மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாரத்தான் மனிதர்கள் - 21 - கழிவை வளமாக்கும் அற்புதர்!

சுப்புராமன்
பிரீமியம் ஸ்டோரி
News
சுப்புராமன்

மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்

இந்தியாவில் 35% மக்கள் இன்னும் திறந்தவெளியைக் கழிப்பறையாகப் பயன்படுத்துவதாகச் சொல்கிறது ஐந்தாவது தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு. வெட்கத்தோடும் பதற்றத்தோடும் திறந்தவெளியில் அமர்வது ஒரு பக்கம்... மனிதக் கழிவில் ஏராளமான வைரஸ்களும் பாக்டீரியாக்களும் இருப்பதாகச் சொல்கிறார்கள். சுற்றுச்சூழலில், நீர்நிலைகளில் இவை தினம் தினம் கலக்கின்றன. ஊரையும் அருவருப்பான பகுதியாக மாற்றுகின்றன. இந்த அவலம் குறித்துச் சிந்தித்த ஒரு தனி மனிதர் தன்னளவில் எடுத்த முனைப்பு இன்று தேசத்துக்கே வழிகாட்டுதலாகியிருக்கிறது.

குளித்தலை அருகிலுள்ள இனுங்கூர் புதுப்பட்டியைச் சேர்ந்த சுப்புராமனுக்கு வயது 74. இந்த வயதிலும் கிராமம் கிராமமாக அயராது நடந்துகொண்டிருக்கிறார். சூழலுக்கும் உயிர்களின் ஆரோக்கியத்துக்கும் கேடாக மாறும் மனிதக்கழிவுகளைப் பயனுள்ள வகையில் மாற்றுவதோடு மக்களுக்குக் கண்ணியமான வாழ்க்கைக்கான பாதையையும் உருவாக்குகிறார். சுமார் 1.3 லட்சம் வீடுகளுக்குக் கழிவறை கட்டித்தந்திருக்கிறார். இவர் உருவாக்கிய சூழல் மேம்பாட்டுக் கழிவறைகளில் கழிவுகள் உரமாகின்றன. அவற்றின் மூலம் 300 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி நடக்கிறது. சூழலுக்குக் கேடில்லாத வகையில், முன்மாதிரியாக 5 ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளைச் செய்துவருகிறார். 25 பள்ளிகளில் இவர் கட்டித்தந்திருக்கும் சமூகக்கழிவறைகளால் பள்ளி வளாகங்கள் பசுமையாகியிருக்கின்றன.

சுப்புராமன் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமத்திலிருந்து உருவானவர். அங்கிருந்து கல்லூரியைத் தொட்ட முதல் நபரும் இவர்தான்.

‘‘வீட்டுல ஆசிரியராக்கிடணும்னு நினைச்சாங்க. பி.எஸ்ஸி முடிச்சுட்டு தும்கூர்ல பி.எட் சேர்ந்தேன். அமைஞ்ச நண்பர்கள், சமூக அக்கறையோடு இருந்தாங்க. கோவிந்தராசு, ஸ்டாலின்னு நாலைஞ்சு பேர் சேர்ந்து பள்ளிகளுக்குப் போய் மாணவர்களுக்கு சுத்தம், சுகாதாரம் பத்திச் சொல்லிக்கொடுப்போம். `ஃபாதர் விண்டி’ன்னு பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒருத்தர், ‘கிராம மேம்பாட்டு நிறுவனம்'னு ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்திக்கிட்டிருந்தார். கல்லூரிக் காலத்திலேயே என் நண்பர் ஒருத்தர் அதுல சேர்ந்தார். ஒடுக்கப்பட்ட, எளிய மக்களுக்கு அரசுத் திட்டங்களைப் பெற்று சிக்கனமான செலவுல வீடுகள் கட்டிக்கொடுக்கிறதுதான் பணி. படிப்பை முடிச்சுட்டு நானும் அதுல சேர்ந்தேன். திருச்சி வட்டாரத்துல இந்த அமைப்பு மூலமா ஏராளமான வீடுகள் கட்டினோம்.

மாரத்தான் மனிதர்கள் - 21 - கழிவை வளமாக்கும் அற்புதர்!
DIXITH

இந்தக் காலகட்டத்துல திருமணமாச்சு. என் மாமனார் திருமலை வசதியானவர். என்னை எப்படியாவது அரசு வேலையில அமர்த்திட ஆசைப்பட்டார். ஒரு உதவிபெறும் பள்ளிக்கு நேர்காணலுக்கு அனுப்பி வச்சார். கிட்டத்தட்ட எனக்கு வேலையை உறுதி செஞ்சுட்டார். ஆனா எனக்குத் துளியளவும் விருப்பமில்லை. அரசு அமைப்புக்குள்ள சிக்கிட்டா சுதந்திரம் பறிபோயிடும்னு நினைச்சேன். என்கூட சுப்பிரமணியன்னு ஒரு தம்பி வந்தார். நேர்காணல் அறைக்குள்ள போய், ‘எனக்கு வேலை வேணாம், அடுத்து வர்ற சுப்பிரமணியனுக்குக் கொடுங்க'ன்னு சொல்லிட்டு வந்துட்டேன். ஓய்வுபெற்றபிறகு, சுப்பிரமணியன் என் வீட்டுக்கு வந்து ‘உங்களாலதான் அண்ணா எனக்கு வேலை கிடைச்சுச்சு'ன்னு சொன்னார். சந்தோஷமா இருந்துச்சு. ஆனா என் மாமனாருக்கு ரொம்பநாள் வருத்தம் இருந்துச்சு...’’ சிரிக்கிறார் சுப்புராமன்.

எட்டு ஆண்டுகள் கிராம மேம்பாட்டு நிறுவனத்தில் பணியாற்றினார் சுப்புராமன்.

‘‘அதுதான் என் வாழ்க்கையில முக்கியமான காலகட்டம். விவசாய வேலைக்குப்போற பெண்கள் மத்தியில பணியாற்றி, அவங்களுக்கு சுகாதாரம் பத்திச் சொல்லிக்கொடுப்போம். அவங்க யாருக்குமே கழிவறைப் பரிச்சயமே இல்லை. அதனால ஏற்படுற பாதிப்புகள் பத்தி யாருக்குமே தெரியலே. நாம வேலை செய்யவேண்டிய ஏரியா இதுதான்னு முடிவு பண்ணிட்டேன்.

முசிறி ஒன்றியத்துல தண்ணீர்ப்பந்தல்ங்கிற கிராமத்தைத் தேர்ந்தெடுத்தேன். தொடக்கத்துல அரசோட நலத்திட்டங்களைப் பெற்றுத் தர்றது, சலுகைகள் வாங்கித்தர்றதுன்னு சில வேலைகள் செஞ்சேன். ஆனாலும் அந்த மக்கள் என்னை முழுமையா நம்பலை. தயக்கத்தோடவே இருந்தாங்க. அந்தச் சமயம், பக்கத்தூர்ல கட்டிக்கொடுத்த ஒரு பெண், புகுந்தவீட்டுல பிரச்னையாகி தாய்வீட்டுக்கு வந்திருக்காங்க. அவங்க தற்கொலை முயற்சியில இறங்கி, கடைசி நேரத்துல மீட்கப்பட்டாங்க. சமூக நல வாரியம் தர்ற பண உதவியைப் பெற்று அந்தப் பெண்ணுக்கு ஒரு கடை வச்சுக் கொடுத்தேன். அடுத்த மூணு வருஷத்துல அந்தப் பெண் கடையைப் பெரிசாக்கி அஞ்சாறு பேருக்கு வேலை கொடுத்துச்சு.

அது வானம் பார்த்த மானாவாரி பூமி. மழை இல்லேன்னா நிலமெல்லாம் வறண்டுடும். மழைநீரை அந்தந்த நிலத்துக்குள்ளேயே சேகரிக்கிற மாதிரி நீர் மேலாண்மைத் திட்டம் ஒண்ணு உருவாக்கினேன். நிறைய மரங்கள் நட்டேன். நல்ல குடிநீருக்காகத் தெருவுக்குத் தெரு அடிபம்புகள் போட்டுத்தந்தேன். அஞ்சு வருஷத்துல அந்தக் கிராமமே பசுமையாயிடுச்சு. ஒரு மத்திய அரசுத் திட்டம் மூலமா மக்களுக்கு வீடுகள் கட்டித்தந்தேன். தொகுப்பு வீடுகள் மாதிரியில்லாம அவரவர் விருப்பத்துக்கு ஏத்தமாதிரியான வீடுகள். கிட்டத்தட்ட பத்து வருஷத்துக்குள்ள 140 வீடுகள் கட்டி முடிச்சோம். 1,000 ஆடுகள், 300 மாடுகள் வாங்கித்தந்தோம்.

பத்து ஆண்டுகள் கழிச்சு அந்த கிராமத்துல ஒரு ஆய்வு செஞ்சேன். வாழ்வாதாரத்தை உயர்த்தியிருக்கோம்; தொழில் வாய்ப்புகளை உருவாக்கியிருக்கோம். விளைவுகள் எப்படியிருக்குன்னு பார்த்தா யாருடைய வாழ்க்கையும் உயரலே. காரணம், எல்லாக் குடும்பங்களுக்கும் மிகப்பெரிய சுமையா இருந்தது மருத்துவச்செலவு. பலபேரோட வேலையிழப்புக்கும் அதுதான் காரணமா இருந்துச்சு. அந்த எதார்த்தம் புரிஞ்ச உடனே, நான் பார்த்துக்கிட்டிருந்த எல்லா வேலையையும் தூக்கிப்போட்டுட்டேன். தண்ணீர், சுகாதாரம் ரெண்டையும் முதன்மையா வச்சு வேலை செய்யணும்னு முடிவுக்கு வந்தேன்.

தூய குடிநீர், தரமான கழிவறை... இவைதான் கிராமங்களோட அடிப்படைத்தேவை. இதைப் புரிஞ்சுக்க பத்து வருடங்கள் எனக்குத் தேவைப்பட்டுச்சு. அரசாங்கங்கள், இந்த விஷயத்தைப் பெரிசாக் கருதுறதில்லை. அரசாங்கம் வருஷத்துக்கு ஒரு ஒன்றியத்துக்கு 50 கழிவறை கட்டித்தருது. ஒரு ஒன்றியத்துல 30 பஞ்சாயத்து இருந்தா ஒரு பஞ்சாயத்துக்கு ரெண்டு கழிவறைகூடக் கட்டமுடியாது. கழிவறைங்கிறது, பெரிசா செலவு பிடிக்கிற விஷயமா இருக்கக்கூடாதுன்னு நினைச்சேன். அப்போதான் அது எல்லாத்தரப்பு மக்களையும் சென்றடையும்.

ஒரு ஆண் திறந்தவெளியில மலம் கழிக்கும் போது யாரைப்பத்தியும் கவலைப்படறதில்லை. ஆனா பெண்கள் பதற்றத்தோடவே இருக்கணும். விடியும்முன்னே போறது, ராத்திரி இருட்டினபிறகு போறதுன்னு அவங்க படுற அவஸ்தை கொஞ்சமில்லை. அந்தக் கிராமத்துலேயே திறந்தவெளிக்குப் போய் பாம்பு கடிச்சு இறந்தவங்களும் இருந்தாங்க.

ஊர் ஊராப்போய் திறந்தவெளியில மலம் கழிக்கிறது தப்புன்னு பிரசாரம் பண்ணினேன். குறிப்பா, பெண்கள் மத்தியில விழிப்புணர்வு செய்தேன். ‘கழிவறை கட்ட பத்தாயிரத்துக்கு மேல தேவைப்படுது... நாங்க எஙகே போவோம்’னு கேட்டாங்க. நியாயமான கேள்வி. அதுவரைக்கும் என் அனுபவங்களை வச்சு ‘உறிஞ்சு குழி கழிவறை'ங்கிற கட்டமைப்பை உருவாக்கினேன். ஒரு மீட்டர் அகல, நீளத்துல ஒரு குழி வெட்டி, மேலே பீங்கான் வச்சுக்கிற அமைப்பு. எது வசதியோ அதை வச்சு சுற்றிலும் அடைச்சுக்கலாம். அந்தக் குழிக்குள்ள விழுற தண்ணீரை நிலம் உறிஞ்சிடும். கழிவுகள் மக்கிடும். ஏழு வருடங்களுக்கு அந்தக்குழி தாங்கும். வாழைமட்டை, துவரைமார், புல், பழைய புடவைன்னு கிடைச்ச பொருளை வச்சு சுத்திலும் அடைச்சுத் தடுப்பு உருவாக்கிட்டாங்க. இதுக்கு 200 ரூபாய்ல இருந்து 500 ரூபாய்க்குள்ளதான் ஆச்சு. கிட்டத்தட்ட முசிறி ஒன்றியத்துல 5,000 கழிவறைகள் இப்படி அமைச்சோம். இது மீடியாக்கள்ல வந்துச்சு. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் எல்லாம் வந்து பார்த்தாங்க.

அவங்க மூணு விஷயங்கள் சொன்னாங்க. ஒன்னு, தண்ணீர் மட்டம் அதிகமா இருக்கிற பகுதிகள்ல இந்தக் கழிவறைகள் பயன்படாது. கழிவுகள் நிலத்தடி நீர்ல கலந்திடும். ரெண்டாவது, குடிக்கவே தண்ணியில்லாத நிலையில ஒரு முறை போய் வந்தா ஏழுல இருந்து எட்டு லிட்டர் தண்ணீர் இதுக்குச் செலவு செய்யணும். மூணாவது, பாறைப் பகுதிகள்ல குழியே தோண்டமுடியாதே, என்ன செய்வீங்க..?

மூணுமே நியாயமான விஷயங்களா இருந்துச்சு. அந்தக் கேள்விகளுக்குப் பதில்தேடி நிறைய விஞ்ஞானிகள், ஆய்வாளர்களைச் சந்திச்சேன். அவங்கதான், ‘முறையாப் பயன்படுத்தினா மனிதக்கழிவுகள் அத்தனையும் பயன்படு பொருள்கள்தான்'னு புரிய வச்சாங்க. மனித மலமும் சிறுநீரும் நல்ல பயிர் ஊக்கியா இருக்கும்னு தெரிஞ்சுக்கிட்டேன். அந்த அடிப்படையில நான் உருவாக்கினதுதான், சூழல் மேம்பாட்டு சுகாதாரக் கழிவறை. கழிவறைப் பீங்கான் ரெண்டு பகுதியா இருக்கும். மலம் தரைக்கு மேலே கட்டப்படுற ஒரு பகுதியில ஸ்டோர் ஆகும். முடித்தபிறகு ஒரு கை சாம்பலை அள்ளிப் போட்டுட்டாப் போதும். எட்டு மாதம் கழித்து அந்தப் பகுதியை திறந்தா மக்கி எருவா மாறியிருக்கும். வாடையிருக்காது. சங்கடமில்லாம கையால அள்ளி எடுக்கலாம். அது தரமான இயற்கை உரம். சிறுநீரும் கழுவுற நீரும் வெளியே போகும். நேரடியா தோட்டத்துக்குப் பயன்படுத்தலாம். எங்க அலுவலகத்திலேயே இதை வடிவமைச்சுப் பார்த்தேன். ஐந்தாயிரம் ரூபாய் செலவாச்சு. சாந்தாஷீலா நாயர் மேம், அமுதா மேமெல்லாம் வந்து பார்த்துட்டு பாராட்டினாங்க. திருச்சி வாழை ஆராய்ச்சி நிலையம், கோவை வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்களும் இதையெல்லாம் ஆய்வு பண்ணி உறுதி செஞ்சாங்க.

அடுத்தகட்டமா சிறுநீரைக் குழாய் மூலமா ஒரு டேங்க்ல சேகரித்து, தனியா விவசாயிகளுக்குத் தர ஆரம்பிச்சோம். ஆரம்பத்துல தயங்கினாலும் இதன் பயனைக் கண்டபிறகு விவசாயிகள் விரும்பி வாங்க ஆரம்பிச்சாங்க. பொதுவிடங்கள்ல சமுதாயக் கழிவறைகள் கட்ட ஆரம்பிச்சோம். பணம் கட்டிப் பயன்படுத்தற கட்டணக் கழிப்பிடங்கள் இருக்கற இடத்துல, நாங்க கழிவறையைப் பயன்படுத்துற மக்களுக்கு காசு தர ஆரம்பிச்சோம். நாடாளுமன்றம் வரைக்கும் இதைப்பத்திப் பேசினாங்க.

ஒரு கட்டத்துல சிறுநீரை திரவ வடிவுல விவசாயிகளுக்குத் தர்றதுல சிக்கல்கள் வந்துச்சு. அதை பவுடரா தந்தா என்னன்னு தோணுச்சு. டெல்லி ஐ.ஐ.டி, சென்னை அப்துல்ரஹ்மான் கல்லூரிப் பேராசிரியர்கள்கிட்ட ‘ஏதேனும் வழி சொல்லுங்க'ன்னு கேட்டேன். உப்பளத்துல கழிவா ஒதுங்குற பிட்டன்ங்கிற பொருளை சிறுநீர்ல கலந்தா தண்ணி தனியாவும், அதுல இருக்கிற சத்துகள் தனியாவும் பிரிஞ்சிடும்னு கண்டுபிடிச்சுச் சொன்னாங்க. அதைப் பயன்படுத்தி பவுடராவே விவசாயிகளுக்குத் தர ஆரம்பிச்சோம்’’ - வியப்பாக இருக்கிறது, சுப்புராமன் சொல்லும் வார்த்தைகளைக் கேட்க.

சுப்புராமனின் செயல்பாடுகள் இந்தியா முழுவதும் பரவ, 2006-ல் நிர்மல் கிராம் புரஸ்கார் என்ற தேசிய விருது சுப்புராமனுக்கு வழங்கப்பட்டது.

‘‘அதன்பிறகு ரொம்ப உற்சாகமாயிட்டேன். ஊர் ஊராப் போய் கழிவறை கட்டித்தர ஆரம்பிச்சேன். கழிவறை வடிவமைப்புலயும் புதிய புதிய விஷயங்கள் யோசிச்சேன். அடுத்தடுத்துன்னு என்னை உற்சாகப்படுத்தின சாந்தா ஷீலா நாயர் மேடமோட பேர்லயே, எஸ்.எஸ்.என்-1, எஸ்.எஸ்.என்-2-ன்னு அடுத்தடுத்த திட்டங்களுக்குப் பேர் வச்சேன்.

மாரத்தான் மனிதர்கள் - 21 - கழிவை வளமாக்கும் அற்புதர்!
DIXITH

இப்போ இந்தப் பயணம் நான் எதிர்பார்த்த இலக்கைத் தொட்டிருக்கு. ‘டோட்டல் ரிசோர்ஸ் ரெக்கவரி டாய்லெட் சிஸ்டம்'னு ஒரு முழுமைப்படுத்தப்பட்ட திட்டம் இப்போ செயல்பாட்டுல இருக்கு. மலக்கழிவு மூலமா பயோகேஸ் தயாரிக்கிறோம். 120 வீடுகள்ல அந்த பயோகேஸால அடுப்பு எரியுது. பெரம்பலூர், திருச்சி மாவட்டங்கள்ல சமுதாயக் கழிவறைகள் கட்டியிருக்கோம். உள்ளாட்சி அமைப்புகள்ல சேகரிக்கப்படுற மலக்கழிவுகளை இயற்கையான முறையில ட்ரீட் பண்ணி வேளாண்மைக்குப் பயன்படுத்துற யூனிட்டும் உருவாக்கியிருக்கோம்.

சானிட்டரி நாப்கின் எரிகலன்களும் வடிவமைச்சிருக்கேன். நாப்கினை அந்த எரிகலனுக்குள்ள போட்டு, கீழே கொஞ்சம் காகிதங்களைப் போட்டு எரிச்சாப் போதும்... சாம்பலாகிடும். கிருஷ்ணகிரி மாவட்டத்துல திம்மாபுரம் அரசுப்பள்ளியில கழிவறையும் எரிகலனும் அமைச்சோம். ஒரு மாணவி, ‘வீட்டுல எங்க அக்கா, அம்மால்லாம் இருக்காங்க. வீட்டுக்கும் வேணும்'னு கேட்டாங்க. அவங்க கிராமத்துல 56 வீடுகளுக்கு அந்த எரிகலனை அமைச்சுத் தந்தோம்.

நான் ஒரு தனி மனிதன். என்னால ஒன்றரை லட்சம் குடும்பங்கள்ல மாற்றம் கொண்டுவர முடிஞ்சிருக்கு. அரசாங்கங்கள் முழுமூச்சா இதுல இறங்கினா அடுத்த அஞ்சு வருஷத்துக்குள்ள திறந்தவெளி மலக்கழிவில்லா மாநிலமா தமிழகம் மாறிடும். அதுமட்டுமல்லாம, கழிவுகளை ஆக்கபூர்வமா பயன்படுத்தினா ஜீரோ வேஸ்ட் நிலைக்குப் போகலாம்...’’ என்கிறார் சுப்புராமன்.

சுப்புராமனின் மனைவி பெயர் ராஜேஸ்வரி. இரண்டு பிள்ளைகள். சுப்புராமனின் சேவையைப் பாராட்டி அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியிருக்கிறது இந்திய அரசு!

- வருவார்கள்