நாமக்கல் மாவட்டம், கூலிப்பட்டி அருகில் உள்ள ரெட்டியப்பட்டி, கந்தபுரியைச் சேர்ந்தவர் ஜெகதீசன். அங்கு, எல்.எம்.பி ஜெகதீசன் சிற்பக்கூடம் என்ற பெயரில் சாமி சிலைகள், கோபுரச் சிலைகளை வடிக்கும் சிற்பக் கலையை மேற்கொண்டு வருகிறார். அவர் வடிக்கும் தொழில்முறைச் சிலைகளுக்கு மத்தியில்தான், இதுபோல் வித்தியாசமான சிலைகளையும் செய்து, பலரது கவனத்தையும் ஈர்த்துவருகிறார். தனது சிற்பக்கூடத்தில் சிலை வடிக்கும் வேலையில் பிஸியாக இருந்த ஜெகதீசனை சந்தித்துப் பேசினோம்.

"பரம்பரை பரம்பரையாக எங்க குடும்பத்துக்குப் பூர்வீகத் தொழில் இதுதான். எங்களுக்குப் பூர்வீகம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சதுர்வேதிமங்கலம். 50 வருஷத்துக்கு முன்னாடி, எங்க தாத்தாவும் தந்தையும் கொல்லிமலையில் உள்ள அறப்பளீஸ்வரர் கோயிலுக்குக் கட்டுமான வேலைகளுக்கு வந்திருக்காங்க. அந்த வேலை செஞ்சுக்கிட்டிருக்கும்போதே, இதே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் சிவன் கோயிலுக்குச் சிலை செய்யும் வேலையும் வந்திருக்கு.
அப்படி சேந்தமங்கலத்தில் அவர்கள் தங்கி, சிலை வடித்தபோது அந்தச் சிலைகளுக்கு உரிய கற்கள், இப்போ நாங்க குடியிருக்கிற கூலிப்பட்டியில் இருக்கும் முருகன் மலைக்கோயில் அமைந்துள்ள மலைக்குன்றில் இருந்து வந்திருக்கு. அப்போது எங்க தாத்தா, அப்பாவோட சாமி சிலைகள் செய்ற தொழில் திறமை பற்றிக் கேள்விப்பட்ட கூலிப்பட்டியைச் சேர்ந்தவங்களும், இரண்டு மூன்று வேலைகளை அவங்களுக்கு வழங்கியிருக்காங்க. கூலிப்பட்டியில் சிலை வடிக்கும் கற்கள் கிடைத்ததால் இங்கேயே நிரந்தரமாகத் தங்கிட்டாங்க. அப்போது கூலிப்பட்டியில் அம்மி, குளவி செய்கிறவங்கதான் அதிகம் இருந்ததால் சாமி சிலைகள் வடிக்கும் என் தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் தொடர்ந்து வேலை கிடைச்சிருக்கு.

இந்நிலையில்தான் எங்கப்பாவுக்கு இங்கேயே திருமணம் ஆகி, நான், தம்பின்னு குழந்தைகள் பிறந்தோம். எட்டாவது வரைக்கும் படிச்சேன். அதன்பிறகு, எனக்குப் படிப்பு மேல நாட்டம் இல்லை. பரம்பரைத் தொழிலான இந்தச் சிலை வடிக்கும் தொழில்மேல எனக்கும் ஈடுபாடு ஏற்பட்டதால, என்னோட 15வது வயசுலேயே இந்தத் தொழிலுக்குள் வந்துட்டேன். தொடர்ந்து பல கோயில்களின் சாமி சிலைகள், கோபுரத்தில் வைக்கப்படும் சிலைகள்னு வடித்து தர ஆரம்பிச்சேன்.
இந்நிலையில்தான், 'எல்லோரும் செய்வதுபோல் சாமி சிலைகள் வடிப்பது தொழிலுக்காக. ஆனால், இதுல என்னோட தொழில் திறமையைக் காண்பிக்க, ஏதாவது பண்ணணுமே'ன்னு நினைச்சேன். என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப ஓர் எண்ணம் தோன்றியது. கடந்த 2000-ம் வருஷம் ஒரே கருங்கல்லில் 5 கண்ணிகள் கொண்ட சிறிய சங்கிலி ஒன்றைச் செஞ்சேன். அதைப் பார்த்துட்டு பலரும், 'புதுமையா இருக்கு'ன்னு பாராட்டினாங்க. இதனால் உற்சாகமான நான், அடுத்து ஒரே கல்லில் சிங்கத்தைச் செஞ்சு, அதன் வாயில் உருண்டை ஒன்று இருப்பதுபோல் வடிச்சேன். அதுவும் கவனம் பெற்றது.

அடுத்து, பன்னிரண்டரை அடி நீளத்துல 24 கண்ணிகள் கொண்ட பெரிய சங்கிலி ஒன்றைச் செய்தேன். இதற்கு, ஒரு வாரம் ஆனது. இன்னும் என்ன செய்யலாம்னு யோசிச்சு, ஒரே கல்லில் தேரை வடிச்சேன். இதற்கு நுணுக்கமான வேலைப்பாடுகள் செய்ய வேண்டியிருந்ததால், இதை வடிக்க 15 நாள் ஆனது. இதற்கும், பலரிடமிருந்து பலத்த பாராட்டு கிடைச்சுது. தொடர்ந்து, ஒரே கல்லில் பேனா, புல்லாங்குழல்னு அடுத்தடுத்து புதுமையாக பொருள்களை உருவாக்கினேன்.
இந்நிலையில், எங்களைப் போன்ற சிற்பக்கலைஞர்களுக்கு இந்திய அரசு போட்டி வைப்பதைக் கேள்விப்பட்டு, கடந்த 2009-ம் ஆண்டு இந்தப் பொருள்களை எடுத்துட்டுப் போய், சென்னையில் காட்சிப்படுத்தினேன். கல்லில் வடிக்கப்படும் சிலைகள் பிரிவில், என்னோட பொருள்கள், சிலைகள் மாநில அளவில் தேர்வாகின. அடுத்து, டெல்லியில் நடைபெற்ற இந்திய அளவிலான போட்டியிலும் வென்று, அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி கையால் விருது வாங்கினேன். அப்போது, இந்தத் தொழிலில் ஏதோ பெரிசா சாதிச்ச உணர்வு ஏற்பட்டது. அடுத்தடுத்து, புதுமையாக ஏதாச்சும் செய்யணும்னு நினைச்சப்ப, தொடர்ச்சியாகக் கோயில்களில் சிலை வடிக்கும் வேலைகள் இருந்ததால், அதில் கவனம் செலுத்த வேண்டிய சூழல்.

இந்நிலையில்தான், 'மறுபடியும் ஏதாச்சும் புதுமையா பண்ணணும்' நினைச்சு, கடந்த வருடம் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு முன்னாடி, கல்லிலேயே மிதக்கும் படகைச் செஞ்சு, அதுல பிள்ளையாரைச் செஞ்சு வைக்கணும்னு நினைச்சேன். ஆனால், நாலு கல் படகுகள் செஞ்சுபார்த்தேன். எல்லாப் படகுகளும் தண்ணியில் மூழ்கிடுச்சு. அப்போதான், படகு தடிமனைக் கால் அங்குலம் அளவாக் குறைச்சு, படகைச் செஞ்சேன். என்னே ஆச்சரியம், அந்தக் கல் படகு மிதக்க ஆரம்பிச்சது!
அந்தப் படகு மேல, சிறிய மண்டபம் மாதிரி ஒரு கல்லில் செஞ்சு பொருத்தினேன். இந்தப் படகு அமைப்பை 4 கிலோ எடையில் செஞ்சேன். அடுத்து, 150 கிராம் எடையுள்ள கல் பிள்ளையாரையும் செஞ்சேன். அந்தப் பிள்ளையாரைப் படகுல உள்ள மண்டபத்தில் வைத்தேன். அதன்பிறகு, பிள்ளையாரை வேண்டிக்கிட்டு, தண்ணியில வைத்தேன். அந்தப் படகு பிள்ளையாரோடு சேர்ந்து மிதந்துச்சு. இதைச் செய்ய அஞ்சு மணி நேரம் ஆனது. இந்த மிதக்கும் கல் பிள்ளையாரைப் பலரும் வந்து விலைக்குக் கேட்டாங்க.

ஆனால், 'இது விற்பனைக்கல்ல' என்று கூறி மறுத்துவிட்டேன். இந்தப் பிள்ளையார் பற்றிக் கேள்விப்பட்டு, பலரும் எங்க சிற்பக்கூடத்துக்கு வந்து பார்த்துட்டுப் போறாங்க. இங்குள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களையும், ஆசிரியர்கள் அழைச்சுட்டு வந்து பார்வையிட வைக்கிறாங்க. இன்னும் பல புதுமைகளை இந்தத் தொழில்ல செய்யணும்னு நினைக்கிறேன். நிறைய ஐடியாக்கள் இருக்கு. அதை ஒவ்வொண்ணா செய்து, இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கான சிற்பியாக மாறுவேன். அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறேன்" என்றார்.
முயற்சி திருவினையாக வாழ்த்துகள்!