மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாரத்தான் மனிதர்கள் - 17 - பிளாஸ்டிக் கழிவுகளுக்காக ஒரு நடைப்பயணம்!

குழுவினருடன்
பிரீமியம் ஸ்டோரி
News
குழுவினருடன்

மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்

வில்லிவாக்கம் - பாடி சாலையில் ஒரு மாலைநேரப் பயணத்தில் பார்த்தேன் கௌதமை. கையில் கிளவுஸ் மாட்டிக்கொண்டு, கீழே கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை ஒரு சாக்குப்பையில் சேகரித்துக்கொண்டிருந்தார். வேடிக்கையாகவும் வியப்பாகவும் பார்க்கும் எவரையும் அவர் கண்டுகொள்ளவில்லை. கவர் பாதிக்கும்மேல் நிரம்பியிருந்தது. கடைகளில் வைக்கப்பட்டிருந்த குப்பைக்கூடைகளையும் துழாவி அவற்றில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளையும் சேகரிக்க, நிரம்பிவிட்டது கவர். ஒரு தம்பி அதைப் பெற்றுக்கொள்ள அடுத்த கவர் கைக்கு வருகிறது. ‘‘தம்பி, பெருமாள் கோயில் பக்கம் நிறைய பிளாஸ்டிக் குப்பைங்க கெடக்கு... அந்தப்பக்கமும் போங்க’’ என்று பைக்கில் வந்த ஒருவர் அழைப்பு விடுக்க, தலையாட்டுகிறார் கௌதம்.

‘‘ஒன்றரை கிலோ மீட்டர்தான் நடந்திருக்கேன்... குறைஞ்சது மூணு கிலோ கிடைச்சிருக்கும். இந்த ஒரு மணி நேர நடையில 66 ரூபாய் சேகரிச்சிருக்கோம்...’’ சிரிக்கிற கௌதம் ஓர் அசாத்தியமான பணியைச் செய்துகொண்டிருக்கிறார்.

3D, கிரியேட்டிவ் சுவர் ஓவியரான கௌதம், ‘வாக் ஃபார் பிளாஸ்டிக்' என்ற இயக்கத்தைக் கட்டியெழுப்பி உலகெங்கும் கொண்டு சேர்த்திருக்கிறார். 4,000 பேர் பல்வேறு நாடுகளில் காலையும் மாலையும் நடந்து பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்திருக்கிறார்கள். இந்தக் கழிவுகளை மறுசுழற்சிக்கு அனுப்புகிறார்கள். அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் பல நற்பணிகள் நடக்கின்றன. ஒரு வார்த்தைகூடப் பேசாமல், கழிவுகளைக் கைபோன போக்கில் வீசியெறிபவர்களின் இதயத்தை உலுக்கும் கௌதம், பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு உருவாக்கிய கொரோனா ஹெல்மெட், பேரிடர்க் காலங்களில் பெரும் விழிப்புணர்வை உருவாக்கியது.

கௌதம்
கௌதம்

‘‘அடுத்த தலைமுறைக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை உருவாக்குறோம்னு சின்னக் குற்ற உணர்வுகூட இல்லாம பிளாஸ்டிக் பாட்டில்களையும் கழிவுகளையும் தூக்கி வீசுறாங்க. எவ்வளவு பேசினாலும் மாறுவாங்களான்னு தெரியலே. அதான் செயல்ல இறங்கிட்டேன். பிள்ளைகள் தெருவுல இறங்கி பிளாஸ்டிக் சேகரிக்கும்போது பெத்தவங்களும் இறங்க வேண்டியிருக்கு. இதுவரைக்கும் என் பயணத்துல ஒரு லட்சம் பேராவது கூடவந்திருப்பாங்க. நிச்சயம் அவங்க ஒரு பிளாஸ்டிக் காகிதத்தைக்கூட இனிமே தெருவுல தூக்கி வீசமாட்டாங்க...’’ உற்சாகமாகப் பேசுகிறார் கௌதம்.

சென்னை, வில்லிவாக்கத்தில் வசிக்கிறார் கௌதம். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்திருக்கிறார். ‘‘தூக்கி எறியப்படுற ஒரு பிளாஸ்டிக் கழிவு, மக்கிப்போக முந்நூறு வருஷங்கள் ஆகும்னு சொல்றாங்க. அந்தக் கழிவு கிடக்கிற மண்ணுல எந்த விதையும் முளைக்காது. உயிரினங்கள் இருக்காது.

சென்னை மாநகராட்சியில மட்டும் ஒரு நாளைக்கு 100 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேருது. அதுல கால்பங்குகூட மறுசுழற்சிக்குப் போறதில்லை. எல்லாம் மண்ணுக்குப் போய் நீர்நிலைகளை அடைச்சுக்கிட்டு கொசுக்களை உருவாக்கி சுகாதாரச் சவாலை ஏற்படுத்துது. அதுக்கு பல நூறு கோடிகள் செலவு பண்ணுறோம். மறுசுழற்சி செய்றவங்க ஒரு கிலோ பிளாஸ்டிக்கை 22 ரூபாய்க்கு வாங்குறாங்க. 100 டன் பிளாஸ்டிக்கை முறைப்படி மறுசுழற்சிக்கு அனுப்பினா கிட்டத்தட்ட 22 லட்சம். இவ்வளவு பணத்தையும் நாம நிலத்துல கொட்டுறோம்...’’ - வருத்தமாகப் பேசுகிறார் கௌதம்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சுவர் ஓவியம் வரைந்து லட்சங்களை ஈட்டிக்கொண்டிருந்த கௌதமை திசைதிருப்பி, பூமியையும் சக மனிதர்களையும் பற்றிக் கவலைகொள்ள வைத்தது இயற்கை. இதுவரைக்கும் கௌதம் குழுவினர், தெருக்களில் நடந்து 28 டன் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து மறுசுழற்சிக்கு அனுப்பியுள்ளார்கள்.

மாரத்தான் மனிதர்கள் - 17 - பிளாஸ்டிக் கழிவுகளுக்காக ஒரு நடைப்பயணம்!

ஒரு ஐரோப்பிய நாட்டில், கருவுற்றிருந்த டால்பின் ஒன்று கரையொதுங்கியது. அதைக் கடலில் விட எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. இறந்துவிட்டது. குட்டியையாவது காப்பாற்றலாம் என்று அங்கிருந்தவர்கள் வயிற்றைக் கிழித்தபோது 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தன. இந்த நிகழ்வுதான் கௌதமை இந்த இடத்துக்கு நகர்த்திக்கொண்டு வந்திருக்கிறது.

‘‘ரொம்பவே மன அழுத்தம் தந்த நிகழ்வு அது. கடலுக்குள்ள இருக்கிற ஒரேயொரு உயிரினத்துக்குள்ள 40 கிலோ பிளாஸ்டிக் இருந்தா, கடல் என்னவாகியிருக்கு..? கண்ணுக்குத் தெரிஞ்சு செய்ற ஒரு தவறு, நமக்கு நாமே வச்சுக்கிற தீ மாதிரி பரவிக்கிட்டிருக்கு. களத்துல இறங்கி ஏதாவது செய்ய நினைச்சேன்.

தெருவுல நடக்கும்போது நிறைய ஸ்ட்ராக்கள் கண்ணுல பட்டுச்சு. ரெண்டு நிமிஷம் ஒரு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்கிறதுக்காக ஒரு கழிவை உருவாக்குறோம்... கீழே கிடக்கிற ஸ்ட்ராவையெல்லாம் பொறுக்க ஆரம்பிச்சேன். ஒரு மாசத்துல கிட்டத்தட்ட பத்தாயிரம் ஸ்ட்ராவுக்கு மேல கிடைச்சுச்சு. அதை வச்சு ஒரு மீன், தசையே இல்லாம முள்ளாக் கிடக்கிற மாதிரி ஒரு சிற்பத்தை உருவாக்கினேன். எங்கெல்லாம் மக்கள் கூடுறாங்களோ அங்கெல்லாம் அதைப் பார்வைக்கு வச்சேன். பிளாஸ்டிக் கழிவுகளைக் கைபோன போக்குல தூக்கி வீசுறதோட பாதிப்புகளைப் பேசினேன்.

பாட்டில்களைவிட மூடிகள் இன்னும் விபரீதம். என் பிறந்தநாளுக்கு, ‘பரிசு தர விரும்புற நண்பர்கள் வாட்டர் பாட்டில் மூடிகளாத் தாங்க'ன்னு கேட்டேன். 10,000 மூடிகள் கிடைச்சுச்சு. நானும் தெருவுல இறங்கி மூடிகளைச் சேகரிச்சேன். கிட்டத்தட்ட 45,000 மூடிகளைச் சேகரிச்சு ஒரு திமிங்கிலம் உருவம் செஞ்சேன். அதுவும் பெரிய தாக்கத்தை உருவாக்குச்சு.

எங்கெல்லாம் போறேனோ, அங்கெல்லாம் கண்ணுல படுற பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்துச் சேகரிக்கிறது ஒரு பழக்கமாவே மாறிடுச்சு. அப்படி சேகரிச்ச 500 கிலோ கழிவுகளை வச்சு ஒரு கிறிஸ்துமஸ் மரம் செஞ்சேன்.

இப்படி நான் செய்த மீன், திமிங்கிலமெல்லாம் பழைய இரும்புக் கடையில போட்டப்போ நிறைய பணம் கிடைச்சுச்சு. அதையே விரிவா செய்யலாம்னு யோசிச்சேன். தினமும் நாம வாக்கிங் போகும்போது பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்து, சேகரிச்சுப் பணமாக்குவோம். அந்தப் பணத்தைப் பயனுள்ள வகையில செலவு செய்வோம்னு திட்டமிட்டேன்.

தினமும் காலையும் மாலையும் வாக்கிங் போகும்போது ஒரு பிளாஸ்டிக் கவர் எடுத்துட்டுப் போவேன். கீழே கிடக்கிற பிளாஸ்டிக் கழிவுகள் எல்லாத்தையும் சேகரிச்சுக் கொண்டுவந்து பழைய இரும்புக்கடையில போடுவேன். முதல்நாள் ஒன்றரைக் கிலோ கிடைச்சுச்சு. அதுல கிடைக்கிற காசை தனியா சேமிச்சேன். அக்கம் பக்கத்துல இதைப் பாக்குறவங்க தப்பாப் பேச, அம்மா கடுமையா கோபப்பட ஆரம்பிச்சுட்டாங்க.

அந்த நேரம் ஒரு ஆங்கில நாளிதழில் என்னைப் பத்தி ஒரு கட்டுரை வர, அதைப் பார்த்த உறவுக்காரங்களெல்லாம் அம்மாகிட்ட பெருமையா பேச, அவங்க மனம் மாறிடுச்சு. தினமும் எவ்வளவு பிளாஸ்டிக் கழிவுகள் கிடைச்சுதுங்கிறதை சோஷியல் மீடியாவுல போட ஆரம்பிச்சேன். ஒருத்தர், ரெண்டு பேரா வந்து கூட நடந்து பிளாஸ்டிக் சேகரிக்க ஆரம்பிச்சாங்க. 50வது நாள் மிகப்பெரிய கூட்டம் என்கூட நின்னுச்சு. இன்னொரு பக்கம், என் சோஷியல் மீடியா போஸ்ட்ட பார்த்து மலேசியா, கென்யா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மாதிரி நாடுகள்ல எல்லாம் ‘நாங்களும் பிளாஸ்டிக் வாக் போறோம்'னு போய் போட்டோக்கள் அனுப்பினாங்க. இதை ஒரு மூவ்மென்ட்டா மாத்த வேண்டிய தேவை வந்துச்சு. Walk for Plastic-னு பேரு வச்சேன். பிரமாண்டமா விரிஞ்சு இன்னைக்கு உலகம் முழுவதும் நாலாயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் காலை, மாலை நடந்து பிளாஸ்டிக் சேகரிக்கிறாங்க. அதுல கிடைக்கிற காசு நிறைய நல்ல விஷயங்களுக்குப் போகுது...’’ பெருமிதமாகச் சொல்கிறார் கௌதம்.

மாரத்தான் மனிதர்கள் - 17 - பிளாஸ்டிக் கழிவுகளுக்காக ஒரு நடைப்பயணம்!

இப்போது சேகரிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி நிறுவனத்திடம் விற்கிறார் கௌதம். இதுவரை ரூபாய் 1.3 லட்சம் அவரது சேமிப்பில் இருக்கிறது. அதன்மூலம் செம்பருத்தி, சைலஜா, தீபிகா என மூன்று பெண் குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்.

‘‘கழிவுகளைச் சேகரிக்கிறதுக்காகத் தங்களை முழுசா அர்ப்பணிக்கிற தூய்மைப் பணியாளர்களோட வாழ்க்கை இதுவரை மாறவே இல்லை. கல்வி மட்டும்தான் அவங்களை மீட்கும். அதனால இதன்மூலம் கிடைக்கும் பணத்தை அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் படிக்கச் செலவிடலாம்னு முடிவு செஞ்சோம். அவங்களோட எதிர்காலத்தை முழுசா நாங்க தத்தெடுத்துக்கிட்டோம். செம்பருத்தி, நேஷனல் பாக்சிங் போட்டியில மெடல் வாங்கியிருக்காங்க. தீபிகா நல்லா வரையிறாங்க. அவங்களுக்குத் தனியா பயிற்சி கொடுக்கிறோம்.

75 கி.மீ வாக், 25 கி.மீ வாக்னு விதவிதமான நிகழ்ச்சிகளை நடத்துவோம். 75 கி.மீ நடத்துன வாக்ல 400 பேர் கலந்துகிட்டாங்க. 650 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிச்சோம். இப்போ நிறைய குழந்தைகளை இதுக்குள்ள கொண்டு வர்றோம்.

கொரோனாவுக்குப் பிறகு பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாயிருக்கு. இது கொரோனாவை விட அபாயம். அடுத்த தலைமுறைக்கு நாம உருவாக்கி வைக்கிற புதைகுழி மாதிரி. கீழடியில தோண்டி நம் பழைமையான நாகரிகத்தின் அடையாளங்களை எடுக்கிறோம். இன்னும் நூறு வருஷம் தாண்டி நம் அடையாளங்களைத் தோண்டிப் பார்த்தா வாட்டர் பாட்டில்கள், ஷாம்பு சாஷேக்கள், பாலித்தீன் கவர்கள்தான் கிடைக்கும். குற்ற உணர்வே இல்லாமல் பிளாஸ்டிக் கழிவுகளைத் தூக்கி வீசுற மக்கள் நிச்சயம் யோசிக்கணும். பிளாஸ்டிக்குக்கு மாற்றுப்பொருள்களை நாங்க போற இடங்கள்ல எல்லாம் அறிமுகம் செய்றோம். மனமிருந்தால் மார்க்கம் உண்டு...’’ என்கிறார் கௌதம்.

மாரத்தான் மனிதர்கள் - 17 - பிளாஸ்டிக் கழிவுகளுக்காக ஒரு நடைப்பயணம்!

மூன்றாண்டுகளுக்கு முன்பு கௌதமோடு சேர்ந்து பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்த ஆர்க்கிடெக்ட் சூர்யா, இப்போது மனைவியாக கரம்கோத்துச் செல்கிறார். குழந்தைகளுக்குக் கல்வி வழங்கும் செயல்பாட்டை வழிநடத்துவது அவர்தான்.

‘‘கிட்டத்தட்ட 900 நாளை நெருங்குறோம். 4,000-மாவது நாள், ஒரு பிளாஸ்டிக் கழிவுகூட கிடைக்காம நாங்க வெறும் கையோட திரும்பணும். அதற்குள்ள ஒன்றரைக் கோடிப்பேரை இந்த மூவ்மென்ட்டுக்குள்ள கொண்டு வரணும்... நிறைய கனவுகள் இருக்கு... நடப்போம்...’’

கரம்பற்றி விடைதந்துவிட்டு, பணியைத் தொடர்கிறார் கௌதம். மொத்த உலகத்துக்குமான உங்கள் கனவு நனவாக இயற்கை துணை நிற்கும் கௌதம்!

- வருவார்கள்...