தஞ்சாவூரில் ஆதரவற்ற மற்றும் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்காக நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் குழந்தைகள் சாப்பிடுவதற்காக வாழை விவசாயி ஒருவர் ரூ 40,000 மதிப்பிலான 10,000 வாழைப்பழங்களை இலவசமாக வழங்கியிருக்கிறார். அவரின் செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள வடுகக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன் (50). இவர் தனக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலத்தில் வாழை விவசாயம் செய்து வருகிறார். இவருடைய தோட்டத்தில் விளையும் வாழை இலை, வாழைப்பழம் உள்ளிட்டவை தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு விற்பனைக்காக மற்றும் சொந்தப் பயன்பாட்டிற்காக வாங்கிச் செல்கின்றனர். விவசாயத்தை நேசித்து அர்ப்பணிப்புடன் செய்யும் மதியழகன் சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.

சமூகப்பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கான குழந்தைகள் இல்லங்களில் ஆதரவற்ற மற்றும் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் தங்கிப் படிக்கின்றனர். அந்தக் குழந்தைகளுக்கு விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் அன்னை சத்யா ஸ்டேடியத்தில் இரண்டு நாள்கள் நடைபெறும் போட்டியில் தஞ்சாவூர் மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொள்கின்றனர்.
அந்தக் குழந்தைகள் சாப்பிடுவதற்காக வாழை விவசாயி மதியழகன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குளோரி குணசீலியிடம் ஒன்றரை டன் எடை கொண்ட ரூ.40,000 மதிப்பிலான பத்தாயிரம் வாழைப்பழங்களை இலவசமாக வழங்கினார். ஆதரவற்ற குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுத்திருக்கும் அவருடைய செயல் தங்களை நெகிழ வைத்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் குளோரி குணசீலி உள்ளிட்டோர் அவருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி மதியழகனிடம் பேசினோம், ”நான் ஏற்கெனவே கொரோனா லாக்டெளன் சமயத்திலும் அதன் பிறகும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்கள் சாப்பிடுவதற்காக நான்கு முறை இலவசமாக வாழைப்பழம் வழங்கியுள்ளேன். கடுவெளியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்கு தீபாவளி, பொங்கல் பண்டிகை சமயத்தில் இலவசமாக வாழைப்பழம் மற்றும் உணவு கொடுப்பதைத் தொடர்ந்து செய்து வருகிறேன்.

ஆதரவற்ற குழந்தைகளுக்காக நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுக்க நினைத்தேன். இதற்காக 10,000 பூவன் ரக வாழைப் பழங்களை இயற்கை முறையில் பழுக்க வைத்தேன். குழந்தைகள் சாப்பிடுவார்கள் என்பதால் மிக கவனமாக வாழைப்பழங்களைத் தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து துணியால் துடைத்து டிரேயில் அடுக்கிக் கொடுத்தேன்.
வாழை இலை, வாழைப்பழம் உள்ளிட்டவற்றுக்கு மார்க்கெட்டில் நல்ல விலை கிடைத்துவரக்கூடிய இந்தச் சூழலில் ரூ.40,000 மதிப்பிலான வாழைப்பழங்கள் இலவசமாக வழங்கியிருக்கிறீர்கள் என அதனைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் என்னைப் பாராட்டினர். என்னைப் போல் விவசாயிகள் பலரும் அவ்வப்போது விளையும் பொருள்களை விளிம்பு நிலை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.