மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாரத்தான் மனிதர்கள் - 31 - காந்திய உறவுக்கொடி!

டேவிட்
பிரீமியம் ஸ்டோரி
News
டேவிட்

மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்

டேவிட் அப்போது மேற்கு ஐரோப்பாவில் உள்ள பெல்ஜியம் நாட்டில் ஐ.பி.எம் நிறுவனத்தில் மேலாளராக இருந்தார். சம்பளம்... கிட்டத்தட்ட மாதம் ரூ.5 லட்சம். அவர் மனைவி சுதா அதே ஊரில் இன்னொரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்தார். மனைவியிடம் ஒருநாள் சொன்னார் டேவிட்... ‘‘சுதா, நான் வேலையை விட்டுவிட்டு தமிழகத்துக்குப் போகலாம் என்றிருக்கிறேன்...’’

‘‘ஏன்... என்னாச்சு?’’

‘‘இனிமேல் இங்கே இருந்தால் காந்தி என்னை மன்னிக்க மாட்டார். இந்த 42 ஆண்டு வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால் எதுவுமே இல்லை. இது போதுமென்று தோன்றுகிறது. நான் தமிழகம் போய் ஏதேனும் செய்ய வேண்டும்...’’

சுதா யோசித்தார். ‘‘நன்கு சிந்தித்து முடிவெடுத்துவிட்டீர்கள் என்றால் நீங்கள் நினைத்தபடி செய்யுங்கள்...’’

டேவிட் தமிழகத்துக்கு வந்து 22 ஆண்டுகளாகிறது. கொடைக்கானல் மலையைச் சுற்றிலும் இருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களை உருவாக்கி, பெண்களை சுயசார்பு வாழ்க்கைக்குப் பழக்கியிருக்கிறார். தொழில் வாய்ப்புகளை உருவாக்கித் தந்திருக்கிறார். கல்வி, மருத்துவம் என அடிப்படைத் தேவைகளுக்கு உதவுகிறார். பயிற்சி வழங்கி, தொழில் முனைவோர்களை உருவாக்குகிறார். ‘காந்தி சென்டர்' என்ற பெயரில் ஒரு மையத்தைத் தொடங்கி, காந்தியின் போதனைகளை, சுயசார்புத் தன்னிறைவு வாழ்க்கையை, சமத்துவத்தை போதிக்கிறார்.

டேவிட்
டேவிட்

‘‘காந்தி அளவுக்கு இந்தியாவை முழுமையாப் புரிஞ்சுக்கிட்ட தலைவர் வேறு யாருமேயில்லை. இன்னைக்கு நாம சந்திக்கிற எல்லாப் பிரச்னைகளையும் அன்னைக்கே சொல்லி, அதற்கான தீர்வுகளையும் பதிவு செஞ்சு வச்சிருக்கார். ஆனா, முடிவெடுக்கிற நிலையிலிருக்கிற யாரும் காந்தியை முழுசா வாசிக்கிறதில்லை. கல்வி, சுகாதாரம், சாதி, சுற்றுச்சூழல், அரசியல், மொழின்னு எல்லாப் பிரச்னைகளுக்கும் காந்திகிட்ட தீர்வு இருக்கு. குறிப்பா ஏழ்மையை ஒழிக்க ரொம்பத் தீர்க்கமான வழிமுறைகளை காந்தி முன்வைக்கிறார். சுதந்திரமடைஞ்சு 75 ஆண்டுகள் கடந்தும் நம்மால 50 சதவிகிதம் பேருக்குக்கூட மூணு வேளை சாப்பாடு தரமுடியலே. ஒரு பக்கம் தானியங்கள் வீணாகுது; இன்னொரு பக்கம் ரெண்டு வேளை சாப்பாடுகூட கிடைக்காம மக்கள் தவிக்கிறாங்க. முறைப்படியான விநியோகத் திட்டம்கூட நம்மகிட்டே இல்லை. இதெல்லாம் என்னைத் துரத்திக்கிட்டே இருந்துச்சு. ‘மத்தவங்களைக் கைநீட்டிக் குற்றம் சுமத்துறதுக்கு முன்னாடி உன் பங்களிப்பு என்னன்னு சுய பரிசோதனை செஞ்சுக்கோ'ன்னு சொல்றார் காந்தி. அந்த உந்துதல்லதான் நான் வேலையை விட்டேன்...’’

மென்மையாகப் பேசும் டேவிட்டிடம் ‘‘ஏன் கொடைக்கானலைத் தேர்ந்தெடுத்தீர்கள்?’’ என்று கேட்டேன்.

டேவிட்
டேவிட்

‘‘தமிழகத்திற்கு வர வேண்டும் என்பதுதான் என் திட்டம். எந்த ஊரென்றெல்லாம் முடிவு செய்யவில்லை. நானும் என் மனைவியும் கொடைக்கானலுக்குச் சில முறை வந்து சென்றிருக்கிறோம். கொடைக்கானல் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அதன் காரணமாகவே இங்கு வந்தேன். வந்து இரண்டாண்டுகள் இந்தப் பகுதியை முழுமையாகப் புரிந்துகொண்டேன். கொடைக்கானலைச் சுற்றி 14 பஞ்சாயத்துகள் இருக்கின்றன. எல்லோருமே நில உடைமை யாளராகவோ, தொழிலாளர்களாகவோ விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்பவர்கள். ஆனால் இத்தனை ஆண்டுகளில் அவர்கள் வாழ்க்கை மாறவேயில்லை. நிறைய பேரைச் சந்தித்துப் பேசினேன். நிலம் வைத்திருப்பவர்களும் சரி, தொழிலாளர்களும் சரி... பெரும்பாலும் கடன்காரர்களாகவே இருக்கிறார்கள். இங்குதான் நான் இருக்க வேண்டும் என்பதற்கு இதைவிட வேறு காரணங்கள் தேவைப்படவில்லை...’’ புன்னகைக்கிறார் டேவிட்.

டேவிட் பருண்குமார் தாமஸ்... இதுதான் அவரின் முழுப்பெயர். அப்பா, சாமுவேல் ஜெயசிங் தாமஸ். அம்மா, பத்மினி. ஒரு அக்கா, ஒரு தங்கை.

‘‘தூத்துக்குடி பக்கத்துல நாசரேத் தான் எங்க பூர்வீகம். அப்பா மத்திய அரசுல வாட்டர் கமிஷன்ல வேலை பார்த்தார். எங்கெல்லாம் தண்ணீர்ப் பிரச்னையோ அங்கெல்லாம் அப்பாவை மாத்திடுவாங்க. நான் பிறந்தது அசாம்ல. மேற்கு வங்கம், பீகார், டெல்லின்னு இந்தியாவோட பல நகரங்கள்ல படிச்சேன். ஒவ்வொரு பிராந்தியத்திலும் என்னென்ன மாதிரி பிரச்னைகள் இருக்குன்னு புரிஞ்சுக்க இது நல்ல வாய்ப்பா இருந்துச்சு. பிளஸ் டூ முடிச்சதும் ஐ.ஐ.டி கான்பூர்ல மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் கிடைச்சுச்சு. தொழில்நுட்பம் தாண்டி, ஒவ்வொரு செமஸ்டருக்கும் வரலாறு, சமூகவியல், உளவியல், தத்துவம்னு ஒரு ஹியூமானிட்டி பேப்பர் இருக்கும். அப்படித்தான் காந்தியைப் படிக்க ஆரம்பிச்சேன். பாடம்ங்கிற எல்லையைத் தாண்டி காந்தி எனக்குள்ள பல கேள்விகளையும் மாற்றங்களையும் உருவாக்கினார். அரசியலையும் வரலாற்றையும் முழுசாப் புரிஞ்சுக்க விரும்பினேன்.

டேவிட்
டேவிட்

ஐ.ஐ.டி படிப்பு முடிஞ்சதும் பெரிய கம்பெனிகள்ல இருந்து வேலைகள் வந்துச்சு. எல்லாத்தையும் விட்டுட்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துல எம்.ஏ. வரலாறு சேர்ந்தேன். எல்லாரும் ஆச்சர்யமாப் பார்த்தாங்க. நான் தீவிரமா வரலாறு படிச்சேன். ரோமிலா தாப்பர்தான் எனக்கு கைடு. வரலாறு பற்றின பார்வையையே ரோமிலா அம்மா மாத்தினாங்க. நாம படிக்கிற வரலாறுங்கிறது மேலிருந்து கீழாக எழுதப்பட்டது. உண்மையான வரலாறு கீழேயிருந்து உருவாக்கப்படணும்னு அம்மா சொல்வாங்க. மக்களின் வாழ்க்கைச்சூழல் எப்படியிருக்குங்கிறதுலதான் ஒரு ஆட்சியாளனின் தரம் இருக்கு. ஆனா நாம காலங்காலமா ஆட்சியாளர்களோட வரலாற்றைத்தான் படிச்சுக்கிட்டிருக்கோம். இந்தியாவோட நிலவியல், அறிவியல் தன்மைகளோட எழுதப்பட்ட வரலாறுகளைத் தேடிப்பிடிச்சுப் படிச்சேன்.

ஜே.என்.யூவுல மாணவர் சங்கத்தலைவர் தேர்தல் நடந்துச்சு. இடதுசாரிகளும் ஏ.பி.வி.பி-யும் ஆதிக்கம் செலுத்தின காலம். ‘சுதந்திரச் சிந்தனையாளர்கள்'னு ஒரு குழுவைத் தொடங்கி அதன்மூலம் தேர்தல்ல நின்னு மாணவர் சங்கத் தலைவரானேன்.

அடுத்த பதினைந்து ஆண்டுகள் வேற வேற நிறுவனங்கள்ல வேலை செஞ்சேன். ஆனா வழிநெடுக காந்தி பற்றிய வாசிப்பு தொடர்ந்துச்சு. 2002 காலகட்டத்துல கையில ஓரளவுக்குச் சேமிப்பு இருந்துச்சு. சம்பாதிச்சது போதும்னு கொடைக்கானலுக்கு வந்துட்டேன்...’’ உற்சாகம் தருகிறது டேவிட்டின் உரையாடல்.

கொடைக்கானல் வந்ததும் காந்தி கிராமம் பல்கலைக்கழத்தோடு தொடர்பு உருவாக்கிக்கொண்டார் டேவிட். அந்நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பிலிருந்த ராஜகோபாலன், ஸ்ரீரங்கம் இருவரும் டேவிட்டுக்கு வழிகாட்டியானார்கள்.

காந்தி
காந்தி

‘‘கொடைக்கானல் வந்துட்டேனே தவிர, இங்கே என்ன செய்யப்போறேன்னு எந்தத் திட்டமும் இல்லை. கிராமம் கிராமமா சுத்தி, மக்கள்கிட்ட பேசினேன். இங்குள்ள சூழ்நிலை, வாழ்க்கைமுறையைப் புரிஞ்சுக் கிட்டேன். விவசாயம் லாபகரமா இல்லை. போதுமான கூலி கிடைக்கலே. அடுத்தகட்டம் பத்தி மக்கள் யோசிக்கவேயில்லை. ஒன்னு, மழை பேஞ்சு கெடுக்குது, இல்லேன்னா வெயில் காஞ்சு கெடுக்குது. ஆனாலும் மக்கள் விவசாயம் செஞ்சுகிட்டே இருக்காங்க. தட்பவெப்பச் சூழல் மாறி பருவகாலங்கள்ல மாற்றம் வருது. ஆனால் மக்கள் அதைப் புரிஞ்சுக்காம பாரம்பர்ய முறைப்படியே விவசாயம் செய்றாங்க. சேமிப்பு, தொழில்நுட்பம், மனோபாவ மாற்றம்... இதெல்லாம் மக்களுக்குத் தேவைன்னு புரிஞ்சுச்சு.

காந்தி கிராம பல்கலைக்கழகத்துல ராஜகோபாலன் சாரும் ரங்கம் அக்காவும் என் தேடலைப் புரிஞ்சுக்கிட்டாங்க. அங்கே சோப்பு, உடைகள், சமையல் பொருள்கள்னு நிறைய பொருள்கள் தயாரிக்கிறாங்க. அதோட விற்பனை முறைகள்ல சில புதிய விஷயங்களைக் கொண்டு வந்தோம். கிராமங்கள்ல இருக்கிற பெண்களுக்குப் பயிற்சிதந்து விற்பனைப் பிரதிநிதிகளா மாத்தினோம். விற்பனையும் அதிகமாச்சு, பெண்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைச்சுச்சு.

அதுல கிடைச்ச அனுபவம் நம்பிக்கை கொடுக்க, கொடைக் கானலைச் சுத்தியிருக்கிற கிராமங் களுக்குப் போய்ப் பேச ஆரம்பிச்சேன். ‘முதல்ல சாதி, மதம் பாக்காம நீங்க ஒருங்கிணையணும். உங்களுக்கு என்ன தேவைன்னு புரிஞ்சுக்கணும். உங்களுக்குத் தேவையானதை நீங்களே உருவாக்கிக்கணும்'னு சொன்னேன். ஆரம்பத்துல என்னை யாரும் நம்பலே. சோர்வடையாம தொடர்ந்து நடந்தேன். பாலக்காடு ஓடைங்கிற ஒரு கிராமத்துல பத்துப்பெண்கள் ‘நாங்க வர்றோம் சார்'ன்னு வந்தாங்க. ‘சத்தியம்’ங்கிற பேர்ல ஒரு சுய உதவிக்குழு ஆரம்பிச்சோம். மூணு மாதத்துல நிறைய நல்ல விஷயங்கள் நடந்துச்சு. இவங்க ஒருங்கிணைஞ்சு சேமிக்கிறதைப் பார்த்துட்டு அடுத்தடுத்த கிராமங்கள்ல நிறைய பெண்கள் வரத் தொடங்கினாங்க. எல்லோரையும் ஒருங்கிணைச்சு ‘இந்திய நிர்மாண சங்கம்'னு ஒரு அமைப்பைக் கட்டினோம். அடுத்தடுத்து சுய உதவிக்குழுக்களை அமைச்சோம்.

டேவிட்
டேவிட்

சுய உதவிக்குழுக்கள் திட்டம் உண்மையிலேயே நம் நாட்டுக்கு நல்ல முன்னுதாரணத் திட்டம். மிகப்பெரிய நம்பிக்கையையும் மாற்றத்தையும் உருவாக்குற திட்டம். ஒரு மாற்றம் பெண்கள் மத்தியில தொடங்கும்போது தலைமுறைக்குமான மாற்றமா மாறிடும். இதைத்தான் காந்தி வலியுறுத்துறார். ரெண்டு ஆண்டுகள்லயே 4,000 பெண்கள் வந்துட்டாங்க. 300 குழுக்கள் உருவாக்கிட்டோம்.

பணம் சேமிக்கிறது, லோன் வாங்கித்தர்றதைத் தாண்டி அவங்க வாழ்க்கையை மாத்த நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருந்துச்சு. உங்களால முடியும்னு அவங்களை மோட்டிவேட் பண்ணிக்கிட்டே இருந்தேன். குடும்ப வரவு செலவுல ஆரம்பிச்சு, இடுபொருள் செலவில்லாத இயற்கை வேளாண்மை வரைக்கும் நிறைய விஷயங்கள் கத்துக்கொடுத்தேன். கொஞ்சம் இடம் வாங்கி புதிய தொழில்நுட்பங்களை அதுலயே பரீட்சித்துப் பார்த்து வெற்றிகரமான விஷயங்களை அவங்களுக்குப் பரிந்துரைப்பேன்.

நிறைய குழுக்கள் சொந்தமா தொழில் செய்ய ஆரம்பிச்சாங்க. சில குழுக்கள் தோட்டத்தைக் குத்தகைக்கு எடுத்து சுயமா வேளாண்மை செய்ய ஆரம்பிச்சாங்க. வேலையும் கிடைச்சு, வேளாண்மையில லாபமும் கிடைச்சுச்சு. தையல், கார்ப்பெண்டரி, யூகலிப்டஸ் ஆயில் தயாரிப்புன்னு நிறைய தொழில்கள் நடக்குது. பயிற்சி தர்றதுக்காக ஒரு தையல் யூனிட்டும், ஒரு கார்ப்பெண்டரி யூனிட்டும் திறந்திருக்கோம். தச்சுத்தொழில் ஆண்களுக்கானதுங்கிற வரையறையை உடைச்சு பெண்கள் மிகச்சிறப்பா செஞ்சுக்கிட்டிருக்காங்க.

20 ஆண்டுகள்ல இங்கே நிறைய மாற்றங்களைப் பாக்குறேன். எட்டாவதோ பத்தாவதோ முடிச்சவுடனே பெண்களுக்குத் திருமணம் முடிக்கிற வழக்கம் இன்னைக்கு மாறியிருக்கு. நிறைய பெண்கள் கல்லூரிக்குப் போறாங்க. பெரிய நிறுவனங்கள்ல வேலைக்குப் போறாங்க. தேர்வுக்காலங்கள்ல பிள்ளைகளுக்குச் சிறப்பு பயிற்சி தர்றோம். கரியர் கைடன்ஸ் கொடுக்கிறோம். அரசு அலுவலகங்கள்ல ஆக வேண்டிய வேலைகளுக்கு உடன் நிக்குறோம். இயற்கை வேளாண்மைப் பயிற்சிகள் தர்றோம். உற்பத்திக்கு நல்ல விலை கிடைக்க ஏற்பாடு செய்றோம்.

கோவையில `டாக்டர் நெட்'னு ஒரு மருத்துவக் குழு இருக்கு. அவங்க உதவியோட எல்லா கிராமங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்துறோம். சிகிச்சைகளுக்கு உதவி செய்றோம். பெண்களுக்குத் தலைமைப்பண்பை உருவாக்குறோம். அவங்க ஊரைப்பத்தி, நாட்டைப் பத்தி, நாட்டோட கொள்கைகள் பத்தி அவங்க விவாதிக்கிறாங்க. பொருளாதார ரீதியா நிறைய மாற்றங்கள் இங்கே நடந்திருக்கு.

மாரத்தான் மனிதர்கள் - 31 - 
காந்திய உறவுக்கொடி!

என் தீவிரத்தையும் ஆர்வத்தையும் பாத்துட்டு என் மனைவியும் வேலையை விட்டுட்டு இங்கே வந்துட்டாங்க. இப்போ இந்தப்பகுதியில ஒரு பள்ளியில ஆசிரியையா இருக்காங்க.

திரும்பிப் பார்க்கும்போது சரியான முடிவைத்தான் நான் எடுத்திருக்கேன்னு புரியுது. மிகப்பெரிய உறவுக்கொடி மாதிரி இது நீண்டிருக்கு. காந்தியம்ங்கிறது வெறும் தத்துவம் இல்லை. வாழ்க்கை முறை. காந்தியோட கருத்துகளை புத்தகங்கள்ல வெறும் போதனையா கொண்டு போறதுல எந்த அர்த்தமும் இல்லை. வாழ்ந்து காட்டணும். மத்தவங்களை வாழ வைக்கணும்!’’

ஆத்மார்த்தமாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது, டேவிட்டுடனான உரையாடல்.

- முற்றும்