``அண்ணாவுக்கும் ராஜாஜிக்குமான சந்திப்பை ஏற்பாடு செய்தவர் என் தந்தை!’’ - மனம் திறக்கும் மோகன் ராமன்

எம்.ஜி.ஆர் அரசு என் தந்தையை அரசின் தலைமை வழக்கறிஞராக நியமித்தது. தனிப்பட்ட முறையில் கட்சிகளின் சட்ட ஆலோசகராகவும் என் தந்தை செயல்பட்டார்
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலை தொடங்கி இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் வரையிலான `அவ்வை சண்முகம் சாலை’யின் ஒரு பகுதிக்கு ‘வி.பி.ராமன் சாலை’ எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசின் முன்னாள் அட்வகேட் ஜெனரல், ஒன்றிய அரசின் சட்ட அலுவலர், வழக்கறிஞர், நடிகர், இசைக்கலைஞர் எனப் பல துறைகளில் சிறந்து விளங்கியவர் வி.பி.ராமன். கம்யூனிஸ்ட் அரசியல் பார்வைகொண்டிருந்த இவர், பின்னர் தி.மு.க-வில் இணைந்து செயற்குழுவில் இடம்பெற்றார். தி.மு.க-வின் சட்டதிட்டத்தை உருவாக்கும் குழுவிலும் பங்கேற்றவர். `திராவிட நாடு கொள்கை’யில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக 1961-ல் திமுக-விலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார்.
வி.பி.ராமனின் நினைவுகள் குறித்து அவருடைய மகனும், நடிகருமான மோகன் ராமன் அளித்த பேட்டி...

``உங்கள் தந்தையின் பெயர் முக்கியச் சாலைக்குச் சூட்டப்பட்டிருப்பது பற்றி..?”
``இப்படியான அறிவிப்பு வெளிவந்திருப்பது எங்களுக்குப் பெருமை. இதைச் சாத்தியப்படுத்திய முதல்வருக்கு என் குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.’’
“திராவிட இயக்கத்தில் பயணித்தவரல்லவா உங்கள் தந்தை வி.பி.ராமன்?”
``ஆமாம்... பல நாள்களில் தி.மு.க செயற்குழுக் கூட்டம் எங்கள் இல்லத்தில் நடைபெற்றிருக்கிறது. பேரறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., கண்ணதாசன், நெடுஞ்செழியன், ராசாராம், என்.வி.நடராசன், அன்பழகன், நடிகர் திலகம் சிவாஜி உட்பட பல ஆளுமைகளோடும் நெருங்கிப் பழகியவர் என் தந்தை. 1967-ம் ஆண்டு தேர்தலில் அண்ணாவுக்கும் ராஜாஜிக்குமான சந்திப்பை ஏற்பாடு செய்து, கூட்டணிக்கு உதவியவர் என் தந்தை வி.பி.ராமன்தான். அண்ணா மறைந்தபோது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்.”
``இந்திய அரசிலும், அரசியலிலும் முக்கியப் பதவிகளை அவர் வகித்தது குறித்துச் சொல்லுங்களேன்..?”
``நிச்சயமாக… காங்கிரஸ் அரசில் முதலமைச்சர் பக்தவத்சலம் என் தந்தையை அரசாங்க சொலிசிட்டர் ஜெனரலாக அறிவித்தார். அதன் பிறகு இந்திரா காந்தி அம்மையாரால் தென் மாநிலங்களிலிருந்து சட்டப் பதவிக்கு அழைக்கப்பட்ட முதல் நபரும் என் தந்தைதான். எம்.ஜி.ஆர் அரசு என் தந்தையை அரசின் தலைமை வழக்கறிஞராக நியமித்தது. தனிப்பட்ட முறையில் கட்சிகளின் சட்ட ஆலோசகராகவும் என் தந்தை செயல்பட்டார்.''

“அப்படியிருந்தும் நீங்கள் ஏன் அரசியல் பக்கம் வரவில்லை?”
``எனக்கு அரசியல் சரிப்பட்டு வராது. தெரிந்தே கைகளை உடைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை.’’ (சிரிக்கிறார்...)
“உங்கள் தந்தையின் கலைத்துறை அனுபவங்கள் பற்றி...”
``அவர் இசைமீது அலாதியான மதிப்புகொண்டிருந்தார். கர்னாடக இசையில் வல்லவர் அவர். 1966-ம் ஆண்டு, மலேசியாவில் நடந்த முதல் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு, `சங்ககாலத் தமிழ் இசை’ என்னும் பெயரில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தார். அந்த அளவுக்குத் தமிழிசையிலும் அவருக்கு ஆர்வமுண்டு. 16 வயதிலேயே புகழ்பெற்ற ஆங்கில, தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கிவிட்டார். எல்லாவற்றுக்குமேல் அலாதியான கிரிக்கெட் ரசிகர் அவர். ஒரு மேட்சையும் பார்க்காமல் விட மாட்டார்.”
“தமிழக முதல்வருக்கு உங்களின் மெசேஜ்... என்ன?”
``முன்பே சொன்னதுதான்... எனக்கு அரசியல் தெரியாது. என்னைப் பொறுத்தவரை முதலமைச்சர் ஸ்டாலின், எங்கள் குடும்ப நண்பர். அப்படித்தான் அவருடனான உறவு தொடர்கிறது. அது என்றென்றைக்கும் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்.’’