
விபத்துன்னா மோதி, கீழே விழுந்தெல்லாம் நடக்கிறதில்லை. இதோ நிக்கிறேன்ல, லேசா காலு மடங்கினா எலும்பு உடைஞ்சிடும். கொஞ்சம் அழுத்தமா கையைப்பற்றிக் குலுக்கினா உடைஞ்சிடும்.
``எனக்கு இப்படியொரு பிரச்னை இருக்குன்னு நீங்க ஞாபகப்படுத்தினாதான் நினைவுக்கு வரும். மற்றபடி நான் இயல்பான மனிதன். அந்த எண்ணம்தான் என்னை இன்னைக்கு வரைக்கும் நகர்த்திக்கிட்டு வந்திருக்கு. ‘சின்னது', ‘மினி'... இப்படி ஏகப்பட்ட கேலிகள், கிண்டல்கள். எதையும் கேட்டுக் காதைப் பொத்திக்க மாட்டேன். எல்லாத்தையும் புன்னகையோடு எதிர்கொள்வேன். என் உருவத்தை வச்சு இவங்க எனக்குப் பட்டப்பேரு வைக்கக்கூடாதுன்னுதான் ‘மேக்ஸ்'ன்னு எனக்கு நானே வச்சுக்கிட்டேன். செத்தமீன்தான் சார் ஆத்தோட போக்குல போகும். உயிருள்ள மீன் தண்ணியில போராடி தன் போக்குல போகும். நான் உயிருள்ள மீன்...’’ யாக்கூப் பேச்சில் அவ்வளவு தெளிவு, உற்சாகம்.
யாக்கூப் மேக்ஸ் என்றால் பலரும் அறிவார்கள். விளம்பரப் பட இயக்குநர், கான்செப்ட் டிசைனர், பிராண்டிங் எக்ஸ்பர்ட்... இப்படி அவரைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கின்றன. முக்கியமாக, Osteo genesis Imperfecta எனப்படும் அரிய எலும்புக் குறைபாட்டுப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர். கிட்டத்தட்ட கண்ணாடி மனிதர். லேசாகத் தடுக்கினாலே எலும்பு முறிந்துவிடும். இந்த 43 வயதுக்குள், 20 முறைக்கும் மேல் எலும்பு முறிந்து அறுவை சிகிச்சை செய்துள்ளார். 6 பிளேட்கள், ஏகப்பட்ட ஸ்க்ரூக்கள் இருக்கின்றன உடலில். எந்த வலியையும் முகமோ வார்த்தைகளோ பிரதிபலிக்கவில்லை. நம்பிக்கைதான் ததும்புகிறது.

‘‘விபத்துன்னா மோதி, கீழே விழுந்தெல்லாம் நடக்கிறதில்லை. இதோ நிக்கிறேன்ல, லேசா காலு மடங்கினா எலும்பு உடைஞ்சிடும். கொஞ்சம் அழுத்தமா கையைப்பற்றிக் குலுக்கினா உடைஞ்சிடும். யாருக்கும் என் பிரச்னை தெரியாது. ‘என்னப்பா, இதுக்குப்போயி கலங்குறே’ம்பாங்க. பல நேரங்கள்ல நானே ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணி, டிரைவர்கிட்ட, ‘இங்கே இங்கே பிடிச்சுத் தூக்குங்க'ன்னு சொல்லி டாக்டர்கிட்ட ‘என் பிரச்னை இது... இப்படி சிகிச்சை கொடுங்க'ன்னு கேட்டிருக்கேன். சென்னைக்குள்ள எங்கெங்கெல்லாம் ஆர்த்தோ டாக்டர் இருக்காங்கன்னு தெளிவா தெரிஞ்சு வச்சிருக்கேன்...’’ சிரிக்கிறார் யாக்கூப். வலிக்கிறது நமக்கு..!
யாக்கூப் பிறந்தது, ராமநாதபுரத்தில் உள்ள சித்தார்கோட்டையில். அத்தா, தலையணைக் கடை நடத்தினார். ஒரு அண்ணன், ஒரு அக்கா.
‘‘பிறந்து சில நாள்லயே எனக்கு ஏதோ பிரச்னைன்னு கண்டுபிடிச்சுட்டாங்க. உடம்புல வளர்ச்சியில்லாம தலை மட்டு்ம் பெரிசாகியிருக்கு. பார்த்த வைத்தியங்களுக்குப் பயனில்லை. ஆனாலும் அப்பாவும் அம்மாவும் கைவிடலே. அஞ்சு வயசுல முதல் எலும்பு முறிவு. டாக்டர்கள் கால்சியம் குறைபாடுன்னு கொத்துக் கொத்தா மாத்திரைகளைத் தந்தாங்க. ஆனா இது லட்சத்துல ஒருத்தருக்கு வர்ற குறைபாடுன்னோ, இதைக் குணப்படுத்தவே முடியாதுன்னோ யாரும் சொல்லலே.

அத்தா மதுரையில கடை வச்சிருந்தார். எங்களையும் மதுரைக்கே கூட்டிட்டு வந்து ஸ்கூல்ல சேத்துவிட்டார். இவ்வளவு பிரச்னைகள் இருந்தும் அத்தாவும் அம்மாவும் என்னை முடக்கிப்போட்டதில்லை. எல்லாரையும் போலவும் விளையாடுவேன். ஸ்கூலுக்குப் போக மாட்டேன்னு சொல்லியிருந்தா, ‘சரிப்பா’ன்னு சொல்லி மூணு வேளை சோறு போட்டு வீட்டுக்குள்ளேயே வச்சிருந்திருப்பாங்க. ஆனா, நான் விரும்பலே. எதெல்லாம் நமக்குக் கிடைக்க வாய்ப்பில்லையோ அதையெல்லாம் எப்படியாவது பெறணும்னு போராடுவேன். ஸ்கூல் படிக்கும்போதே பசங்களோட காஷ்மீர், குலு மணாலி டூரெல்லாம் போயிருக்கேன்.
படிப்புதான் நம்ம வாழ்க்கையை மாத்தும்னு சின்ன வயசிலேயே தெரிஞ்சுக்கிட்டேன். பத்தாம் வகுப்பு முடிச்சதும் சென்னைக்குப் போய் படிக்கிறேன்னு சொன்னேன். எந்த மறுப்பும் சொல்லாம என்னை அனுப்பி வச்சாங்க. இங்கே அண்ணன் வீட்டுக்கு வந்து பாரிமுனையில இருக்கிற ஒரு பள்ளியில பிளஸ் ஒன் சேர்ந்தேன். நிறைய பிரச்னைகள் இருக்கத்தான் செஞ்சுது. கேலி, கிண்டல்கள்... மூணாவது மாடியில வகுப்பறை... ஏறி இறங்குறதே பெரிய வலி... தவழ்ந்துதான் போவேன்.

எங்கேயும் சிறப்பு கவனிப்புகள் கிடைச்சதில்லை. அதே இயல்போடு எல்லாத்தையும் ஏத்துக்கப் பழகிட்டேன். எம்.பி.ஏ படிச்சுட்டு சொந்தமா ஒரு தொழில் ஆரம்பிச்சுட்டா யாரையும் எதிர்பார்க்காம பிழைச்சுக்கலாம்னு நினைச்சேன். பிளஸ் டூ முடிச்சதும் நியூ காலேஜ்ல பி.பி.ஏ சேர்ந்தேன். நல்ல நண்பர்கள் கிடைச்சாங்க.
சின்ன வயசுல இருந்தே செய்தித்தாள் வாசிப்பேன். அரசியல் நிகழ்வுகளை கவனிப்பேன். டான்ஸ், பாட்டுன்னு அப்டேட்டா இருப்பேன். அதனாலேயே என் டிபார்ட்மென்டைவிட விஸ்காம் பசங்ககூட நெருக்கமாகிட்டேன். அவங்க புராஜெக்ட்டுக்கு நிறைய கன்டென்ட் கொடுப்பேன். படிப்பை முடிச்சவுடனே அவங்களுக்கு ஒரு தயாரிப்பு நிறுவனத்துல வேலை கிடைச்சிடுச்சு. என்னையும் அங்கே சேர்த்துவிட்டாங்க.
விஸ்காம் படிச்சிருந்ததால அவங்களுக்கு 8,000 சம்பளம். என் உருவம், படிப்பையெல்லாம் வச்சு எனக்கு 500 ரூபாய்தான் தந்தாங்க. ரெண்டே மாசம்... வீடியோ எடிட்டிங், ரிப்போர்ட்டிங் எல்லாம் கத்துக்கிட்டேன். சம்பளம் 3,000 ஆயிடுச்சு. கொஞ்ச நாள்லயே புரோகிராம் புரொடியூசர் ஆகிட்டேன். பெரிய சேனல்கள்ல நிகழ்ச்சிகள் செஞ்சோம். வளைகுடா செய்திகள்னு ஒரு புரோகிராம் நான் செஞ்சேன். நிறைய தொடர்புகள் கிடைச்சுச்சு. அப்படியே விளம்பரப் பட வாய்ப்புகளும் வந்துச்சு. ஈராக் போர் பத்தி ஒரு ஆவணப்படம் தயாரிச்சேன். அதுவும் பேசப்பட்டுச்சு. அந்த நிறுவனத்துலயே எனக்குத் தனி அறை தந்து நல்லா பாத்துக்கிட்டாங்க.
ஆனாலும் சம்பளமா எனக்குப் பெரிய வளர்ச்சியில்லை... நம்மை விட்டு எங்க போயிடப்போறான்னு நினைச்சுட்டாங்க. அந்தச் சூழல்ல பஹ்ரைன்ல ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்துல இருந்து அழைப்பு வந்துச்சு. போறதுன்னு முடிவெடுத்துட்டேன். சரியா, கிளம்புறதுக்கு முதல்நாள் எலும்பு முறிவு. எல்லாரும் ‘உனக்கெதுக்குப்பா வெளிநாடெல்லாம்... இருக்கிற வேலையைப் பாரு'ன்னு அறிவுரை சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க...

மூணு மாசத்துல குணமாயிட்டேன். எப்படியும் வெளிநாடு போயாகணும்... கத்தார்ல ஒரு பெரிய நிறுவனத்துல ஹெச்.ஆர் வேலைக்காகக் கூப்பிட்டாங்க. கிளம்பலாம்னு முடிவு பண்ணின தருணத்துலதான் யாஸ்மினைப் பார்த்தேன்...’’
ஒரு குழந்தை போல யாக்கூபைப் பார்த்துக்கொள்கிறார் யாஸ்மின். ‘‘தெருவுல போகும்போது நாலைஞ்சுமுறை பார்த்திருக்கேன். பேசினதுகூட கிடையாது. ஆனா முதல் பார்வையிலயே இந்தமாதிரி ஒரு மனைவி அமைஞ்சா நல்லாருக்கும்னு தோணிருச்சு. யாஸ்மின் அப்போ எம்.பி.ஏ படிச்சுக்கிட்டிருந்தா. கையில இருக்கிற காலேஜ் நோட்டை வச்சு எங்கே படிக்கிறான்னு கண்டுபிடிச்சேன். அங்கிருக்கிற சோர்ஸை வச்சு மொபைல் நம்பர் வாங்கினேன். தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு போன் பண்ணி, ‘இப்படிப் பிரச்னைகள் எல்லாம் எனக்கிருக்கு. அதை ஏத்துக்கிட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா'ன்னு கேட்டேன். ‘அம்மாவும் அக்காவும் இருக்காங்க... அவங்ககிட்ட வந்து பேசுங்க'ன்னு சொல்லிட்டு போனை வச்சுட்டா.
இது நடந்து நாலு நாள்ல கத்தார் போயிட்டேன். அங்கிருந்தபடி யாஸ்மின் அக்காவோட மெயில் ஐடியை வாங்கி அவங்களுக்கு விரிவா ஒரு மெயில் போட்டேன். நான் எழுதின மெயில்ல யாஸ்மின் அக்கா கரைஞ்சிட்டாங்க. மதுரையில ஊர் உறவுகளோட திருமணம் முடிஞ்சுச்சு. பத்தே நாள்ல யாஸ்மினையும் கூட்டிக்கிட்டு கத்தார் போயிட்டேன்’’ - உற்சாகத்துடன் பேசுகிறார் யாக்கூப்.
மீடியாவில் பணியாற்றிப் பழகியவர்கள் வேறு வேலைகளில் ஒட்டியிருப்பது சிரமம். யாக்கூப்பும் ஒரு கட்டத்தில் கத்தார் வேலையை விட முடிவுசெய்தார்.

‘‘லட்ச ரூபாய்க்கு மேல சம்பளம். தனி வீடு, காரெல்லாம் தந்திருந்தாங்க. அங்கே வேலை செஞ்ச மூணு வருஷத்துல ஒருமுறைகூட எலும்பு முறிவு இல்லை. ஆனாலும் மீடியாவுல வேலை செய்யணும்னு ஆசைப்பட்டேன். வேலையை விட்டுட்டு ஊருக்குப் போகலாமான்னு யாஸ்மின்கிட்ட கேட்டேன். அவளும் தயங்காம ஓகே சொன்னா. கிளம்பி வந்துட்டோம். ஒரு விளம்பரக் கம்பெனியை ஆரம்பிச்சேன். பழைய தொடர்புகளையெல்லாம் எடுத்து வாய்ப்பு கேட்க ஆரம்பிச்சேன். முதல்ல ஒரு சிங்கப்பூர் கம்பெனிகிட்ட இருந்து வாய்ப்பு வந்துச்சு. என் சூழலைப் புரிஞ்சுக்கிட்டு யாஸ்மினும் வேலைக்குப் போக ஆரம்பிச்சா.
தமிழ்நாட்டுல நிறைய போட்டி. ஆனா சிங்கப்பூர், மலேசியாவுல இருந்து நிறைய ஆர்டர்கள் வந்துச்சு. களம் ரொம்பப் பெரிசு. தியேட்டர், சேனல், ரேடியோன்னு இன்னைக்கு பேன் இந்தியா விளம்பரம் ரிலீஸ் பண்ணித்தாரோம். ஹோர்டிங் வைக்கிறோம். விளம்பரப் படங்கள் எடுக்கிறோம். பிராண்டிங் பண்ணுறோம். கிட்டத்தட்ட 150 பேர் என் டீம்ல இருக்காங்க.
சமீபத்துல ஏற்பட்ட முறிவு ரொம்ப கிரிட்டிக்கலா மாறிடுச்சு. இப்போ நடக்க சிரமமா இருக்கு. ஆனாலும் நிறைய வேலை இருக்கு. அதுல எல்லா வலியும் மறந்துபோகுது. வாழ்க்கை தினமும் புதுசா இருக்கு சார்...’’ மலரச் சிரிக்கிறார் யாக்கூப். கண்கலங்க அவரைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் யாஸ்மின்.