மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாரத்தான் மனிதர்கள் - 19 - குளங்களை மீட்கும் இளைஞர்

மணிகண்டன்
பிரீமியம் ஸ்டோரி
News
மணிகண்டன்

மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்

``நம்மைச் சுத்தி நிறைய பிரச்னைகள் இருக்கு தோழர். கண் முன்னால தவறுகள் நடக்குது. ‘என்ன கொடுமைடா இது'ன்னு மனசுக்குள்ளே குமைஞ்சுக்கிட்டு கடந்து போயிடலாம். ஆனா நின்னு, ‘ஏன் இப்படி'ன்னு சின்னதா ஒரு கேள்வி எழுப்பிப் பாருங்க... ஆயிரம் குரல்கள் சேர்ந்து எழும். இதுதான் என் அனுபவம்...’’

மணிகண்டன் அவ்வளவு உணர்வுபூர்வமான மனிதராக இருக்கிறார். பேச்சிலும் செயலிலும் அவ்வளவு தெளிவு. கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர். நீர்நிலைப் பாதுகாப்பை மக்கள் பங்களிப்புடன் பேரியக்கமாக வளர்த்தெடுத்தது மணிகண்டனின் தனித்தன்மை. கொங்கு வட்டாரத்தில் மணிகண்டன் எழுப்பிய பொறி பெருநெருப்பாகி ஏராளமான ஏரிகள், குளங்கள், குட்டைகளை மீட்டெடுத்திருக்கிறது. மணிகண்டனின் தனிப்பட்ட முயற்சியில், அழிவின் விளிம்பில் இருந்த 4 பெரிய குளங்கள், 9 குட்டைகள் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. சமூக ஊடகங்கள் வழி ஒவ்வொரு ஞாயிறும் பல நூறு பேரைத் திரட்டும் மணிகண்டன், நீர்நிலை மீட்பு, வடிகால் பராமரிப்பு, மியாவாக்கி காடுகள் உருவாக்கம் எனத் தீவிரமாக இயங்குகிறார்.

கோவை, சுந்தராபுரத்தில் ஒரு லேத் பட்டறை வைத்திருக்கிறார் மணிகண்டன். ‘‘கூட ரெண்டு பேர் வேலை செய்றாங்கண்ணா. நான் சும்மா மேலாண்மை செய்றதோட சரி. அவங்களாலதான் தொழில் ஓடுது. அவங்களுக்குக் கொடுத்தது போக என் வாழ்வாதாரத்துக்கு இது போதுமானதா இருக்கு...’’ என்று சிரிக்கிறார்.

மாரத்தான் மனிதர்கள் - 19 - குளங்களை மீட்கும் இளைஞர்

மணிகண்டனின் அப்பா லாரி டிரைவர். இரண்டு சகோதரிகளோடு பிறந்த மணிகண்டனுக்கு பெரிதாக படிப்பு வரவில்லை. ஒன்பதாம் வகுப்போடு கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சித்தப்பா நடத்திய லேத் பட்டறைக்கு வேலைக்குச் சென்றுவிட்டார்.

‘‘எங்க ஒர்க்‌ஷாப்புக்குப் பக்கத்துல சரஸ்வதி, வெங்கட்ராமன்னு ஒரு தம்பதி குடிவந்தாங்க. ரெண்டு பேருமே தொலைத்தொடர்புத் துறையில வேலை செஞ்சவங்க. தொழிற்சங்கவாதிங்க. அந்தச் சின்ன வயசுல அவங்கதான் எனக்கு ரோல் மாடல். ‘அரசாங்கம் செய்ய வேண்டிய வேலைகள்ங்கிறது, மக்களோட உரிமை. அதுக்காக லஞ்சம் கொடுக்கக்கூடாது. லஞ்சம் கேட்டா கேள்வி எழுப்பி அம்பலப்படுத்தணும். நீ எழுப்புற குரல் பாதிக்கப்பட்ட எல்லோரையும் ஒருங்கிணைக்கும். பத்துக்குரல் ஒண்ணு சேந்துட்டா, தப்பு செய்றவங்க பயப்படுவாங்க'ன்னு சொல்வார் வெங்கட்ராமன் அய்யா.

மணிகண்டன்
மணிகண்டன்

அப்போ நான் ஏழாவது படிச்சுக்கிட்டிருந்தேன். உக்கடத்துக்குக் காய்கறி வாங்குறதுக்காக 25 ரூபாய் வாங்கிக்கிட்டு பஸ்ல போனேன். 20 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கினேன். ரூ. 1.50 டிக்கெட். 3.50 மட்டும் கொடுத்துட்டு கண்டக்டர் போயிட்டார். மிச்ச சில்லறை கேட்டப்போ, ‘நீ 5 ரூபாய்தான் கொடுத்தே'னுட்டார். எனக்கு அழுகை வந்திடுச்சு. நான் இறங்க வேண்டிய ஸ்டாப்புக்கு முன்னாடியே இறங்கி போக்குவரத்துக் காவலர்கள்கிட்ட போய்ச் சொன்னேன். அங்கேயே ஒரு அரசுப் பேருந்து கண்காணிப்பாளரும் நின்னார். ‘சரி, இங்கேயே நில்லு, பஸ் திரும்பி வரட்டும்'னு சொன்னாங்க. பஸ் திரும்ப வந்தப்போ நிறுத்தி கண்டக்டரைக் கூப்பிட்டு விசாரிச்சாங்க. ‘இந்தப் பையன் பொய் சொல்றான்'னு அவர் சொன்னார். ‘சரி, உன் பேக்கைக் கொடு'ன்னு வாங்கி செக் பண்ணுனாங்க. சரியா 15 ரூபாய் அதிகமா இருந்துச்சு. கண்டக்டர் மன்னிப்பு கேட்டார். இந்தச் சம்பவத்தை அப்படியே கடிதமா எழுதி ஆல் இந்திய ரேடியோவுக்கு அனுப்பி வச்சார், வெங்கட்ராமன். ரேடியோவுல அதை வாசிச்சாங்க. அந்தச் சம்பவம் கொடுத்த தைரியம்தான் இன்னைக்கு வரைக்குமான எல்லா நகர்வுக்கும் காரணம்...’’ மணிகண்டன் பேசுவது வியக்க வைக்கிறது.

மணிகண்டனுக்கு 18 வயது இருக்கும்போது, கோவை, கணபதி பகுதியில் அவர் நண்பர்கள் இணைந்து அஜித்துக்கு ரசிகர் மன்றம் அமைத்தார்கள். ‘நடிகருக்கு ஏன் மன்றமெல்லாம்... இளைஞர் மன்றம் என்று எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்' என்று அவர்களை மடைமாற்றினார் மணிகண்டன்.

‘‘கூட பத்துப் பேர் இருந்தா தைரியம் இன்னும் அதிகமாகும்ல... தெருவிளக்குல ஆரம்பிச்சு குடிநீர்ப் பிரச்னை வரைக்கும் எல்லாத்துக்கும் முன்னாடி நின்னோம். சுந்தராபுரத்திலும் ஒரு இளைஞர் மன்றத்தை ஆரம்பிச்சேன். ஒவ்வொரு திங்கள்கிழமையும் ஆட்சியர் அலுவலகத்துல குறை தீர்க்கும் முகாம் நடக்கும். சனிக்கிழமை நைட் ஷிப்டும் சேர்த்துப் பாத்துட்டு திங்கள்கிழமை லீவ் எடுத்துக்கிட்டு மனுக்கொடுக்கப் போயிருவேன்.

மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்துல கோவை இருக்குன்னுதான் பேரு. ஆனா அடிக்கடி கடுமையான வறட்சி வந்திடும். மக்கள் குடிநீருக்கு அலைவாங்க. அந்தமாதிரி ஒரு வறட்சிக்காலம். எங்க ஊரைக்கடந்து ஒரு காட்டு ஓடை ஓடும். எங்க வட்டாரத்துல உள்ள நீர்பிடிப்புப் பகுதிகள்ல கிடைக்கிற தண்ணீரை அந்த ஓடை கேரளாவுல உள்ள பாரதப்புழா ஆற்றுக்குக் கொண்டு சேர்க்கும். நானும் நூர்முகமதுன்னு ஒரு நண்பனும் அந்த வாய்க்காலோடு நடந்தோம். அஞ்சு கிலோ மீட்டர் தொலைவுல இருக்கிற தடுப்பணை உடைஞ்சிருந்துச்சு. அதனால தண்ணீர் தேங்காம மொத்தமா ஓடிடுது. பக்கத்துல குறிச்சிக்குளம்னு 330 ஏக்கர்ல ஒரு ஏரி. அதுல தண்ணி இருந்தா ஊருல நாலடி தோண்டுனா தண்ணி குபுக்குன்னு ஊத்தெடுக்கும். அந்தக்குளமும் வறண்டு கெடக்கு. அந்தப்பக்கமா 15 கி.மீ சைக்கிள்ல பயணம் செஞ்சோம். நொய்யலாத்துல இருந்து குறிச்சிக்குளத்துக்குத் தண்ணி கொண்டு வர்ற வாய்க்கால் முழுவதும் ஆக்கிரமிப்பு. பல இடங்கள்ல கழிவறைக் கழிவுகள் வந்து சேருது, ஏராளமான பாலித்தீன் குப்பைகள் வேற...

இதையெல்லாம் டாக்குமென்ட் பண்ணி கலெக்டர்கிட்ட மனுக் கொடுத்தோம். உடனடியா காட்டு ஓடைத் தடுப்பணையைச் சீரமைச்சாங்க. சட்டமன்ற உறுப்பினர் நிதி மூலமா வாய்க்கால்லயும் ஆக்கிரமிப்புகளை அகற்றிட்டு சரி பண்ணினாங்க. எவ்வளவு பெரிய பிரச்னையா இருந்தாலும் பொதுவெளிக்குக் கொண்டுவந்து அரசோட கவனத்துக்குக் கொண்டுபோயிட்டா நிச்சயம் தீர்வு கிடைச்சிடும்ங்கிற நம்பிக்கையை அந்த நிகழ்வு உருவாக்குச்சு.

மாரத்தான் மனிதர்கள் - 19 - குளங்களை மீட்கும் இளைஞர்

இதுக்கிடையில கூட இருந்த நண்பர்களெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா படிப்பு, வேலைன்னு விலகிட்டாங்க. நான் மட்டும்தான் மிச்சம். இருந்தாலும் அரசுக்குப் புகார் அனுப்புறது, ஆர்.டி.ஐ-யில தகவல் கேட்கிறதுன்னு வேலைகள் தொடர்ந்துச்சு. மத்தவங்க நல்ல விஷயம் செஞ்சா அங்கேயும் போய் முதல் ஆளா நிப்பேன். திரும்பவும் ஒரு வறட்சி வந்தபோது நிறைய இளைஞர்கள் சேர்ந்து குறிச்சிக்குளம் பாதுகாப்பு இயக்கம்னு ஒரு அமைப்பை உருவாக்கினாங்க. 700 பேர் சேர்ந்து குறிச்சிக்குளத்தைச் சீரமைச்சு, தடுப்பணையைச் சுத்தம் செஞ்சோம்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு அப்புறம் நீர்நிலைப் பாதுகாப்பைப் பல ஊர்கள்ல இளைஞர்கள் தீவிரமா கையில எடுத்தாங்க. நாங்களும் உத்வேகத்தோடு களத்துல இறங்கினோம். அந்தத் தருணத்துலதான் சீமைக்கருவேல மரங்களை அகற்றணும்னு உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டுச்சு. சமூக ஊடகங்கள் மூலமா இளைஞர்களைத் திரட்டி கருவேல மர அகற்றலை இயக்கமா முன்னெடுத்தோம். முதல் கூட்டத்தைப் பேரூர்ப் பெரியகுளத்துக் கரையில போட்டோம். கிட்டத்தட்ட 265 ஏக்கர். 50 பேர் அரிவாளோடு வந்தாங்க. ரெண்டு ஜே.சி.பி எந்திரங்கள் கொண்டு போனோம். மீடியாக்கள்ல செய்தி வந்துச்சு. ஒரு தொழிலதிபர் எங்களைக் கூப்பிட்டு, `இப்படி ரெண்டு எந்திரங்களை வச்சுச் செஞ்சா எப்போ முடிக்கிறது, நான் பத்து எந்திரங்கள் தர்றேன்... முடிங்க'ன்னார். 4 ஞாயிற்றுக்கிழமைகள் வேலை செஞ்சோம். 2 டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினோம். கருவேல மரங்களை அகற்றிட்டு சுமார் பத்தாயிரம் லோடு மண்ணைக் குளத்துல இருந்து அகற்றினோம். நீர்க்கொள்ளளவு அதிகமாச்சு.

இதுக்கப்புறம் நிறைய பேர் எங்ககூட ஒருங்கிணைந்து செயல்பட ஆரம்பிச்சாங்க. கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பை ஆரம்பிச்சோம். இயக்கம் ஆரம்பிச்ச கையோடு வெள்ளலூர்க் குளத்தைக் கையில் எடுத்தோம். சோழ-சேர நாடுகளை இணைக்கும் பெருவழியா இருந்த பகுதி. ஆசியாவிலேயே அதிகமா ரோமானிய நாணயங்கள் கிடைச்சதும் இங்கேதான். ஊர்ல குளம் இருந்த அடையாளமே தெரியலே. 12 வருஷமா தண்ணியே இல்லை. மொத்தமா பூமி மட்டத்துக்கு மூடிக்கிடக்கு. இந்தக் குளத்துக்கு நொய்யல்ல இருந்து 6.5 கி.மீ-க்கு நீர்ப்பரப்பு வாய்க்கால் இருக்கு. அதுல மூன்றரை கி.மீ-க்கு நெருக்கமான ஆக்கிரமிப்பு, வீடுகள். பக்கத்துல இருக்கிற தடுப்பணையில 3 மதகுகளும் பிளாஸ்டிக் குப்பைகளால மூடிடுச்சு. ஒரு பக்கம் மலக்கழிவுகள். ஜே.சி.பி எந்திரங்கள் மூலமா தூர்வார முடியாத சூழல்.

ஆக்கிரமிப்பை அகற்றி ஒரு நீர்நிலையைச் சுத்தம் செய்யணும்னா வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, நீர்வளத்துறை, பொதுப்பணித்துறைன்னு பல துறைகளோட ஒருங்கிணைப்பு அவசியம். ஆனா அவங்களை ஒருங்கிணைக்கவே முடியாது. நடக்குறது நடக்கட்டும்னு வாராவாரம் ஞாயிற்றுக்கிழமைகள்ல வேலை செஞ்சோம். கைகளாலேயே பிளாஸ்டிக் கழிவுகளை மதகுகளுக்குள்ள இருந்து பிச்செடுத்தோம். வாரம் 2 டிராக்டர் பிளாஸ்டிக் கழிவுகள் வரும். ஒருவழியா மதகுகளை மீட்டோம். ஆனா ஆக்கிரமிப்பு செய்த மக்களை அகற்ற முடியலே. மிகப்பெரும் எதிர்ப்புகள்... கலெக்டர்கிட்ட போய் நின்னோம். அவர் எல்லாத்துறைகளையும் ஒருங்கிணைச்சு ஒரு கூட்டம் போட்டார். கரையில இருந்த மக்களுக்கெல்லாம் குடிசைமாற்று வாரியம் மூலமா வீடுகள் கொடுத்தாங்க. மிகப்பெரும் போராட்டத்துக்குப் பிறகு ஆக்கிரமிப்புகளை அகற்றினோம். அந்த ஆண்டு பெய்த தென்மேற்குப் பருவமழையில குளம் முழுமையா நிரம்புச்சு. குளத்தோட கரையில 10,000 மரங்கள் நட்டுப் பராமரிச்சோம். அந்த இடம் ஒரு சூழலியல் மண்டலமா மாறுச்சு. இப்போ இங்கே 101 வகை பட்டாம்பூச்சிகள், 150-க்கும் மேற்பட்ட பறவைகளை ஆவணப்படுத்தியிருக்கோம்...’’ பெருமிதமாகச் சொல்கிறார் மணிகண்டன்.

அடுத்து குனியமுத்தூர் பேரூராட்சி குப்பைக்கிடங்காக மாற்றியிருந்த செங்குளத்தையும் அன்னூர்ப் பகுதியில் இருக்கும் குன்னத்தூர் குளத்தையும் கையில் எடுத்துக் கடும் போராட்டத்துக்குப் பிறகு தூர்வாரி மேம்படுத்தியது, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு.

‘‘சின்னதா நினைவுகள்ல மூழ்கி சுருக்கமா சொல்லி முடிச்சுட்டேன். ஆனா இதெல்லாம் எளிதா முடியலேண்ணா. நிறைய மிரட்டல்கள், துரத்தல்கள்... நண்பர்களெல்லாம் ‘ஏண்டா இந்த வேலை’ன்னு கேப்பாங்க. ஆரம்பத்துல இருந்தே நான் ஒரு யுத்தியைக் கையாண்டேன். எதையும் என் தனிப்பட்ட பிரச்னையா பார்க்கிறதில்லை. யாரேனும் மிரட்டுனா அதைப் பொதுவெளிக்குக் கொண்டு போவோம். மக்கள் பாத்துக்குவாங்க.

மாரத்தான் மனிதர்கள் - 19 - குளங்களை மீட்கும் இளைஞர்

ஒரு அரசியல்வாதி சீரமைக்கப்பட்ட ஒரு குளத்துல கழிவுநீரைக் கொண்டுவந்து கொட்டிக்கிட்டே இருந்தார். சொன்னோம், கேட்கலே. சமூக ஊடகங்கள்ல அதை அவர் மொபைல் நம்பரோடு பதிவு செஞ்சோம். உலகம் முழுக்க இருந்து போன்... ரெண்டு மணி நேரத்துல, ‘நடந்த நிகழ்வுக்கு வருந்துறேன். இனிமே அந்தக் குளத்துல கழிவுநீரைக் கொட்டமாட்டேன்'னு அவரே சோஷியல் மீடியாவுல பதிவு போட்டார்.

கோவையைச் சுத்தி 1,200 சிறு குட்டைகள் இருக்கு. கோவையோட பெரும் வளம் அது. பெரும்பாலான குட்டைகள் ஆக்கிரமிப்புகள்ல காணாமப் போயிடுச்சு. எல்லாத்தையும் ஆவணப்படுத்திக்கிட்டிருக்கோம். இதுவரைக்கும் 9 குட்டைகளை மீட்டு சீரமைச்சுட்டோம். நீர்நிலைகள்ல குவிஞ்சு கிடந்த 200 டன் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தியிருக்கோம். மியாவாக்கி வன முறையில 25,000 மரங்கள் நட்டிருக்கோம். ஒரு லட்சம் மூலிகைச் செடிகளை உருவாக்கி வளர்த்திருக்கோம். கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பனை விதைகளை நட்டிருக்கோம். 75 பேர் இப்போ எங்க அமைப்புல முழு உணர்வோடு இயங்குறாங்க. ஒவ்வொரு ஞாயிறும் குறைந்தது 50 பேர்ல இருந்து 500 பேர் வரைக்கும் ஏதோவொரு வேலையை முன்னெடுத்துச் செய்றோம்...’’ மலைக்க வைக்கிறார் மணிகண்டன்.

உங்களைப் போன்றவர்களால் வானத்திலும் பூமியிலும் மனிதர்களின் மனங்களிலும் எக்காலமும் ஈரம் காயாதிருக்கும் மணிகண்டன்!

- வருவார்கள்...