மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாரத்தான் மனிதர்கள் - 18 - கல்வி கொடுத்துத் தந்தையுமானவர்!

முத்துராமன்
பிரீமியம் ஸ்டோரி
News
முத்துராமன்

மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்

‘‘முப்பத்தாறு வருஷமாச்சு தோழர். இங்க வந்து ரெண்டு தலைமுறையாகிப்போச்சு. இங்கேயே பிறந்து வளர்ந்து அடுத்த தலைமுறையும் ஆளாகிடுச்சு. ஆனா அந்தப் பிள்ளைகளையும்கூட நாம அகதிகள்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்? ‘எங்களையெல்லாம் எப்பப்பா உங்க மக்களா ஏத்துக்குவீங்க’ன்னு அவங்க கேக்கும்போது இதயம் நடுங்குது தோழர்...’’ முத்துராமன் பேசும்போது குரலும் நடுங்குகிறது. கண்கள் கலங்குகின்றன.

முத்துராமன், நாகர்கோவிலைச் சேர்ந்தவர். 1980-களில் இலங்கை இனக்கலவரம் காரணமாகத் தமிழகத்துக்கு வந்து இன்னும் அகதிகளாகவே வாழ்ந்துகொண்டிருக்கிற இலங்கைத் தமிழ் மக்களின் பிள்ளைகள் 250 பேர் முத்துராமனால் தாங்கள் விரும்பிய கல்வியைப் படித்துக்கொண்டிருக்கிறார்கள். பொதுச் சமூகத்தின் பார்வையிலிருந்து விலகியிருக்கிற அந்த மக்களுக்காகத் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்து இயங்குகிறார் முத்துராமன். நெடிதுயர்ந்த உருவம், இறுக்கமான முகம், உணர்வுகளுக்குத் திரையிடும் தாடி மீசையென இருக்கிற முத்துராமனின் பேச்சில் அவ்வளவு கனிவு.

‘‘ஆரம்பத்திலேயே ஒரு விஷயம் சொல்லிடறேன் தோழர். எந்த வேலையையும் நான் தனிப்பட்டுச் செய்ததில்லை. எங்கெங்கோ முகம் தெரியாத மனிதர்களெல்லாம் கொடுக்கிற உதவிகளை சரியான இடத்துல கொண்டு சேர்க்கிறேன். ஒரு தபால்காரர் மாதிரி! கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர், முப்பது வருஷத்துக்கு மேல இங்கே அகதிகளா வாழ்றாங்க. மத்த எல்லோருக்காகவும் பேச ஆள் இருக்காங்க தோழர். அவங்களுக்காக யார் பேசுறா? பல பேருக்கு அப்படியொரு சமூகம் இங்கே வாழ்றதே தெரியாது’’ - உரையாடலின் தொடக்கத்திலேயே நம்மை அதிர்ச்சிக்குப் பழக்குகிறார் முத்துராமன்.

முத்துராமனின் அப்பா சண்முகவேல், கூட்டுறவுத்துறையில் அதிகாரியாக இருந்தவர். ஓவியக்கலைஞரும்கூட.

‘‘ஒரு அக்கா, நாலு தம்பிகள்னு பெரிய குடும்பம் தோழர். அப்பாதான் எங்களுக்கு முதல் ஆசிரியர். ரோல்மாடலும் அவர்தான். நேர்மையான அதிகாரி. அதனால அடிக்கடி டிரான்ஸ்பர் வரும். எங்களையெல்லாம் நாகர்கோவில்ல வச்சுட்டு அவர் மட்டும் ஊர் ஊரா அலைஞ்சார். அவர் லீவ்ல இருந்தா எங்க வீடே வகுப்பறையாயிடும். எல்லோரையும் உக்கார வச்சு இலக்கியங்கள் சொல்லித்தருவார். ஓவியம் வரையக் கத்துத்தருவார். வீடு முழுக்கப் புத்தகங்களா இருக்கும். வாசிப்பும் இயல்பாவே வந்திடுச்சு.

நான் பள்ளிக்கூடம் படிச்ச காலத்தில ஈழப்போராட்டம் உச்சத்துல இருந்துச்சு. மாணவர்கள் மத்தியில மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்ட காலம். கல்லூரிக்காலத்துல இசை நிகழ்ச்சி நடத்தி மறுவாழ்வு நிதியெல்லாம் திரட்டித் தந்திருக்கோம்.

எல்லாம் நல்லாப் போய்க்கிட்டிருந்த நேரத்துல பணியில இருக்கும்போதே அப்பா இறந்துட்டார். அப்படியே எல்லாம் ஸ்தம்பித்து நின்னமாதிரி இருந்துச்சு. மூத்தவனா எல்லாரையும் வழிநடத்த வேண்டிய பொறுப்பு. அப்பாவோட இறப்பால கருணை அடிப்படையில கிடைச்ச பணியைத் தம்பிக்குத் தந்து செட்டில் பண்ணினேன். இருந்த முதலீட்டை வச்சு சொந்தமா ஒரு தொழில் ஆரம்பிச்சேன். என் இயல்புக்கு அது சரியா வரலே. ஒரு லாரி கம்பெனியில அக்கவுன்டன்டா சேர்ந்தேன். அந்தக் காலக்கட்டத்துல நண்பர்கள் சிலர் சினிமாவுக்குப் போய் ஜெயிச்சாங்க. எனக்கும் சினிமா ஆசை. அக்கா திருமணம் முடிந்தபிறகு சென்னை வந்து இயக்குநர் கிங்ஸ்லிகிட்ட சேர்ந்தேன். அந்த நேரத்துல காரைக்கால்ல நடந்த சம்பவம் என்னைப் புரட்டிப்போட்டுருச்சு’’ - இடைநிறுத்துகிறார் முத்துராமன்.

மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்த வினோதினி என்ற பெண்மீது ஒரு கொடூரன் ஆசிட் வீசினான். மிகவும் ஆபத்தான நிலையில் வினோதினி சிகிச்சை பெற்றுவந்தார்.

‘‘மனசை உலுக்கிருச்சு அந்தச் சம்பவம். போய் வினோதினியோட பெற்றோரைப் பார்த்தேன். மருத்துவத்துக்கு நிறைய பணம் தேவைன்னாங்க. சமூக ஊடகங்கள்ல எழுதினேன். தெரிஞ்ச நண்பர்கள்கிட்ட கேட்டேன். நிறைய நிதி கிடைச்சுச்சு. ஆனா வினோதினியைக் காப்பாற்ற முடியலே. பார்வை இழந்த நிலையிலயும் வினோதினி என்னை அப்பான்னு கூப்பிட்டா.

மாரத்தான் மனிதர்கள் - 18 - கல்வி கொடுத்துத் தந்தையுமானவர்!

வாழ்க்கையில பெரிசா லட்சியமெல்லாம் எதுவும் இல்லாம மனம் போன போக்குல போன ஆளுதான் நான். ஏனோ வினோதினி என் மகளா என் மனசுல உக்காந்துக்கிட்டா. தொடர்ச்சியா ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. நாகர்கோவில்ல ஞாறாம்முளை அகதிகள் முகாம்ல ப்ளஸ் டூ-ல நல்ல மார்க் எடுத்த ஒரு பெண்ணுக்குப் படிப்புக்கு உதவி தேவைன்னு ஒரு செய்தி வந்துச்சு. அந்தக் குழந்தைக்கு உதவுற அளவுக்கு எனக்குப் பெரிய வருமானமில்லை. உண்மையைச் சொல்லணும்னா அப்போ சோத்துக்கே சிரமப்பட்டேன். ஆனா ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். முகாமுக்குப் போய் அந்தப்பொண்ணு பத்தின விவரங்களைக் கேட்டப்போ, இன்னும் மூணு பேர் +2 முடிச்சுட்டு உதவிக்காகக் காத்திருக்காங்க. அவங்களுக்கும் ஏதாவது பண்ணுங்கன்னு சொன்னாங்க.

அகரம் பவுண்டேஷனைத் தொடர்பு கொண்டு இந்தப்பிள்ளைகள் பத்திச் சொன்னேன். ரெண்டு பிள்ளைகளுக்கு நாங்க உதவி செய்றோம்னு சொன்னாங்க. ஒரு பொண்ணு பொறியியல், இன்னொரு பெண் சட்டம்னு சேர்ந்தாங்க. வெளிநாட்டுல வேலை செய்றவங்க சேர்ந்து முழுமதி அறக்கட்டளைன்னு ஒரு அமைப்பு நடத்துறாங்க. அவங்களுக்கு விவரத்தை அனுப்பி உதவி கேட்டேன். அவங்க முழுமையா நாங்க பார்த்துக்கிறோம்னு சொல்லிட்டாங்க. இந்த நிகழ்ச்சிக்கு அப்புறம் நிறைய பேர் தொடர்புகொள்ள ஆரம்பிச்சாங்க.

தமிழ்நாட்டுல 107 இலங்கை அகதிகள் முகாம்கள் இருக்கு தோழர். அதுல 70,000 பேர் இருக்காங்க. 30,000 பேர் அரசாங்க அனுமதியோட முகாமுக்கு வெளியே வாழ்றாங்க. பத்துக்குப் பதிமூணு சைஸ்ல ஒரு வீடு... குடிநீர், மின்சாரம் தவிர, குடும்பத் தலைவருக்கு 1,500 ரூபாய், 12 வயதுக்கு மேல இருக்கிற ஒவ்வொருத்தருக்கும் 1,000 ரூபாய், 12 வயதுக்குக் கீழேயிருக்கவங்களுக்கு 500 ரூபாய் அரசு உதவித்தொகை தருது. இதுபோக ரேஷன் பொருள்களும் உண்டு. முகாமுக்கு வெளியே இருக்கவங்களுக்கு இதுல எந்தச் சலுகையும் கிடைக்காது.

முகாம் மக்கள் பெரும்பாலும் கட்டட வேலை, கடை வேலைக்குப் போவாங்க. பிள்ளைகள் அரசுப்பள்ளி, அரசுக்கல்லூரிகள்ல சேர்றதுல பிரச்னை இல்லை. இன்ஜினீயரிங் கவுன்சிலிங்கூடப் போகலாம். ஆனா நீட் எழுத முடியாது. பாராமெடிக்கல் கவுன்சிலிங் போகமுடியாது. மத்திய, மாநில அரசுப்பணித் தேர்வுகள் எழுதமுடியாது. அரசு வேலைக்கும் போகமுடியாது. கல்விக்கடன் வாங்க முடியாது. தேர்வுகளை எழுதி கல்லூரி ஆசிரியராகவோ, பள்ளி ஆசிரியராகவோ முடியாது. பல நேரங்கள்ல அரசு உதவித் தொகைகள் கிடைக்குறதுலகூட சிக்கல்கள் இருக்கு.

அரசு கொடுக்கிற உதவித்தொகையைத் தாண்டி கூலிவேலைகள்ல கிடைக்கிற சம்பளம் மட்டும்தான் இவங்களோட நம்பிக்கை. வேறெந்த உரிமையும் இவங்களால கோரமுடியாது. உண்மையைச் சொல்லணும்னா யார்கிட்ட உதவி கேக்குறதுன்னுகூட தெரியாது. சிலபேருக்கு வெளிநாடுகள்ல உறவினர்கள் இருப்பாங்க. அவங்க உதவி செய்வாங்க. 90 சதவிகிதம் பேரோட நிலை கஷ்டம்தான். யாராவது ஒரு மீட்பர் வரமாட்டாரான்னு தவிக்கிறாங்க. நான் போய் நின்னவுடனே ஒரு சில வாரங்கள்லயே எல்லா முகாம்களுக்கும் தகவல் போயிடுச்சு. பல முகாம்கள்ல இருந்து உதவிகள் கேட்டு அழைப்பு வர, இந்த வேலையை சீரியஸா செய்யணும்னு முடிவு பண்ணிட்டேன்.

பெரும்பாலும் பி.இ படிக்கிறாங்க. ஆனா ஐ.டி நிறுவனங்கள்ல இவங்களை வேலைக்கு எடுக்கத் தயங்குறாங்க. எது படிச்சாலும் உள்ளூர்ல கிடைக்கிற பெயின்டிங், பிளம்பிங் மாதிரி வேலையைச் செய்யவேண்டிய நிலை. அதனால பலபேர் படிக்கவே விரும்புறதில்லை. ‘4 வருஷம் படிச்சுட்டு பெயின்ட் அடிக்கப் போறதுக்கு, இப்பவே போனா நாலு வருஷத்துல சொந்தமா தொழில் ஆரம்பிச்சிடலாம்'னு சொல்வாங்க. இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகள்ல தங்கப்பதக்கம் வாங்கின ஒரு பையன் எம்பில் முடிச்சுட்டு ஒரு தனியார் பள்ளியில ஆசிரியரா இருக்கார். அவ்வளவுதான் அவங்க எல்லை.

ப்ளஸ் டூ தேர்வு முடிஞ்சவுடனே முகாம் தலைவர்கள் என்னைத் தேட ஆரம்பிச்சிருவாங்க. பெரும்பாலும் பிள்ளைகளை பாராமெடிக்கல் படிக்கச்சொல்வேன். நர்சிங், பி.பார்ம், உதவி மருத்துவப் படிப்புகள் படிச்சா உள்ளூர்லயே ஓரளவுக்கு நல்ல சம்பளத்துல வேலை கிடைச்சிடும். உதவி தேவைப்படுறவங்களோட பட்டியலைச் சேகரிச்சு கையில வச்சுக்கிட்டு தெரிஞ்சவங்களையெல்லாம் தொடர்பு கொள்வேன். சிலபேர் வருடா வருடம் உதவி செய்வாங்க. எழுத்தாளர் ஜெயமோகன் என்னைப்பத்தி அவரோட இணையப் பக்கத்துல எழுதியிருந்தார். அதிலிருந்து அவரோட வாசகர் வட்ட நண்பர்கள் பலர் தொடர்ந்து உதவி செய்றாங்க. எஸ்.ராமகிருஷ்ணன்னு ஒரு தம்பி... ஆரம்பத்துல இருந்து எனக்கு பக்கபலமா நிக்குறார். அவர் மூலமா கல்வி பெற்ற பிள்ளைகள் நிறைய. எங்கிருந்தும் உதவிகள் வராத நேரத்துல ‘தம்பி, நீ இந்தப் பிள்ளையப் பாத்துக்கடா'ன்னு அவர் பொறுப்புல விட்டுருவேன். கொரோனா நேரத்துலகூட இந்தத் தம்பி உட்பட பலர் கைகொடுத்தாங்க.

மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் தர்றதில்லை. படிக்கிற ஆர்வம், குடும்பச்சூழலைத்தான் பார்ப்பேன். படிச்சுட்டு இடைநின்ற பிள்ளைகளையும் திரும்ப பள்ளி, கல்லூரிக்குக் கொண்டு போயிருவேன். சில நேரங்கள்ல நிறைய தேவைகள் உருவாகிடும். சிலபேருக்கு உதவமுடியாமக்கூடப் போகும். பெரிய குற்ற உணர்வாயிடும். பவானிசாகர் முகாம்ல ஒரு பையனுக்கு உதவி தேவைப்பட்டுச்சு. அப்பா இல்லை, அம்மாவும் அவனும்தான். அந்தத் தருணத்துல என்னால அவனுக்கு உதவமுடியலே சமீபத்துல பழைய தரவுகளைப் பார்த்துக்கிட்டிருந்த போது அவன் பேர் கண்ணுல பட்டுச்சு. என்ன ஆனான்னு விசாரிக்க ஆரம்பிச்சேன். அம்மாவும் மகனும் ஒரு குவாரியில வேலை பார்த்துக்கிட்டிருந்தாங்க. போய் மன்னிப்பு கேட்டுக் கூட்டிட்டு வந்து, பி.பார்ம் சேர்த்துவிட்டேன். ரொம்ப மனநிறைவா இருந்துச்சு.

மாரத்தான் மனிதர்கள் - 18 - கல்வி கொடுத்துத் தந்தையுமானவர்!

பெரிசா கணக்கு வச்சுக்கிறதில்லை தோழர். நினைவு சரியாயிருந்தா இப்போவரைக்கும் 250 பிள்ளைகள் இருப்பாங்க. இதுல அதிகபட்சமா ஏழெட்டுப் பேருக்குத்தான் என் சம்பாத்யத்துல இருந்து உதவியிருப்பேன். மற்ற எல்லாமே மத்தவங்க கொடுத்ததுதான். கையேந்தத் தயங்கவே மாட்டேன். அரங்கசாமி, பிரதீப்னு ரெண்டு பேர், ‘எத்தனை பேர் இருந்தாலும் சொல்லுங்க, நாங்க பணம் ஏற்பாடு பண்ணித் தாரோம்'னு சொல்லியிருக்காங்க. அவங்க உதவியில பலபேர் படிச்சுக்கிட்டிருக்காங்க. இப்படி கடந்த பத்து வருஷத்துல இடைவிடாம உதவி செய்ற பலபேர் இருக்காங்க. கல்லூரியில சேர்க்கிறதோடு விடாம பிள்ளைகளோட கல்வித்திறனைத் தொடர்ந்து பாலோ பண்ணுறது, எங்கேயாவது சப்போர்ட் தேவைப்பட்டா நிக்குறதுன்னு தொடர்ந்து நடக்குறேன். நிறைய பிள்ளைகள் படிச்சு முடிச்சு வேலைக்குப் போகத் தொடங்கிட்டாங்க.

என் பிழைப்புக்குக் கதை விவாதங்களுக்குப் போறேன் தோழர். ஒரு நண்பனோடு சேர்ந்து சின்னதா ஒரு ஹோட்டல் நடத்துறேன். என் தம்பி ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் நடத்துறான். அதுல வேலை செய்வேன். அவன் மாசம் ஒரு தொகை தருவான். என் பயணங்கள், என் வாழ்க்கைக்கு இது போதுமானதா இருக்கு.

நான் இந்த வேலையில இறங்காம இருந்திருந்தா அர்த்தமில்லாமப்போயிருக்கும். இப்போ ரொம்ப மனசுக்கு நிறைவா இருக்கு தோழர். கல்யாணமே செஞ்சுக்காத என்னை, பிள்ளைகளெல்லாம் அப்பான்னு கூப்பிடும்போது மனசுக்குள்ள ஏதோவொன்னு சுரக்குது தோழர். தந்தைமைங்கிறது எவ்வளவு பெரிய இடம். இன்னும் நிறைய செய்யத்தோணுது. மாற்றுத்திறனாளிப் பிள்ளைகள், பட்டியலினப் பிள்ளைகளுக்கு இன்னும் மேலான கல்வி கொடுக்கணும் தோழர். அதுக்காக சில நண்பர்கள் உதவ முன்வந்திருக்காங்க. பெரிய செயல் திட்டத்தோட ஊர் முழுக்கச் சுத்திக்கிட்டிருக்கேன்.

எனக்கு ஒரே ஒரு கோரிக்கைதான் தோழர். வந்து 36 வருஷமாச்சு. இன்னைக்கிருக்கிற தலைமுறை இலங்கையைப் பார்த்ததுகூட இல்லை. நம்ம மண்ணுல பிறந்து நம்ம கூடவே வளர்ற பிள்ளைங்க. அவங்களையும் அகதிகளா பார்க்கிறது நியாயமில்லை. அவங்க நம்ம தொப்புள்கொடி உறவுகள். இந்தப் பிள்ளைங்க எதிர்காலத்தை நினைச்சாவது தமிழக அரசாங்கம் அழுத்தம் கொடுத்து இவங்களுக்குக் குடியுரிமை வாங்கித்தரணும்...’’ அன்பும் அக்கறையும் ததும்புகின்றன முத்துராமனின் வார்த்தைகளில்.

நிச்சயம் நல்லது நடக்கும் தோழர்!

- வருவார்கள்