வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
என்னுடைய பெயர் ராமகிருஷ்ணன், அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பும் பயணத்தில் இருக்கிறேன். எனக்கான பேருந்து வந்துவிட்டது, அதில் ஏறினேன். இருவர் அமரும் இருக்கையில் ஒருவர் தன்னுடன் சிறுவனை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். என்னை கண்டவுடன் அந்த சிறுவனை தனது மடியில் வைத்துக்கொண்டு என்னை நோக்கி,
"நீங்க வாங்க யா, உக்காருங்க", என்று சிரிப்புடன் கூறினார்.
நானும் அருகில் அமர்ந்தேன், இருவரும் பேசத் தொடங்கினோம்.
"சாமிக்கு பேரு என்னங்க ?" என்றார்.
எனது பெயரை கூறினேன், "இராமகிருஷ்ணன்", என்று.
"நல்ல பேரு தான். ஐயா என்ன வேல செய்யுதீங்க ?", என்று என்னிடம் கேட்டார்.`` ஃஅழ்
"கவர்மண்ட் ஆஃபீஸ் ல வேலை செய்றேன்", என்றேன்.
"சர்கார் உத்யோகமா, அப்போ வீட்டுல பணத்துக்கு பிரச்சன இருக்காது. என்ன படிச்சிருக்கீக ?", என்றார்.
"நான் பி.ஏ. எக்கனாமிக்ஸ், நீங்க என்ன செய்றிங்க ?", என்று நான் கேள்வி கேட்க துவங்கினேன்.

"ரெண்டாங் கிளேஸோட படிப்ப நிறுத்தியாச்சு, நீங்க என்ன சொன்னீக னு கூட புரியலங்க, ஒரு ஏக்கர் பூமி கிடக்கு, அதுல விவசாயம் தான் பாத்துட்டு இருக்கேன்", என்றார் அவர்.
இவ்வாறு எங்களது உரையாடல் நடந்து கொண்டிருக்க, பேருந்து ஒரு விநாயகர் கோயிலை கடந்தது. நான் பேருந்தின் உள்ளே இருந்த படி வழிபாட்டேன். அவர் என்னை கவனித்தார்.
"என்ன சாமி கடவுள் நம்பிக்க அதிகமா ?", என்றார்.
"நம்மல படைச்சது அவரு தான, அந்த நன்றி இருக்காதா ?", என்றேன்.
"அது சரி, உங்க அப்பா அம்மாவ இந்த மாரி கும்புடுவியளா ?", என்றார்.
அதனை கேட்டவுடன் எனக்கு கோபம் வந்துவட,
"இப்ப என்ன கடவுள் இல்ல னு சொல்ல வரிங்களா ?", என்றேன்.
"ஒரு நிமிஷம் இருங்க",
என்று கூறி அந்த சிறுவனிடம்,
"முன்னாடி சின்ன பசங்க இருக்காங்க பாரு, அவங்க கூட போய் விளையாடு", என்று கூறி அவனை அனுப்பி வைத்தார்.
"சரி இப்ப சொல்லுங்க", என்றேன்.

"நான் கடவுள் இல்ல னு சொல்லவே இல்ல யா", என்றார்.
"அப்போ கடவுள் நம்பிக்க இருக்கா?", என்றேன்.
"நம்பிக்கயும் இருக்கு, கோவமும் இருக்கு அந்த ஆளு மேல", என்றார் சற்று விரக்தியுடன்.
"என்னங்க கோபம், இத்தன வருஷம் வாழ்க்கய குடுத்திருக்காரு, பையன குடுத்திருக்காரு, வேற என்னங்க வேணும்", என்றேன்.
அவர் சிரித்துக் கொண்டே,
"குடுத்தான் எல்லாத்தையும் குடுத்தான், நல்ல ஒடம்பு, தாய் தகப்பன், கூடவே சண்ட, குடும்பம் னா சண்ட இருக்குந் தான், அத என் முன்னாடி நடக்காத மாரி செஞ்சிருக்கலாமே அந்த சாமி. அத விடுங்கயா, பணத்தயாச்சு கொடுத்திருக்கலாம், அதுவும் இல்ல, அதனால தான் படிப்பும் பாதில நின்னு போச்சு. அப்பனுக்கு ஊர சுத்தி கடன் வேற. அது அவரு தப்பு தான், ஆனா என் கண்ணு முன்னாடி தூக்கு மாட்டி செத்தான் என் அப்பன்.
இது எதையும் என் முன்னாடி நடக்காம செஞ்சிருக்கலாமே உங்க சாமி",
என்று தனது துயரத்தை என்னிடம் முழுதும் கொட்டினார். அவருக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியாத படி இருந்தேன்.
அப்போது ரோட்டில் யாரோ ஒருவர், அடிப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

"இங்க பாரு சார், ஒருத்தன் உசுருக்கு போராடிட்டு இருக்கான், யாருமே பாக்காம போரானுங்க, அந்த சாமி இப்ப கூட வராதா ?", என்றார்.
"அவ்வளவு இரக்கம் இருந்தா நீங்க செய்யலாம் ல ?", என்றேன். "நானும் உதவி எல்லாம் செஞ்சிருக்கேன் சாமி. அத எல்லாம் சொல்லிக் காமிக்க கூடாது. உதவற மனச குடுத்த ஆண்டவன், சூழ்நிலைய தரல சாமி. முன்னாடி இருக்கானே அவன் என் புள்ள மாதிரி தான், ஆனா நான் பெத்த புள்ள இல்ல, எனக்கு தெரிஞ்சவங்களோட புள்ள. அவனோட அப்பன் மாடு மாரி வேல செய்வான், நல்ல மனுசன். அவன் அம்மா ரொம்ப பாசமா பேசும், என் கூட பொறந்த தங்கச்சி மாதிரி, இப்போ நிறமாச புள்ளத்தாச்சி. இன்னைக்கு மதியம் எவனோ குடிகாரப் பாவி குடிச்சுட்டு கார அந்த மகராசி மேல ஏத்திட்டான். இப்ப ஆஸ்பத்திரில ரெண்டு உசுரும் சாகக் கிடக்கு. அப்பன போலீஸ் புடிச்சுட்டு போயிடுச்சு, அத சொல்லாம இந்த பயல கூட்டிட்டு போறேன்", என்றார் கவலையுடன்.
"அவர எதுக்கு போலீஸ் கூட்டிட்டு போனாங்க ?", என்றேன்.
"அவன் கண்ணு முன்னாடியே இது நடந்துச்சு சாமி, எப்படி அமைதியா இருக்க முடியும், கார் ஓட்டுனவன அடிச்சிருக்கான்", என்றார்.
"டிரைவர எதுவும் பண்ணலயா போலீஸ்", என்று கேட்டேன்.
"அவன் பெரிய எடத்து பையனாமா, எப்படி சாமி கை வைப்பாங்க ?, எங்கள மாரி இல்லாதவங்க கிட்ட தான சட்டம் வேல செய்யும்.
நான் போய் தான் சார் எல்லாமே செய்யனும், ரோட்டுல அடி பட்டவங்கள பாத்தப்போ எறங்கி போனும் போல தான் இருந்துச்சு. நான் போயிருந்தா இந்த பையன் நிலம என்ன சாமி ஆகும். அதான் போகல", என்றார்.

அவர் கூறியதை கேட்டதும்,
"என்ன மன்னிச்சிருங்க ஐயா, ஏதோ தெரியாம பேசிட்டேன்",
என்றேன் கையெடுத்து கும்பிட்ட படி.
எனது கையை இறக்கி,
"என்ன சாமி இது, நீங்க படிச்சவரு என் கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு இருக்கிய, கைய கீழ போடுங்க", என்றார்.
"அதெல்லாம் இல்லங்க நீங்களும் கடவுள் மாதிரி தான்", என்றேன்.
"அப்படி எல்லாம் இல்ல யா, 'ஏழையோட சிரிப்புல இறைவன பாரு' னு, பெரியவங்க சொல்லிருக்காங்க, அதான் அவன தேடிட்டு இருக்கன், கண்டுபிடிச்சு 'ஏன்டா என் வாழ்க்கைய இப்படி பண்ணுன?' னு கேக்கனும்", என்றார்.
நடத்துனர் விசில் அடித்து,
"கவர்மன்ட் ஆஸ்பித்தரி எல்லாம் இறங்கு", என்றார்.
"நான் எறங்க வேண்டிய எடம் வந்திருச்சு வரென் சாமி",
என்று கூற நான் எழுந்து வழி விட்டேன்.
அந்த சிறுவனை கூட்டிக் கொண்டு பேருந்திலிருந்து இறங்கினார்.
இந்த உலகம் எப்படி உருவானது என்பது இன்று வரை ஒரு கேள்விக்குறி தான். கடவுள் என்ற ஒருவர் நமக்கு மேல் இருக்காலாம் இல்லாமலும் போகலாம். இந்த கதையில் குறிப்பிட்டவரைப் போன்றவர்கள் நம்முடன் கடவுளுக்கு நிகரான இடத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். என்னை பொருத்தவரை,
'பிறருக்கு உதவும் குணம் உள்ள அனைவரும் கடவுளே !'
முற்றும்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.