வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
சென்ற வாரத்தில் ஒரு நாள் பேருந்தில் ஏறக் காத்திருந்தபோது கண்ட காட்சி பல சிந்தனைகளைத் தோற்றுவித்தது. உலகில் எல்லாமே சாதாரண மக்களுக்கான சிந்தனைகளாகவும் கண்டுபிடிப்புகளாகவும் அமைந்துவிடுகின்றன. அசாதாரணங்களுக்கென தனிச் சிந்தனைகள் அமையப் பெறாமலே போய், பிறகு அவை கண்டு கொள்ளப்படாமலே போய்விடுகின்றன.
ஒரு மிகப் பருமனான மனிதர் பேருந்து நிலையத்திற்கு வந்தார். அவர் நடந்து வந்த போதே , எல்லோரும் வேடிக்கை பார்த்துச் சிரிக்கவும் கமெண்ட்டுகள் அடிக்கவும் செய்தனர். அவர், பேருந்தில் ஏற முயன்றார். பேருந்தின் வாயில் அவரை விடச் சிறியதாக இருந்தபடியால், சற்றே ஏமாற்றம் கலந்த அசட்டுச் சிரிப்புடன் திரும்பிவிட்டார். சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ள நிழலில் வந்து நின்றார்.
அங்கு கூட்டத்தில் இருந்தவர்களைப் பார்த்து, மையமாகப் புன்னகைத்துவிட்டு, முன்பின் தெரியாத எங்களிடம், " கொஞ்சம் இளைச்சுப் பாத்தேன். டூ வீலர்ல போறது ரொம்பக் கஷ்டமா இருக்கு. நல்லா இளைச்சதா நினைச்சுதான் ட்ரை பண்ணலாம்னு வந்தேன். ஆனா, பஸ்ஸுதான் இளைச்சுடுச்சு போல " என்றபடி சிரித்துக்கொண்டார்.

அந்தச் சிரிப்பில், "இது போன்ற ஏளனப் பார்வைகளை நான் பல முறை எதிர்கொண்டாயிற்று, இது எனக்குப் பழக்கமானதுதான்" என்ற விரக்தியிருந்தது.
சமீபத்தில் ஒரு பருமனான பெண்மணியின் விமானப் பயணம் சர்ச்சையைக் கிளப்பியது. பருமன் அதிகமுள்ளவர்களுக்குத் தனி நாற்காலிகள் கூடப் பொது இடங்களில் அமைக்கப்படுவதில்லை.
இதே போன்றுதான் உயரமான மனிதர்களின் பிரச்சனையும். பேருந்தில் அமரவே முடியாமல் முட்டி இடிக்கும். செருப்பு அளவைத் தேர்ந்தெடுப்பதில் மிகச் சிரமம். ரெடிமேட் டிரஸ்கள் பற்றி யோசிக்கக்கூட முடியாது. இதே போல் இன்னும் பல அவதிகளுக்குள்ளாகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கென்று தற்போது குரல்கள் வலுப்படுவதுபோல, சாதாரணங்களில் இருந்து சற்று மாறுபட்டவர்களுக்கும் வசதிகள் செய்யப்பட வேண்டும்.
ஏனெனில், அனைவரும் தனி வாகனங்களைப் பயன்படுத்தும் அளவுக்கு வசதி வாய்ந்தவர்கள் அல்ல. அனைவருக்கும் விரும்பிய வாழ்க்கையை வாழ உரிமையுள்ளது. உருவ கேலியைத் தவிர்ப்பதும் இவர்களை இரக்கம் காட்டித் தனிமைப்படுத்தாமலிருப்பதும் சாதாரணமானவர்களைப் போலவே பழக அனுமதிப்பதும் தான் தீர்வாகும்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.