Published:Updated:

`பிஹெச்.டி முடிச்சிருக்கேன், தோற்றம்தான் முக்கியமா?’-வேலைவாய்ப்புக்கு போராடும் மாற்றுத்திறன் பெண்

அஷ்டலட்சுமி

அஷ்டலட்சுமிக்கு வலது கண் பார்வை இல்லை, இடது கண் மங்கலாகத் தெரியும். இருப்பினும் அதே பகுதியில் பள்ளிப்படிப்பை முடித்து, பி.எஸ்சி, எம்.எஸ்சி, எம்.ஃபில், பிஹெச்.டி பட்டம் பெற்றுள்ளார். போட்டித்தேர்வுகள், பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியப்பணி என வேலைக்காகப் போராடி வருகிறார்.

`பிஹெச்.டி முடிச்சிருக்கேன், தோற்றம்தான் முக்கியமா?’-வேலைவாய்ப்புக்கு போராடும் மாற்றுத்திறன் பெண்

அஷ்டலட்சுமிக்கு வலது கண் பார்வை இல்லை, இடது கண் மங்கலாகத் தெரியும். இருப்பினும் அதே பகுதியில் பள்ளிப்படிப்பை முடித்து, பி.எஸ்சி, எம்.எஸ்சி, எம்.ஃபில், பிஹெச்.டி பட்டம் பெற்றுள்ளார். போட்டித்தேர்வுகள், பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியப்பணி என வேலைக்காகப் போராடி வருகிறார்.

Published:Updated:
அஷ்டலட்சுமி

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே கோவிலூரைச் சேர்ந்தவர் அஷ்டலட்சுமி (38). இவருக்கு 3 வயது முதல், வலது கண் பார்வை இல்லை, இடது கண் மங்கலாகத் தெரியும். இருப்பினும் அதே பகுதியில் பள்ளிப்படிப்பை முடித்து, பி.எஸ்சி, எம்.எஸ்சி, எம்.ஃபில், பிஹெச்.டி பட்டம் பெற்றுள்ளார்.

காதல் திருமணம் செய்த இவரை, ஊரார் ஒதுக்கிவைக்க, தற்போது பழநியில் கணவர் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கணவர் கூலி வேலைக்குச் செல்ல, குடும்ப வறுமையால் வாடும் இவர், பிஹெச்.டி பட்டம் பெற்றும் பார்வைக் குறைபாடு காரணமாக வேலை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார். 

குடும்பத்திருடன் அஷ்டலட்சுமி
குடும்பத்திருடன் அஷ்டலட்சுமி

திண்டுக்கல் மாவட்டம், பழநி சக்கரகவுண்டன் குளத்துக்கரையில் பத்துக்கு பத்து அளவில், சிமென்ட் சீட் போட்டு, சுற்றி தட்டி அடைத்த வீட்டில் வசிக்கும் அஷ்டலட்சுமியைச் சந்தித்துப் பேசினோம். 

``என் பெற்றோர், கோவிலூரில் விவசாயம் செய்தாலும் பிரதான தொழிலாக பனையேறி பதநீர் இறக்கி, கருப்பட்டி காய்ச்சும் தொழிலை செய்து வருகின்றனர். குடும்ப வறுமை காரணமாக 5-ம் வகுப்பு முதல் ராஜபாளையம் - தென்காசி ரோட்டில் பதநீர், நொங்கு விற்றுத்தான் படிப்பை தொடர்ந்தேன். திருத்தங்கல் எஸ்.எஃப்.ஆர் கல்லூரியிலும், சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியிலும் படித்தேன். முதுகலைப் படிப்புக்கு பிறகு கல்லூரி நிர்வாகத்தின் உதவித்தொகையும்  கைகொடுத்தது.

வறுமை ஒருபுறம் வாட்ட, கண் பார்வை குறையைச் சொல்லி பலரும் என்னை கேலியும் கிண்டலும் செய்து நோகடித்தனர். அப்போது, பக்கத்து ஊரான தேவதானத்தைச் சேர்ந்த பொன்ராஜ் எனக்கு தன்னம்பிக்கை கொடுத்தார். அவருடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இரு வீட்டாரும், ஊராரும் எதிர்ப்புத் தெரிவிக்க, காதல் திருமணம் முடித்து பெரும் பிரச்னைக்குப் பிறகு பழநி வந்துவிட்டோம்.

அஷ்டலட்சுமி
அஷ்டலட்சுமி

தற்போது எங்களுக்கு 5 வயதில் இந்து சூர்யலட்சுமி, 1 வயதில் மித்ராதேவி என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பத்தாம் வகுப்புப் படித்துள்ள என் கணவர் கூலி வேலைக்குச் சென்று கிடைக்கும் 300 ரூபாய் சம்பளத்தைக் கொண்டு குடும்பத்தை நடந்துகிறோம். 

2016-ம் ஆண்டில் பிஹெச்.டி முடித்துள்ள நான், பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை தேடிச் சென்றால், `பார்வைக் குறைபாடு உடையவருக்கு வேலை கொடுக்க முடியாது, பி.ஹெச்டி முடித்திருந்தாலும் பர்சனாலிட்டிதான் முக்கியம், மாணவர்கள் கேலி செய்வார்கள்’ என்றெல்லாம் காரணங்களைக் கூறி வேலை தரமறுக்கின்றனர்.

இதற்கிடையே குரூப் தேர்வுகள், டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கும் தயாராகி வருகிறேன். முதல்வர் தனிப்பிரிவு, தொகுதி எம்.எல்.ஏ, கலெக்டர் ஆகியோரிடம் வேலை கேட்டு மனுக்கள் அளித்தும் எவ்வித பலனும் இல்லை. எனக்கு ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. ஆனால் அன்றாட போராட்ட வாழ்க்கைக்கு மத்தியில் அந்தக் கனவே தொலைந்துவிட்டது.  குளத்துக்கரையில் வீடு என்பதால், மழை அதிகமானால் வீட்டிற்குள் நீர் புகுந்துவிடும். பாம்புகளும் பூச்சிகளும் தொந்தரவு தரும். பாதுகாப்பில்லாத சூழலில் இருக்கிறோம்.

அஷ்டலட்சுமி
அஷ்டலட்சுமி

பிஹெச்.டி வரை படித்த எனக்கு உரிய வேலை கிடைத்தால் என் குழந்தைகளுக்கு நல்ல வசிப்பிடத்தையும், கல்வியையும் கொடுக்க முடியும். பெரும் போராட்டத்துக்கு இடையேயும், நம்மைக் காப்பாற்றிவிடும் என நாம் நம்பிப் படித்த படிப்பு கைகொடுக்கவில்லையே என்ற விரக்தியில் தற்கொலைக்குக்கூட முயன்றிருக்கிறேன். இப்போது என் குழந்தைகளுக்காக வாழ்ந்து வருகிறேன்’’ என்றார்.

கணவர் பொன்ராஜ் பேசும்போது, ``நாங்கள் இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் குடும்பமும் ஊராரும் எங்களை பிரிக்க முயன்றனர். ஒரு வழியாக போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று இருவரும் ஒன்று சேர்ந்தோம். பிறகு குடும்பம் எங்களை ஏற்றுக்கொண்ட போதிலும், ஊர்க்கட்டுபாட்டை மீறியதாகக் கூறி ஊரார் எங்களை ஒதுக்கிவிட்டனர்.

அஷ்டலட்சுமி, பொன்ராஜ்
அஷ்டலட்சுமி, பொன்ராஜ்

இதனால் எங்களால் மீண்டும் ஊருக்குச் செல்ல முடியவில்லை. எங்கள் பெற்றோருக்கும் பாரமாக விரும்பவில்லை. ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவு கண்ட என் மனைவிக்கு ஒரு வேலையாவது கிடைக்கவேண்டும் என்பதற்காக முயன்று கொண்டிருக்கிறேன்’’ என்றார்.  

மாற்றுத்திறனாளிகளுக்குப் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசு, பிஹெச்.டி படித்த அஷ்டலட்சுமியின் தன்னம்பிக்கைக்கு வலு ஊட்டி, அவர் வறுமையை போக்க அரசு வேலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.