
- பிஸ்மி பரிணாமன்
அதிகாலை ஐந்து மணி. வேகவேகமாக சைக்கிளை மிதிக்கிற அனிதா, பஜாருக்குச் சென்று செய்தித்தாள்களை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார். இருநூறு வீடுகளுக்கும் மேல் நாளிதழ்களை விநியோகித்துவிட்டு மீண்டும் வீடு திரும்ப ஏழு மணி ஆகிவிடும்.
அதன்பிறகு, ரெடியாகி பஸ் பிடித்து, பக்கத்து ஊரில் இருக்கும் தனியார் பள்ளியை அடையும்போது மணி எட்டே முக்கால் ஆகிவிடும். அங்கு மாணவர்களுக்கு சங்கீத வாய்ப்பாட்டு வகுப்பெடுக்கிறார். மாலை நான்கு மணிக்கு பள்ளியிலிருந்து கிளம்பி வீடு வந்து சேர ஆறு மணியாகிவிடும். இதுதான் அனிதாவின் தினசரி கால அட்டவணை.

செய்தித்தாள் விநியோகிப்பது படித்த இளைஞர்கள் செய்யும் பொதுவான வேலைதான். ஆனால், சங்கீதத்தில் எம்.பில் முடித்து, முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டு, பாட்டு வாத்தியார் வேலையும் பார்த்துக்கொண்டு, தினமும் நாளிதழ்களை விநியோகிக்கும் வேலையையும் அசராமல் பார்த்துக்கொண்டிருக்கும் அனிதா, இளம் தலைமுறைக்கு நல்லதொரு ரோல்மாடல்!
கொச்சிக்கு அருகிலுள்ள உதயம்பேரூரைச் சேர்ந்தவர் அனிதா. 27 வயதாகிறது. திருமணம் முடிந்துவிட்டது. தன் அயராத உழைப்பால் கேரளாவில் பிரபலமாகியிருக்கும் அனிதாவைச் சந்தித்து வாழ்த்து சொல்லி உரையாடினேன்.
``அப்பா தாஸ் கேரள மின்வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அம்மா ரஜிதா, முன்னாள் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர். நான் ஒரே மகள். ஓய்வு பெற்றதும் வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல் செய்தித்தாள்களை விநியோகிக்கத் தொடங்கினார் அப்பா. அவர் இடது கம்யூனிஸ்ட் ஆதரவாளர் என்பதால், கட்சி நாளிதழான ‘தேசாபிமானி'யின் உள்ளூர் ஏஜென்ட் ஆனார். அப்பாவுக்கு அடிக்கடி சுகமில்லாமல் போய்விடுகிறது. அதனால் நாளிதழ் விநியோகத்தை நிரந்தரமாக நிறுத்திக்கொள்ள விரும்பினார்.

எனக்கு மனசு கேட்கவில்லை. சைக்கிளின் பின்னால் அப்பாவை அமர்த்தி எந்தெந்த வீடுகளுக்கு செய்தித்தாள்கள் விநியோகிக்க வேண்டும் என்பதைக் காட்டச் சொன்னேன். அடுத்தநாள் அதிகாலையில் தனியாகச் செய்தித்தாள்கள் போடத் தொடங்கியபோது தெரு நாய்கள் துரத்தின. வேகமாகச் சைக்கிளை மிதித்துத் தப்பித்தேன். சிலர் வியப்புடனும், சிலர் ஏளனமாகவும் பார்த்தனர். அப்பா அம்மாவிடம் பலர் வந்து, ‘உங்கள் மகள் இந்த வேலை செய்தால் யார் திருமணம் செய்ய முன்வருவார்கள்’ என்றுகூட கேட்கத் தொடங்கினார்கள். நல்லவேளையாக என்னைப் பெற்றவர்கள் மனம் மாறவில்லை. ஆகவே, ‘குழந்தை பிறந்தால் செய்தித்தாள் விநியோகத்தை நிறுத்த வேண்டிவரும்தானே?' என்று புதிதாகக் கேட்க ஆரம்பித்தி ருக்கிறார்கள்.
சிலநாள்கள் வேண்டுமானால் அதற்காக நான் ஓய்வெடுக்கலாம். ஆனால் செய்தித்தாள் விநியோகிக்கும் வேலையை நிறுத்தமாட்டேன். அதுமட்டுமல்ல, அரசு வேலைக்கும் முயன்றுகொண்டிருக்கிறேன். என் ஊரோ, வெளியூரோ எங்கு வேலை கிடைத்தாலும் செய்தித்தாள்கள் விநியோகத்தைத் தொடருவேன். இரண்டரை ஆண்டுகளாக இந்தப்பணியைச் செய்கிறேன். பல கேரள ஊடகங்கள் என்னைப் பற்றி எழுதின. தனியார் சேனல்கள் என்னை அவர்களது நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கச் செய்தார்கள்.
சங்கீதத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு எம்.பில் படிப்பில் சேர்ந்தேன். இப்போது முனைவர் பட்டத்திற்காக முத்துசாமி தீட்சிதரின் கிருதிகளில் ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். தனியார் பள்ளியிலும் இசை ஆசிரியையாகப் பணிபுரிகிறேன். மாலைவேளைகளில் வீட்டில் குழந்தைகளுக்கு சங்கீத வகுப்புகள் நடத்துகிறேன். கணவர் ஹரி, என்னைப்பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்ட பிறகே திருமணம் செய்து கொண்டார். என்னைப் போலவே அவரும் மெக்கானிக், நடனக் கலைஞர், செண்டை மேளம் வாசிப்பு, எனது ‘செல்ல' போட்டியாளராக தினசரி, வார மாத இதழ்கள் விநியோகம் எனப் பல வேலைகள் செய்கிறார்.

வாய்ப்பாட்டு தவிர நான் பரத நாட்டியமும் பயின்றுள்ளேன். வயலின், வீணை வாசிக்கத் தெரியும். திருவையாறு சங்கீத ஆராதனையில் கலந்துகொண்டு பாடியுள்ளேன். திரைப்படங்களில் பாட வேண்டும் என்ற விருப்பமும் உண்டு. இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை.
அப்பா செய்தித்தாள்கள் விநியோகம் செய்தபோது இருந்ததைவிட இப்போது விற்பனை குறைந்திருக்கிறது. இந்த வேலையில் லீவு எடுக்க முடியாது. இதில் கிடைக்கும் வருமானம் குடும்பச் செலவுகளுக்கு ஓரளவு உதவுகிறது என்பதால் இந்த வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறேன்’’ என்கிற அனிதாவுக்கு அவர் அப்பாவின் நூறாவது பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பது பெரும் விருப்பமாக இருக்கிறது!