Published:Updated:

இளவட்டக்கல் தூக்கும் இளைஞிகள்!

இளவட்டக்கல் தூக்கும் இளைஞிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
இளவட்டக்கல் தூக்கும் இளைஞிகள்!

பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சிலர் சிறிய கல்லை சுலபமாகத் தூக்கி, ஒரு கையால் தலைக்கு மேல் நிறுத்தி அசத்தினார்கள்

தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் உருண்டையான வடிவில் இளவட்டக்கல் கிடப்பதைப் பார்த்திருப்போம். ஊருக்குப் பொதுவான இடத்தில் கிடக்கும் அந்தக் கல்லின் பண்பாட்டுப் பின்னணி இன்றைய தலைமுறைக்குத் தெரியாததால் பல ஊர்களில் பாதியளவு மண்ணுக்குள் புதைந்த நிலையில் கிடக்கின்றன.

நெல்லை மாவட்டம் வள்ளியூருக்கு அருகில் உள்ள வடலிவிளை கிராமத்தில் ஆண்டுதோறும் இளவட்டக்கல் தூக்கும் போட்டிகள் நடக்கின்றன. இந்த ஆண்டுக்கான போட்டிக்கு ஆண்களும் பெண்களும் தயாராவதாகத் தகவல் கிடைத்ததும் நேரில் சென்றேன். ஊரின் மையப்பகுதியில் உள்ள அம்மன் கோயில் திடலில் இளைஞர்களும் இளைஞிகளும் ஆர்வத்துடன் இளவட்டக்கல்லைத் தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இளைஞர்களுக்குப் போட்டியாகப் பெரியவர்களும், தங்களின் கடந்தகால நினைவுகளைப் பேசியபடியே இளவட்டக்கல்லைத் தூக்க முயன்றுகொண்டிருந்தனர்.

இளவட்டக்கல் தூக்கும் இளைஞிகள்!
இளவட்டக்கல் தூக்கும் இளைஞிகள்!

“அந்தக் காலத்தில் இளவட்டக்கல் தூக்குறதுதான் பெருமை. விவசாய வேலை முடிஞ்சதும் சாயங்காலம் இந்த மைதானத்துக்கு வந்துருவோம். கல்லைத் தூக்குறதுல கடுமையான போட்டி இருக்கும். இங்கே கிடக்குற சின்னக் கல்லை, ஒத்தக் கையில் தலைக்கு மேலே தூக்குவேன். இப்போ வயசாயிருச்சில்ல, அதான் முட்டுக்கு மேல தூக்க முடியல...” என்றபடியே கல் தூக்கும் முயற்சியிலிருந்து விலகி நின்றபடி மற்றவர்களை உற்சாகப்படுத்தினார், முதியவரான அழகையா.

திருநெல்வேலி மாவட்டத்தின் ராபின்ஹூட் என வர்ணிக்கப்பட்ட செம்புலிங்கம் பிறந்த ஊரான வடலிவிளை கிராமத்தில் கடந்த 26 வருடங்களாக பொங்கல் பண்டிகைக்கு விளையாடுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மூன்று நாள்கள் நடக்கும் இந்த விழாவில் இளவட்டக்கல் மற்றும் உரல் தூக்கும் போட்டிகள் முக்கியமானவை. அதிலும், பெண்கள் இளவட்டக்கல்லைத் தூக்குவதும் உரலைத் தோளில் சுமந்தபடி ஓடுவதும்தான் விழாவில் ஹைலைட்.

இதற்காக 45 கிலோ, 65 கிலோ, 85 கிலோ, 114 கிலோ, 129 கிலோ என ஐந்து வகை எடைகளில் இளவட்டக்கல்கள் இருக்கின்றன. 45 கிலோ எடைப்பிரிவில் உள்ள கல்லை பெண்களும் சிறுவர்களும் தூக்குவார்கள். கல்லூரி மாணவர்களுக்காக 65 மற்றும் 85 கிலோ எடைப்பிரிவு. 114 கிலோ எடையுள்ள கல்லைத் தோளுக்குத் தூக்கிய பின்னர் அதைக் கழுத்தைச் சுற்றிலும் பலமுறை சுற்றுகிறார்கள். 129 கிலோ எடையுள்ள கல்லைத் தூக்குவது சிரமமானது என்றாலும், இப்போதே இளைஞர்கள் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். சிலர் அதைக் கழுத்துவரை தூக்கி முதுகுக்குப் பின்னால் போட்டதையும் பார்க்க முடிந்தது.

இளவட்டக்கல் தூக்கும் இளைஞிகள்!
இளவட்டக்கல் தூக்கும் இளைஞிகள்!

வடலிவிளை கிராமத்தில் நடக்கும் இளவட்டக்கல் தூக்கும் நிகழ்ச்சி ஆந்திரா வரை சென்றுள்ளது. இந்தப் போட்டியைத் தெலுங்கு வருடப் பிறப்பு தினத்தன்று கடப்பா மாவட்டத்தில் நடத்தியுள்ளனர். அத்துடன், பெண்கள் இளவட்டக்கல் தூக்குவதை ஊக்கப்படுத்தும் வகையில், வடலிவிளைப் பெண்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அங்கு சென்று போட்டியில் வென்று பரிசுடன் திரும்பியிருக்கிறார்கள், தோழிகளான தங்கபுஷ்பம் மற்றும் பத்மபிரியா.

‘‘நாங்கள் ஐந்து பேர் இங்கிருந்து போனோம். ஏற்கெனவே உள்ளூரில் இளவட்டக்கல் தூக்குவது, உரல் தூக்கி ஓடுவது ஆகியவற்றில் எங்களுக்கு அனுபவம் இருந்ததால் எங்க திறமையைப் பார்த்து சக போட்டியாளர்களும் பாராட்டினாங்க. போட்டியில் கலந்துகிட்ட பெண்கள் சிலர் கேட்டதால இளவட்டக்கல் தூக்குவதற்கான டிப்ஸ் கொடுத்தோம். ஆனாலும் எங்களுக்குத்தான் முதல் இரண்டு இடங்களும் கிடைச்சுது. போட்டியில் நாங்க ஜெயிச்சதைக் கேள்விப்பட்ட சபாநாயகர் அப்பாவு தொலைபேசியில் கூப்பிட்டுப் பாராட்டினார். ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு” என்கிறார்கள் இருவரும்.

பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சிலர் சிறிய கல்லை சுலபமாகத் தூக்கி, ஒரு கையால் தலைக்கு மேல் நிறுத்தி அசத்தினார்கள். “பொங்கல் வந்திருச்சுன்னாலே எங்க ஊரில் இளவட்டக்கல் தூக்குறதுக்கான பயிற்சிகள் தொடங்கிவிடும். போன வருசம் 129 கிலோ எடையுள்ள பெரிய கல்லை அருண் வெங்கடேஷ், செல்லப்பாண்டி தூக்கினாங்க. இந்த முறை நாங்க தூக்கறதுக்காக கடுமையா பயிற்சி எடுக்கிறோம். அந்தப் பெரிய கல்லை இந்த வருஷம் நிறைய பேர் தூக்கிருவோம்” என்று உற்சாகமாகிறார்கள் இளைஞர்கள்.

இளவட்டக்கல் தூக்கும் இளைஞிகள்!
இளவட்டக்கல் தூக்கும் இளைஞிகள்!

போட்டிக்கான ஏற்பாடுகளை வடலிவிளை கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுபாஷ், செழியன், சிவகுமார் சுந்தர் என இளைஞர்களே முன்னின்று நடத்துகிறார்கள். “வருடந்தோறும் இந்த விழாவைப் பார்க்க வெளியூர்களில் இருந்தும் நிறைய பேர் வருவார்கள். பெண்களும் பயிற்சி எடுத்துக்கொண்டு, தங்களுக்கும் அதேபோல போட்டி நடத்தவேண்டும் என்று வலியுறுத்தியதால் நான்கு வருடங்களாக அவர்களுக்கும் தனியாகப் போட்டியை நடத்துகிறோம். முன்பெல்லாம் வெளியூர்களில் வசிக்கும் எங்க ஊர்க்காரர்கள் பொங்கல் பண்டிகைக்குக்கூட இங்கே வருவதில்லை. ஆனால், இந்தப் போட்டிகள் பிரபலமான பிறகு தவறாம வந்துடுறாங்க. உறவுகளைச் சந்தித்து மகிழும் விழாவாகவும் இது மாறியிருக்கு” என்கிறார்கள் இவர்கள்.

இளவட்டக்கல் தூக்கும் இளைஞிகள்!

போட்டி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சுந்தர், “எங்கப்பா காலத்தில் இருந்தே இந்த விழா நடந்துகிட்டிருக்கு. ‘இப்படியொரு விழா இருக்கணும். நம்மூர்க்காரங்க யாரோடவாவது மனவருத்தத்தில் இருந்தாக்கூட விழாக்காலத்தில் அதை மறந்து ஒன்னு சேர்ந்துருவாங்க. அதனாலதான் இந்த விழாவை நடத்துறோம்’னு எங்க அப்பா அடிக்கடி சொல்வார். அதை நாங்களே அனுபவபூர்வமா உணர்கிறோம். அரசியல்ரீதியாகப் பிரிந்தவர்கள்கூட இந்தப் போட்டியால் ஒன்றாக இணைய வாய்ப்பு உருவாகுது” என்கிறார்.

கிராமத்தின் முகமான இத்தகைய விழாக்களை ஊக்கப்படுத்த வேண்டியது அரசின் கடமையும்கூட!