
20 மாவட்டங்களிலிருந்து இங்கு பயிற்சிக்கு வருகிறார்கள். நீண்ட தூரத்திலிருந்து வருபவர்கள் காலை உணவை மட்டும் எடுத்து வந்திருப்பார்கள்.
“ ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலாரின் வரிகள் எப்போதும் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். வாடிய பயிரை உவமையாக வைத்து ஜீவகாருண்யத்தை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார் பாருங்கள். அதனால்தான் இந்த மதிய உணவுத்திட்டத்திற்கு ‘வள்ளலார் திட்டம்’ என்று பெயர் வைத்திருக்கிறேன். இனி என்னிடம் படிக்கவரும் மாணவர்கள் யாரும் பசியோடு படிக்க மாட்டார்கள். அந்தப் பெரு மகிழ்வே இவ்வாழ்விற்குப் போதும்!”
- இப்படியொரு ஆசிரியர் கிடைத்திருந்தால் எப்படியிருக்கும் என ஏக்கம் கொள்ள வைக்கும் அளவுக்கு ஒரு தேர்ந்த தமிழாசானைப் போன்ற கணீர்க் குரலில் தூய தமிழில் என்னிடம் பேசினார் தாசில்தார் மாரிமுத்து.
கடந்த 18 வருடங்களாக விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளை அமரவைத்து, போட்டித் தேர்வுக்கான பயிற்சியை அளித்துவருகிறார். இப்போது கூடுதலாக மதிய உணவும் தருகிறார். அரசுப்பணி எனும் அரியாசனத்தில் சாமானியர்களையும் அமர வைக்கும் உன்னத மனிதர்.


‘சொல் அல்ல செயல்’ என்பதன் வாழும் உதாரணமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நான்காயிரம் பேருக்கு இலவசமாகப் பயிற்சியளித்துவருகிறார். இதுவரை ஆயிரம் பேருக்கு மேல் அரசுப்பணியில் அமர வைத்திருக்கிறார்.
வில்லிபுத்தூரில் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு அலுவலகத்தில் தனி தாசில்தாராக இருக்கும் மாரிமுத்து, விகடன் வாசகர்களுக்கு நன்கு பரிட்சயமானவர். 2017-ல் டாப்10 நம்பிக்கை மனிதர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, விகடனின் விருது பெற்றவர். இன்றும் அதே உற்சாகத்தோடும் துடிப்போடும் வார இறுதி நாள்களில் பிஸியாக பயிற்சி வகுப்புகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்.
“போட்டித்தேர்வுக்கான பயிற்சி வரை ஓ.கே...எப்படி சார் நாலாயிரம் பேருக்கு உணவளிக்க முடிகிறது?” என்று அவரிடம் கேட்டேன்.
“20 மாவட்டங்களிலிருந்து இங்கு பயிற்சிக்கு வருகிறார்கள். நீண்ட தூரத்திலிருந்து வருபவர்கள் காலை உணவை மட்டும் எடுத்து வந்திருப்பார்கள். வெறும் தேநீர் மட்டும் அருந்திவிட்டு மாலை வரை நடக்கும் வகுப்புகளைக் கவனிப்பார்கள். இவர்களில் 90% பேர் கஷ்டப்படும் குடும்பப் பின்னணி கொண்டவர்கள்.

பசியின் வலியை உணர்ந்தவன் நான். படிப்புக்கு இடைஞ்சலா பசி இருக்கக்கூடாது. என் இளம்பிராயத்தில் வாரத்தின் பல நாள்களில் வெறும் வயிற்றோடு தூங்கி வெறும் வயிற்றோடு படிக்கக் கிளம்பியிருக்கிறேன். சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியம் என்னிடம் இருந்தது. ஒருநாள் நாமும் அரசு வாகனத்தில் அதிகாரியாக அமர்ந்து அலுவலகம் சென்று பச்சை மையில் கையெழுத்துப் போடுவோம் என்பதை உளமாற நம்பினேன். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. ஏனென்றால், நல்ல கனவுகள் எப்போதுமே நனவாகும்!” என்று சொல்லும் தாசில்தார் மாரிமுத்துவிடம், இந்த வள்ளலார் திட்டத்திற்கான உதவிக்கரம், நிதி ஆதாரங்கள் பற்றிக் கேட்டேன்.
“உண்மையில் எவ்விதத் திட்டமிடலும் என்னிடம் இல்லை. அண்மையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் பங்கேற்கச் சென்றிருந்தேன். விழா ஏற்பாட்டாளர்கள், எனக்கு நினைவுப்பரிசாய் ஒரு தொகையைக் கொடுக்க முன்வந்தார்கள். அதை மறுத்து, ‘வடலூரில் இருக்கும் வள்ளலாரின் சத்திய தரும சபைக்கு அழைத்துச் சென்று காட்டினால் மகிழ்வேன்’ என்றேன். அங்கு கூட்டிச் சென்றார்கள். வள்ளலார் பற்ற வைத்த அந்த அணையா அடுப்பைப் பார்த்ததும் மெய்சிலிர்த்துப்போனேன். அவர் காலத்தில் எரிய ஆரம்பித்த அடுப்பு, இன்றும் அணையாமல் பலரின் பசித்தீயை அணைத்து வருகிறது


வடலூரில் நின்றிருந்த அந்த நொடியில் முடிவெடுத்தேன். கல்வி கற்க வரும் மாணவர்கள் பசியில் வாடக்கூடாது. நல்ல சத்தான உணவை நாமும் அந்த இரண்டு நாள்களிலும் தர வேண்டும் என்று எண்ணி ஊருக்கு வந்தேன். ஒரு உத்வேகத்தில் இந்தத் திட்டத்தை ஆரம்பித்தேன். எங்கெங்கோ இருந்து அற்புதமான உள்ளங்கள் உதவிக்கரம் நீட்டுகிறார்கள்.
என் முன்னாள் மாணவர்கள் பலர், தங்களால் இயன்ற உதவி என மனமுவந்து செய்கிறார்கள். நான்காயிரம் பேருக்கு இந்த இரண்டு நாள்களில் உணவு தயாராகிறது. அறிவுப்பசியோடு, வயிற்றுப்பசியையும் என்னால் தீர்க்க முடிகிறது என்ற மகிழ்வு வாழ்நாளுக்குமாய் இருக்கும்!” என நெகிழ்ந்து பேசும் தாசில்தார் மாரிமுத்து, மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். ‘அத்தனை விருதுகள் பெற்றாலும், மாணவர்கள் அரசுப்பணிக்குத் தேர்வாகி அதன் ஆணையினைக் காட்டும் அந்தத் தருணம்தான் வாழ்நாளின் மறக்க முடியாத தங்கத் தருணம்’ என்கிறார்.
“18 வருடங்கள் ஓய்வோ விடுப்போ எடுத்துக் கொள்ளாமல், நானே மைக் பிடித்து, ஒரே நேரத்தில் 2,000 பேரையும் கரும்பலகையை நோக்கித் திருப்பி கவனிக்க வைக்க முடிவதே என் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான சாட்சி. இங்கு பயிற்சி பெற்ற பெண்களில் பலர் இன்று அரசு அலுவலர்களாய் பணியில் ஜொலிக்கிறார்கள். இதைவிட மகிழ்ச்சி என்ன இருந்துவிடப்போகிறது, சொல்லுங்கள்!” என்று தீர்க்கமாய்ப் பேசும் தாசில்தாரிடம் கேட்க ஒரே ஒரு கேள்வி மட்டுமே என்னிடம் மிச்சம் இருந்தது.


“பதவி உயர்வுக்காக உலகமே ஓடிக்கொண்டிருக்கும் சூழலில், இந்தப் பயிற்சி வகுப்புகளுக்காகவே, உங்களுக்குக் கிடைத்த உதவி ஆட்சியர் பதவி உயர்வினை மறுத்து விட்டீர்களாமே சார்..?” என்று கேட்டேன்.
“ஆமாம். பொறுப்புகள் கூடக்கூட ‘ரெஸ்பான்ஸிபிலிட்டி’ என்ற பொறுப்புணர்வும் அதிகமாகும். சனி, ஞாயிறுகளில் உதவி கலெக்டருக்கான பணிகள் நிறைய இருக்கும். போட்டித் தேர்வுக்காகத் தயாராகி வரும் மாணவர்களின் நலனுக்காக அதை வேண்டாமென்று மறுத்துவிட்டேன். ஏனென்றால், அதைப் பதவியாக நினைக்கவில்லை. பொறுப்பாகவே பார்க்கிறேன். வருவாய்த்துறையினரும் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். எனக்கு இதில் இருக்கும் மகிழ்வும் மனநிறைவும் பதவி உயர்வில் கிடைத்துவிடாது. என் ஆயுள் முழுவதும் மாணவமணிகளின் நெஞ்சில் அறிவுச்சுடரை மிளரச் செய்வதையே தலையாய கடமையாக நினைக்கிறேன். என் பொறுப்புணர்ந்து கனவுகளுக்கும் லட்சியத்துக்கும் துணை நிற்கும் மனைவி மற்றும் என் குழந்தைகளுக்கு கோடானு கோடி நன்றிகள்!” என்று தாசில்தார் மாரிமுத்து சொல்லி முடித்தார்.
அவர் உதிர்த்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் எனக்கான பொறுப்புகளை உணரச் செய்வதாக இருந்தன!