நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரேயா என்கிற திருநங்கை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 337 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார். இது தொடர்பாக ஸ்ரேயாவைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

"பள்ளிப்பாளையம்தான் என்னோட சொந்த ஊர். 2017-ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினேன். அதுல 352 மதிப்பெண் எடுத்தேன். அதுவரைக்கும் என்னுள் இருந்த மாற்றத்தை வெளிப்படுத்தாம ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிச்சிட்டு இருந்தேன். பத்தாம் வகுப்பு முடிஞ்சு ரிசல்ட் வந்ததும் வீட்ல என் உடல் மாற்றம் குறித்து வெளிப்படையாகவே பேசினேன். நான் என்னை பெண்ணாகத்தான் உணர்றேன். என்னால ஆணாக இருக்க முடியாதுங்கிறதை என் அம்மா, அப்பாகிட்ட சொன்னேன். எனக்கு ஒரு அக்கா இருக்காங்க. அவங்க படிச்சு முடிச்சிட்டு வேலைக்குப் போயிட்டு இருக்காங்க. மூணு பேருமே என்னைப் புரிஞ்சுகிட்டு என்னை ஏத்துக்கிட்டாங்க. நான் திருநங்கையாக மாறப் போறேன்னு சொன்னதும் என்னை அடிக்கவோ, திட்டவோ இல்ல. அக்கம் பக்கம் உள்ளவங்க என்ன சொல்லுவாங்கன்னுலாம் என்னைப் பெத்தவங்க யோசிக்கல. புரிஞ்சுகிட்டு என்னை ஏத்துக்கிட்டாங்க.
பிறகு 2022-ல் பதினொன்றாம் வகுப்பிற்காக பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். டீச்சர் ஆக இருக்கட்டும், தலைமை ஆசிரியராக இருக்கட்டும், மாணவர்களாக இருக்கட்டும் யாருமே என்னை மூன்றாம் பாலினமா நினைக்கல. அவங்களை மாதிரிதான் என்னையும் நினைச்சாங்க. என்கூட படிச்ச பிள்ளைங்க சக மாணவியாகத்தான் என்னைப் பார்த்தாங்க. யாரும் என்கிட்ட எந்த வேறுபாடும் காட்டல. எனக்கு ஷிப்பிங் மேனேஜ்மென்ட் படிக்கணும்னு ஆசை. அதனால இப்ப பி.பி.ஏ எடுத்துப் படிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.

பையனோ, பொண்ணோ, திருநங்கையோ அது நம்ம குழந்தை. நம்ம குழந்தையை நாமளே ஒதுக்கிட்டா அது எப்படிக் கஷ்டப்படும்னே தெரியாது. பெற்றோர்கள் அவங்க குழந்தையை ஒதுக்கி கைவிடுறதனாலதான் அவங்க வேற வழி இல்லாம தப்பான பாதையைத் தேர்ந்தெடுக்கிறாங்க. நீங்க அவங்களை ஒதுக்காம அவங்களுக்குக் காசு, பணம் கொடுக்காம கல்வியை மட்டும் கொடுத்தீங்கன்னா போதும். படிச்சு முடிச்சு சொந்தமா அவங்களே முன்னுக்கு வந்திடுவாங்க. படிப்பை விட மிகப்பெரிய சொத்து எதுவுமில்லை! இப்ப என் குடும்பமே என்னை நினைச்சு பெருமைப்படுறாங்க. நானும் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இன்னும் நல்லா படிச்சு முன்னுக்கு வரணும்!" என்றார்.