Published:Updated:

2022 - டாப் 10 மனிதர்கள்

2022 - டாப் 10 மனிதர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
2022 - டாப் 10 மனிதர்கள்

நவீன மருத்துவத்தின் அடிப்படைகளை எளிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் நரேந்திரன் உருவாக்கியிருக்கும் 30 நூல்கள், தமிழுக்கு அவரளித்த நற்கொடை.

வெரோணிக்கா மேரி
வெரோணிக்கா மேரி

பொதுநலப் போராளி - வெரோணிக்கா மேரி

ஒரு சாமானியர் நினைத்தால் பெரிதாக எதை மாற்றிவிடமுடியும்? ஓர் அரசு மருத்துவமனையை அதிநவீனமாக மேம்படுத்தலாம். செயற்கைக் கருத்தரிப்பு மையங்களின் கட்டணக்கொள்ளையைத் தடுக்கலாம். மருத்துவத் தவறுகளால் பாதிக்கப்பட்டுத் தவிக்கும் அப்பாவிகளுக்கு இழப்பீட்டுத்தொகை பெற்றுத்தரலாம் என்ற சாத்தியங்களின் சாட்சியம்தான் மதுரையைச் சேர்ந்த வெரோணிக்கா மேரி என்ற பெயர். தகவல் உரிமைச் சட்டம் என்ற ஆயுதத்தைக் கையிலேந்தி ஊழல்வாதிகளுக்கும் ஜனநாயக எதிரிகளுக்கும் எதிராக ஒற்றைப் பெண்ணாகக் களத்தில் நிற்கிறார். ஆயிரத்தைத் தாண்டும் ஆர்.டி.ஐ மனுக்கள், அவற்றில் பெற்ற ஆதாரங்களைக் கொண்டு 22 பொதுநல வழக்குகள் என வியக்க வைக்கிறது வெரேணிக்காவின் செயல்வேகம். வெரோணிக்கா நடத்திய சுகாதார உரிமைப் போராட்டத்தால்தான் லட்சோப லட்சம் ஏழைகளுக்கு உயிர்நம்பிக்கையாக இருக்கும் அரசு மருத்துவமனைகளில் வெண்டிலேட்டரும் அவசரக் கால உயிர்காக்கும் மருத்துவக் கருவிகளும் வந்தன. மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிசு இறப்பு அதிகரிப்பதை நீதிமன்றத்துக்குச் சுட்டிக்காட்டி, 20 கோடி செலவில் அதிநவீன மருத்துவப்பிரிவு உருவாகக் காரணமாக இருந்ததும் வெரோணிக்காதான். எந்தப் பின்புலமும் இல்லாமல், மிரட்டல் உருட்டல்களுக்கு அஞ்சாமல் எளிய மக்களின் நலனுக்காகக் களத்தில் நிற்கும் வெரோணிக்கா, வணங்கத்தகுந்த சிங்கப்பெண்!

மர்லிமா முரளிதரன்
மர்லிமா முரளிதரன்

திருநர்களின் முதல்வர் - மர்லிமா முரளிதரன்

திருநர்களின் உணர்வுகளையும் உளவியலையும் உலகம் புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கும் நற்தருணம் இது. தவழ்ந்தெழுந்து நடக்கப்பழகும் அவர்களைப் பற்றித்தூக்கிவிட ஆயிரமாயிரம் கரங்கள் தேவையாக இருக்கின்றன. திருநர் சமூகத்துக்குள்ளாகவே அப்படியொரு பரிவின் கரமாக உருவாகியிருக்கிறார் செஞ்சியைச் சேர்ந்த மர்லிமா முரளிதரன். கால் நூற்றாண்டுக் காலமாக தமிழகத்தின் வடமாவட்டப் பகுதியில் வெற்றிகரமான கட்டடப் பொறியாளராகக் காலூன்றி நிற்கும் மர்லிமா, நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு முதலாளியாக உயர்ந்திருக்கிறார். தன்னைப்போல பிற திருநர்களும் பொருளாதாரத் தற்சார்பு பெறுவதற்காக மர்லிமா எடுக்கிற முன்முயற்சிகள் பலரது வாழ்க்கையை மாற்றியிருக்கின்றன. மர்லிமாவின் அரவணைப்பில் படித்த பல திருநர்கள் தமிழகமெங்கும் பணியாற்றுகிறார்கள். அவமானங்கள், புறக்கணிப்புகள், உடல் தொந்தரவுகளென திருநர்களை முடக்கிப்போடும் எல்லா இடர்களையும் தூரத் தள்ளிவிட்டு, வெற்றிகரமான தொழில்முனைவோராக வளர்த்ததோடு, விளிம்பில் தவிக்கும் மற்றவர்களையும் தடம்புரளவிடாமல் வளர்த்தெடுத்த மர்லிமாவின் அக்கறை, திருநர் சமூகத்துக்குத் தருகிறது பெரும் நம்பிக்கை.

நரேந்திரன்
நரேந்திரன்

தமிழ் மருத்துவர் - நரேந்திரன்

தஞ்சைக் கீழவீதியில் மருத்துவ ஆலோசனை மையம் நடத்துகிற இந்த ஓய்வுபெற்ற மருத்துவப் பேராசிரியருக்குத் தீராக்கனவு, தமிழ்வழி மருத்துவப் படிப்பு. அக்கனவை நனவாக்க வாழ்வின் ஐம்பதாண்டுகளை அர்ப்பணித்திருக்கிறார். தமிழ்வழி உயர்கல்விக்குத் தடையே துறைநூல்கள் இல்லாததும் கலைச்சொற்கள் தொகுக்கப்படாததும்தான். அதையுணர்ந்து, தன் துறைப் பாடநூல்களைத் தமிழில் எழுதியதோடு, உயர்கல்வி நிறுவனங்களோடு இணைந்து பல மருத்துவக் களஞ்சியங்களையும் உருவாக்கியிருக்கிறார் நரேந்திரன். நவீன மருத்துவத்தின் அடிப்படைகளை எளிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் நரேந்திரன் உருவாக்கியிருக்கும் 30 நூல்கள், தமிழுக்கு அவரளித்த நற்கொடை. வரலாற்றுப் புரிதலோடும் கல்விப்புலத் தெளிவோடும் அயராது இயங்கும் இந்த 79 வயது தமிழ்த்தாத்தா, இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவக் கலைச்சொற்களைத் தொகுத்தளித்திருக்கிறார். விரைவில் தமிழ்வழி மருத்துவப் படிப்பு மலரவிருக்கிற இந்நேரத்தில் அரசுக்கு ஆலோசகராக இருந்து வழிகாட்டும் இந்த நம்பிக்கை நாயகரை உச்சிமுகர்கிறாள் தமிழன்னை.

ராமச்சந்திரன்
ராமச்சந்திரன்

நம்பிக்கையளிக்கும் நல்லாசிரியர் - ராமச்சந்திரன்

வகுப்பறைகள் குழந்தைகளுக்கானவை. அவர்களின் உயரத்துக்குக் கீழே இறங்கிச் சிரித்தும் சிரிக்க வைத்தும் சொல்லிக்கொடுக்கிற ஆசிரியர்களே காலத்தில் நிலைத்திருப்பார்கள். ராமநாதபுரம் மாவட்டம், கீழாம்பல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் ஆசிரியர் ராமச்சந்திரன், குழந்தைகளை வசீகரித்து, கற்றலை ருசியாக்குகிறார். சரிக்குச்சமமாகத் தரையில் அமர்ந்து, குழந்தைகளின் தனித்திறன் அறிந்து கற்பிக்கும் ராமச்சந்திரன், குடியரசுத்தலைவரிடம் நல்லாசிரியர் விருதுபெற்றபோதும் பள்ளிச்சீருடை அணிந்துசென்று தேசத்தின் கவனம் ஈர்த்தார். பாடப்புத்தகங்களோடு, இசை, சிலம்பம், கணினிப்பயிற்சியெனத் தனித்திறன்களையும் வளர்த்தெடுக்கும் இவரின் நற்பணிகளுக்குப் பின்னால் நின்று ஊக்குவிக்கிறது ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம். இருப்போருக்கும் இல்லாதோருக்குமான கல்விப் பாகுபாடு விரிந்துவரும் காலத்தில் கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்களை இதயத்தில் ஏந்திக்கொள்ளும் ராமச்சந்திரன் போன்ற நல்லாசிரியர்கள், ஞானத்தந்தைகள்!

செந்தில்குமார்
செந்தில்குமார்

வாய்ப்புகளை உருவாக்கும் வழிகாட்டி - செந்தில்குமார்

தானுயர்ந்து, தன்னைச் சூழ்ந்திருப்போரையும் கைதூக்கிவிடுபவரையே இந்த உலகம் மாமனிதரெனக் கொண்டாடுகிறது. தென்காசிக்குப் பக்கமுள்ள ராயகிரி என்ற குக்கிராமத்தில் பிறந்த செந்தில்குமார் அப்படியொரு மாமனிதர். திருநெல்வேலி அரசுப் பொறியியல் கல்லூரியில் படித்த செந்தில், இன்று இந்தியாவின் டாப் ரேங்கிங் மென்பொருள் நிறுவனமொன்றின் தலைவர். மென்பொருள் துறைக்குப் பொருத்தமற்றவர்களென நிராகரிக்கப்படும் கிராமப்புற மாணவர்களைத் தேடிப்பிடித்து, உதவித்தொகை தந்து பயிற்சியளித்துத் தன் நிறுவனத்தில் பணியளிப்பதோடு, அவர்களின் தலைமைத்துவத்தையும் வளர்த்தெடுக்கிறார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மென்பொறியாளர்களை உருவாக்கியிருக்கிறது, இவரின் வழிகாட்டுதல். மும்பையைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் இந்த 50 வயது ‘இளைஞரின்’ நிறுவனம், 300க்கும் மேற்பட்ட பெருநிறுவனங்களுக்கு சேவையாற்றுகிறது. பெற்றோரின் மறைவுக்குப் பிறகு தன் கிராமத்திலிருக்கும் வீட்டையே அலுவலகமாக மாற்றி, சுற்றுப்புற கிராமங்களின் பட்டதாரிகளுக்குப் பயிற்சியளித்து உலகத்தின் பல நகரங்களிலிருக்கும் தன் அலுவலகங்களுக்கு அனுப்புகிறார். தயக்கத்தோடு கிராமப்புறங்களுக்குள் முடங்கிக்கிடக்கும் லட்சோப லட்சம் இளைஞர்களுக்கு நம்பிக்கை வெளிச்சம் தருகிறார் செந்தில்குமார்.

அருணா ஜெகதீசன்
அருணா ஜெகதீசன்

நீதி தேவதையின் நிழல் - அருணா ஜெகதீசன்

மாசற்று வாழ்வதற்காகப் போராடியவர்கள்மீது துப்பாக்கிக்குண்டுகளைப் பாய்ச்சிய அரச வன்முறையை அம்பலப்படுத்தி, நீதியை உயிர்ப்பித்தவர். ஒரு அபாயத் தொழிற்சாலைக்கு எதிராக, தங்கள் தலைமுறையைக் காக்கும் நோக்கில் போராடிய மக்களைக் குறிவைத்துக் குதறியது காவல்துறை. குரலெழுப்பிய குற்றத்துக்காகவே ஒரு தங்கை வாயில் சுடப்பட்டது, உச்ச கொடூரம். எந்தத் தயக்கமுமின்றி வாகனத்தின் மீதேறித் துப்பாக்கி விசையிழுத்த ஒரு காவலரின் வெறித்தாண்டவத்தை உலகமே பார்த்து அதிர்ந்தது. நீதி வழங்கவேண்டிய முதல்வர், தனக்கு எதுவுமே தெரியாது என்று கைவிரித்தார். உயிருக்கு உயிரான உறவுகளைப் பலிகொடுத்தவர்களும், வன்முறையில் சிக்கி வாழ்நாள் முடமானவர்களும் மனதுக்குள் புழுங்கிக்கிடந்த கணத்தில்தான் களத்துக்கு வந்தார் அருணா ஜெகதீசன். ஆட்சியர் தொடங்கி, காவலர்கள் வரை அதிகாரிகளின் அகங்காரத்தையும் அலட்சியத்தையும், திட்டமிடல் முரண்களையும் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டி அவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்தவேண்டிய அவசியத்தையும் முன்வைத்தது, அருணா ஜெகதீசன் ஆணையம் தந்த அறிக்கை. சார்பு நீதிபதியாகத் தொடங்கி பல உயரிய பொறுப்புகளில் அமர்ந்து, எளிய மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்த நீதியரசிக்கு வந்தனங்கள்!

காவலர் உதவும் கரங்கள் 2003 குழு
காவலர் உதவும் கரங்கள் 2003 குழு

சல்யூட் டீம் - காவலர் உதவும் கரங்கள் 2003 குழு

2003-ம் ஆண்டு பணியில் இணைந்த 5,500-க்கும் மேற்பட்ட காவலர்கள், தங்களுக்குள் தகவல் பரிமாற்றத்துக்காக ஒருங்கிணைத்த குழு, இப்போது காவலர்களின் துயர் துடைக்கும் ‘காவலர் உதவும் கரங்கள் 2003 குழு' அமைப்பாக மாறியிருப்பது காலம் செய்த நல்மாற்றம். தங்களோடு பணியில் இணைந்த நண்பர்கள் உயிரிழந்தாலோ, கல்வி, மருத்துவ உதவிகள் தேவைப்பட்டாலோ உடனடியாகக் கைகொடுக்கிறது இந்தக் குழு. அரசுப் பணிப்பலன்களை வழங்குவதற்கு முன்பாகவே இவர்கள் திரட்டித் தருகிற பெரும் தொகை, நிர்க்கதியாக நிற்கும் குடும்பங்களுக்கு இழப்பின் வலியாற்றி, வாழும் நம்பிக்கையை வழங்குகிறது. இதுவரை, உயிரிழந்த 46 காவலர்களின் குடும்பங்களுக்கு 10 கோடி ரூபாய்க்கும் மேலாக நிதிதிரட்டித் தந்திருக்கிறது இந்தக் குழு. இவர்களை முன்மாதிரியாகக் கொண்டு காவல்துறையில் பல நற்பணிக்குழுக்கள் உருவாகியிருப்பதும் போற்றத்தகுந்த நல்மாற்றம்.

ப. பா. மோகன்
ப. பா. மோகன்

புறக்கணிக்கப்பட்டவர்களின் போர்க்குரல் - ப. பா. மோகன்

பழங்குடிகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக தமிழகத்தின் எந்த மூலையில் வன்முறைகள் நடந்தாலும் தானே போய் முன்னிற்பவர் மோகன். தாமதங்கள், பிறழ் சாட்சிகள், ஒத்துழைப்பின்மை, சாதிவெறி அச்சுறுத்தல்கள், அலைச்சல்கள் என மூன்றாண்டுக் காலம் கடும் இன்னல்களைக் கடந்து கோகுல்ராஜ் ஆணவக்கொலைக் குற்றவாளிகளுக்கு மோகன் வாங்கித்தந்த தண்டனை, நீதிக்கு நியாயம் சேர்த்தது. மலக்குழியை சுத்தம் செய்யும்போது உயிரிழந்த தொழிலாளருக்கு ‘மது அருந்தியிருந்ததால் இழப்பீடு தரமுடியாது’ என்று அரசு மறுத்தபோது, ‘மலக்குழியை மனிதர்கள் சுத்தம் செய்யக்கூடாது, அப்படி சுத்தம் செய்யவைத்தால் மது அருந்தாமல் செய்யமுடியாது’ என்று வாதிட்டு இழப்பீடு பெற்றுத் தந்தவர். இந்தியா முழுவதும் மனித உரிமை நீதிமன்றங்கள் உருவாகக் காரணமாக இருந்த மோகன், கோவை குண்டுவெடிப்பு வழக்கு, போலீஸ்காரர் செல்வராஜ் கொலை வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்றார். குரலற்ற மனிதர்களின் போர்க்குரலாக ஒலிக்கிற ப.பா.மோகன், நீதியை வேண்டும் எளியவர்களுக்கு நன்னம்பிக்கை முனை.

வறீதையா கான்ஸ்தந்தின்
வறீதையா கான்ஸ்தந்தின்

கடல்வெளிக் குரல் - வறீதையா கான்ஸ்தந்தின்

கடலோடிகளுக்காக ஒலிக்கும் காத்திரமான குரல் வறீதையா கான்ஸ்தந்தின். கடலோடிகள் சமூகத்தின் வாழ்வியல் பிரச்னைகளை, எதிர்காலக் கனவுகளை, அரசியல் அதிகாரத்தில் அச்சமூகம் கொண்டிருக்கும் இடைவெளியை அக்கறையோடும் ஆதங்கத்தோடும் அறிவியல் மற்றும் வரலாற்றுரீதியாகப் பதிவுசெய்துவரும் ஓய்வறியா களப்போராளி. பேராசிரியர், எழுத்தாளர், பதிப்பாளர், சூழலியல் செயற்பாட்டாளர், பேச்சாளர் எனப் பன்முகம் கொண்டவர். ‘கரைக்கு வராத மீனவத் துயரம்’, ‘கோடிமுனை முதல் ஐ.நா.சபை வரை’, ‘கடற்கோள் காலம்’, ‘பழவேற்காடு முதல் நீரோடி வரை’ உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நெய்தல் நிலம் சார்ந்த நூல்களை எழுதியவர். கடல், கடல்வளம், கடற்கரைப் பாதுகாப்பு, கடல்சார் மக்கள் பண்பாடு, கடல்சார் மரபறிவு, அரசியல், பொருளாதாரம், உரிமைகள், கல்வி, தொழில் வாய்ப்புகள், பேரிடர்க்காலச் சிக்கல்கள், தீர்வுகள் குறித்து ஆய்விலும் எழுத்திலும் தொடர்ந்து கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தீவிரமாய் இயங்கிவருகிறார். கடல்வளச் சுரண்டலுக்கு எதிராக அயராது எதிர்க்குரல் எழுப்பிவருபவர். தமிழகக் கடற்கரையின், கரைசார் மக்களின் வாழ்வியலில் அறியப்படாத முகத்தை உலகுக்கு அறிமுகப்படுத்துவதோடு, அம்மக்களின் விடியலுக்காக எழுத்தாயுதம் ஏந்தும் பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின், மக்கள் நம்பிக்கையில் ருசியேற்றும் உப்பு!

கலைச்செல்வி
கலைச்செல்வி
DIXITH

அறிவியல் தமிழ்ப்பெண் - கலைச்செல்வி

அம்பாசமுத்திரம் அருகேயிருக்கும் வாகைக்குளத்தில் பிறந்த ஒரு தமிழ்ப்பெண், இந்திய அறிவியலை ஆட்சிசெய்யும் பெருமிதத் தருணம் இது. தேசமெங்கும் அறிவியல் ஆராய்ச்சிகளை வழிநடத்தும் சி.எஸ்.ஐ.ஆர் (இந்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுமம்) தலைமை இயக்குநராகவும், டி.எஸ்.ஐ.ஆர் எனப்படும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சித் துறையின் செயலாளராகவும் இருக்கிற கலைச்செல்வி, இந்த உயரத்தை எட்டிப்பிடித்ததன் பின்னணியில் இருக்கிறது இணையற்ற உழைப்பும் அறிவியல் தாகமும். 80 ஆண்டுக்கால சி.எஸ்.ஐ.ஆரின் வரலாற்றில் தலைமை பீடத்தை எட்டிப் பிடித்திருக்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளவர் கலைச்செல்வி. லித்தியம் பேட்டரி தொடர்பான இவரின் ஆய்வுகள், இந்தியாவின் எதிர்கால எலெக்ட்ரிக் வாகனக் கனவுகளுக்கு உயிர்கொடுப்பவை.