Published:Updated:

ஆத்திசூடி மொழிபெயர்ப்பு, கால்நடைகளின் உயிர்காக்கும் கருவி - அசத்தும் துறையூர் சகோதரிகள்!

துறையூர் சகோதரிகள்

"ஆத்திசூடியில் இருக்கிற 109 அடிகளையும், கொன்றைவேந்தனில் உள்ள 91 அடிகளையும் இந்தியில் மொழிபெயர்க்கலாம்னு அப்பா ஐடியா கொடுத்தாங்க. தினமும் ஸ்கூல் விட்டு வந்த பிறகு ஒரு வரி ரெண்டு வரியா மொழிபெயர்க்கத் தொடங்கினேன்." - அப்ஸரா

Published:Updated:

ஆத்திசூடி மொழிபெயர்ப்பு, கால்நடைகளின் உயிர்காக்கும் கருவி - அசத்தும் துறையூர் சகோதரிகள்!

"ஆத்திசூடியில் இருக்கிற 109 அடிகளையும், கொன்றைவேந்தனில் உள்ள 91 அடிகளையும் இந்தியில் மொழிபெயர்க்கலாம்னு அப்பா ஐடியா கொடுத்தாங்க. தினமும் ஸ்கூல் விட்டு வந்த பிறகு ஒரு வரி ரெண்டு வரியா மொழிபெயர்க்கத் தொடங்கினேன்." - அப்ஸரா

துறையூர் சகோதரிகள்

“ஒரு முறை அப்பாகூட ஊருக்குப் போய்ட்டிருந்த சமயம். ஆறு மணிக்கு மேல ஆகி நல்லா இருட்டிடுச்சு. ஆனா, வண்டிகள் போற ரோட்ல ஆடு, மாடுகள் பலவும் ஆபத்தை உணராம கடந்து கொண்டிருந்தன. ஓட்டுநர்கள் கொஞ்சம் கவனக்குறைவா இருந்தாலும் விபத்து ஏற்பட்டு அவை உயிரிழப்பதற்கான வாய்ப்பு இருக்கு. அப்படி நடக்காம இருக்க ஏதாவது ஒண்ணு பண்ணணுமேன்னு என் அப்பாகிட்ட சொன்னேன். அப்போது தோன்றியது இந்த ஐடியா...” தான் டிசைன் செய்த Reflector-ஐக் காட்டியபடியே பேசத்தொடங்கும் லயஸ்ரீயின் வார்த்தைகளில் அவ்வளவு தெளிவு.

லயஸ்ரீ
லயஸ்ரீ

திருச்சி மாவட்டம் துறையூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் லயஸ்ரீ சாலைகளின் பிரதிபலிப்பானைக் கொண்டு கால்நடைகளுக்கான தோடு ஒன்றை உருவாக்கியிருக்கிறார். இதை அனைத்துக் கால்நடைகளின் காதுகளில் பொருத்துவதை ஒரு திட்டமாகச் செயல்படுத்தும் முயற்சியிலும் இருக்கிறார்.

“இதுபற்றி திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் சாரை சந்தித்துப் பேசினோம். துறையூர் எம்.எல்.ஏ ஸ்டாலின்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோரை சந்தித்தும் மனுக் கொடுத்தோம். மேலும் இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுத, எனது இந்த யோசனைக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். இதை நடைமுறையில் செயல்படுத்துவற்கான வழிகளைக் கண்டறிய என் அப்பாவுடன் இணைந்து பணியாற்றிவருகிறேன்” என்கிறார். 

அப்ஸரா
அப்ஸரா

தமிழ்ப் பழமொழிகளை அகரவரிசைப்படி தொகுத்து, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புத்தகமாக தன் ஐந்தாம் வகுப்பிலேயே வெளியிட்டிருக்கிறார் லயஸ்ரீ. மேலும், கொரோனா நிதிக்காக தன் ஒருவருட சேமிப்பை மொத்தமாக UNICEF நிறுவனத்திடம் அளிக்க, இவரைப் பாராட்டி வாழ்த்துமடல் அனுப்பியிருக்கிறது அந்நிறுவனம். ஒருபுறம் லயஸ்ரீ இப்படிக் கலக்கிக்கொண்டிருக்க அவரின் சகோதரி அப்ஸரா ஆத்திசூடி மற்றும் கொன்றைவேந்தனை இந்தியில் மொழிபெயர்த்து அசத்தியிருக்கிறார்.

“சின்ன வயசிலிருந்தே தமிழ் மொழி மேல எனக்குத் தனி ஆர்வம். இதனால நிறைய வாசிச்சேன். கூடவே இந்தியும் கத்துக்க ஆரம்பிச்சேன். ஏழாம் வகுப்பு படிக்கிறப்போ ஆத்திசூடியை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி மாற்றி ஒரு ஐந்து நிமிடம் கலெக்டரிடம் சொல்லிக் காண்பித்தேன். அப்புறம்தான் ஆத்திசூடியில் இருக்கிற 109 அடிகளையும், கொன்றைவேந்தனில் உள்ள 91 அடிகளையும் இந்தியில் மொழிபெயர்க்கலாம்னு அப்பா ஐடியா கொடுத்தாங்க. தினமும் ஸ்கூல் விட்டு வந்த பிறகு ஒரு வரி ரெண்டு வரியா மொழிபெயர்க்கத் தொடங்கினேன். 10-ம் வகுப்பு படிக்கிறப்போ இதை முழுவதுமாகச் செஞ்சுமுடிச்சேன். என் மொழிபெயர்ப்பில் உள்ள திருத்தங்களை என் இந்தி ஆசிரியர்கள் துணையுடன் சரி செஞ்சேன். அப்புறம் கொரோனா காரணமா ஊரடங்கு போடப்படவே, அதைப் பயன்படுத்தி என் மொழிபெயர்ப்புகளை புத்தகமா வெளியிட்டோம். அதைப் பாராட்டி தலைமைச் செயலர் இறையன்பு ஐயா வாழ்த்து மடல் அனுப்பினார்.

பெற்றோருடன் லயஸ்ரீ - அப்ஸரா
பெற்றோருடன் லயஸ்ரீ - அப்ஸரா

அடுத்து கவர்னருக்குக் கடிதம் அனுப்பினோம். அவர் எங்களை சந்திக்க நேரம் கொடுத்து சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக வாழ்த்திப் பேசினார். இதுபோல தமிழில் உள்ள நிறைய படைப்புகளைத் தொடர்ந்து மொழிபெயர்ப்பு செய்யுங்க. அடுத்த புத்தகம் எழுதியவுடன் எனக்கு அனுப்புங்கன்னு சொன்னார்” என நெகிழ்ச்சியுடன் பேசுகிறார் அப்ஸரா. 

அடுத்து பேசிய இச்சகோதரிகளின் தந்தை சசிகுமார், "குழந்தைகளுக்கு ஆக்கப்பூர்வமான விஷயங்களை எப்போதும் சொல்லிக்கொடுத்துக்கிட்டே இருக்கணும். அதில் வாசிப்புப் பழக்கம் மிகவும் முக்கியமான ஒன்று. இது தற்போது குறைஞ்சுகிட்டே வருது. வெறுமென பாடப்படிப்பு மட்டும் இல்லாம, நிறைய கற்றல் சார்ந்த விஷயங்களையும் பெற்றோர்கள் ஊக்குவிக்கணும். பெற்றோர்கள்தான் அவங்களோட குழந்தைகளுக்கு முதல் ஆசிரியர்" எனப் புன்னகையுடன் கூறி விடைதருகிறார்.

அறம் செய விரும்பு..!