடன் அமைச்சர்

மேலும், ``ஒருவேளை சிறுவனுக்குத் தேவையான பிரத்யேக சிகிச்சை வெளிநாடுகளில் வழங்கவேண்டியதிருந்தால், அதற்கான ஏற்பாடுகளையும் முதல்வரிடம் கேட்டுச் செய்துகொடுக்கிறேன். சிறுவனுக்குச் சிகிச்சை வழங்கும் நேரத்தில் சிறுவனின் பெற்றோர் தங்குவதற்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுகிறேன். அவர்களின் செலவையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்" என உறுதியளித்தார்.

மருத்துவக்குழுவினருடன் அமைச்சர்
மருத்துவக்குழுவினருடன் அமைச்சர்

இதையடுத்து, அமைச்சரின் காரிலேயே சிறுவன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு அவனுக்கு சிகிச்சைகள் தொடங்கப்பட்டன.

இது குறித்து சிறுவனின் பெற்றோரிடம் நாம் பேசினோம். "அமைச்சர் எங்களைக் கூப்பிட்டுப் பேசினது மட்டுமல்லாமல், பையனுக்குச் சிகிச்சைக்கு எல்லாமும் செய்துகொடுத்து, எங்களுக்கும் தங்குறதுல தொடங்கி எல்லா வசதியும் செய்து தருவதாகச் சொல்லியிருக்கிறார். அமைச்சருக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னே தெரியலை. ஜூனியர் விகடன் புக்குல இந்த செய்தி வந்தவுடனே, அடுத்தடுத்து எல்லாமே நடந்திருக்கு. விகடனுக்கும் அமைச்சருக்கும் ரொம்ப நன்றி" என்றனர் கண்களில் நீர் துளிர்க்க.