மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாரத்தான் மனிதர்கள் - 26 - நல்வழி நாடக ஆசான்!

செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
News
செல்வம்

மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்

“குழந்தைகள் நமக்கு நிறைய கத்துத் தருவாங்கண்ணா. ஆனா, அவங்களுக்கு நாம வாய்ப்பே கொடுக்கிறதில்லை. குழந்தைகள் நம்ம உடைமைன்னு நினைக்கிறோமே தவிர, அவங்களுக்கும் ஒரு மனசிருக்கு, அதுல உணர்விருக்குன்னு நாம உணர்றதேயில்லை. வீட்டுல மட்டுமல்ல, வகுப்பறையிலும்கூட அவங்க பேசுற சூழலே இல்லை. அந்த இறுக்கத்தை உடைச்சு பேச வைக்கிற வேலையைத்தான் டிராமா மூலமா செஞ்சுக்கிட்டிருக்கேன்...’’

உணர்வுபூர்வமாகப் பேசுகிறார் செல்வம். ‘டிராமா' செல்வம் என்றால் பலரின் மனதுக்குள் முகம் விரியும். வீதிநாடகக் கலைஞரான செல்வம், தமிழகமெங்கும் அரசுப்பள்ளிகளை இலக்கு வைத்துப் பயணித்து, குழந்தைகளுக்கு நாடகப் பயிற்சியளிக்கிறார். சின்னச்சின்ன நாடகங்கள்வழி சமூகத்தையும் அறத்தையும் குழந்தைகளின் இதயத்தில் விதைத்துவிட்டு அடுத்த பள்ளி நோக்கிப் பயணமாகிறார்.

செல்வத்தின் கதையே உற்சாகம் கொள்ளவைக்கும் வெற்றிக்கதைதான். ஒரு அண்ணன், ஒரு அக்கா, இரண்டு தங்கைகளென அந்தப் பெரிய குடும்பத்துக்கு அப்பாவின் சைக்கிள் பஞ்சர் ஒட்டும் தொழில் தரும் வருமானம் போதுமானதாக இல்லை. அம்மா தலைச்சுமையாகக் காய்கறிகளை தெருக்களில் விற்றுவந்து பாதிப்பசி போக்குவார்.

மாணவர்களுடன் செல்வம்
மாணவர்களுடன் செல்வம்

‘‘மதுரை ஜெயில் ரோட்டுல எங்க வீடு. அந்தக் கஷ்ட ஜீவனத்துலயும் எல்லாரையும் படிக்க வச்சுடணும்னு அப்பாவும் அம்மாவும் போராடினாங்கண்ணா. அண்ணன் டிகிரி முடிச்சார். அக்காவும் தங்கைகளும் பிளஸ் டூ வரைக்கும் போனாங்க. அவங்கெல்லாம் அரைவயிறு, கால்வயிறு கஞ்சியைக் குடிச்சுக்கிட்டு வீட்டிலேயே இருந்து படிச்சாங்க. எனக்கு மட்டும் மூணு வேளை சோத்தோட ஒரு இல்லத்துல தங்கிப் படிக்கிற வாய்ப்பு கிடைச்சுச்சு. தமிழ்நாடு இறையியல் கல்லூரியை ஒட்டி ஒரு பாலர் பள்ளி இருந்துச்சு. கிட்டத்தட்ட ஆதரவற்றோர் இல்லம் மாதிரிதான். ஜெர்மானியர்களோட உதவியில நடந்த இல்லம். ஒவ்வொரு பிள்ளையையும் ஒரு ஜெர்மானியக் குடும்பம் தத்தெடுத்துக்கும். எனக்கும் அப்படி ஒரு குடும்பம் ஆதரவு குடுத்துச்சு.

அந்த இல்லத்துல வெளிநாடுகள்ல இருந்தெல்லாம் பெரிய பெரிய கலைஞர்கள் வந்து கலைப்பயிற்சிகள் தருவாங்க. நாடகம், பாட்டு, ஒயிலாட்டம், பறையாட்டமெல்லாம் அங்கேயே அறிமுகமாயிடுச்சு. வருடத்துக்கு ஒருமுறை கலைப்போட்டிகள் நடக்கும். ஜெயிலுக்கு எதிரேதான் எங்க வீடு. விடுதலையாகி வரப்போற மகனுக்காகக் காத்திருக்கிற அம்மாக்கள், வந்ததும் கட்டித்தழுவி அழுகிறதையெல்லாம் வேடிக்கை பார்த்திருக்கேன். நாலாவது, அஞ்சாவது படிக்கும்போது கலைப்போட்டிகள்ல அதையெல்லாம் நடிச்சுக் காட்டுவேன். இறையியல் கல்லூரியில, பரட்டை என்கிற தியாபிலஸ் அப்பாவு அய்யா பேராசிரியரா இருந்தார். நான் நடிக்கிறதைப் பார்த்து கூப்பிட்டு விசாரிச்சார். குடும்பச் சூழல் தெரிஞ்சதும் அவருக்கு என்மேல கனிவும் கருணையும் அதிகமாயிடுச்சு. அவர் நடத்துற வீதி நாடகங்கள், அரங்க நாடகங்கள்ல எனக்கு முதன்மைப் பாத்திரங்கள் தருவார். அவர் போடுற நாடகங்கள் பெரிய அதிர்வை ஏற்படுத்தும்.

இப்பவும் எனக்கு நினைவு இருக்குண்ணா... ‘சிட்டிங் பட்டாங்குவே'ன்னு ஒரு நாடகம். விண்வெளியில இருந்து வர்ற ஒரு உயிரினம், பூமியில நடக்குற தீண்டாமை, அடக்குமுறைகளைப் பார்த்து கேலி பேசுற ஸ்கிரிப்ட். நான்தான் விண்வெளியில இருந்து வர்ற சிட்டிங் பட்டாங்குவே. மக்கள் அவ்வளவு ரசிச்சுப் பார்த்தாங்க. அப்பாவு அய்யா நாடகத்தை அணுகுற விதமே வித்தியாசமா இருக்கும். கடைசியா சாட்டையால அடிச்சமாதிரி சுளீர்னு முடிவு வச்சிருப்பார். பார்வையாளர்களை நாடகத்துக்குள்ள ஒரு பாத்திரமா கொண்டு வந்திருவார். அது இயல்பா இணக்கமா நடக்கும். மேக்கப் போட்டு, கிரீடம் வச்சு வர்ண ஜாலங்கள் காமிக்கமாட்டார். உடல்மொழி மூலமாவே எல்லாத்தையும் உணர்த்துவார். இது மூணு விஷயத்தையும் இன்னைக்கு வரைக்கும் நான் கடைப்பிடிக்கிறேன்...’’ உரையாடலில் தொனிக்கும் செல்வத்தின் உடல்மொழி ரசிக்க வைக்கிறது.

பிளஸ் டூ வரை அந்த இல்லத்தில் தங்கிப் படித்தார் செல்வம். அவர் வாழ்க்கையோடு நாடகமும் பிணைந்து வளர்ந்தது. தலித் கலைவிழாக்கள், முற்போக்கு விழா மேடைகளில் நிறைய நாடகங்களில் நடித்தார். அவரே நாடகங்கள் எழுதி அரங்கேற்றவும் செய்தார்.

‘‘பிளஸ் டூ படிச்ச நேரத்துல ஜெர்மன்ல இருந்து நிதி வர்றதுல சிக்கலாயிடுச்சு. அதனால அந்த இல்லத்தை மூடிட்டாங்க. அப்போ அண்ணனும் தங்கச்சிகளும் படிச்சுக்கிட்டிருந்தாங்க. பிளஸ் டூ தேர்வு எழுதின உடனே ஒரு குழந்தைகள் மருத்துவமனையில வேலையில சேர்ந்துட்டேன். அந்த வேலை எனக்கு வேறொரு அனுபவம் தந்துச்சு. மருத்துவமனைக்கு வர்ற குழந்தைங்ககூட பேசுறது பிடிச்சிருந்துச்சு. குழந்தைகளுக்காக வேலை செய்யணும்னு தோணுச்சு. ‘தியாகம்'னு ஒரு அமைப்பு மதுரையைச் சுத்திப் பல கிராமங்கள்ல இரவுப்பள்ளி மாதிரி நற்பண்புக் கல்வி மையங்களை நடத்திட்டிருந்தாங்க. குழந்தைகளுக்கு விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, அன்பு, இரக்கம்னு நல்ல விஷயங்களைக் கத்துக்கொடுப்பாங்க. அந்தப் பள்ளிகளோட ஒருங்கிணைப்பாளரா இணைஞ்சேன்.

செல்வம்
செல்வம்

எல்லாம் எளிய குடும்பத்துப் பிள்ளைகள். பள்ளியில புத்தகங்களோட மல்லுக்கட்டிட்டு வர்ற பிள்ளைகளுக்கு திரும்பவும் நற்பண்புப் பாடம்னு சொன்னா `போதும்டா சாமி’ன்னு ஓடிடுவாங்க. அதனால கதைகள், பாடல்கள், நாடகங்கள் வழியா சொல்லிக்கொடுப்போம். மற்ற கலைவடிவங்களை விடவும் நாடகம்வழி சொல்லும் விஷயங்களை எளிதா உள்வாங்கிக்குவாங்க. இந்த வேலை மனசுக்குப் பிடிச்சதா இருந்துச்சு.

ஆனாலும் கொஞ்சம் கூடுதல் சம்பளம் இருந்தாதான் குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியும்ங்கிற சூழல். இந்தத் தருணத்துல திருமணமும் முடிஞ்சிடுச்சு. பொறுப்புகள் அதிகமானதால, ஒரு தனியார் பள்ளியில பகுதிநேர நாடக ஆசிரியரா வேலைக்குச் சேர்ந்தேன். போதுமான அளவுக்குச் சம்பளமும் நிறைய நேரமும் கிடைச்சுச்சு.

தனியார் பள்ளியில படிக்கிற குழந்தைகளுக்கு ஓரளவுக்கு வாய்ப்புகள் கிடைச்சிடுது. அரசுப்பள்ளிக் குழந்தைகளுக்கு, வெளியில இருக்கிற வாய்ப்புகள் தெரியறதேயில்லை. பெரும்பாலும் கூலிவேலைக்குப் போற பெற்றோர். பிள்ளைகள் மேல கவனம் செலுத்த முடியாது. பள்ளியோடவும் பெரிசா தொடர்பு இருக்காது. பல பிள்ளைகள் முதல் தலைமுறையா பள்ளிக்கு வர்றவங்க. அதனால அரசுப்பள்ளிகள்ல நிறைய வேலை செய்யணும்னு தோணுச்சு.

என் வாழ்க்கையைத் திரும்பிப்பார்த்தா, வழிநெடுக முகம் தெரியாத பலபேர் தொட்டுத் தூக்கி வழிகாமிச்சு நடத்திக் கூட்டி வந்திருக்காங்க. ஜெர்மன்ல என்னைப் பத்தி எதுவுமே தெரியாத ஒரு தாய் எனக்காக மாசாமாசம் பணம், உடை அனுப்பி, எது தேவைன்னு கடிதம் எழுதினாலும் வாங்கி அனுப்பி என்னைப் பார்த்துக்கிட்டாங்க. அப்படி வளர்ந்த நான் ஏதாவது செஞ்சாகணும்.

இன்னைக்கு குழந்தைகள் கவனம் சிதற ஏராளமான வாய்ப்புகள் உருவாகிடுச்சு. சரியும் தப்புமா பல விஷயங்களைக் கத்துக்கிறாங்க. நவீனத் தலைமுறை வாழ்க்கையில குழந்தைகள் பெரிய மன அழுத்தத்துக்கு ஆளாகுற அளவுக்கு நெருக்கடிகள் இருக்கு. ஆனா பெரியவங்க விழிப்புணர்வு இல்லாம இருக்காங்க. பள்ளிகள்ல நடக்கிற சில சம்பவங்கள் பதற்றத்தைத் தருது. நாடகங்கள் மூலம் குழந்தைகளுக்கு அறம் கத்துக்கொடுத்து நல்வழிப்படுத்த முடியும்னு நம்பினேன்.

மாணவிகளுடன் செல்வம்
மாணவிகளுடன் செல்வம்

முதன்முதல்ல பழநி பக்கத்துல இருக்கிற பொருளூர் அரசுப்பள்ளியில குழந்தைகளுக்குப் பயிற்சி கொடுத்தேன். அந்தப்பொழுதை குழந்தைகள் அவ்வளவு கொண்டாடினாங்க. அடுத்தடுத்து நிறைய பள்ளிகள்ல அழைக்க ஆரம்பிச்சாங்க. குழந்தைகளுக்காக வேலை செய்ற அமைப்புகள் மூலமாகவும் நிறைய அழைப்புகள். இப்போ ஆசிரியர்களே விரும்பி அழைக்க ஆரம்பிச்சிருக்காங்க.

குழந்தைகளைப் பெரிய வட்டமா உக்கார வச்சுப் பேச ஆரம்பிப்பேன். விளையாடுவோம். பிடிச்ச உணவுகள், போன ஊர்கள் பத்தியெல்லாம் பேசுவோம். மெல்ல மெல்ல குழந்தைகள் அனுபவங்களைப் பகிர்ந்துக்குவாங்க. அமைதியா இருந்த வகுப்பறை ஆரவாரமாகும். அவங்க உரையாடலுக்குள்ள இருந்து ஒரு விஷயத்தை எடுத்து, ‘ஏன் இப்படி நடக்குது'ன்னு கேப்பேன். ஆளுக்கொரு பதில் வரும். அதையே ஸ்கிரிப்ட் ஆக்குவோம். அடிப்படையான சில பயிற்சிகளைத் தருவேன். ‘சார் நான் நல்லாப் பாடுவேன்'னு ஒரு குழந்தை வரும், ‘நான் நல்லா ஆடுவேன்'னு ஒருத்தன் வருவான். ‘நான் நல்லா நடிப்பேன்'னு ஒரு சிறுமி வருவா... பாத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்களெல்லாம் அந்த இடத்திலேயே உருவாகிடுவாங்க. எல்லாமே அஞ்சஞ்சு நிமிஷ ஸ்கிரிப்டுகளா இருக்கும்.

மகளை ஸ்கூல்ல விட்டுட்டு, களையெடுக்கப் போறாங்க ஒரு அம்மா. ‘அம்மாக்களெல்லாம் ஏன் கஷ்டப்படுறாங்க'ன்னு கேள்வியை எழுப்புவேன். ஆளுக்கொரு பதில் சொல்வாங்க. ‘நம் பிள்ளைகள் பாதுகாப்பா பள்ளியில படிச்சுக்கிட்டிருக்கு. நாம கஷ்டப்பட்டாதான் அவங்க எதிர்காலம் நல்லாருக்கும்ங்கிறதுக்காக காலையில இருந்து சாயங்காலம் வரைக்கும் உழைக்கிறாங்க'ன்னு சொல்லுவேன். அதுவே ஒரு ஸ்கிரிப்டா மாறும். ‘நான் அம்மா', ‘நான் மகள்'ன்னு அங்கேயே பாத்திரங்கள் உருவாவாங்க. பிள்ளைகள் அம்மா, அப்பாவைப் பாக்குற பார்வையே மாறும். முழுநாள் பயிற்சியெடுத்த குழந்தை சுயமா ஒரு நாடகம் எழுதி நடிக்க முடியும். எளிமையா அதுக்கான பயிற்சியைக் கொடுத்திடுவேன். பெரும்பாலும் பயிற்சிகள் எல்லாம் கதையாவும் பாடலாவும் இருக்கும்.

செல்வம்
செல்வம்

நாடகம்ங்கிறது, பல்வேறு திறமைகளோட கூட்டுக்கலவை. வாசிப்பு, உச்சரிப்பு மேம்படுறது, பதற்றம், கூச்சமெல்லாம் விலகுறதுன்னு பல நல்ல விஷயங்கள் அதன்மூலமா நடக்கும். தாழ்வு மனப்பான்மை அகலும். சொல்லப்போனா, இதன்மூலமா இடைநிற்றல், கற்றல்ல கவனம் இல்லாதது மாதிரியான பிரச்னைகளும் குறையுறதா ஆசிரியர்கள் சொல்றாங்க.

மதுரையில் நூல்கொடை, சிடார், கல்வி-40ன்னு குழந்தைகளுக்காக வேலை செய்ற நிறைய அமைப்புகள் இருக்கு. அவங்க மூலமா நிறைய அரசுப்பள்ளிகளுக்குப் போயிருக்கேன். தனியார் பள்ளிகளுக்கும் அழைப்பாங்க. அவங்க போக்குவரத்துக்குப் பணம் தந்தா மறுக்காம வாங்கிக்குவேன். அரசுப்பள்ளிகளுக்குப் போனா ஒரு ரூபாய்கூட வாங்க மாட்டேன். எனக்குக் கிடைச்ச ஒரு விஷயத்தை என் அடுத்த தலைமுறைக்குக் கொண்டுபோறேன். அதுக்கு விலையில்லை. இதுவரைக்கும் 15,000 பிள்ளைகளுக்கு மேல நாடகத்துக்குள்ள கொண்டு வந்திருக்கேன். தொடர்ந்து அந்தப்பள்ளிகள்கூட தொடர்புல இருப்பேன்.

இப்போ சில இசைக்கருவிகள் கொண்டு போறேன். பொம்மலாட்டம் குழந்தைகளை ரொம்பவே வசீகரிக்குது. அதற்காக கொஞ்சம் பொம்மைகள் கொண்டு போறேன். மைம் சொல்லிக்கொடுக்கிறேன்.

எனக்கு ரெண்டு நோக்கங்கள்... குழந்தைகளை லேசாக்கி அவங்களைப் பேசவிட்டு உற்சாகப்படுத்துறது ஒன்னு. இன்னொன்னு, தியேட்டர், டிராமாவெல்லாம் இன்னைக்கு உலகளாவிய வாய்ப்புகளை உருவாக்கித் தருது. பள்ளிப் பருவத்துல உள்ளுக்குள்ள இருக்கிற திறமையை லேசா தூண்டிவிட்டுட்டா பிள்ளைகள் விடாமப் பிடிச்சுக்குவாங்க, என்னை அப்பாவு அய்யா தூண்டிவிட்ட மாதிரி. என் தொடர் பயணங்கள்ல, அப்படி பெரிசா வர வாய்ப்புள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளை அடையாளம் கண்டு வச்சிருக்கேன். இன்னைக்கு நான் அப்பாவு அய்யா பேரைச் சொல்ற மாதிரி நாளைக்கு அவங்க என் பேரைச் சொல்வாங்க...’’ மலர்ந்து சிரிக்கிறார் செல்வம்.“

- வருவார்கள்...