கரூரின் மையப் பகுதியான ஜவஹர் பஜாரில் 75 வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது, ஸ்டார் வாட்ச் ஹவுஸ். 1948-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கடை, மூன்று தலைமுறைகளாக இயங்கி வருகிறது. காலத்திற்கேற்ப தற்போதைய முன்னணி பிராண்டுகளின் அதிகாரபூர்வ டீலராகவும் செயல்பட்டு வருகின்றது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு வியாபாரத்தைத் தொடங்கி, இன்றைய ஸ்மார்ட் உலகில் ஆன்லைன் ஷாப்பிங் வந்தாலும் அதற்கு ஈடாக மூன்றாவது தலைமுறையான இம்தாத் ஷரீஃப், இந்தத் தொழிலைச் சிறப்பாக நடத்தி வருகின்றார்.
இவர்களுடைய வாட்ச் கடையின் வரலாறு மற்றும் சிறப்புகள் குறித்து அறிய ஒரு மதிய வேளையில் அங்கே சென்றிருந்தோம். வாட்ச் ஹவுஸின் வரலாறு குறித்து பேசத் தொடங்கினார், இம்தாத் ஷரீஃப்.

"தாத்தா ஹாஜி அப்துல் ஜப்பார்தான் கரூர் ஜவஹர் பஜாரில் 1948ல ஸ்டார் வாட்ச் கடையைத் தொடங்கினாங்க. ஆரம்பத்துல இதுக்கு முன்னாடி ஈரோட்டுல 'ராயல் வாட்சஸ்'ன்னு ஒரு கடை நடத்திட்டு இருந்தாங்க. ஈரோட்டிலிருந்து வந்துதான் கரூர்ல வாட்ச் கடை வச்சோம். தாத்தாவுக்கு அப்புறம், அப்பா ஹாஜி வாஹிதுல்லா ஷரீஃப், இதே தொழிலுக்கு வந்துட்டாங்க. ஆனா இப்ப நான்தான் கடையை நடத்திக்கிட்டு வரேன். நான் கோயம்புத்தூரில் 2017-ல பிபிஏ முடிச்சுட்டு, கேம்பஸ் இன்டர்வியூ மூலமா அமேசானில் வேலைக்குச் சேர்ந்தேன். ஆனா சின்ன வயசுல இருந்தே இந்தத் தொழிலுக்கு வர ஆசையா இருந்தது. அதனால அப்பாவுக்குப் பிறகு இந்தத் தொழிலை நான் கையில எடுத்துக்கிட்டேன்."
அவரைத் தொடர்ந்து, தன் தொடக்க கால வாழ்க்கை மற்றும் தொழில் அனுபவத்தை பற்றிப் பேச ஆரம்பித்தார் இம்தாத் ஷரீஃப்பின் தந்தையான ஹாஜி வாஹிதுல்லா ஷரீஃப்.
"எங்க அப்பாதான் ஈரோட்டில் கடை வச்சிருந்தாங்க. அதை இரண்டாவது உலகப் போருக்கு முன்னாடியே தொடங்கிட்டாங்க. அதனால கிட்டத்தட்ட எங்களுக்கும் இந்தத் தொழிலுக்கும் ரொம்ப பெரிய பந்தம் இருக்கு. அப்பா இந்தத் தொழில்ல இருந்ததுனால நானும் இதுக்குள்ள ஸ்கூல் படிக்கும்போதே வந்துட்டேன். அதுக்கு அப்புறமா பி.காம் படிச்சேன். பி.காம் முடிச்சாலும் அப்பா இந்தத் தொழிலுக்குள்ள முழுசா உள்ள விடல. 'நீ இந்தத் தொழிலுக்கு வரணும்னா நிறைய கத்துக்கணும்'-னு சொல்லிட்டாங்க.
அதுக்கப்புறம் பெங்களூர்ல ஷ்ரிஷேலா ஹாராலஜிக்கல்ஸ் நிறுவனத்தில் வாட்ச் மெக்கானிசம் பத்தித் தெரிஞ்சுக்கறதுக்காக ஒரு மாசம் ட்ரெயினிங் போனேன். அதுக்கப்புறம் மும்பையில 15 நாள் ட்ரெயினிங் போனேன். முழுசா வாட்ச் மெக்கானிசம் பத்தி தெரிஞ்சுக்கிட்டதுக்கு அப்புறம்தான், அப்பா இந்தத் தொழிலுக்குள்ளேயே விட்டாங்க. அப்ப வாட்ச் எல்லாமே இறக்குமதி பண்ணிதான் வந்துச்சு. இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஜெர்மன் நாடுகளில் இருந்துதான் இறக்குமதி பண்ணுவாங்க. அப்போலாம் சீன வாட்ச்கள் மார்க்கெட்ல இல்லவே இல்ல. இப்பதான் மார்க்கெட்ல அதெல்லாம் அதிகமாயிடுச்சு. அன்னைக்கு கரூர்ல ஜமீன்தார்கள், பண்ணையார்கள் நிறைய பேர் வாட்ச் விரும்பி கட்டுவாங்க. 15 ரூபாயில் கூட வாட்ச் கொடுத்தோம்.

கிட்டத்தட்ட 1948 லிருந்து 1960 வரைக்கும் வாட்ச்-னாலே வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி பண்ணுவாங்க. அதை இங்க இருக்குற டீலர்ஸ் கிட்ட நாங்க வாங்குவோம். அதுக்கு அப்புறமாதான் மக்கள் கிட்ட போய் சேரும். 1960க்கு அப்புறம்தான் ஹிந்துஸ்தான் மெட்டல் டூல்ஸ் (HMT) கம்பெனியோட வாட்சுகள் சந்தைக்கு வர ஆரம்பிச்சது. அன்னைக்கு ஒரு வாடிக்கையாளருக்கு வாட்ச் ஆர்டர் பண்ணுனா ஒரு மாசம், ரெண்டு மாசம்கூட ஆகும்.
மும்பை, சென்னைக்கு நேரில் போய்தான் வாட்ச்கள் நிறைய வாங்குவோம். அதை வாங்கிட்டு வந்து கரூர்ல விற்பனை செய்வோம். 1984ல் தான் இந்தியால டைட்டன் வாட்ச்கள் வர ஆரம்பிச்சது. 1988 டைமெக்ஸ் வாட்சுகளும் சந்தையில் அறிமுகமாச்சு. அதற்குப் பிறகு சொனாட்டா, ஃபாஸ்ட்ராக் வாட்ச்கள் அறிமுகம் ஆகிடுச்சு. இந்த வாட்சுகள் அறிமுகமானதிலிருந்து நாங்க அந்த பிராண்டுகளோட அதிகாரபூர்வ டீலராக இருந்துட்டு வர்றோம்.
வாட்ச் தொழில் மட்டும் இல்லாம டிவி, ரேடியோ, டிவி ஏரியல் ஆன்ட்டனா, எலக்ட்ரானிக் வீட்டு உபகரணங்கள், டெலிபோன்ஸ், விசிடி டிவிடி, இசைத்தட்டுகள் இவற்றையும் விற்பனை பண்ண ஆரம்பிச்சேன். அப்போ நான் டெலிவிஷன் ஃபீல்டுகுள்ள நுழையும்போது நம்ம ஊர்ல தூர்தர்ஷன் கூட இல்ல. சிலோன் ரூபாவாஹினி மட்டும்தான் இருந்துச்சு. அதற்குப் பிறகுதான் இங்கே தூர்தர்ஷன் டிவி வர ஆரம்பிச்சது. குறிப்பா பிபிஎல் (BPL), சாலிடர் (Solidare), டயனோரா (Dianora), சோனி, வீடியோகான், ஒனிடா, ஆப்டோநிக்கா (Optonica) டிவிகளையெல்லாம் கரூர்ல நாங்கதான் டீலர்ஷிப் மூலமா விற்பனை பண்ண ஆரம்பிச்சோம். இது மட்டும் இல்லாம கரூரில் நிறைய எலக்ட்ரானிக்ஸ் கடைகளுக்கும் டீலர்ஷிப் கொடுக்க ஆரம்பித்தோம்.

அப்பதான் இன்ஸ்டால்மெண்ட்ல நிறைய பொருள்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க ஆரம்பிச்சாங்க. ஆனா, அந்த வியாபார முறை எங்களுக்கு ஒத்து வரல. அதற்குப் பிறகு அந்தத் தொழிலை விட்டுட்டு வெறும் வாட்ச்களை மட்டும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்றோம். 1998ல் 50 வருட வெள்ளி விழா கொண்டாடினோம், அப்புறம் கடையை மேம்படுத்தி புதுசா மறுபடியும் ஆரம்பிச்சோம். ஆனாலும் இந்தத் தொழிலில் நிறைய கஷ்டங்களும் வந்துச்சு. 2002ல் கடையில தீ விபத்து நடந்துச்சு. அதுல நிறைய இழப்புதான், இருந்தாலும் இந்தத் தொழில்தான் எங்களுக்குப் பிடிச்சிருந்தது. இதுல இருந்த ஆர்வத்தினால மறுபடியும் ஒரு வருஷத்துல மீண்டு வந்துட்டோம்.
தொழில் ஆரம்பிச்சதுல இருந்து இன்னைக்கு வரைக்கும் தரமான பொருள்களை மட்டும்தான் கொடுக்கிறோம். 'நாம நம்மளோட வீட்டுக்கு என்ன மாதிரியான தரத்துல பொருள் வாங்குறமோ, அதே மாதிரிதான் வாடிக்கையாளருக்கும் பொருள்களை விற்பனை பண்ணனும்' - இதுதான் எங்க அப்பா எனக்குச் சொல்லிக் கொடுத்தாங்க. இதனாலேயே பெரும்பாலும் சீனப் பொருள்கள் மார்க்கெட்டுக்கு வந்ததுக்கு அப்புறம், எதையுமே நாங்க விற்பனைக்கு வாங்கவே இல்ல. இன்னைக்கு சீனத் தயாரிப்பு வாட்சுகள் 50 ரூபாயிலிருந்து கிடைக்குது. ஆனால் அவை எல்லாம் தரமாக இருக்குமானு கேட்டா, கண்டிப்பா இருக்காது. விலை கம்மியா கிடைக்குதுன்னு மக்கள் நிறைய பேர் ஏமாந்துடுறாங்க.
டிஸ்ஸாட், ரேடோ, ஃபாஸில், கேசியோ, டைட்டன், ஃபாஸ்ட்ராக், சொனாட்டா, டைமெக்ஸ் இந்த மாதிரியான தரமான பிராண்டட் பொருள்கள் மட்டும்தான் நம்ம கடையில விற்பனை பண்ணுறோம். இது மட்டும் இல்லாம சுவர் கடிகாரம், வுட்டன் கடிகாரம், அலாரம் கடிகாரமும் விற்பனை பண்றோம். எல்லா வகையான வாட்ச்களையும் நம்ம கடையிலேயே சர்வீஸ் பண்ணிக் கொடுத்துட்டு இருக்கோம். இன்னைக்கு ஆன்லைன் பிசினஸ் எங்களைப் பாதிக்குதுதான், இருந்தாலும் எங்களால இந்தத் தொழிலை நடத்த முடியுது. ஆனாலும் இன்னைக்கு நிறைய பேரு கடையில வந்து வாங்குறாங்க. அதனால நாங்க ஆன்லைன் விலைக்கும், ஆன்லைன்ல கொடுக்குற ஆஃபருக்கு ஏத்த மாதிரியும் கடையிலேயே கொடுக்குறோம். உதாரணமா ஆன்லைன்ல 2000 ரூபாய்க்கு வாட்ச் ஆஃபர்ல கொடுத்தா, அதே விலைக்கு நம்ம கடையிலும் ஆஃபர் கொடுக்கிறோம்.
என்னதான் ஆன்லைன்ல வாட்ச் வாங்கினாலும், நேர்ல வந்து ஒரு வாட்ச் பார்த்து கையில கட்டுறதே தனி ஃபீல்தான். அதே மாதிரி இன்னைக்குச் சந்தையில அதிகமா விற்பனையாகுற ஸ்மார்ட் வாட்ச்களையும், ஸ்மார்ட்பேண்ட்களையும் விற்பனை பண்றோம். இதுக்கு மக்கள்தான் காரணம். நல்ல பொருள்களை விற்பனை செஞ்சா, மக்கள் ஆதரவு கண்டிப்பாகக் கிடைக்கும். இது இல்லாம இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாகவும் நம்மளோட வாட்ச்சுகளை விற்பனை பண்ணிட்டு வர்றோம்.

கரூரில் இருக்கிற செட்டிநாடு சிமெண்ட்ஸ், டி.என்.பி.எல் கம்பெனிகளுக்கும் மொத்தமாவே ஆர்டர் எடுத்து நிறைய வாட்ச் விற்பனை பண்ணிகிட்டு இருக்கோம். நம்ம கடையில வாங்குற வாட்ச்களுக்கு வாரன்ட்டி கொடுக்கிறோம், ஏதாவது பிரச்னைனாலும் சர்வீஸ் பண்ணிக் கொடுக்கிறோம். இதுதான் இத்தனை வருஷம் இந்த தொழில்ல மூன்று தலைமுறையா நிலைச்சு நிற்கிறதுக்குக் காரணம்.
ஒண்ணே ஒண்ணுதான் மக்களுக்குச் சொல்ல முடியும், வாட்ச் கெட்டுப் போகிற பொருள் கிடையாது, அதனால குவாலிட்டி உள்ள வாட்ச்களை வாங்குங்க. உங்களோட பணத்தை நல்ல ஒரு தரமான பொருள்ல போட்டீங்கன்னா, அது கண்டிப்பா உங்களுக்கு உழைக்கும்" எனக் கடைசியாக மக்களுக்கு ஒரு சிறிய அறிவுரை சொல்லி முடித்தார், ஹாஜி வாஹிதுல்லா ஷரீஃப்.