மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாரத்தான் மனிதர்கள் - 27 - ஆமைகளின் காவலர்!

சுப்ரஜா தாரணி
பிரீமியம் ஸ்டோரி
News
சுப்ரஜா தாரணி

மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்

‘‘காசிமேட்ல ஆரம்பிச்சு மரக்காணம் வரைக்குமுள்ள கடற்கரையில ஏதாவது ஒரு பகுதியில அரைக் கிலோ மீட்டர் நடந்து பாருங்க... குறைஞ்சது 20 ஆமைகளாவது கண்கள் பிதுங்கி, கழுத்து வீங்கிச் செத்துப்போய்க் கிடக்கும். சாதாரணமா வேடிக்கை பார்த்துட்டுக் கடந்து வந்துருவோம். உண்மையில அது மிகப்பெரிய அபாயம். கடலும் நிலமும் வளமா இருக்கான்னு காட்டுற காரணி, ஆமை. கடலைச் சுத்தமாக்கி, ஆக்சிஜன் பரவலாக்கத்தை மேம்படுத்தி, மீன்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்ய இடம் தயார் பண்ணிக் கொடுத்து, பல கடலுயிரிகளுக்கு எதிரியா இருக்கிற ஜெல்லி மீன்களை அழிச்சு இந்த ஆமைகள் செய்ற சேவை சாதாரணமில்லை. நாம குற்ற உணர்வேயில்லாம ஆமை முட்டைகளைப் பந்து மாதிரி எறிஞ்சு விளையாடுறோம். வலைகள்ல கொத்துக் கொத்தா இழுத்துட்டுவந்து கொன்னு வீசுறோம். ரொம்ப கஷ்டமா இருக்குங்க...’’ ஆதங்கமாகவும் அக்கறையாகவும் பேசுகிறார் சுப்ரஜா தாரணி.

சுப்ரஜா தாரணி
சுப்ரஜா தாரணி

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கடல் ஆமைகளைப் பாதுகாக்கப் போராடுகிற சுப்ரஜா, தமிழகம், ஆந்திரா, ஒடிசாவென கிழக்குக் கடற்கரை முழுவதும் 700 கிலோ மீட்டரில் ஆமைகளையும் ஆமை முட்டையிடும் நிலக்கூடுகளையும் பாதுகாக்கிறார். இதுவரை 31 லட்சம் ஆமைக்குஞ்சுகளைப் பாதுகாத்து கடலுக்குள் விட்டிருக்கிறது, சுப்ரஜா நடத்தும் ட்ரீ பவுண்டேஷன். 363 கடல் ஆமைப் பாதுகாவலர்கள் இதற்கெனவே முழுநேரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். தனியொரு மனுஷியாகத் தொடங்கி கடல் ஆமைகளின் முக்கியத்துவம் குறித்து மிகப்பெரும் விழிப்புணர்வை உருவாக்கியிருக்கும் சுப்ரஜா, இந்தப் பணிக்கென உலகளவில் பல அங்கீகாரங்களையும் பெற்றிருக்கிறார்.

சுப்ரஜா சென்னையில் பிறந்தவர். அப்பா காந்தராவ் சர்வதேசத் தடகள வீரர். அம்மா பெயர் சுமிதா. ‘‘அம்மாதான் எனக்கு ரோல்மாடல். விலங்குகள் மேல நிறைய ஆர்வம். அதுவும் கைவிடப்பட்ட, விபத்துல காயமடைந்த விலங்குகளுக்கு ஒரு தாய் மாதிரி. வீட்டுக்கு எடுத்துட்டு வந்து மருந்து போட்டு காயத்தை குணமாக்குவாங்க. நாய்க்குட்டி, பூனைக்குட்டி, அணில்கள்னு வீ்ட்டுல மனிதர்களுக்கு இணையா விலங்குகளும் இருக்கும். எதைச் செஞ்சாலும் முழு மனதோட செய்யணும்னு அம்மா சொல்வாங்க. பசுமரத்தாணி மாதிரி மனசுக்குள்ள இருக்கு இந்தச் சொற்கள். இன்னைக்கு வரைக்கும் என்கூட வர்ற சில குணங்கள் அம்மா கொடுத்ததுதான்.

சுப்ரஜா தாரணி
சுப்ரஜா தாரணி

தத்துவவியல்ல பிஹெச்.டி பண்ணினேன். ஓவியம், நடனம்னு நுண்கலைகள்ல ஆர்வம் இருந்துச்சு. கலாஷேத்ராவுல ஓவியம் கத்துக்கிட்டேன். கலாக்ருதின்னு ஒரு ஓவியக்கலைக்கூடம் ஆரம்பிச்சேன். இன்னைக்கும் அதுதான் என் பிரதான தொழில். 2001-ல நேஷனல் ஜியாக்ரபிக் சேனல்ல சிம்பன்ஸி குரங்குகள் பத்தி ஆராய்ச்சி பண்ணுற ஜேன் குட்ஆல் பத்தி ஒரு ஆவணப்படம் பார்த்தேன். ஜேன், தன் முழு வாழ்க்கையையும் சிம்பன்ஸிகளுக்காக அர்ப்பணிச்சவங்க. அதுல அவங்க சொன்ன ஒரு விஷயம்தான் என்னை இந்தப்பணியில இவ்வளவு தூரம் கூட்டிக்கிட்டு வந்திருக்கு. ‘மாற்றத்தை எல்லோரும் சேர்ந்துதான் உருவாக்கணும்னு இல்லை. ஒவ்வொருத்தரும் உருவாக்கலாம்'னு சொன்னாங்க. அழுத்தமான வார்த்தைகள்.

என் திருமணம் முடிஞ்சதும் நீலாங்கரையில் குடியேறினோம். கடற்கரையை ஒட்டி வீடு. ஒருநாள் கடற்கரையில நடந்துபோனப்போ ஒரு பெரிய ஆமை இறந்து கிடந்துச்சு. மீனவர்கள்கிட்ட ‘இது எப்படி இறந்துச்சு'ன்னு கேட்டேன். இதுமாதிரி தினமும் அஞ்சாறு எங்க வலையில சிக்கி இறந்துபோகும்னு சொன்னாங்க. அதிர்ச்சியா இருந்துச்சு. ஆமைகள் பத்தி நிறைய படிக்க ஆரம்பிச்சேன். ரொம்பவே ஆச்சர்யமா இருந்துச்சு. இவ்வளவு முக்கியமான ஆமைகளை சாதாரணமா அழிச்சுக்கிட்டிருக்கோமேன்னு வருத்தமா இருந்துச்சு. நாம வேலை செய்ய வேண்டிய களம் இதுதான்னு முடிவு பணணினேன்’’ நிதானமாகப் பேசுகிறார் சுப்ரஜா.

சுப்ரஜா தாரணி
சுப்ரஜா தாரணி

மன்னார் வளைகுடா முதல் தெற்கு ஒடிசா வரையிலான கிழக்குக் கடற்கரையில் நான்குவிதமான கடலாமைகள் வாழ்கின்றன. ஆலிவ் ரிட்லி எனப்படும் சிற்றாமை, பேராமை, கழுகு மூக்கு ஆமை, ஏழுவரி ஆமை... இதில் சிற்றாமைக்கு நம்முடன் உணர்வுபூர்வமான தொடர்பு உண்டு. பொதுவாக ஆமைகளின் இயல்பு, கடலில் எத்தனையாயிரம் தொலைவுக்கு நீந்தித் திரிந்தாலும், எந்த இடத்தில் பிறந்து தவழ்ந்ததோ, முட்டையிடும்போது அந்த இடத்துக்கு வந்துவிடும். ஜி.பி.எஸ் மாதிரி அதன் மூளைக்குள் படிந்திருக்கும் திறன் அப்படி. டிசம்பர் முதல் ஜூன் வரை சென்னை, ஆந்திரா, ஒடிசா கடற்கரைகளில் பல ஆயிரம் ஆமைகள் வந்து முட்டையிட்டுச் செல்லும்.

‘‘ஆமைகள் நீண்டகாலம் வாழும் உயிரினம். அதேநேரம், அது இனப்பெருக்கப் பருவத்துக்கு வரவும் நீண்டகாலம் பிடிக்கும். சிற்றாமை முட்டையிடும் பருவத்துக்கு வர பதினைந்து ஆண்டுகளாகும். ஆயிரம் குஞ்சுகள் பிறந்தா, முட்டையிடும் பருவத்துக்கு ஒரே ஒரு ஆமைதான் வரும். மிச்சமுள்ள 999 ஆமைகள் வலைகள்ல சிக்கியோ, சுறாவுக்கு இரையாகியோ செத்துப்போயிடும்.

பேராமை, கழுகு மூக்கு ஆமை, ஏழுவரி ஆமை மூணும் அந்தமான் நிகோபார் தீவுகள்ல முட்டையிடும். ஏழு வரி ஆமை அளவில் பெருசா இருக்கும். சிற்றாமை கிட்டத்தட்ட நம்ம வீட்டுப் பெண்பிள்ளைகள் மாதிரி. எங்கே சுத்தினாலும் பேறு காலத்துக்கு நம்ம ஊருக்கு வந்துதான் முட்டையிடும்.

சுப்ரஜா தாரணி
சுப்ரஜா தாரணி

சிற்றாமை மன்னார் வளைகுடாவில் வாழும். முட்டையிடும் பருவம் வந்ததும் அங்கிருந்து கிளம்பி நம்ம கடற்கரைப் பகுதியில இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்துல வந்து தங்கிடும். இரவு 7 மணிக்கு மேல அதிகாலை 4 மணிக்குள்ள கரைக்கு வந்து பானை வடிவத்துல குழிதோண்டி 65 முதல் 160 முட்டைகள் வரை போடும். பிறகு அந்தக்குழியை மூடி, சமன்படுத்திட்டு கடலுக்குள்ள போயிடும். இதேமாதிரி 15 நாள் இடைவெளியில ரெண்டுமுறை வந்து முட்டை இட்டுட்டு கடலுக்குள்ள போயிடும். 48-ல இருந்து 60 நாளுக்குள்ள, இரவு நேரத்துல அந்தக் குழிக்குள்ள இருந்து குஞ்சுகள் வெளியே வரும். நிலவொளி, நட்சத்திர ஒளி மூலமா கடலைக் கண்டுபிடிச்சு உள்ளே போயிடும். கடல் நீரோட்டத்துல ஆமைக்குஞ்சுகள் சேர்ந்து வாழப்பழகிடும்.

இந்தத் தொடர் சங்கிலியை அறுத்து ஆமைகளை அழிக்கிற வேலையில ரெண்டு உயிரினங்கள் தீவிரமா ஈடுபடுது. ஒன்னு சுறா. இன்னொன்னு மனிதர்கள். ஆமை முட்டைகளோட ஓடு கனமா இருக்காது. அதைத் தோண்டியெடுத்து சிறுவர்கள் ஒருத்தர் மேல ஒருத்தர் வீசி விளையாடுறாங்க. சில இடங்கள்ல நாய் தோண்டிச் சாப்பிட்டுடும். தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள்ல ஆமை முட்டைகளை மக்களே தோண்டியெடுத்து சாப்பிடுறாங்க. சில பகுதிகள்ல ஆமையையே பிடிச்சுச் சாப்பிடுறாங்க.

ஆமைகள் முக்கால் மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணிக்கு மேல வந்து சுவாசிக்கும். மீன்பிடிக்கப்போற விசைப்படகுகள் வலையைப் போட்டு ஆமையையும் சேர்த்துச் சிக்க வச்சுடுறாங்க. அதனால மேலே வந்து சுவாசிக்க முடியாம நிறைய ஆமைகள் சாகுது. படகுல மோதி நிறைய ஆமைகள் சாகுது. இந்த ஆபத்துகளையெல்லாம் கடந்து வாழ்ற ஆமைகள்ல நிறைய சுறாவுக்கு உணவாகிடுது...’’ ஆபத்துகளை விரிவாக விளக்குகிறார் சுப்ரஜா.

ஆமைப் பாதுகாப்புப் பணிகளை மீனவர்களிடமிருந்தே தொடங்கினார் சுப்ரஜா. ‘‘மீனவர்கள் மனசு வச்சா மட்டும்தான் ஆமைகளைக் காப்பாத்த முடியும். அவங்களுக்கு ஆமைகளோட முக்கியத்துவத்தைப் புரியவச்சா, இறப்பைக் குறைக்க முடியும்னு நினைச்சேன். பெரிய நீலாங்கரைப் பகுதியிலதான் வேலைகளை முதன்முதல்ல ஆரம்பிச்சேன். மகாபலிபுரம் பக்கத்துல இருக்கிற முதலைப்பண்ணையில ஆமைகள், முதலைகள் பத்திப் பயிற்சி தருவாங்க. முதற்கட்டமா 13 மீனவர்களை அழைச்சுப் போய் பயிற்சி கொடுத்தேன். அதன்பிறகு, ‘நாங்க உங்களுக்கு உறுதுணையா நிக்குறோம்'னு சொன்னாங்க. அவங்க மூலமா கடலோர கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்களைப் பயிற்சி முகாமுக்குக் கூட்டிக்கிட்டுப் போனேன். ‘நீங்க உடைச்சு விளையாடுற ஒவ்வொரு முட்டைக்குள்ளயும் நம்மையும் கடலையும் காக்குற ஒரு சந்ததி இருக்கு'ன்னு புரிய வச்சேன்.

சுப்ரஜா தாரணி
சுப்ரஜா தாரணி

வனப்பாதுகாப்புச் சட்டப்படி, ஆமைகளைக் கொன்னா ரூ.25,000 அபராதம், 7 வருஷம் சிறைத்தண்டனை கொடுக்கலாம். இதுபத்தி யெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். வனத்துறை அனுமதி வாங்கி ஆமைகள் முட்டையிடுற பகுதிகள்ல ரோந்து போகத் தொடங்கினோம். ஆமை முட்டையிட்ட இடங்களைக் கண்டுபிடிச்சுப் பாதுகாக்க ஆரம்பிச் சோம். 2006-ல தலைமை வனப்பாதுகாவலரா இருந்த ஸ்ரீதரன் சார், எங்க வேலையை முழுசா அங்கீகரிச்சு, ‘ஒரு கிராமத்துக்கு ரெண்டு பேர் வீதம் ஆமைப் பாதுகாவலர்களை நியமிங்க, நாங்க உதவித்தொகை, ஐ.டி கார்டெல்லாம் தர்றோம்'னு சொன்னார். அதுவரைக்கும் எங்களை கேலி பேசினவங் கெல்லாம் இதுக்கப்புறம் எங்க வேலையோட முக்கியத்துவத்தை உணர்ந்தாங்க.

அதுக்கப்புறம் ஆமைக்கூண்டுகள்ல இருந்து முட்டைகளைச் சேகரித்து வேலிகள் உருவாக்கி அதுக்குள்ள பொறிக்கவச்சு குஞ்சுகளைக் கடல்ல விடுற வேலையை ஆரம்பிச்சோம். படிப்படியா இது ஆந்திரா, ஒடிசா வரைக்கும் போச்சு. இப்ப ஆந்திரா, ஒடிசா வனத்துறைகள் எங்க ஆமைக்காவலர்களுக்கு மாதாமாதம் உதவித்தொகை தர்றாங்க. தமிழ்நாட்டுல நாங்களே எங்க நண்பர்கள் மூலம் பணம் திரட்டி உதவித்தொகை தர்றோம். பள்ளி, கல்லூரிகள்ல ஆமைகளோட முக்கியத்துவத்தைச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துறோம்.

இப்போ 222 கிராமங்கள்ல எங்க ஆமைக்காவலர்கள் இருக்காங்க. இன்னும் வேலைகள் இருக்கு. 1970கள்ல, கிழக்குக் கடற்கரையில 1 கி.மீ தூரத்துக்கு 100 ஆமைகள் முட்டையிட்டதா பதிவுகள் இருக்கு. 20 வருஷம் முன்னாடி நாங்க வேலையை ஆரம்பிச்சப்போ 1 கிலோ மீட்டருக்கு 12 ஆமைகள் முட்டையிட்டதைப் பதிவு செஞ்சோம். கடந்த நாலைஞ்சு வருஷமா நாலு முதல் அஞ்சு ஆமைகள்தான் முட்டையிட வருது. அடுத்த தலைமுறையைக் காப்பாத்தணும்னா ஆமைகளைக் காப்பாத்தணும்...’’

சுப்ரஜாவின் அமைதியான வார்த்தைகளில் இருக்கிறது கடலின் ஆர்ப்பரிப்பு!

- வருவார்கள்...