Published:Updated:

2022 - டாப் 10 இளைஞர்கள்

2022 - டாப் 10 இளைஞர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
2022 - டாப் 10 இளைஞர்கள்

விளையாட்டுமீது பேரார்வம் கொண்டவர்களே அறிந்திடாத ‘போல் வால்ட்'டில் இந்தியாவின் பெருமித முகமாக முத்திரை பதிக்கிறார் இந்தத் தஞ்சை மாவட்டத்து இளம்பெண்.

ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கம்
ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கம்

நீர்க்காவலர்கள் - ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கம்

நீரை மட்டுமன்றி மொத்த மனிதர்களுக்குமான நேசத்தையும் சுரந்த பொதுக்கிணறுகள், இன்று நினைவுகளில் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன. தங்கள் ஊரில் ஓர் அங்கமாக இருந்த கிணறுகளைக் கைவிட்டு, தண்ணீருக்காகத் தொலைதூரம் அலைகிறார்கள் கிராமத்து மக்கள். அந்த மக்களின் கரங்களை இணைத்து, கைவிடப்பட்ட கிணறுகளை மீட்டுருவாக்கம் செய்து உயிர்ப்பிக்கிறார்கள் இந்த இளைஞர்கள். மூடிக்கிடக்கும் மண்ணோடு சேர்த்து சாதியத்தையும் அகழ்ந்தெறிந்துவிட்டு கிணற்றின் ஊற்றை உயிர்ப்பித்துக் கையளித்துவிட்டு, அடுத்த ஊரின் தாகத்தைத் தீர்க்கக் கிளம்புகிறார்கள். மது மஞ்சரி, மைவிழி செல்வி, சத்யா, சபாபதி, முத்து வெங்கட், ஆழிகை, பாரதி யோகேஷ், பிரியங்கா, ரகு, அர்ஜுன் உள்ளிட்ட இவர்களால் மறுவாழ்வு பெற்ற கிணறுகள், ஊரின் கூடுதலமாகவும் குழந்தைகளின் கொண்டாட்டக்களமாகவும் மாறிவிடுகின்றன. வெவ்வேறு துறைகளில் ஐந்திலக்கச் சம்பளம் பெற்றுக்கொண்டிருந்தவர்களை, கங்கையை மீட்கக்கோரி உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த சுவாமி நிகமானந்தாவின் கனவு ஒன்றிணைத்துக் களத்தில் இறக்கியிருக்கிறது. இதுவரை 9 கிணறுகளை உயிர்ப்பித்திருக்கிற இந்த இளைஞர்களால் கிராமங்களில் சுரந்து ததும்புகிறது அன்பு. அந்த அன்பின் ஊற்றை ஆராதிப்போம்.

ரகுராமன்
ரகுராமன்

வெளிச்சத்தை விதைப்பவர் - ரகுராமன்

பார்வைச்சவால் கொண்டவர்கள், பிறரின் பார்வையைப் பற்றிக்கொண்டே இயங்க வேண்டும். தொன்றுதொட்ட அந்தத் துயரத்தைத் தொழில்நுட்பம் கொண்டு துடைத்திருக்கிறார் ரகுராமன். இசையும் மொழியும் மட்டுமே பார்வையற்றவர்களுக்கு சாத்தியப்படும் என்ற கற்பிதத்தை உடைத்து, அறிவியலும் தொழில்நுட்பமும்கூட அவர்களுக்குச் சாத்தியமாகும் என்று மெய்ப்பித்ததில் இருக்கிறது ரகுராமனின் வாழ்நாள் உழைப்பு. பல நல்லிதயங்களின் உதவியோடு இவர் நடத்தும் பயிற்சிக்கூடத்தில் தொழில்நுட்பம் படித்து, 90க்கும் மேற்பட்ட பார்வைச்சவால் கொண்ட இளைஞர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் பணிவாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். பரிதாபத்தை உதறித்தள்ளிவிட்டு, தகுதியை வளர்த்துக்கொள்ளும் மனோபாவத்தை வடிவமைக்கும் இந்த நந்தனம் அரசுக்கல்லூரி உதவிப்பேராசிரியர், திரைவாசிப்பான் மூலம் எவரின் உதவியுமின்றி வாசிக்கவும் எழுதவும், தன் வாழ்க்கையைப் பாடமாக்கி அடுத்த தலைமுறைக்குப் பயிற்றுவிக்கிறார். ரோட்டரி கிளப் உதவியோடு கிண்டியில் இவர் நடத்தும் தொழில்நுட்பப் பயிலகம், நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்க்கையை வெளிச்சமாக்கியிருக்கிறது. அரசுப்பணித் தேர்வுகளை எதிர்கொள்ளும் தைரியத்தையும் நம்பிக்கையையும் வளர்ப்பது, அணுகுதலுக்கேற்றவாறு மின்னூல்களை உருவாக்குவதென தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்து இயங்கும் இந்தப் பேராசிரியரைப் போற்றிப் பாராட்டுகிறது ஆனந்த விகடன்.

திலகவதி
திலகவதி

துணிச்சல் மனிதி - திலகவதி

பாலினப் பாகுபாடு, உருவக்கேலி, உழைப்புச் சுரண்டல், பாலியல் வன்முறைகளுக்கு எதிராக உரத்து ஒலிக்கிறது திலகவதியின் குரல். சமூகம், சட்டம், பாலின அரசியல் குறித்து அழுத்தமான விவாதங்களை உருவாக்கும் திலகவதி, இந்தியா முழுவதும் பயணித்து பெண்களுக்குத் தற்காப்புப் பயிற்சியளிக்கிறார். குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்காக வழக்காடுகிறார். இவரது களப்போராட்டங்களும் சமூக ஊடகங்களில் எழுப்புகிற விவாதங்களும் இளையோர் மத்தியில் அனலாகப் பரவுகின்றன. தான் எதிர்கொள்ளும் புறக்கணிப்புகளையும் அவமானங்களையும் வன்முறைகளையும் அவ்விடத்திலேயே குரலெழுப்பி எதிர்த்து அம்பலப்படுத்தும் திலகவதி, இருளர்களுக்காகவும் சென்னையின் குடியேற்றப் பகுதிகளில் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகும் அபலைப் பெண்களுக்காகவும் தொடர்ந்து பேசுகிறார். பொறியியல், சட்டம், உளவியலென தன்னைக் கல்வியால் தகவமைத்துக்கொண்டு தினமும் சக பெண்களுக்காக நியாயம் கோரிப் பயணித்துக்கொண்டேயிருக்கிற இந்த ஆச்சர்ய மனுஷியின் கரம்பற்றிப் பாராட்டுகிறது ஆனந்த விகடன்.

பெரி.கபிலன்
பெரி.கபிலன்

மேய்ப்பர்களின் தோழர் - பெரி.கபிலன்

கீதாரிகள், ‘வரப்பே தலையணை, வயற்காடே பஞ்சு மெத்தை’ என அரை நாடோடிகளாக வாழும் முல்லை நிலத்துப் பூர்வகுடிகள். வெயிலிலும் மழையிலும் உழன்று இயற்கையின் போக்கில் வாழும் இந்த மக்களின் வாழ்க்கைப்பாடு துயரங்களாலானது. அரசுப் பதிவேடுகளின் எந்தப்பக்கங்களிலும் இடம்பெறாமல், அடையாளமின்றி வாழும் கீதாரிகளுக்காக எழும் முதல் உரிமைக்குரல் பெரி. கபிலனுடையது. தமிழ்த்தொல்குடியான கீதாரிகளுக்கு சமூக மரியாதை ஏற்படுத்தவும், மேய்ச்சல் தொழிலை அங்கீகரித்து முறைப்படுத்தவும் கபிலன் தொடங்கியிருக்கும் ‘தொழுவம்’ அமைப்பு பல திட்டங்களை முன்னெடுக்கிறது. தமிழகமெங்கும் சிதறிக்கிடக்கும் கீதாரிகளை ஒருங்கிணைத்து, மாட்டுக்கிடையை நிறுவனமயப்படுத்துவது, கால்நடைப் பொருள்களை மேம்படுத்திச் சந்தைப்படுத்துவதென இந்தப் பேராசிரியர் நிகழ்த்தியிருக்கும் மாற்றங்கள் அசாத்தியமானவை. ஒடுங்கிக்கிடக்கும் ஓர் எளிய சமூகத்தைத் தட்டியெழுப்பி விழிப்புணர்வூட்டும் கபிலனுக்குக் கைநிறைய பூங்கொத்துகள்!

கிருஷ்ணவேணி
கிருஷ்ணவேணி

மதிப்புமிகு மருத்துவர் - கிருஷ்ணவேணி

ஹெச்.ஐ.வி-க்குத் தன் பெற்றோரை அடுத்தடுத்து பறிகொடுத்துத் தவித்து நின்றபோது கிருஷ்ணவேணிக்கு வயது 12. ‘நாம் மட்டும் மருத்துவராக இருந்திருந்தால் இவர்களைக் காப்பாற்றியிருக்கலாமே’ என்ற கண்ணீர்ச் சிந்தனையில் துளிர்த்தது, மருத்துவராகும் கனவு. உணவுக்கும் உடைக்குமே தடுமாற்றமாக இருந்த நேரத்தில், தங்கையின் கனவுக்காகத் தன் படிப்பை நிறுத்திவிட்டு 14 வயதிலேயே உழைக்கப் போனார், கிருஷ்ணவேணியின் அண்ணன். கனவை, காண்பதோடு நிறுத்திவிடாமல் நீக்கமற உழைத்த கிருஷ்ணவேணிக்கு 0.5 மதிப்பெண்ணில் அரசு மருத்துவக் கல்லூரி கைவிட்டுப் போனது. நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் அரவணைக்க, கனவு நனவானது. படிப்பு முடிந்ததுமே ராணுவ மருத்துவராகத் தன்னை இணைத்துக்கொண்டவர் இன்று மேஜர் கிருஷ்ணவேணி ஆகியிருக்கிறார். ஆதரவற்ற குழந்தைகளின் கல்விச் செலவேற்பது, கிராமம்தோறும் ஹெச்.ஐ.வி, புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்களை நடத்துவது என சத்தமில்லாமல் சமூகத்துக்குப் பங்களித்துக்கொண்டிருக்கிற கிருஷ்ணவேணியைப் பாராட்டுகிறது ஆனந்த விகடன்.

கம்பூர் இளைஞர்கள்
கம்பூர் இளைஞர்கள்

ஊர் கூடி இழுத்த தேர் - கம்பூர் இளைஞர்கள்

மதுரை, கொட்டாம்பட்டிக்கு அருகேயுள்ள கம்பூர் என்ற குட்டி கிராமத்தின் இளைஞர்கள், ஒருங்கிணைந்து நின்று இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்கள். ஒரு நாடாளுமன்றத்தின் வல்லமைமிக்க கிராம சபையை முறைப்படுத்தி, பிற ஊர்க்காரர்களும் வந்து கற்குமிடமாக மாற்றியிருக்கிறார்கள். லஞ்சமற்ற தேர்தல், ஊழலற்ற நிர்வாகம் என வியப்பூட்டும் வெளிப்படை நிர்வாகம் நடக்கிறது கம்பூரில். ஒவ்வொரு தெருவுக்கும் தனித்தனியாக இயங்கும் வாட்ஸப் குழுக்கள், ஊர்ச்செய்திகள், அரசுத் திட்டங்கள், போட்டித் தேர்வு, வேலைவாய்ப்பு அறிவிப்புகள் என 24 மணி நேரமும் விழிப்புடன் இயங்குகின்றன. வாரம்தோறும் செயற்பாட்டாளர்களை விருந்தினர்களாக அழைத்து ஊர்க்கூட்டத்தில் பேசவைப்பது, ஊருக்குப் பிரச்னை வரும்போது கட்டுப்பாடு குலையாமல் போராடுவது என இந்த இளைஞர்களின் ஒழுங்கும் கண்ணியமும் வியப்பூட்டுகிறது. சாதி, மத, பாலின வேறுபாடின்றிக் கரம் கோத்துத் தங்கள் கிராமத்தை வழிநடத்தும் கம்பூர் கிராமத்தின் முன்மாதிரி இளைஞர்களுக்கு ராயல் சல்யூட்.

தீபின்
தீபின்

தீராக்கனவின் நாயகன் - தீபின்

தீபினுக்குப் பெருங்கனவு, கூகுள் சர்ச்சில் தன் பெயர் வரவேண்டுமென்பது. அரசு தந்த லேப்டாப்பில் தன் பெயரைப் போட்டுப் பார்த்து ஏமாந்தவருக்கு, ‘வெப்சைட் தொடங்கினால் உன் பேரு வரும்’ என்று நண்பர்கள் ஐடியா சொல்ல, என்ன மாதிரி வெப்சைட் தொடங்குவது என்ற கேள்வியில் நின்றார். ஒரே நாளில் டெலிவரியாகும்படி ஒரு தளம் தொடங்கலாம் என்று உதித்த சிந்தனை, இன்று தீபினை தமிழகத்தின் முக்கிய ஸ்டார்ட்-அப் சாதனையாளராக முன்னகர்த்தியிருக்கிறது. அரசு லேப்டாப்பில் தொடங்கிய அவரது ‘குமரி ஷாப்பி’ இன்று மாதம் 1 கோடி ரூபாய்க்கு பிசினஸ் செய்கிறது. ஹேக்கிங், ஸ்பைவேர் என இவரது தொழிலை முடக்க நடந்த முயற்சிகளையெல்லாம் முறியடித்து, இன்று மதுரை, சிவகாசி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி வரைக்கும் வேர் பரப்பியிருக்கிறது இவரது வணிகம். கன்னியாகுமரியின் மாங்கன்றுவிளை என்ற சிற்றூரில் அமர்ந்துகொண்டு 89,000 வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றும் தீபின், 87 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் அளித்திருக்கிறார். பிரமாண்ட வெற்றிகள் சிறு புள்ளியிலிருந்து உதிப்பவைதான். அதற்கு ஆதாரம் தீபின். அவரின் வெற்றியைக் கொண்டாடுகிறது ஆனந்த விகடன்.

 ஸ்ரீகாந்த்
ஸ்ரீகாந்த்

காட்டை மீட்ட காவலன் - ஸ்ரீகாந்த்

காணாமல்போன ஒரு சமூகக்காட்டை மீண்டும் உயிர்ப்பித்திருக்கும் பசுமைக்காவலன் ஸ்ரீகாந்த். வேலூர் மாவட்டத்திலுள்ள உள்ளி கிராமம் மழைக்காலங்களில் நீர்க்காடாகிவிடும். 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மக்களின் துயரைப்போக்க, 26,000 மரங்களைக்கொண்டு உருவாக்கப்பட்ட இயற்கை அரணை, மணல் கொள்ளையர்களும் நில ஆக்கிரமிப்பாளர்களும் அழித்தொழித்துவிட்டார்கள். அந்தப் பசுமைக்காட்டை மீண்டும் உருவாக்க ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு களமிறங்கிய ஸ்ரீகாந்துக்கு அச்சுறுத்தல்களும் கொலை மிரட்டல்களுமே பரிசாகக் கிடைத்தன. தொய்வின்றிப் போராடி அரசு நிர்வாகத்தின் உதவியோடு ஆக்கிரமிப்புகளைக் களைந்தார். ஸ்ரீகாந்தின் ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் கண்ட மாவட்ட நிர்வாகம், நிதியும் தந்து, 100 நாள் திட்ட ஊழியர்களை இப்பணிக்குத் திருப்ப, 7,000 நாட்டு மரங்களை அம்மண்ணில் நட்டு மீண்டும் காட்டை உயிர்ப்பித்தார். வெற்று நிலமாகக் கிடந்த இடம் இன்று ஆயிரக்கணக்கான பறவைகளுக்குக் கூடாகியிருக்கிறது. நாடு, பெருங்காடுகளை இழந்துவரும் நிலையில் அழிந்த ஒரு காட்டை மீட்டுருவாக்கம் செய்த ஸ்ரீகாந்த், பசுமைப் பணி செய்ய முன்வரும் இளைஞர்களுக்கு நம்பிக்கையின் துளிர்.

ரோஸிமீனா பால்ராஜ்
ரோஸிமீனா பால்ராஜ்

களம் புதிது : சாதனை பெரிது - ரோஸிமீனா பால்ராஜ்

விளையாட்டுமீது பேரார்வம் கொண்டவர்களே அறிந்திடாத ‘போல் வால்ட்'டில் இந்தியாவின் பெருமித முகமாக முத்திரை பதிக்கிறார் இந்தத் தஞ்சை மாவட்டத்து இளம்பெண். குஜராத் தேசியப் போட்டியில் 4.20 மீட்டர் உயரத்தைத்தாண்டி புதிய சாதனை செய்தவர், அடுத்த 15 நாள்களுக்குள்ளாக 4.21 மீட்டருக்குப் பறந்தார். அடுத்தடுத்து உயர உயரப் பறக்கும் இந்த பீனிக்ஸ் பெண்ணிடம் ஒரு போல்-வால்ட் கம்புகூடக் கிடையாது என்பதே வலியும் போராட்டமும் நிறைந்த வாழ்க்கைச்சுருக்கம். வரைமுறைக்குள் சிக்காத அவரின் கனாக்களைப் போலவே அவரின் சாதனைகளும் விரிந்துகொண்டே செல்கின்றன. வானத்தைத் தாண்டி சாதிக்கட்டும் ரோஸி!

பிரக்ஞானந்தா
பிரக்ஞானந்தா
டி.குகேஷ்
டி.குகேஷ்

சதுரங்க வேட்டையர்கள் - பிரக்ஞானந்தா / டி.குகேஷ்

சதுரங்கக் கட்டங்களில் செக்மேட்டே செய்ய முடியாத ராஜாக்களாக உருவெடுத்துவருகிறார்கள் பிரக்ஞானந்தாவும் டி.குகேஷும். வீட்டில் தன் அப்பாவை வீழ்த்த செஸ் பழகிய குகேஷ், இன்று உலகின் உச்சபட்ச வீரர்களையெல்லாம் ஒரு கை பார்த்துவருகிறார். இன்னொரு பக்கம் பிரக்ஞானந்தா, ஒரே ஆண்டில் மூன்று முறை உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திப் புருவம் உயர்த்த வைத்திருக்கிறார். 64 கட்டங்களுக்குள் குகேஷின் கூரான பார்வையிலிருந்து தப்பி எதிராளியால் ஒரு குயுக்தியான நகர்வைக்கூடச் செய்யமுடியாது. தனியாகத் தங்கம், அணியாக வெண்கலம் எனச் சென்னை செஸ் ஒலிம்பியாட்டில் பதக்கம் குவித்து கவனம் ஈர்த்தார் இந்தக் கொரட்டூர் தம்பி. ஒலிம்பியாட் அரங்கில் வலம்வந்த கார்ல்சன், பிரக்கின் மேசையருகே மட்டும் நெடுநேரம் நின்று வியந்து பார்த்ததை உலகே பார்த்து வியந்தது. அமைதியின் உருவான இந்த 17 வயது இளைஞனுக்குக் கிடைத்திருக்கும் கௌரவமும், மதிப்பும் அதுதான். சர்வதேச ரேட்டிங்கில் புலிப் பாய்ச்சல் ஓடும் இந்தப் பதின்ம வயது இரட்டைக்கதிர்கள் எட்டியிருக்கும் உயரம் அசாத்தியமானது. ‘உலக சாம்பியன்’ என்ற இலக்கை நோக்கி ஒவ்வொரு நொடியும் உழைத்துக்கொண்டிருக்கும் இந்த இளைஞர்களைத் தமிழகத்தின் பெரும் நம்பிக்கை இளைஞர்களாக கௌரவிக்கிறது ஆனந்த விகடன்.