
இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற வழக்கை எல்லாரும் கேட்டிருப்பீங்க. என் வாழ்க் கையில உண்மையாகிப் போன விஷயம் அது.
`எதிர்பாராததை எதிர்பாருங்கள்'... இதுதான் வாழ்க்கை நம் ஒவ்வொருவருக்கும் வலியுறுத்தும் செய்தி. எதிர்பாராமல் நிகழ்பவற்றில் சில நேரங்களில் அதிசயங் களும் பல நேரங்களில் அல்லல்களும் இருக்கலாம். எதற்கும் எப்போதும் எல்லோ ரும் தயாராக இருக்க வேண்டும் என்பதே வாழ்வின் விதி.
தெளிந்த நீரோடைபோல, அமைதி யாகச் சென்றுகொண்டிருந்த மாலாவின் வாழ்விலும் அப்படியோர் ‘எதிர்பாராத’ நிகழ்வு நடந்துள்ளது. அது இறுதியில் அதிசயத்தில் முடிந்தது இனிய ஆச்சர்யம்.
யார் இந்த மாலா?
இனிஷியலோடு சேர்த்து இ.மாலா என்று குறிப்பிட்டால் பலருக்கும் தெரியும். அட்சர சுத்த தமிழ் உச்சரிப்புக்கு உதா ரணம் காட்டப்படும் வெகுசில தொகுப் பாளர்களில் ஒருவர். சன் தொலைக்காட்சி யின் முதல் தொகுப்பாளர். ஊடகத்துறை யில் 25 வருட அனுபவத்துடன், இன்று சீரியல் மற்றும் சினிமா தயாரிப்பாளர், கதைசொல்லி, சமூகசேவகி, தோட்ட ஆர்வலர் என இவருக்கு வேறு முகங்களும் உண்டு. எல்லோருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத காலகட்டம் ஒன்று இருக்கும். மாலாவின் வாழ்க்கை யிலும் தான்... ஆனால் உண்மை யில் அது அவர் மறக்க வேண்டிய காலகட்டம்.
`` `இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற வழக்கை எல்லாரும் கேட்டிருப்பீங்க. என் வாழ்க் கையில உண்மையாகிப் போன விஷயம் அது. சில வருஷங்களுக்கு முன்னாடி ஒரு ஏப்ரல் மாதம் நான் நிஜமாவே புதிதாய்ப் பிறந் தேன்னு தான் சொல்லணும்...’’ மாறாத மென் சிரிப்புடன், ‘நடந் தது என்ன’ என விவரிக்கிறார்...
``ஊடகத்துறையில பிசியா இருந்தேன். பிரபல ஒளிப்பதி வாளர் பாலசுப்ரமணியெத் தோட காதல் திருமணம் நடந்தது. எங்களுக்கு இரண்டு மகன்கள். குடும்ப பொறுப்புகள் அதிகமானதும் என்னால ஊடகத்துறையில முழுநேரமும் ஈடுபட முடியலை. அந்த வாழ்க்கையையும் மகிழ்ச்சியா ஏத்துக்கிட்டேன். ஏன்னா, என்னை எப்போதும் மகிழ்ச்சியா வெச்சுக் கறதைத்தான் நான் விரும்புவேன்.
2015-ம் வருஷம் சென்னையில மழை, பெருவெள்ளம்னு பேரழிவை சந்திச்ச நேரம்... நண்பர்களோட சேர்ந்து, வெள்ளத்தால பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளைச் செய்யறதுல பிசியா இருந்தேன். அப்போ எனக்கு ரத்த அழுத்தம் அதிகமா இருந்தது. டாக்டர் மாத்திரை கொடுத்திருந்தும், மழை நிவாரணப் பணிகள்ல பிசியா இருந்ததால மருந்துகள் எடுத்துக்கிறதை மறந்துட்டேன். அப்படியே பல மாசங்கள் ஓடிருச்சு.

மார்ச் மாசத்துல ஒருநாள்... வீட்டுல இருந்த நான் திடீர்னு மயங்கி விழுந்திருக்கேன். வீட்ல வேலைசெய்யற அம்மா, என்னைப் பார்த்துட்டு கணவருக்குத் தகவல் சொல்லியி ருக்காங்க. வீட்டுக்குப் பக்கத்துல உள்ள பெரிய மருத்துவமனையில சேர்த்தாங்க. எனக்கு மூளைக்குப் போற நரம்பு வெடிச்சதுல ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்ததா சொன்னாங்க. மருத்துவமனையில என்னென்னவோ முயற்சிகள் செய்தும் ஒரு முன்னேற்றமும் இல்லை. என் கணவர் அப்போ உதயநிதி ஸ்டாலினோட படத்துல வொர்க் பண்ணிட்டிருந்தார். தகவல் தெரிஞ்சதும் உதயநிதி மருத்துவமனைக்கே வந்து, என்னை உடனடியா வேற ஒரு பெரிய மருத்துவமனைக்கு கொண்டுபோக ஏற்பாடு செஞ் சார். ‘அரை மணி நேரத்துக்குள்ள வந்தா ஏதாவது முயற்சி செய்ய லாம்’னு அந்த மருத்துவமனை தரப்புல சொல்லியிருக்காங்க. பரபரப்பான அந்த மாலை நேரம், படு பிசியான வடபழனி ஏரியா டிராஃபிக்னு எல்லாத்தை யும் மீறி சரியான நேரத்துல என்னை மருத்துவமனையில கொண்டு போய்ச் சேர்த்திருக் காங்க...’’ மாலாவின் விவரிப்பில் அந்தக் காட்சி கண்முன் விரிகிறது... பதற்றத்தை உணரச் செய்கிறது.
``உடனடியா எனக்கு இன்டர்வென்ஷனல் சர்ஜரி செய்யப்பட்டது. அதாவது தொடை யில உள்ள பெரிய ரத்த நாளம் வழியா டியூப் செலுத்தி, மூளையில ரத்தச் கசிவு ஏற்பட்ட இடத்தைச் சரிசெய்யற சிக்கலான ஆபரேஷன் அது. அதையடுத்து 35 நாள்கள் சுயநினைவே இல்லாம ஐசியூவுலதான் இருந்தேன். எத்தனையோ பேர், எத்தனையோ பிரபலங்கள் வந்து பார்த்திருக்காங்க, பேசியிருக்காங்க. ஆனா, எனக்கு எதுவுமே நினைவில்லை. காமெடியா சொல்லணும்னா ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படம் மாதிரிதான் அந்த 35 நாள்கள் என் வாழ்க்கை யில போச்சு...’’ துயரம் மறைத்துச் சிரித்தாலும் வலியின் மிச்சம் அவரின் வார்த்தைகளில்...
``35 நாள்கள் கழிச்சு வீட்டுக்கு வந்தபோது என்னை ரெண்டு பேர் கைத்தாங்கலா பிடிச்சுக் கூட்டிட்டு வந்தாங்க. ‘உங்களுக்கு நடக்க முடியாமப் போயிருக்கலாம், பேச்சு வராமப் போயிருக்கலாம், படுத்த படுக்கையா ஆயிருக்கலாம்... என்ன வேணா நடந்திருக் கலாம்’னு டாக்டர் சொன்னார். ஆனா அப்படியெல்லாம் நடக்காம என்னால உட்கார்ந்திருக்கவாவது முடியுதேனு சந்தோஷப்பட்டேன். புதுசா நடை பழகற குழந்தையைப் போல தினமும் 10 அடி எடுத்து வெச்சு நடக்கப் பழகினேன். ‘உங்களுக்கு நடந்தது நிஜமான மெடிக்கல் மிராக்கிள்’னு சொன்னாங்க டாக்டர்ஸ்...
என் இளைய மகன் கருணுக்கு சமையல்ல ஈடுபாடு உண்டு. அவனைவெச்சு ‘கருண்ஸ் கிச்சன்’னு ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சேன். அவன் சமைக்கிறதை, நான் உட்கார்ந்தநிலையில ஷூட் பண்ணி, பிறகு லேப்டாப்ல எடிட் பண்ணி வீடியோ போடறதுல என்னை ஈடு படுத்திக்கிட்டேன். தினமும் கொஞ்ச நேரம் உட்காரணும்ங்கிறது மட்டும்தான் நோக்கம். ஒரு பிரச்னைக்கு எடுத்துக்கிற மருந்துகளால இன்னொரு பிரச்னை, அதுக்கு ஒரு மருந்து, அதுக்கொரு விளைவுனு அப்படியே மூணு வருஷங்கள் போச்சு. அந்த நேரத்துல ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு மெகா சீரியல் தயாரிக்கிற வாய்ப்பு வந்தது. நடக்கவே முடியாம இருந்த நேரத்துலயும் ஏதோ ஒரு நம்பிக்கையில மிகப்பெரிய அந்த வாய்ப்புக்கு ஓகே சொன்னேன். சீரியல் நல்லா போச்சு. கொஞ்சம் கொஞ்சமா இயல்புநிலைக்குத் திரும்பினாலும், உடல் முன் அளவுக்கு ஒத்து ழைக்கறதில்லைங்கிறதுதான் உண்மை...’’ ஒவ்வொன்றிலிருந்தும் மீண்டு கொண்டிருப் பவர், இந்த நிலையிலும் சும்மா இல்லை.

வட இந்தியாவிலிருந்து வந்து சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் தங்கி, சிகிச்சை பெற்றுவரும் புற்றுநோய் பாதித்த குழந்தைகளையும், அவர்களின் அம்மாக் களையும் அடிக்கடி சந்தித்துப் பேசுவதையும் அவர்களுக்கு ஆறுதல் சொல்வதையும் தொடர்கிறார் மாலா. தனக்கு நேர்ந்தது இனி யாருக்கும் நிகழ வேண்டாம் என்ற அக்கறை யில் தன் அனுபவங்களிலிருந்து பாடங்கள் சொல்கிறார் மாலா.
``முன் அளவுக்கு என்னால வெளியிடங் களுக்குப் போக முடியலை. ஆனாலும் உலகத் தையே நம்ம கைக்குள்ள கொண்டுவரும் மொபைல் இருக்கே... அதுல பல விஷயங்கள் பண்றேன். ஷேர் மார்க்கெட் கத்துக்கிட்டேன். திங்கள் முதல் வெள்ளிவரை ஷேர் மார்க் கெட்ல என் நேரம் பரபரப்பா, சுவாரஸ்யமா போகும். ஆயிரம் ரூபா சம்பாதிச்சாலும் அவ்ளோ சந்தோஷமா இருக்கும்.
என் கணவர் திரைத்துறையில பிசியான கேமராமேன். அதனால கல்யாணமானது லேருந்தே வீட்டு நிர்வாகம் மொத்தமும் நான்தான் பார்க்கறேன். அவருக்கு வரவு, செலவு, சேமிப்பு, முதலீடுனு எதுவும் தெரி யாது. எனக்கு உடம்பு சரியில்லாம, சுய நினைவில்லாம இருந்தபோதுதான் அதோட விளைவு அவருக்குப் புரிஞ்சது. இந்த நிலைமை எந்த வீட்டுக்கும் வரக்கூடாது. வீட்டோட வரவு, செலவு, சேமிப்பு, கடன், முதலீடுனு எல்லாமே கணவன்-மனைவிக்கு மட்டு மல்லாம, பிள்ளைங்களுக்கும் தெரிஞ்சிருக் கணும். ஏன்னா என்னோட ஹெல்த் இன்ஷூ ரன்ஸை புதுப்பிக்கப் போனபோது என் மகன் என்கூட இருந்தான். அதனாலதான் நான் சுய நினைவில்லாம மருத்துவமனையில இருந்த போது, அந்த இன்ஷூரன்ஸ் தகவல்களைத் தேடி எடுத்து க்ளெயிம் பண்ண முடிஞ்சது. அவனுக்குத் தெரியாமப் போயிருந்தா, அந்த இன்ஷூரன்ஸே வேஸ்ட்டா போயிருக்கும்.
பெண்களுக்கு ஒரு விஷயத்தை வலியுறுத்த நினைக்கிறேன்... ‘நான் ஆரோக்கியமாதான் இருக்கேன்... நல்லா சாப்பிடறேன், வொர்க் அவுட் பண்றேன்'னு அலட்சியமா இருக் காதீங்க. டயட் பண்றோம், வாக்கிங் போறோம், நல்லாதான் இருக்கோம்னுதான் நானும் நினைச்சிட்டிருந்தேன். ஆனா, நடந்ததோ வேற... ஸோ... நீங்க என்னதான் ஹெல்த்தியா இருந்தாலும் வருஷத்துக்கொரு முறை ஒரு ஹெல்த் செக்கப் பண்ணிப் பார்த்துடுங்க. டாக்டர் சொல்றதைக் கேளுங்க. சின்ன பிரச்னையையும் அலட்சியம் பண்ணாதீங்க’’
- மாலாவின் மெசேஜ் அவசியமானது மட்டுமல்ல, அவசரமானதும்!
இ.மாலாவின் விரிவான பேட்டியை இந்த https://bit.ly/3n571nP லிங்க்கில் அல்லது அருகில் உள்ள QR-code-ஐ ஸ்கேன் செய்து காணலாம்.